பாவங்களைப் போக்கும் சிவபெருமானின் சக்தி வாய்ந்த 10 திருநாமங்கள்
ஒரு மனிதனுடைய கர்ம வினைகளை அழிக்கக்கூடிய கடவுள் என்றால் அது சிவபெருமான் மட்டும்தான். நீங்கள் முற்பிறவியில் எவ்வளவு பாவம் செய்தவர்களாக இருந்தாலும் இந்த பிறவியில் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை மனதார பாராயணம் செய்து சிவனை வழிபாடு செய்தால் உங்களுடைய பாவ கணக்குகள் முற்றிலுமாக அழிக்கப்படும்.
அப்படியாக, சிவபெருமானுக்கு பல்வேறு திருநாமங்கள் இருக்கிறது. ஒவ்வொரு திருநாமங்களுக்கு பின்னாலும் வியக்கத்தக்க புராணம் உள்ளது. அந்த வகையில் சிவபெருமானுடைய 10 திருநாமங்களும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அப்பனின் அருளையும் பார்ப்போம்.

1.நீலகண்டன்:
ஒருமுறை பக்தர்களுக்காக ஆலகால விஷத்தை உண்டு, அதை கண்டத்தில் நிறுத்திய சிவபெருமானின் திருக்கோலத்தை குறிக்கக்கூடிய திருநாமம் ஆகும். நீல நிற கழுத்தை கொண்டவர் என்பதால் சிவபெருமானுக்கு நீலகண்டன் எனும் திருநாமம் உண்டாயிற்று.
இந்த சம்பவம் தான் இன்றைய நாளில்நாம் பிரதோஷ விரதம் ஆக கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்தது என்பதால் இந்த பெயர் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2.கங்காதரன்:
மோட்சம் அடைய வேண்டும் என்றால் எப்படி சிவனை சரணம் அடைய வேண்டுமோ அதே போல் பாவங்கள் கரைய வேண்டும் என்றால் கங்கையை சரணடையவேண்டும்.
பாவங்களை போக்கக்கூடிய புனித நதியான கங்கையை தலையில் தாங்கியவர் என்பதால் சிவபெருமானுக்கு கங்காதரன் எனும் பெயர் வருகிறது. இந்த திருநாமத்தை சொல்வதால் ஒருவர் கங்கை நதியில் நீராடிய புண்ணியத்தை அவர்கள் பெறுகிறார்கள்.
3. பூதநாதன்:
இந்த உலகத்தில் இருக்கக் கூடிய அனைத்து பூத கணங்களுக்கும் தலைவன் சிவபெருமான் தான். தீய சக்திகளை தன்னுள் அடக்கி காக்கக்கூடியவன் சிவன் என்பதால் சிவனுக்கு பூதநாதன் என்ற பெயர் உண்டாயிற்று.
4. ருத்ரன்:
சிவபெருமானின் மிகவும் பிரபலமான மற்றும் எல்லோருக்கும் பிடிக்கக்கூடிய அதோடு இப்பெயரை சொன்னாலே ஒரு அதீத சக்தியை உணரக்கூடிய பெயர் என்றால் அது ருத்ரன் என்ற திருநாமம் தான். சிவபெருமான் நெருப்பின் அம்சமானவர் என்பதாலும் பாவங்களை அழிப்பதற்கு உக்கிரமாக உருவெடுக்கக் கூடியவர் என்பதாலும் அவருக்கு ருத்ரன் என்ற பெயர் உண்டாயிற்று.
5. த்ரிநேத்ரா:
சிவபெருமானுக்கு இரண்டு கண்களோடு சேர்த்து மூன்றாவது ஞான கண்ணாக நெற்றிக்கண் ஒன்று இருப்பது எல்லோரும் அறிந்து தான். அதனால் மூன்று கண்களை உடைய எம்பெருமான் என்பதால் த்ரிநேத்ரா என்ற பெயர் உண்டாயிற்று.

6. பசுபதிநாதர்:
பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய விலங்குகளுக்கு எல்லாம் தலைவன் அல்லது பசு இனங்களின் தலைவன் என்பதால் சிவபெருமானுக்கு பசுபதி நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பதி என்றால் பாதுகாவலர் என்ற பொருள். உலகத்தில் எல்லா விலங்குகளுக்கும் பாதுகாவலர் எம்பெருமான் தான் என்பதை இந்த திருநாமம் நமக்கு உணர்த்துகிறது.
7. மகாதேவன்:
பிரபஞ்ச சக்தியில் மிக உயர்ந்த சக்தி என்றால் அது சிவபெருமான் மட்டுமே. தெய்வங்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைவராலும் வழிபாடு செய்யக்கூடிய எம்பெருமான் என்பதால் அவருக்கு மகாதேவன் என்ற ஒரு திருநாமம் உண்டாயிற்று.
8. மிருத்யுஞ்ஜயா:
சிவபெருமானின் திருநாமங்களில் மிகவும் சக்தி வாய்ந்த திருநாமமாக மிருத்யுஞ்ஜயா என்ற திருநாமம் இருக்கிறது. மிருத்யு என்றால் மரணம். மரணத்தை வென்றவன் அல்லது எமனை வெற்றி கொண்டவன் என்பதால் சிவபெருமானுக்கு இந்த பெயர் உண்டாயிற்று.
9. நடராஜர்:
சிவபெருமானுடைய நடன திருக்கோலத்திற்கு நடராஜர் என்ற பெயர் உண்டாயிற்று. மாயை, சுயநலம், எதிர்மறை எண்ணம் உள்ளிட்ட குணங்களுக்கு எல்லாம் தலைவனாக விளங்கும் அபஸ்மரன் என்ற அசுரனை மிதித்து தனது கட்டுப்பாட்டில் வைத்த நிலையில் சிவபெருமான் காட்சி கொடுக்கக்கூடிய அற்புதமான திருக்கோலம் ஆகும்.
10. மகாகாலன்:
ஒருவர் தன்னுடைய பக்தருக்கு தீங்கிழைக்கிறார்கள் என்றால் அங்கு சிவபெருமான் எவ்வளவு பெரிய அவதாரத்தையும் எடுப்பதற்கு தயங்கமாட்டார். அதே போல் தான் தன்னுடைய பக்தன் மார்க்கண்டேயனை காப்பாற்ற எமதர்மனையே வதம் செய்து எமனுக்கே தலைவரானவர் என்பதால் சிவ பெருமானுக்கு மகாகாலன் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அதனால்தான் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு கால பயம், எம பயம் இருக்காது. அவர்கள் நீண்ட ஆயுள் கொண்டு நல்ல ஆரோக்கியம் பெற்று மன வலிமையோடு இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |