நெல்லையப்பர் கோவிலில் மிக விமர்சையாக நடந்த ஆனி பெருந்திருவிழா கொடியேற்றம்

By Sakthi Raj Jun 13, 2024 08:33 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் விளங்குகிறது.இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும்.

இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. அதிலும் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு 418-வது ஆனி பெருந்தோ் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

நெல்லையப்பர் கோவிலில் மிக விமர்சையாக நடந்த ஆனி பெருந்திருவிழா கொடியேற்றம் | Nelaiyappar Gandhimathi Amman Kodiyettram Tiruvila

இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.

நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.

நெல்லையப்பர் கோவிலில் மிக விமர்சையாக நடந்த ஆனி பெருந்திருவிழா கொடியேற்றம் | Nelaiyappar Gandhimathi Amman Kodiyettram Tiruvila

கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது.

சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

மேலும் கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சனி தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்

சனி தோஷம் நீக்கும் சக்தி வாய்ந்த மந்திரம்


மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம்.

இதனையொட்டி கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US