மலேசியாவில் முருகன் கோவில் உருவான வரலாறு
முருகப்பெருமான் அனைவருக்கும் பிடித்தமான தெய்வங்களில் ஒருவராக திகழ்கிறார். அறுபடை வீடுகள் முருகப்பெருமானின் கோயில்களுள் பிரசித்தி பெற்றவையாக இருப்பினும் மலேசியாவில் உள்ள பத்துமலை கோயில் பல நாட்டு மக்களும் வந்து செல்லும் ஆன்மீக தலமாக உள்ளது.
மலேசியாவில் அமைந்துள்ள இந்த கோயிலில் சீன மக்களும் வழிபாடு செய்கின்றனர் என்றால் ஆச்சரியமளிக்கிறது அல்லவா. மலேசிய தலைநகரான கோலாலம்பூரை அடுத்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலின் வரலாற்றினையும் சிறப்புகளையும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
கோயில் வரலாறு:
நம் முன்னோர்கள் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மலேசியாவில் கூலி தொழிலாளர்களாக பணியாற்றியுள்ளனர். அப்போது தொழிலாளர்களின் தலைவராக காயாரோகணம்பிள்ளை இருந்துள்ளார். இவருடைய தொடர் முயற்சியால் கோலாலம்பூரில் 1873-ம் ஆண்டில் மாரியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஒருநாள் காயாரோகணம்பிள்ளையின் கனவில் தோன்றிய அம்மன், “என் இளையமகன் முருகனுக்கு பத்துமலைக்குகையில் கோயில் கட்டு” என உத்தரவிட்டுள்ளார்.
அம்மனின் உத்தரவை தொடர்ந்து காயாரோகணம் பிள்ளையின் மகனான தம்புசாமிப்பிள்ளையுடன் கந்தப்ப தேவர் இணைந்து காடாக காட்சியளித்த பத்துமலையில் 1888-ம் ஆண்டில் வேல் ஒன்றினை வைத்து வணங்கத் தொடங்கினர். பின்னாளில் வழிபாட்டுக்குரிய கோயிலாகி மக்கள் மத்தியில் பெரும் புகழ் அடைந்தது.
இன்னல்கள்:
கோலாலம்பூர் ஆட்சியாளர் ஜோஸ்துரை பத்துமலை முருகன் கோயிலை அப்புறப்படுத்தும்படி கட்டளையிட்டார். ஆனால் நம் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். 1920-ல் கோயிலுக்குச் செல்வதற்கான படிகள் வெற்றிகரமாக அமைக்கப்பட்டன.
1939-ம் ஆண்டு ஒற்றையடி பாதையானது இருவழி சிமெண்ட் படிகளாக மாற்றப்பட்டன. இன்று மூன்று வழிகளைக் கொண்ட 272 படிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
பத்துமலை முருகன் கோயில்:
மலேசியாவின் பத்துமலையில் அமைந்திருந்த சிறிய குகையில் வேல் உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட தமிழ் பக்தர் ஒருவர் மூங்கில் வடிவிலான வேலினை நிறுவி அதனை வழிபாடு செய்து வந்துள்ளார். தொடர்ந்து உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது எனக் கூறுகிறது வரலாறு.
இரண்டு குகைகள்:
மலேசியாவில் அமைந்துள்ள பத்துமலையில் இரு குகைகள் உள்ளன. ஒன்று மிக ஆழமாகச் செல்வதுடன் மிக இருளாக காட்சியளிக்கிறது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.
பூதம் ஒருமுறை நக்கீரரை குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்பது புத்தகம் கூறும் வரலாறு.
அதோடு அனைவரும் அறிந்த வரலாறு. ஆயிரம் பேரை அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை கொண்ட முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும் என இன்றளவும் மக்கள் நம்புகின்றனர்.
எனவேதான் முருகனின் வேல் தமிழ் பக்தருக்குத் தென்பட்டது எனவும் அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் மக்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.
கோயில் அமைப்பு
பத்துமலை முருகன் கோயிலில் நுழைந்தவுடன் விநாயகப்பெருமான் அருள்பாலிக்கிறார். மீனாட்சி, சொக்கநாதர், வேலாயுதமூர்த்தி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய றுபடை முருகன் சன்னதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
பிரதான சன்னதியாக சுண்ணாம்புப்பாறைகளுக்கு நடுவில் உள்ள குகையில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அழகுற பக்தர்களுக்கு காட்சி தருகிறார். கோயிலுக்கு செல்ல முதலில் ஒற்றையடி பாதை அமைக்கப்பட்டிருந்தாலும் இன்று 272 படிகட்டுகளை உடைய மூன்று வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று முருகப் பெருமானை கண்குளிர தரிசித்து வரலாம்.
முருகன் சிலை:
மலேசியா முருகன் கோயிலின் சிறப்பே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொன் நிறத்திலான முருகன் சிலையே. கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்க அழகுற உயரமாக காட்சியளிக்கிறார். இந்த சிலையின் உயரம் 42.7 மீ, அதாவது 140.09 அடி. 30 தமிழக சிற்பிகள் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர்.
2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிலை அமைக்கும் பணி 2006-ம் ஆண்டில்தான் நிறைவடைந்துள்ளது. தாய்லாந்தில் தயாரிக்கப்பட்ட விசேஷ பொன்நிறக்கலவை பூச்சால் முருகனின் மேனி மின்னுகிறது.
2006-ம் ஆண்டு ஜனவரி 29-ல் திறந்து வைக்கப்பட்ட பத்துமலை முருகப்பெருமானின் அருட்பார்வை உலகத்தையே தன்வசப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.
கண்கவரும் கலைக்கூடம்:
தமிழர்கலை பண்பாட்டினை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கலைக்கூடம் 1971-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கந்தபுராணம், விஷ்ணுபுராணம், ராமாயணம், மகாபாரதம் ஆகிய புராண, இதிகாச காட்சிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கீதோபதேச காட்சி, விநாயகர், அவ்வை, சிதம்பரம் நடராஜர், அறுபடை வீடு முருகன் சிலைகள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கின்றன.
ராமாயணக் குகை:
கம்பராமாயணத்தின் பெருமையை நிலைநாட்டும்வகையில், 1995-ல் இங்கு ராமாயணக்குகை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. குகையின் முகப்பில் 60 அடி உயர ஆஞ்சநேயரின் சிலை வரவேற்கிறது. பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரையிலான ராமாயண காட்சிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. பத்துமலையில் விநாயகர் சன்னதி அருகில் குளம் ஒன்று அமைந்துள்ளது.
மலைக்குகையில், பச்சை பசேல் என்று மரங்கள் உள்ளன. புறாக்களின் சரணாலயமாக இது திகழ்கிறது. படியேறிச் செல்லும் போது எதிர்ப்படும் குரங்குகள் பக்தர்களை மகிழ்விக்கின்றன. முடிகாணிக்கை செலுத்தும் இடங்கள், சைவ உணவு விடுதிகள், பூஜை பொருள் விற்கும் கடைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் இங்குள்ளன.
வரம் அருளும் பத்துமலை முருகன்:
கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தை அரசாளும் பாக்கியம், குபேரனைப்போல செல்வவளம், இந்திரனையும் மிஞ்சிய சுகபோகவாழ்வு, பிறப்பற்ற நிலை, செந்தமிழில் புலமை, பகையை முறியடித்தல், காலனை வெல்லும் சக்தி, அஷ்டமாசித்தி ஆகியவற்றை பெற சுலபமான வழி முருகன் கையிலிருக்கும் வேலினையும், அவரது வாகனமாகிய மயிலினையும், அவருடைய பன்னிரு கண்ணழகையும் மனதால் நினைத்திருப்பதுவே ஆகும். வீணாகக் காலம் கழிப்பதை விட, முருகனின் வேலை வணங்கினால் எல்லா இன்பங்களும் கிடைக்கும்.
விழாக்கள்:
முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இங்கு நடத்தப்படுகின்றன.
தைப்பூசத் திருவிழா:
முருகப்பெருமான் கோயில்கள் அனைத்திலும் தைப்பூசம் சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 1891-ம் ஆண்டு முதலே பத்துமலையில் தைப்பூச திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பல லட்சக்கணக்கான மக்கள் இந்நாளில் பத்துமலையில் கூடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். தைப்பூசத்திற்கு முதல்நாள் 21அடி உயர வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான் எழுந்தருகிறார். இந்த தேர்பவனி கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் தொடங்கி பத்துமலை அடிவாரத்தை வந்தடைகிறது.
பால்குடம் காவடி:
பழங்காலத்தில் மலைமேல் இருக்கும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால், பன்னீர், சந்தனம் என்று பல்வேறு திரவியங்களைப் பக்தர்கள் காவடியில் எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வழக்கமே காவடி வழிபாடாக பின்னாளில் மாறிவிட்டது. காவடியைச் சுமந்து வரும் பக்தர்கள் காவடியோடு தங்கள் மனச்சுமையையும் முருகப்பெருமானிடம் இறக்கி வைத்து அமைதி பெறுகின்றனர்.
வேண்டிய வரம் அருளும் பத்துமலை முருகப்பெருமானை காண உள்நாட்டு மக்களும் வெளிநாட்டு மக்களும் அலை திரண்டு செல்கின்றனர். செல்வதோடு முருகப்பெருமானிடம் வேண்டிய வரம் பெற்றும் மகிழ்ச்சியோடு வீடும் செல்கின்றனர். முருகப்பெருமானிடம் வரம் பெற்ற மக்கள் அவர்களுடைய நேர்த்தி கடனை காவடி தூக்குதல் மூலம் நிவர்த்தி செய்கின்றனர்.
நீங்களும் பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்கள் என்றால் ஒருமுறையேனும் சென்று பத்துமலை முருகப்பெருமானின் அருளை முழுமையாக முழு மனதுடன் பெற்று திரும்புங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







