பிரசாதமாக நூடுல்ஸ் ஃபிரைட் ரைஸ் கொடுக்கும் வினோத காளி கோவில் எங்கு தெரியுமா ?
பொதுவாகவே , எல்லா ஆலயங்களிலும் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைத்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். அதில் நெய்வேத்தியமாக பெரும்பாலும் சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், வெண்பொங்கல், சுண்டல் போன்ற பலவிதமான உணவுகள் படைப்பதுஉண்டு.
கிராமங்களை எடுத்துக் கொண்டால் அங்கு அசைவ உணவு, மதுபானங்கள், சுருட்டு போன்றவை பிரசாதமாக படைக்கப்படும். இன்னும் சில உக்கிர தெய்வங்களுக்கு மாமிசங்கள், விலங்குகளின் ரத்தம் போன்றவை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், இந்தியாவில் ஒரு ஆலயத்தில் அதிலும் காளி கோவிலில் நெய்வேத்தியமாக நூடுல்ஸ், சோப்ஸ், ஃபிரைட் ரைஸ் போன்ற ஃபாஸ்ட்புட்களை படைக்கிறார்கள். இது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கிறது. அப்படியாக இந்த வினோதமான நெய்வேத்திய படைப்புகளை கொண்டு வழிபாடு செய்யக்கூடிய அந்த காளி வேதியின் ஆலயம் எங்கு இருக்கிறது.

கோவில் உருவான வரலாறு :
இந்த காளி ஆலயம் கிழக்கு கோல்கத்தாவின் தங்ரா பகுதியில் தான் அமைந்துள்ளது. பக்தர்கள் பலர் இந்த ஆலயத்தை சீன காளி கோயில் என்றே அழைக்கிறார்கள். அதாவது சீனாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது ஏராளமான சீனர்கள் இப்பகுதியில் வந்து குடியேறியதாக சொல்லப்படுகிறது. இங்கு இன்றும் சீனர்கள் அதிகம் வாழ்ந்து வருவதை நாம் காணலாம்.
அப்படியாக, இந்த பகுதியில் வாழ்ந்த தம்பதியின் மகனுக்கு ஒரு முறை உடல் நலம் சரி இல்லாமல் போக எத்தனையோ மருத்துவர்களை சந்தித்து அவர்கள் மகனை சரி செய்ய முடியவில்லை. அதனால் சிறுவனின் பெற்றோர் அவனை இந்த பகுதிக்கு அழைத்து வந்து தங்க வைத்திருக்கின்றனர்.
அந்த சமயத்தில் இன்று இரண்டு கருங்கற்கள் மட்டுமே இருந்துள்ளது. இதையே இன்று தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். மேலும், இங்கு வந்து சில நாட்களிலேயே சிறுவனுக்கு இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் விலகி அவன் பூரண குணமடைந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இங்கு காளி தேவிக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபாடு செய்ய தொடங்கினர். கோவில் இன்றும் சீன வம்சத்தவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் சீன முறையில் தற்போது பூஜைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதோடு இங்கு ஏற்றப்படும் ஊதுபத்தி, கோவிலின் மணி அனைத்தும் சீனப்பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. அதுமட்டுமல்லாமல் சீனாவில் இருந்து பல பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு மேற்கொள்கிறார்கள். சீனர்கள் முறையே பின்பற்றுவதால் சீனர்களின் உணவுகளை காளிதேவிக்கு நெய்வேத்தியமாக படைக்கப்பட்டு அவையை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால், அவை முழுவதும் சைவ உணவுகளை மட்டுமே நெய்வேத்தியமாக படைக்கிறார்கள். இங்கு உள்ள பக்தர்கள் இந்த பிரசாதத்தை "செள மின்" என அழைக்கிறார்கள்.உடல் ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கின்ற பக்தர்கள் பலரும் இங்கு வந்து நல்ல முன்னேற்றம் பெற்றதாக சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |