சர்வ கஷ்ட நிவாரணி பெரியபாளையம் பவானி
சென்னை அருகே 45 கிலோமீட்டர் தொலைவில் பெரியபாளையம் என்ற ஊரில் பவானி அம்மனுக்குக் கோவில் உள்ளது. நாகர் வழிபாட்டின் தொடர்ச்சியாக விளங்கும் இக்கோவில் புற்றின் மீது மண் பூசப்பட்டு அதன் மீது அம்மனின் வெள்ளி முகம் வைத்து கருவறை தெய்வமாக பவானியம்மன் விளங்குகிறார்.
உருவ அமைப்பு
கோயிலினுள் பவானி அம்மன் நான்கு கரங்களுடன் காட்சி தருகின்றாள். பின்இரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியுள்ளாள். முன்னிரு கரங்களில் ஒரு கரம் அபயஹஸ்தம் ஆக உள்ளது. மற்றொரு கரத்தில் அமுத கலசம் ஏந்தி இருக்கிறாள். பவானி நோய் நொடி தீர்க்கும் அம்மனாகக் காட்சியளிக்கின்றாள்.
வெள்ளிக் கிழமைகளில்
பவானி நாட்டுப்புறத் தெய்வமாக அருள் பாலிக்கின்றாள். ஆடி வெள்ளி, தைவெள்ளிக் கிழமைகளில் அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆவடி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளில் வந்து பெரியபாளையம் செல்வதற்கு பெரிய அளவில் பேருந்து வசதிகள் உள்ளன.
கதைகள் இரண்டு
புற்றுத் தெய்வம் பவானி பெரியபாளையத்தில் கண்ணனுக்கு முன்பிறந்த மாயா என்ற காளியம்மனே இங்கு பவானி அம்மனாக இருக்கின்றாள் என்ற கதை புராணக் கதையாக வழங்குகின்றது. இன்னொரு கதை மக்கள் கதையாக உள்ளது.
முன்னொரு காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்குள் வந்து வளையல் விற்றுச் செல்லும் வளையல்காரச் செட்டி ஒருவர் கால்நடையாக பெரியபாளையம் வழியே நடந்து வரும்போது கால் சோர்ந்து ஓரிடத்தில் அமர்ந்து உறங்கி விட்டார். சிறிது நேரம் கண் அயர்ந்த அவர் திடீரென்று விழிப்பு தட்டி எழுந்து உட்கார்ந்தார். அப்போது அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை.
சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். அங்கிருந்த ஒரு புற்றுக்குள் இவருடைய வளையல் மூட்டை கிடந்ததைக் கண்டுபிடித்தார். எவ்வளவோ முயன்றும் அவரால் அந்த வளையல் மூட்டையை புற்றுக்குள் இருந்து வெளியே எடுக்க இயலவில்லை. வளையல் செட்டி மிகுந்த வருத்தத்துடன் ஆந்திராவில் உள்ள அவருடைய வீட்டுக்குப் போய் விட்டார்.
நடந்த களைப்பில் சீக்கிரம் உறங்க போய்விட்டார். அன்று இரவு அவருக்கு ஒரு கனவு தோன்றியது. அதில் அந்த புற்று அவர் கனவில் தெரிந்தது. அங்கிருந்து ஒரு குரல் கேட்டது. ' நான் இங்கு இருக்கிறேன் என்னை எடுத்து கோயில் கட்டி வணங்கினால் இங்கே இருக்கும் மக்களுக்கு நல்லது செய்வேன்' என்ற குரல் கேட்டதும் விழித்துப் பார்த்தவர் வியர்த்துப் போனார்.
மறுநாள் புதிய வளையல் மூட்டையுடன் விற்பனைக்கு புறப்பட்டார். முதல் நாள் தான் உறங்கிய அதே இடத்துக்கு வந்து அந்த புற்றினைப் பார்த்து வணங்கினார். அப்பகுதியில் குடியிருக்கும் மக்களிடம் சென்று தான் கண்ட கனவை விவரித்தார். மக்களும் மெய்சிலிர்த்து போய் நம்மை காப்பதற்காக ஓர் அம்மன் இங்கு இருக்கின்றார் என்பதை அறிந்து அந்தப் புற்றை அம்மன் எனக் கருதி வழிபடத் தொடங்கினர்.
மக்கள் புற்று இருந்த இடத்தை அகழ்ந்து பார்த்த போது அங்கு ஒரு கல்லில் கடப்பாரை பட்டு நங்கு என்ற ஒலி கேட்தது. கடப்பாரை இடித்த கல்லிலிருந்து ரத்தம் கசிந்தது. கடப்பாரை தட்டிய கல்லை எடுத்து வைத்து பூசை செயதனர். இவ்வாறாகவும் கதை விவரித்து கூறப்படுகின்றது.
இது ஒரு பொதுவான கதையாகும். இதே கதை வேறு பல திருத்த திருத்தலங்களுக்கும் சொல்லப்படுகிறது. தோண்டிய இடத்தில் சுயம்பு லிங்கம் கிடைத்தது என்பர். லிங்கம் புதைந்திருந்த இடத்தில் காராம் பசு தினமும் போய் பால் சொரிந்தது என்பர்.
இக்கதைகள் திருத்தலங்களுக்கு சொல்லப்படும் பொதுவான புனிதக் கதைகளாகும். காலப்போக்கில் புற்று மணல் உதிர்ந்து விடாமல் இருக்க அதை மண்ணால் பூசி வைத்தனர். அதன் மீது அம்மனின் முக உருவத்தை வெள்ளியில் செய்து பதித்தனர். புற்று உருவில் தொன்று தொட்டு அம்மனை வணங்கி வருகின்ற வேளையில் அண்மையில் அம்மனுக்கு உருவச் சிலை செய்து தொடர்ந்து பவானி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
ராஜ குல தெய்வம் பவானி
பவானி என்பது பார்வதி தேவியின் மற்றொரு பெயராகும். பவானி என்ற பெயரில் ஒரு நதியும் ஓடுகின்றது. மகாராஷ்டிரா மன்னன் சிவாஜி கையிலிருந்து வாளுக்கு பெயர் பவானி. பவா என்றால் சிவபெருமான். அவரது மனைவி பவானி. 1600 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி துளஜாபுரத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டார் அன்று முதல் அவருக்குப் போரில் பல வெற்றிகள் கிடைத்தன.
பவானி அம்மனின் அருளினால் வெற்றி பெற்ற சத்ரபதி சிவாஜி தன்னுடைய வாளை பவானிக்கு காணிக்கையாக்கினார். சத்ரபதி சிவாஜியின் வெற்றிகளைக் கேட்டு அவரது வீரத்தைப் போற்றிய அவர் ஆட்சியின் கீழ் இருந்த மற்ற மாநிலத்து மக்களும் ராஜகுல தெய்வமான பவானி அம்மனைத் தாங்களும் வழிபடத் தொடங்கினர் பவானி என்றொரு ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி கேரளா மற்றும் தமிழ்நாடு வழியாகப் பாய்கின்றது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி பாய்கின்ற இடத்தில் பவானி காவேரி கூடுதுறை பகுதியில் ஒரு பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் எனப்படுகின்றது.
மற்ற இடங்களில் பவானி வழிபாடு
பவானி தேவியை மகாராஷ்டிரரர்கள் துளஜா, துவரிதா, அம்பா, ஜெகதாம்பா என்ற பெயர்களில் வழிபடுகின்றனர்.. பவானி மகாராஷ்டிரத்தில் துர்க்கையின் வடிவாக போற்றப்படுகிறாள். மகாராஷ்டிரம், வடக்கு குஜராத், வடக்கு கர்நாடகம், மேற்கு ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் வாழும் ராஜபுத்திரர்களும் ராஜ குடும்பத்தினரும் பவானியைத் தமது ராஜ குல தெய்வமாகப் போற்றுகின்றனர்.
பவானி என்றால் உயிரை கொடுப்பவள் என்று நம்புகின்றனர். எனவே அவள் ஒரு தாய்த் தெய்வமாக வணங்கப்படுகிறாள். மகாராஷ்டிரத்தில் துளஜாபோரில் துளஜா பவானி கோவில் உள்ளது. இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
எனவே பவானி அம்மன் வழிபாடு மகாராஷ்டிரா மன்னர்கள் காலத்தில் தமிழகத்தில் புகுந்தது. இங்கு இருந்து வந்த காளியம்மன் மாரியம்மன் வழிபாட்டுடன் பவானி அம்மன் வழிபாடும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் இணைந்து விட்டது. தமிழகத்தின் மற்ற ஊர்களில் பவானி அம்மனுக்கு என்று தனி கோவில்களோ உருவச் சிலைகளோ கிடையாது.
உப சந்நிதிகள்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் மற்ற சிவன், விஷ்ணு கோயில்களில் இருப்பதைப்.போல பல உப சந்நிதிகள் உள்ளன. இக்கோயில் வளாகத்தில் முருகன், விநாயகர், பெருமாள் மகாலட்சுமி, அனுமன், பரசுராமன் ஆகியோருக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. பழந்தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்த நாகர் வழிபாடும் இவ்விடத்தில் தனி வழிபாடாகத் தொடர்கின்றது.
பவானி அம்மன் கோயிலில் உள்ள விநாயகர் அற்புத சக்தி விநாயகர் என்ற பெயருடன் திகழ்கின்றார். இதற்கு அருகில் ஸ்ரீ சர்வசக்தி மாதங்கி அம்மன் சன்னதியும் உள்ளது. மாதங்கி வழிபாடு என்பது ஆந்திராவில் உள்ளது. இக்கோயில் தெலுங்கு மொழி பேசுவோர் வாழும் ஆந்திர மாநிலத்தின் எல்லையோரமாக இருப்பதால் தெலுங்கு மக்களின் மாதங்கிக்கும் இங்கு ஒரு சந்நிதி உள்ளது.
நேர்த்திக்கடன்கள்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் தலைமுடி காணிக்கை கொடுக்கும் பழக்கம் இருக்கின்றது. இது தவிர பக்தர்கள் தினமும் அங்கப் பிரதட்சணம் செய்தும் வேப்பிலை ஆடை தரித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். கரகம் எடுக்கும் நேர்த்திக்கடனும் வழிபாட்டுச் சடங்குகளில் ஒன்றாக உள்ளது.
மக்கள் செல்வாக்கு பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்ற கோவிலாகும். வருடத்தின் 365 நாட்களும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது, பவானியம்மன் சக்தி உள்ள தெய்வமாக விளங்குவதால் நோய்நொடி தீர்ப்பதற்கும் திருமணத்தடை நீக்குவதற்கு மற்றும் பிள்ளை பேறு உண்டாவதற்கும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
தொழிலில் லாபம் கடன் தொல்லை நீங்குதல் எதிரிகளை வெல்லுதல் என எந்த பிரச்சினை இருந்தாலும் அவர்கள் பவானி அம்மனை வந்து வணங்கி சிக்கல் தீர்ந்து நலம் பெறுகின்றனர். சர்வ ரோக நிவாரணி போல இங்கு பவானி அம்மன் சர்வ கஷ்ட நிவாரணியாகத் திகழ்கின்றாள்.
இக்கோவிலில் அம்மனை அருகில் இருந்து தரிசிக்க 25 ரூபாய் மட்டுமே சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை அருகில் சென்று தரிசித்து மகிழ்கின்றனர். இக்கோவிலில் அம்மனுக்குரிய குங்குமம் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தீர்த்தம் சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி உடையதாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |