வேண்டிய வரம் அருளும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்: வரலாறும் சிறப்புகளும்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில்களில் முதன்மையானது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்.
1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலானது, புனித பயணம் மேற்கொள்பவர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.
நாமக்கல் கோட்டைக்குக் கீழே அமைந்துள்ள இக்கோயில், மேற்கே நரசிம்மர் கோயிலையும், நேர் எதிரே நாமகிரி தாயார் கோயிலையும் கொண்டுள்ளது.
இங்கு ஆஞ்சநேயர், எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
புராணக் கதை
ராமாயண காலத்தில், சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையை எடுப்பதற்காக இமயமலையைப் பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர்.
பணி முடிந்ததும் மலையை அதே இடத்தில் வைத்துவிட்டு, பெரிய சாளக்கிராமத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார்.
வான்வழியாக வரும் வழியில் சூரியன் உதயமாகவே, தமது கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்தார்.
மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்த போது, அவரால் முடியவில்லை. அப்போது ஓர் அசரீரி ஒலித்தது.
"ராமனுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்றது அந்த ஒலி.
ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்றார். ராமன் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கு வந்தார்.
அவர் விட்டுச் சென்ற சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க, ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.
[சாளக்கிராமம்: சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறத்தைக் கொண்ட கல்லாகும். இந்தக் கல் இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாக கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், இந்து சமயம் முழுவதும் உருவ வழிபாட்டை கொண்டிருந்தாலும், சிவ பெருமானை சைவர்கள் லிங்கம் வடிவில் வழிபடுவதுபோல, வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக்கல்லில் வழிபட்டு வருகின்றனர்.]
தல சிறப்புகள்
இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டது.
ஆஞ்சநேயரின் முகம் மிகவும் அழகாக காணப்படுவது சிறப்பு.
லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோயில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும், இங்குதான் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி(ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோயில் இதுவாகும்.
லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி திறந்த வெளியில், மழை, வெயில், காற்று என அனைத்தையும் தாங்கிக் கொண்டு தொழுத கைகளுடன் நிற்கிறார் ஆஞ்சநேயர்.
வழிபாடு
ராகு, கேது தோஷம் நீங்க உளுந்து மற்றும் எள் வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர்.
[முன்பு ஒருசமயம் நவக்கிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்ச நேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும், ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும், சனிக்கு பிடித்த எள் எண்ணெயாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி, ராகு இவர்களுடைய இடையூறுகளில் இருந்து விடு படுகிறார்கள் என்பதற்காகத் தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.]
லோகநாயகனான நரசிம்மரே கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால், தனக்கும் விதானம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நிற்கிறார் என்பது ஐதீகம்.
பக்தர்கள் ரூ. 1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுத்து வழிபடுகின்றனர்.
108 தங்க மலர் அர்ச்சனை செய்ய கட்டணம் ரூ. 250. இந்த அர்ச்சனை செய்யும் நேரம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை. மதியம் 12.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 9.00மணி வரை ஒரு கட்டண சீட்டுக்கு அதிகபட்சமாக 5 பெயர்கள் (ராசி, நட்சத்திரம்) அர்ச்சனை செய்யப்படும்.
மாணவர்கள் "ஸ்ரீராமஜெயம்" மற்றும் “ஸ்ரீஆஞ்சநேயா போற்றி” என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகின்றனர்.
தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிட்டு வேண்டுகின்றனர்.
திருவிழாக்கள்
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலுடன் இணைந்து ஆஞ்சநேயர் கோயிலுக்கும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
* தமிழ் வருடப் பிறப்பு (சித்திரை)
* தெலுங்கு வருடப் பிறப்பு
* வைகாசி விசாகம் (ஏப்ரல் - மே)
* ஆடி 18 (ஆகஸ்டு)
* ஆடி பூரம் - ஸ்ரீநாமகிரி தாயார் ஊஞ்சல் சேவை
* ஆவணி பவுத்திர உற்சவம் (செப்டம்பர்)
* ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி (செப்டம்பர்)
* ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் - அக்டோபர்)
* புரட்டாசியின் அனைத்து சனிக்கிழமைகள் (செப்டம்பர் - அக்டோபர்)
* நவராத்திரி உற்சவம் (அக்டோபர்)
* விஜயதசமி
* திருகார்த்திகை தீபம் (டிசம்பர்)
* அனுமன் ஜெயந்தி (மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை)
* மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்
* வைகுண்ட ஏகாதசி (ஸ்ரீ அரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள்)
* அறுவடைத் திருநாள் (பொங்கல்- ஜனவரி)
* வருட உற்சவம் (பங்குனி) - அஸ்த நட்சத்திரத்தில் 15 நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படும். மூன்றாம் நாள் திருத்தேர் உலா நடைபெறும்.
தல அமைவிடம்
நாமக்கல் நகரின் மையத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது. சேலத்தில் இருந்து 57 கி.மீ தொலைவிலும் கரூரில் இருந்து 43 கி.மீ தொலைவிலும் ஈரோட்டில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் கோவையில் இருந்து 120 கி.மீ தொலைவிலும் திருச்சியில் இருந்து 85 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் பாசஞ்சர் ரெயில்கள் நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
வழிபாட்டு நேரம்
காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.