அண்ணன் - தங்கை உறவுக்கு அடையாளமாக திகழும் நல்லதங்காள் கோயில்

By Aishwarya Jan 05, 2025 07:11 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்ற பகுதியில் நல்லதங்காள் கோயில் அமைந்துள்ளது. அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் அமைந்த குடும்பக்கோயிலே ‘நல்லதங்காள் திருக்கோயில்’ஆகும். குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு குழந்தை பேற்றை வழங்கும் கோயிலாக விளங்குகிறது. மிகவும் பழமையான கோயில் உருவான கதை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

பித்ரு தோஷம், புத்ர தோஷம் போக்கும் இராமேஸ்வரம்

பித்ரு தோஷம், புத்ர தோஷம் போக்கும் இராமேஸ்வரம்

கோயில் அமைவிடம்:

நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊரான அர்ச்சுனாபுரம், விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது. பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அர்ச்சுனாபுரம் அமைந்துள்ளது. அங்கே வயல்வெளிக்கு மத்தியில் நல்லதங்காள் கோயில் கொண்டுள்ளாள்.

அண்ணன் - தங்கை உறவுக்கு அடையாளமாக திகழும் நல்லதங்காள் கோயில் | Nallathangal Temple In Tamil

தல வரலாறு:

அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

இவர்கள் தாய், தந்தை இளம் வயதிலேயே உயிரிழந்த நிலையில் அவர்களுடைய மூத்தப் பகுதியும் பெற்றோருக்கு பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற நல்லதம்பி, அவருடைய தங்கையான நல்ல தங்காளை பாராட்டி சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜவம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

இளம் வயதிலேயே நான்கு ஆண் குழந்தைகள் மூன்று பெண் குழந்தைகள் என ஏழு குழந்தைகளுக்கு தாயானாள். இந்நிலையில் மானாமதுரையில் மழை இல்லாமல் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழை இல்லை.

உண்ண உணவு இல்லாமல் மக்கள் பலரும் மாண்டனர். நல்லதங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள் அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலையில் சாப்பாட்டிற்கும் வழியில்லாத நிலை உருவானது.

மனம் உடைந்த நல்லதங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள். அவள் வந்த நேரத்தில் அண்ணன் அங்கு இல்லை. அவளின் அண்ணி மூளியலங்காரியும் அவளை கண்டும் காணாதது போல இருந்தாள்.

அண்ணன் - தங்கை உறவுக்கு அடையாளமாக திகழும் நல்லதங்காள் கோயில் | Nallathangal Temple In Tamil

பிறகு எதற்கும் பயன்படாத மண் பானை, பச்சை விறகை கொடுத்து சமைத்து உண்ணும் படி கூறினாள். தெய்வத்தன்மை படைத்த நல்லதங்காள் விறகை பற்ற வைக்கும் போது பச்சை விறகுமே பற்றி எரிந்தது. பிறகு அதில் உணவு சமைத்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஊட்டி மகிழ்ந்தாள்.

சில நாட்கள் சென்ற நிலையில் அண்ணனுக்காக காத்திருந்த நல்ல தங்காள், அண்ணி மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்து குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள். "எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே. இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள்.

சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்

சென்னை சென்றால் இந்த கோயில்களை தரிசிக்க தவறாதீர்கள்

அப்போது, அவளது குழந்தைகள், அம்மா பசிக்குது; ஏதாவது சாப்பிட கொடும்மா; என்று அழ ஆரம்பித்து விட்டனர். அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை. குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொன்ற பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

இதைக் கேள்விப்பட்ட அண்ணன் நல்லதம்பி தன் மனைவியை கொன்று விட்டு தானும் கத்தியால் குத்தி அதே கிணற்றில் வீழ்ந்து மாண்டான். அண்ணன் – தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர்.

தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்ல தம்பியையும் உயிர்ப்பித்தனர். அப்போது நல்ல தங்காளும், நல்லதம்பியும், “நாங்கள் இறந்தது, இறந்ததாகவே இருக்கட்டும். மனிதப் பிறவி எடுத்து மாண்டவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்ற வரலாறு ஏற்பட வேண்டாம்.

எனவே நாங்கள் இறந்ததாக கருதி அருள் புரிய வேண்டும்” என கூறினார்கள். சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்றுகொண்டார். இந்த ஒரே காரணத்துக்காக நல்லதங்காள் தெய்வமாகிவிட்டாள். பிறகு நல்லதம்பி மற்றும் நல்லதங்காள் வாழ்ந்த இடம் கோவிலாக மாறியது.

அன்று முதல் இங்கே நல்லதங்காள் தெய்வமாக காட்சியளிக்கிறாள். நல்ல தங்காளுக்கும், நல்லதம்பிக்கும் இரண்டு கோயில்கள் கட்டி மக்கள் வணங்குகி வருகின்றனர். குழந்தைகளும் சிலைவடிவம் பெற்றுள்ளனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனையின் எஞ்சிய இடிபாடுகள், தற்கொலை செய்து கொண்ட கிணறு போன்ற சரித்திரச் சான்றுகளை, வத்திராயிருப்பில் இன்றும் காணலாம்.  

அண்ணன் - தங்கை உறவுக்கு அடையாளமாக திகழும் நல்லதங்காள் கோயில் | Nallathangal Temple In Tamil

கோயில் அமைப்பு:

நல்லதங்காள் கோயில் மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே மற்றொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கோயிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கே தான் என அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர். 

விழாக்கள்:

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர்கள், வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அதோடு மாதந்தோறும் பௌர்ணமி பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. 

வேண்டுதல்கள்:

குழந்தைப்பேறு வேண்டுபவர்களும் குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டும் என வேண்டுபவர்களும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி எலுமிச்சை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை அம்மன் முன்பாகவும், ஏழு குழந்தைகளின் சன்னிதானத்திலும் கட்டி வணங்குகின்றனர்.

அதோடு இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதோடு திருமணமாகாத பெண்கள் வந்து மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கைகூடும் என்ற சிறப்பும் நல்லதங்காள் கோயிலுக்கு உள்ளது. 

இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?

இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?

நேர்த்திக்கடன்:

பிள்ளைப்பேறு கிடைத்தவர்கள் அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தங்காள், நல்ல தம்பி என்று பெயரிடுகின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US