சகலதோஷ நிவர்த்தி ஸ்தலம்- விஜயாபதி விஸ்வாமித்திரர் கோயில்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் விஜயாபதி என்ற கடற்கரை ஊரில் விசுவாமித்திர முனிவருக்கு தனிக் கோவில் உள்ளது. அவரே இங்கு முக்கிய வழிபடு தெய்வமாவார். இக்கோவிலில் மகாலிங்கம் என்ற பெயரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. ஓம குண்ட விநாயகர் அருள் பாலிக்கும் தனிச் சன்னதியும் உள்ளது. இக்கோயிலின் விச்வாமித்திரருக்கு இரண்டு கதைகளும் உள்ளன.
சிறப்பு பூஜைகள்
விசுவாமித்திரர் திருத்தலத்தில் இச்சந்நிதியில் அவருக்கென்று சில சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மற்ற கோவில்களில் இவை கிடையாது. அவர் பிறந்த விசாக நட்சத்திரத்தன்று அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அவர் யாகம் செய்யத் தொடங்கிய சித்திரை மாத அனுஷ நட்சத்திரத்தன்றும் தியானம் செய்யத் தொடங்கிய மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றும் மாதந்தோறும் அனைத்து பௌர்ணமி திதியன்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
தோஷ நிவர்த்திப் பூஜை
எந்த தோஷமுள்ளவராக இருந்தாலும் விஜயாபதி அருகில் உள்ள கடலில் குளித்துப் பின்பு ஈரத்துணியோடு கோவிலுக்கு வர வேண்டும். இங்கு வந்து ஓம குண்ட விநாயகருக்கு ஒரு சிதறு காய் உடைக்க வேண்டும். அதன் பின்பு கோவிலை மூன்று முறை சுற்றி வந்து விசுவாமித்திரருக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்ய வேண்டும். இங்குப் பல வகையான அபிஷேகங்களும் பலவகை மலர்களால் அர்ச்சனையும் செய்யப்படுகின்றது.
பித்ரு தோஷம்
பித்ரு தோஷம் என்பது முன்னோர்கள் வழியில் வரும் சாபம் ஆகும். முன்னோர் தம் வாழ்வில் யாருக்காவது தீங்கு இழைத்திருந்தால் பாதிக்கப்பட்டவர் சாபம் விட்டிருப்பார். அந்த சாபம் தீமை செய்தவரின் குடும்பத்தில் பிறந்தவர்களை ஏழேழு தலைமுறைக்கும் பாதிக்கும்.
இதனால் வம்சவிருத்தி ஏற்படுவதில் தடை உண்டாகும். திருமணத் தடை ஏற்படும். குழந்தை பெறுவதில் சிக்கல்கள் தோன்றும். பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதில்லை. ஊனமுற்ற குழந்தைகள், மனநலம் சரியில்லாத குழந்தைகள், ஆட்டிசம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறக்கும்.
அல்லது குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விடும். 18, 19 வயதிலேயே விபத்தில் சிக்கியும் நோய் தாக்கியும் இறந்து போகும். பித்ரு தோஷம் உள்ள குடும்பங்களில் இது போன்ற குழந்தைகள் இருப்பதைப் பார்க்கலாம்.
சிலருக்குக் குழந்தை பிறந்து வளர்ந்து திருமணம் ஆனாலும் ஆண் வாரிசோ அல்லது பெண் வாரிசு இல்லாமல் போய்விடும். இரண்டு வாரிசும் உள்ள குடும்பங்கள் தான் பாக்கியம் பெற்ற குடும்பங்கள் ஆகும். ஆண் வாரிசு / பெண் வாரிசு இல்லை என்றால் அதுவும் பாக்ய தோஷம் உள்ள குடும்பம் ஆகும்.
தோஷ பரிகாரம்
முன்னோர்களின் சொத்துக்களை சுவிகரிப்பது போல அவர்களின் பாவங்களையும் ஒருவர் சுவிகரிக்கின்றார். எனவே முன்னோர் செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடி பித்ரு தோஷம் உள்ளவர்கள் முதியவருக்கும் குழந்தைகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தான தர்மங்கள் செய்து அவர்களின் வாழ்த்துக்களைப் பெற வேண்டும்.
தான் தர்மம் பெற்ற அறிமுகம் இல்லாத ஒருவர் முன்பின் தெரியாத ஒருவர் 'நீங்க நல்லா இருக்கணும் உங்க புள்ள குட்டி எல்லாம் நல்லா இருக்கணும், நீங்க தீர்க்காயுஸா இருக்கணும், தீர்க்க சுமங்கலியா இருக்கணும்' என்று மனதார வாழ்த்தினால் முன்னோர் செய்த பாவங்கள் ஒருவருக்குத் தொலைந்து போகும்.
ஒருவருக்குப் பித்ரு தோஷம் நீங்க தான தர்மம் செய்வதுடன் பித்ரு தோஷ நிவர்த்திக் கோவில்களுக்கு சென்று தொடர்ந்து வழிபட்டு வருவதும் நல்ல பலனைத் தரும். ம் இக்கருத்தைத் தான் பெரியவர்கள் நோய்க்கும் பார் பேய்க்கும் பார் என்றனர்.
ஒரு துன்பத்துக்கு மனிதர்களிடமும் நிவாரணம் தேட வேண்டும் மனிதர்கள் அல்லாத அமானுஷ்ய சக்தியான தெய்வத்திடமும் போய் முன்னோர் செய்த பாவங்களுக்காக கண்ணீர் விட்டு அழுது அந்தப் பாவம் இனி நம்மை தன்னை தொடரக்கூடாது என்று பிரார்த்திக்க வேண்டும். அவ்வாறு வேண்டிக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த கோயில் நெல்லை மாவட்டத்தில் உள்ள விஜயாபதி விசுவாமித்திரர் கோவில் ஆகும்.
தோஷம் எப்படி தெரியும் ?
ஒருவருக்குப் பித்ரு தோஷம் இருப்பதை அவர் ஜாதகத்தைப் பார்த்துக் கண்டுபிடித்து விடலாம். 3, 5, 9 ஆகிய இடங்களில் ராகு கேதுக்கள் என்ற சர்ப்பக் கிரகங்கள் இருந்தால் அவருக்கு முன்னோர் வழியில் பாவங்கள் தொடர்கின்றது என்பது உறுதி.
பெண் ராசிகளில் ராகு கேது இருந்தால் பெண்தோஷம் உள்ளது. முன்னோர்களில் யாராவது ஒருவர் பெண்ணுக்குக் கெடுதல் செய்திருந்தால், விதவைகளின் சொத்துக்களை அபகரித்திருந்தால், ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தால், ஒரு பெண்ணை வன்புணர்வு செய்திருந்தால் அவரது குடும்பத்தில் பெண் தோஷம் இருக்கும்.
இதனால் அவர்களின் பெண் வாரிசுகள் விருத்தி அடையாது. அவர்கள் விதவைகளாக அல்லது எந்த சுகமும் பெற முடியாதபடி நோயாளி கணவர்களுடன் வாழ்ந்து கொண்டோ, கணவரைப் பிரிந்து தனி ஆளாகவோ, பிள்ளைப்பேறு இன்றியோ வாழ நேரிடும்.
பெண் பாவம் விலக, இவர்கள், ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது ஏழைப் பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும். இத்துடன் பாவ நிவர்த்தி கோயில்களுக்கும் போய்த் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.
விசுவாமித்திரர் கதை 1
ராஜரிஷி என்று அழைக்கப்படும் விசுவாமித்திரர் கௌசிகன் என்ற பெயரில் மன்னராக வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் காட்டுக்குத் தன் படை பரிவாரங்களுடன் வேட்டைக்கு வந்தார். அருகில் இருந்த வசிஷ்ட ரிஷியின் குடிலுக்கு போய் அவரைச் சந்தித்து ஆசி பெற்றார். வசிஷ்டர், ' இருங்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு போகலாம்' என்றார்.
அதற்கு கவுசிக மன்னர் 'இத்தனை பேருக்கும் உங்களால் சாப்பாடு ஏற்பாடு செய்ய முடியுமா? அது மிகவும் சிரமம். வேண்டாம். நாங்கள் கிளம்புகிறோம்' என்றார். வசிஷ்டரோ 'உட்காருங்கள் அனைவருக்கும் ஒரு நொடியில் சாப்பாடு தயாராகிவிடும்' என்று சொல்லிவிட்டு உள்ளே போய் காமதேனுவை அழைத்து (காமதேனு என்பது ஒரு தெய்வப்பசு. அது கேட்டதை கொடுத்தவல்லது).
'தேனம்மா இவர்கள் எல்லோருக்கும் சாப்பாடு வழங்க வேண்டும் வேண்டிய ஏற்பாடுகளை செய்' என்றார். காமதேனு சாப்பாடு தயார் செய்து மன்னருக்கும் அவருடன் வந்த படை பரிவாரங்களுக்கும் அறுசுவை அமுது அளித்தாள்.
மன்னர் வசிஷ்டரிடம் 'இந்த காமதேனு தன்னிடமிருந்தால் மிகுந்த பலன் தரும்' என்கிறார். 'காட்டில் இருப்பதை விட நாட்டில் ஒரு மன்னரிடம் இருப்பது மக்களுக்கு மிகவும் நன்மை. எனவே என்னிடம் கொடுத்து விடுங்கள்' என்று கேட்டார். வசிஷ்டரோ 'அது இயலாது காட்டுக்குத்தான் அது மிகுந்த பலனை தரும்.
என்று கறாராகச் சொல்லிவிட்டார். மன்னர், வசிஷ்டரைப் பார்த்து 'காமதேனு எனக்கு வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார். 'கடுமையான தவம் செய்ய வேண்டும்' என்று வசிஷ்டர் கூறினார். கடுமையான தவம் செய்வது சிரமம் என்று கருதிய கௌசிக மன்னர் காமதேனுவை பற்றி இழுத்துக் கொண்டு வரும்படி தன் படைகளிடம் உத்தரவிட்டார்.
காமதேனு அவர்களைச் சுட்டெரித்து விட்டது. அனைவரும் காமதேனுவின் கோபத்துக்கு ஆளானார்கள். கௌசிக மன்னர் அதிர்ந்து போனார். படை பரிவாரங்கள் இல்லாமல் நான் ஒற்றை ஆளாய் அரண்மனைக்குப் போய் என்ன செய்வேன்.
எனவே நான் தவம் செய்யப் போகிறேன் என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் போய் கடும் தவத்தில் மூழ்கினார். பல ஆண்டுகள் தவம் செய்தும் கௌசிக மன்னருக்கு இறைவன் காட்சியளிக்கவே இல்லை. தன் உடம்பையே பலிப் பொருள் ஆக்கி இறைவனுக்கு அர்ப்பணித்தார்.
மிகப்பெரிய ஐந்து முக விளக்கை உருவாக்கி தன் இரண்டு கை இரண்டு கால் மற்றும் தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் திரியாக கொளுத்தி நெருப்பில் தன் இன்னுயிரை இறைவனுக்குத் திருப்பலியாக அர்ப்பணித்தார்.
சிவபெருமானும் அம்பிகையும் காட்சி அளித்தனர். காமதேனுவை அளித்தனர். வசிஷ்டரிடம் போய் வணங்கும்படி அறிவுறுத்தினர். கௌசிக மன்னர் விசுவாமித்திரர் என்ற பெயரில் இவ்வுலகின் நண்பன் ஆனார். வசிஷ்டரிடம் வந்து வணங்கி நின்றதும் அவர் பிரம்மரிஷி என்று விசுவாமித்திரரை அழைத்தார்.
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். தன் இன்னுயிரை தியாகம் செய்த இடம் இது என்பதால் அவர் ஹோம குண்டம் வளர்த்த இடம் இன்றைக்கும் கிணறு போல பள்ளமாகத் தோன்றுகிறது. இதை ஓம குண்டக் கிணறு என்கின்றனர்.
பெண் சாபம்
கதை 2
விசுவாமித்திரர் யாகம் செய்த போது தாடகை என்பவள் அவருக்குப் பல இடையூறுகளைச் செய்தாள். அவளைக் கொன்று போட்டால் தான் தன்னுடைய யாகம் முற்றுப் பெறும் என்பதை உணர்ந்த விசுவாமித்திரர் தசரத மன்னனிடம் போய் உதவி கேட்டார். 'என்னுடைய யாகம் சிறப்பாக நடைபெறுவதற்கு மன்னராகிய நீங்கள் எனக்கு உதவ வேண்டும்' என்றார்.
தசரத மன்னர் தன் மகன் இராமனை அழைத்து 'நீ போய் இவருடைய யாகம் நிறைவு பெறும் வரை உடனிருந்து உதவுக' என்றார். இராமபிரான் தன் இளவலான இலக்குவனையும் அழைத்துக் கொண்டு விசுவாமித்திரருடன் காட்டுக்குச் சென்றார்.
விசுவாமித்திரரின் யாகசாலையைச் சுற்றி இராம, இலக்குவனர் இருவரும் காவல் இருந்தனர். அப்போது தாடகை என்ற அரக்கி நடந்து வந்ததால் பூமி அதிர்ந்தது. அவள் மரக்கிளைகளையும் பாறைகளையும் தூக்கி எறிந்துகொண்டு வந்தாள்.
இராமனும் இலக்குவனும் தொடர்ந்து அம்பு மழை பெய்து அவளைக் கொன்றனர். அவள் தரையில் விழுந்ததும் இராமனை பார்த்து 'உன் வீரத்தை ஒரு பெண்ணிடமா நீ காட்ட வேண்டும்? கடைசி வரை உன் வீரம் ஒரு பெண்ணுக்காகவே பயன்படட்டும் போ' என்று சாபம் கொடுத்து விட்டு இறந்தாள்.
இச்சாபத்தின் காரணமாகவே இராமனின் வீரம் சீதையை மீட்டுக் கொண்டு வருவதற்காக இராவணனிடம் மட்டும் பயன்பட்டது. தாடகையைக் கொன்ற தோஷம் விசுவாமித்திரருக்கும் வந்து சேர்ந்தது. விசுவாமித்திரர் தன் தோஷத்தை தீர்க்க இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு பெண் தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற்றார்.
எனவே இத்திருத்தலம் சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகின்றது. ஒருவர் ஜாதகத்தில் எந்தத் தோஷம் இருந்தாலும் விஜயாபதி விசுவாவித்ரர் கோவிலுக்கு வந்து இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலிங்கத்தை வணங்கிச் சென்றால் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.
நவகலச யாகம்
விஜயாபதி விசுவாவித்ரர் கோவிலில் நவ கிரகங்களுக்கும் ஒன்பது கலசங்கள் / கும்பங்கள் வைத்து நவ கிரக தோஷ நிவர்த்தி யாகம் செய்யப்படுகின்றது. இந்த ஒன்பது கலசங்களில் இளநீர், மஞ்சள் பொடி, பன்னீர், வெட்டி வேர், சந்தனம், ஸ்நானப்பொடி, விபூதி, பால், குங்குமம் என்று ஒன்பது மங்கலப் பொருட்கள் நிரப்பி பூஜை செய்கின்றனர்.
கோவிலின் வில்வ மரத்திற்கு அடியில் நவகலச பூஜை நடைபெறுகின்றது. பூஜை வேண்டியவர் நவ கலசங்களுக்கு முன் அமர்ந்திருப்பார். நவ கலசங்களில் உள்ள வாசனை திரவியங்கள் கலந்த நீரால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
இதனால் அவரை பிடித்து இருக்கும் எந்த கிரக தோஷமாக இருந்தாலும் அவரை விட்டு விலகி விடும். தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெற்று அவர் சுத்தமாகி விடுவார். இப் பூஜை முடிந்ததும் சிவனுக்கும் அம்பாளுக்கும் அவர் தனி பூஜை செய்ய வேண்டும்.
நவக்கிரக தோஷம்
எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டு இருந்தாலும் அந்தத் தோஷம் விலகுவதற்கு விஜயாபதி விசுவாமித்ரர் கோவிலில் வந்து நவகலச யாகம் செய்யலாம். சூரிய தோஷத்தால் தந்தை, அரசு காரியங்கள், அரசு பதவி, அதிகாரம், அரசியல் ஆகியவற்றில் பாதிப்புகள் வரும்.
சந்திர தோஷத்தால் மனநலம் பாதித்தல், தாயாருக்கு உடல் நலக் கேடு, ஆஸ்துமா, உடல் வறட்சி தோல் வறட்சி ஏற்படும். செவ்வாய் தோஷத்தால் உடல்நிலை பாதிப்பு, ரத்தம் தொடர்பான வியாதிகள், மாதவிலக்குப் பிரச்சனை, ரத்தப் புற்றுநோய், திருமணத் தடை போன்றவை உண்டாகும்.
புதன் தோஷத்தால் படிப்பு மந்தம், காது கேளாமை, கணக்கில் மந்த நிலை, திக்குவாய், மூன்றாம் பாலின பிரச்சனை போன்றவை வரும். வியாழ தோஷத்தால் தாம்பத்திய குறைபாடுகள், நாத்திகம் பேசுதல், வீட்டு பெரியவர்கள் குருமார்கள் ஆசிரியர்கள் ஆகியோருடன் கருத்து முரண்பாடு கொள்ளுதல், விதண்டாவாதம் பேசுதல் ஏற்படும்.
சுக்கிர தோஷத்தால் பெண்களால் தொல்லை, காதல் தோல்வி, விவாகரத்து, பால்வினை நோய் போன்றவை வரும். சனி தோஷத்தால் மந்த நிலை, எதையும் காலதாமதம் செய்தல், ஒத்திப் போடுதல், காலில் ஆறாத புண், தீராத ரணம், அடுத்தடுத்து காயம் படுதல், வயதில் மூத்த பெண், விதவை அல்லது நீசப் பெண்ணுடன் தகாத உறவு கொள்ளுதல், பணியாளர்களோடு முரண்படுதல், வீண் சண்டை சச்சரவு வழக்கு விவகாரம், மாற்றுத் திறனாளிகளோடு பிரச்சனை, அடிதடி, வம்பு, வழக்கு தகராறு, அடிக்கடி பொருள் களவு போதல் அல்லது காணாமல் போதல் போன்றவை ஏற்பாடும். இது பின்னரே சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு வந்து நவகலச யாகம் செய்வது நலம்.
அம்பாள் வழிபாடு
விஜயாபதி விசுவாமித்ரர் கோவிலில் சிவபெருமானுக்குப் பெயர் மகாலிங்கம். அம்பாளுக்கு பெயர் அகிலாண்டேஸ்வரி. வெள்ளிக் கிழமைகளில் அம்பாளுக்குச் சிவப்பு நிறப் பட்டு சார்த்தி, செவ்வரளி பூ மாலை சூட்டி வழிபட்டால் எண்ணியது எண்ணியாங்கு நடைபெறும்.
மகாலிங்கேஸ்வரருக்கு வெள்ளைப் பட்டு, சார்த்தி, வெள்ளை மலர்களால் வழிபாடு செய்ய வேண்டும். விசுவாமித்திரர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கிய தைப்பூசம் அல்லது தை பௌர்ணமி அன்றைக்கு மூவருக்கும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வாழ்வில் குபேர சம்பத்தை கொடுக்கும்.
ஓம குண்ட விநாயகர் விசுவாமித்திரர் யாகம் செய்த இடம் குளமாக விளங்குகின்றது. இதுவே திருக்கோயிலின் புனித தீர்த்தமும் ஆகும். இதற்கு அருகில் இருக்கும் விநாயகருக்கு ஓம குண்ட விநாயகர் என்று பெயர். அவருக்கு அருகில் இராமர் இலட்சுமணர் உருவங்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் செதுக்கப்பட்டுள்ளது.
பெண் சாபம்
முன்னோர்களில் ஒருவர் ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தால் அவரின் வம்சாவளியினருக்கு பெண் சாபம் பிடிக்கும். அல்லது தன் குடும்பத்தில் பிறந்த ஏதேனும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவள் வாழாமல் செத்த காரணத்தினாலும் அவள் வயிற்றெரிச்சல் தீராமல் இறந்த காரணத்தினாலும் அக்குடும்பத்தில் பிறந்த பெண் வாரிசுகள் வாழாமலும் போகும். வந்த நோய் தீராமலும் பிள்ளைப் பேறு இல்லாமலும் அவதிப்படுவார்கள். இது பெண் சாபம் ஆகும்
பிரேத சாபம்
பிரேத சாபம் என்பது ஆண்கள் எவரேனும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னோர் ஒருவர் காரணமாக இருந்தால் அவருடைய வம்சாவளியில் வரும் ஆண்களுக்கு தீராத நோய், உடல் ஊனம், திருமணம் ஆகாத நிலை ,தாம்பத்திய சுகம் இன்மை, நோயாளி மனைவி, நோயாளி பிள்ளைகள் என்று சிரமங்கள் உண்டாகி வாழ்க்கையில் நிம்மதி இருக்காது.
இறந்தவரின் ஆவி கொலைக்கு காரணமானவரின் குடும்பத்தை ஏழேழு தலைமுறைக்கும் பிடித்துத் துன்பம் கொடுத்துக் கொண்டே இருக்கும். இவர்களும் விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலுக்கு வரலாம்.
குலதெய்வ சாபம்
குலதெய்வம் என்பது இறந்து போன முன்னோரை வழிபடுவதாகும். பொது நன்மைக்காகக் கொலையகி மாண்டவர்களை வழிபடுவதும் தமிழ்ச் சமய மரபில் இருந்து வருகிறது. அம்மை வந்து குளிர்ந்தவர்களை (இறந்தவர்களை) யாரும் வழிபடுவது கிடையாது.
ஏனெனில் அவர்கள் தெய்வமாகிவிட்டனர். பருவம் எய்தமல் இறந்து போன சிறு குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளைக் குலதெய்வமாக கொண்டு வணங்கும் மரபு உண்டு. ஆண்டுதோறும் அவர்களை நினைத்து குலதெய்வ பூஜை நடக்கும் மாசி அமாவாசை இரவில் அல்லது அந்தப் பெண் இறந்த திதியன்று துணிமணி, வளையல், பொட்டு, பூ வாங்கி வைத்து வணங்கவேண்டும்.
காதோலை, கருகமணி வழிபாடு இத்தகையதே. ஏழைக் குழந்தைகளுக்குத் துணிமணி, வளையல், பொட்டு, பூ வாங்கிக் கொடுக்க வேண்டும். கன்னிப் பெண்கள் இறந்திருந்தால் அவர்களுக்கும் இதுபோல ஆண்டுதோறும் பூசை செய்து வர வேண்டும்.
இறந்த கன்னிப் பெண் அதே குடும்பத்தினரால் அல்லது வேறு இனத்தவரால் வன்கொலையாக கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது ஊர் நன்மைக்காக, சாதியின் நன்மைக்காக தீயில் விழுந்து, கிணற்றில் விழுந்து தன்னைத்தானே பொது நன்மைக்காக தன் உயிர்ப் பலியாகக் கொடுத்திருக்கலாம்.
அவர் எந்த குலத்துக்காக குடிக்காக இறந்தாரோ அந்த் குலத்தின் அனைத்துக் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் ஒரு நாள் அப்பெண்ணிற்கு துணிமணி வாங்கி வைத்து வணங்கி வர வேண்டும். அதே வயதுடைய பெண்களுக்கு அன்றைக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்ய வேண்டும்.
இளம் பெண்களின் திருமணத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளை அக்குடும்பத்தினர் அனைவரும் தொடர்ந்து செய்து வர வேண்டும். பொதுவாக இளம்பெண் மரணங்கள் சாதியம் சார்ந்த ஆணவ படுகொலையாகவே இருக்கும்.
இந்நிலையில் அச்சாதியைச் சேர்ந்தவர்கள் எந்த ஊரில் இன்று வசித்தாலும் ஒரு கூடி வணங்க வேண்டும். அவ்வூரில் வாழ்ந்த குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இப்பெண்ணைத் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.
அம்மாச்சியார்/ அவ்வையார்
சில குடும்பங்களில் வயது ஒரு குடும்பத்தின் தலைவியாக இருந்து வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த மூதாட்டியரை, அம்மாச்சியார், அவ்வையார் (தெலுங்கு அவ்வா) என்ற பெயரில் வழிபடுகின்றனர். அவர்களும் தெய்வமாக இருந்து தனது குலத்தை தன் வழித்தோன்றல்களை இன்னல்களில் இருந்து காப்பாற்றுகின்றனர்.
அவர் இறக்கும்போது பத்து, பதினைந்து குடும்பம் இருந்திருக்கலாம், இன்றைக்கு அது 40, 50 குடும்பமாக பெருகியிருக்கும். இந்நிலையில் அம்மாச்சியாரையும் அவ்வாவையும் குல தெய்வமாக கொண்ட 40, 50 குடும்பங்களும் ஒன்று சேர்ந்து குலதெய்வ பூஜை செய்ய வேண்டும்.
குலதெய்வ பூஜை
குலதெய்வ பூஜை செய்யாதவர் வீட்டில் குலதெய்வத்தால் தீமை ஏற்படாது. அதே சமயத்தில் குலதெய்வத்தின் அருள் கிடைக்காது . இதனால் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும் போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு குலதெய்வத்தின் துணை இருக்காது.
எனவே குலதெய்வத்தின் அருள் வேண்டும் என்று நினைப்பவர்கள் இயன்றவரை குடும்பங்களை ஒன்று சேர்த்து குலதெய்வ வழிபாடுகளை தொடர்ந்து நடத்தி வர வேண்டும். இதுவரை நடத்தவில்லை என்றால் தனிநபர் அல்லது தனி குடும்பத்தினர் விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலுக்கு வந்து வணங்கி தன் அளவிற்காவது குலதெய்வத்தின் அருளைப் பெறலாம்.
குலதெய்வம் சாபம் என்பது குலத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து வணங்கும்போது நீங்கி விடும். அனைவருக்கும் நல்ல ஏற்றமும் முன்னேற்றமும் வாழ்க்கையில் கிடைக்கும். சகலதோஷ நிவர்த்தி ஸ்தலமான விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலுக்கு மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று வந்து விசுவாமித்திரருக்கும் மகாலிங்கேஸ்வரருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்து வருவது அனைவருக்கும் நல்லது.
ஆண்டுக்கு ஒரு முறை இங்கு வந்து நவகலச பூஜை செய்து நவக்கிரக தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவது இன்னும் சிறப்பானதாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |