நவக்கிரக தோஷம் போக்கும் தென்னிந்திய சூரியனார் கோயில்
சூரியனார் கோவில் தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் உள்ளது. கருவறையில் சூரியன் உஷா பிரத்யூஷா என்று இரு மனைவியருடன் தேரில் காட்சியளிக்கின்றார். இருவரும் கையில் தாமரைப் பூ ஏந்தி உள்ளனர்.
புராணத்தில் சூரியக்குடும்பம்
சனீஸ்வரன் எமன் ஆகிய இருவரும் சூரியனின் புத்திரர் ஆவர். சாயா, சந்தியா இருவரும் சூரியனின் மனைவியர். சனீஸ்வரன் சூரியனின் முதல் மனைவி சாயாவின் ஒரே மகன். எமனும் யமுனையும் இரண்டாவது மனைவி சந்தியா பெற்ற மக்கள் ஆவர்.
விசேஷ நாட்கள்
ஜோதிடத்தில் ஒரு ராசியிலிருந்து மறு ராசிக்கு சூரியன் நகரும் நேரமே தமிழ் மாதப் பிறப்பு ஆகும். சூரியனின் ரதம் தெற்காகவும் பின்பு வடக்காகவும் கிழக்கிலிருந்து மேற்கில் நகரும். அவ்வாறு நகரும்போது அதனுடைய வடக்கு நோக்கிய திசை மாற்றமே ரத சப்தமி எனப்படுகின்றது. இதனை உத்தராயணம் (வடக்கே செல்லுதல்) என்பர்.
ராஜ கிரகம்
சூரியன் நவகிரகங்களின் ராஜக் கிரகம் அல்லது தலைமைக் கிரகம் ஆவார். இந்தியாவில் இரண்டு கோவில்கள் மட்டுமே சூரியனுக்கு எனத் தனியாகக் கட்டப்பட்டுள்ளது ஒன்று வடக்கே இருக்கும் கோனாரக் கோவில். மற்றொன்று தெற்கே திருமங்கலக்குடியில் உள்ள சூரியனார் கோவில்.
கோனார்க் சூரியனார் கோயில்
வடக்கே ஒடிசா மாநிலத்தில் கோணர்க் என்ற ஊரில் 13 ஆம் நூற்றாண்டில் கங்க வம்சத்தைச் சேர்ந்த மன்னன் கட்டிய சூரியன் கோவில் உள்ளது. இக்கோவில் தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்ததாகும்.
சிவப்பு மணல் கற்களாலும் கருங்கல்லாலும் கட்டப்பட்ட கோவில் என்பதால் இக்கோவிலை ஐரோப்பிய மாலுமிகள் கருப்புக் கோயில் (black pagoda) என்று அழைத்தனர். இக்கோவில் தேர் வடிவத்தில் உள்ளது. இக்கோவிலில் பாலுறவு சிற்பங்கள் நிறைய ஆளு உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவில் கட்டப்பட்ட காலத்த் மிகப் பெரிய கோவிலாக இருந்தது. தற்போது சில பகுதிகள் இடிந்து விட்டன. உலக பண்பாட்டுச் சின்னமாக கொனார்க் சூரியன் கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது
கோவில் அமைப்பு
சூரியனார் கோயில் 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. நான்கு பிரகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு கிரகமும் தனிச் சந்நிதியில் வாகனம் ஏதுமின்றி உள்ளது. நடுவே ராஜகோபுரம் காணப்படுகின்றது. இங்கே உள்ள தீர்த்தம் சூரிய தீர்த்தம் எனப்படுகின்றது. இக்கோவிலின் தலவிருட்சம் வெள் எருக்கு ஆகும்.
சூரிய பகவான்
சூரியன் 7 குதிரை பூட்டிய ரதத்தில் ஏறி வருகின்றான். அவனுடைய தேரோட்டியாக அருணனுக்கு இரண்டு கால்களும் கிடையாது. சூரியனின் ஏழு குதிரைகளும் வானவில்லின் ஏழு நிறத்தைக் குறிக்கின்றன. அவன் ரதத்தில் உள்ள 12 சக்கரங்களும் 12 ராசிகளைக் குறிக்கின்றன.
சூரியன் 12 ராசிகளிலும் ஒரு சுற்று சுற்றி வர ஒரு ஆண்டு நிறைவு பெறுகின்றது சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெறுகின்றான். மேஷ ராசியில் உச்சம் பெறுகின்றான். மேஷ ராசி என்பது சித்திரை மாதத்தைக் குறிக்கின்றது. அப்போது சூரியன் அதிக வெப்பத்தோடு இருப்பதால் அதனை உச்சம் என்று கூறுகின்றனர்.
சௌமாரம்
ஒரு காலத்தில் சூரியனை தலைமை தெய்வமாகக் கொண்டு ஒரு பிரிவினர் வணங்கி வந்தனர். இந்தச் சமயத்துக்கு சவுமாரம் என்று பெயர். ஆதிசங்கரர் இந்தியாவில் இருந்த வழிபாடுகளை ஆறு வகையாகப் பிரித்தார்.
அவற்றில் முதன்மையானது சூரியனை வழிபடுகின்ற சவுமாரமாகும். பின்பு சூரியனை சிவனோடு சேர்த்து சிவ சூரியன் என்று சைவமும் நாராயணனோடு சேர்த்து சூரியநாராயனர் என்று வைணவமும் சொந்தம் கொண்டாடின.
சூரிய நமஸ்காரம்
காலப்போக்கில் சூரிய வழிபாடு சூரிய நமஸ்காரமாக சுருங்கிவிட்டது. ஆதித்ய ஹ்ருதயம் சொல்வதும் சந்தியா பூஜை செய்வதுமமே சூரிய வழிபாடாகிவிட்டது. காயத்ரி ஜெபம் சூரியக் கடவுளோடு தொடர்புடையது ரிக் வேதத்தில் சூரிய தேவனின் மனைவி இரண்டு குதிரைகள் பூட்டிய தேரில் வந்ததாகக் குறிப்பு காணப்படுகின்றது. உலகில் சீனா எகிப்து மெசபோட்டோமியா போன்ற நாடுகளிலும் நோர்ஸ் குடிகள் மத்தியிலும் சூரிய வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு வழிபாடுகள்
சூரியனார் கோவிலில் தை மாதம் 10 நாள் திருவிழா நடைபெறும். தை மாதம் வளர்பிறை சப்தமி அன்று ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடைபெறும். ரத சப்தமியை சூரிய ஜெயந்தி என்றும் குறிப்பிடுவர். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று சிவ சூரியனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று சூரியன் ராசி மாறும் நாள் ஆகும்.
மற்ற எட்டுக் கிரகங்கள்
சூரியனார் கோவிலில்.மற்ற எட்டுக் கிரகங்களும் வாகனங்கள் இன்றி தனியாக உள்ளன. சூரியனார் கோவிலில் மட்டுமே கருவறை நாதராக சூரிய கிரகம் விளங்குகின்றது. மற்ற நவகிரக கோவில்களில் ஒன்பதில் ஒன்றாகவே இருக்கும். இங்கு எட்டுக் கிரகங்களும் தனித் தனி சந்நிதியில் உள்ளன. தனிக்கோவில் என்பது சூரியனுக்கு மட்டுமே உள்ளது.
வழிபடும் முறை
பக்தர்கள் முதலில் திருமங்கலக்குடியில் உள்ள சிவன் கோவிலுக்கு போய் அங்கே கோயில் கொண்டருளும் பிராண நாதரையும் மங்களநாயகியையும் வழிபட்ட பின்பு சூரியனார் கோவிலுக்கு வந்து சிவசூரியன் எனப்படும் சூரியனை வழிபட வேண்டும்.
புராணக் கதை
திருமங்கலக்குடிக்குக் கூறப்படும் புராணக் கதையே இக்கோவிலுக்கும் கூறப்படுகின்றது. கலவ முனிவர் ஜோதிடத்தில் வல்லவர். அவர் தனக்குத் தொழுநோய் பிடிக்க போகின்றது என்பதை முன்கூட்டியே அறிந்து தனக்கு கிரகங்களின் பாதிப்பால் நோய் வரக்கூடாது என்பதற்காக நவக்கிரகங்களை நோக்கிக் கடும் தவம் புரிந்தார்.
நவக்கிரகங்களும் அவர் தவத்தை மெச்சி அவரை நோய் தாக்காமல் காப்பாற்றின. காலவ முனிவரின் தவத்தைப் பற்றி கேட்டுக் கோபம் கொண்ட பிரம்மதேவன் காலவ முனிவருக்கு வர இருந்த தொழு நோயை நவக்கிரகங்கள் அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டார்.
நவக்கிரகங்கள் பிரம்மதேவனின் சாபத்தால் தொழு நோயால் பாதிக்கப்பட்டன. இதற்கு விமோசனம் வெனப்பியும் என்று அவை பிரம்மதேவனிடம் கேட்டபோது அவர் திருமங்கலக்குடி சூரியனார் கோவில் அருகில் உள்ள பிராணநாதரை வணங்கி சாப விமோசனம் பெறும்படி கூறிவிட்டார்
நவக்கிரகங்கள் திருமங்கலக்குடிக் கோவிலுக்கு வந்து தனித்தனியாக ஒரு விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்து தவம் புரிந்து வந்தன. சிவபெருமான் நவக்கிரகங்களின் தவத்தை மெச்சி அவர்களுக்கு இருந்த தொழு நோயைக் குணமாக்கினார்.
காலவ முனிவர் நவகிரகங்களுக்கு நன்றி கூறும் வகையில் அவை தியானம் செய்த இடத்தில் தனித்தனியாகக் கோவில் எழுப்பினார். சூரியன் தவம் செய்த இடத்தில் சூரியனருக்கு கோவில் எழுப்பினார்.
சூரியனும் வியாழனும்
கருவறையில் சூரிய பகவான் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். இரண்டு மனைவியருடன் காணப்படுவதால் திருமணக் கோலம் என்று போற்றுகின்றனர். சூரியனின் உக்கிரத்தை வேறு எவராலும் சகித்துக் கொள்ள முடியாது என்பதனால் அவருக்கு நேர் எதிரே குரு பகவானின் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில் பக்தர்கள் சூரியனுக்கு எதிரே இருந்து அதன் உஷ்ணத்தை தாங்கி வழிபடுவது இயலாத காரியம் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் வியாழனும் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் சிவராஜ யோகம் என்பர்.
கோயிலில் குதிரை
சிவலிங்கத்திற்கு முன்பு அதன் வாகனமான நந்தி தேவர் இருப்பதைப் போல சூரியனார் கோவிலில் சூரியனுக்கு முன்பு குதிரை வாகனம் அமைந்துள்ளது.
நவக்கிரக பரிகார தலம்
ஒன்பது கிரகங்களின் பரிகார ஸ்தலமாக இக்கோவில் விளங்குகின்றது. இங்கு இக்கோவிலில் மற்ற எட்டு கிரகங்களும் திருச் சுற்றுத் தெய்வங்களாக தனித்தனி சன்னதியில் இருந்து அருள் பாலிக்கின்றனர். ஜாதகத்தில் சூரியன், சனி ராகு கேது போன்ற பாவககிரகங்களுடன் சேர்ந்து இருந்தால் இக்கோவிலுக்கு வந்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |