தமிழ்நாட்டில் 64 சித்தர்கள் ஜீவசமாதி அமைந்த ஒரே இடம் எங்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் மயிலாடுதுறை ஆன்மீக திருத்தலங்கள் பல நிறைந்த அற்புதமான ஊராகும். அப்படியாக இங்கு சித்தர் காடு எனும் ஒரு ஊர் உள்ளது. இந்த ஊர் தற்பொழுது நகரமாக காணப்பட்டாலும் ஒரு காலகட்டத்தில் இந்த ஊர் சித்தர்கள் மட்டுமே வாழ்ந்த கிராமமாக இருந்தது. அதாவது 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ மதத்தை சேர்ந்த சீர்காழி சிற்றம்பல நாடிகள் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார்.
இவர் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி மனதார நினைத்து தவமிருந்து வழிபாடு செய்து வந்திருக்கிறார். இவ்வாறு தவத்தை முழுமூச்சாக கொண்டு வாழ்ந்து வந்த இவர் ஒரு நாள் தான் சமாதி நிலையை அடைய விரும்புவதாக சொல்லியிருக்கிறார். அதாவது தான் சமாதி நிலையை அடையப்போவதாக தன்னுடன் இருந்த 63 சித்தர்களிடம் அவர் தெரிவிக்கிறார்.
அதன் பிறகு சோழ மன்னரை அழைத்து தன்னுடைய 63 சித்தர்களுடன் சித்திரை மாதத்தில் வரும் நட்சத்திர நாளில் ஜீவசமாதி அடை போக்குவதாக தெரிவித்தார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சோழ மன்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுத்தார். அதன் பின்பு அங்கு 64 சமாதிகள் அமைக்கப்பட்டது.
அதன் பிறகு அதில் ஒரு இடத்தில் தனக்கென்று சமாதியில் சீர்காழி சிற்றம்பலம் இறங்கி சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி ஜீவ நிலையை அடைந்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய சீடர்களும் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கி சித்தி பெற்றார்கள். இந்த நிகழ்வின் காரணமாகத்தான் அந்த ஊருக்கு சித்தர் காடு என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
மேலும் சீர்காழி சிற்றம்பலம் சமாதி மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அது ஒரு கோவிலாக பிற்காலங்களில் உருவானது. அதோடு ஜீவ சமாதிகள் அடையாளமாக 64 சிவலிங்கங்கள் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் இருப்பதை நாம் இந்த கோவில்களில் பார்க்க முடியும்.
இவ்வளவு சக்தி வாய்ந்த சித்தர் காட்டில் அமைந்திருக்க கூடிய இந்த கோவிலுக்கு நாம் சென்று வழிபாடு செய்தால் நமக்கு நல்ல பலன்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் சித்தர்காடு சென்று வழிபாடு செய்து நற்பலன்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







