சோமவார விரதம் - நோக்கும் போக்கும்

By பிரபா எஸ். ராஜேஷ் Oct 04, 2024 04:56 AM GMT
Report

பெருமாளுக்கு ஏகாதசி விரதம் இருப்பது போல் சிவபெருமானுக்கு சிவனடியார்கள் சோமவார விரதம் இருக்கின்றனர்.

இவ்விரதம் வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று உண்ணாநோன்பு இருந்து சந்திர தரிசனம் கண்ட பின்பு சிவபெருமானை வணங்கி விரதத்தின் பலனைப் பெறுவதாகும்.

விரதத்தை சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடைப்பிடிப்பது வழக்கம்.

சங்காபிஷேகம்

கார்த்திகை மாத சோமவார விரதம் மிகவும் விசேஷமானது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.

108 அல்லது 1008 சங்குகளில் தூய நீரை எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வர். சங்கு வளத்தின் செல்வத்தின் அடையாளம். சோம வார விரதம் இருந்து சங்காபிஷேகம் பார்ப்பவர்களுக்கு வீட்டில் செல்வம் பெருகும்.  

சோமவார விரத வரலாறு

சோமவார விரதம் - நோக்கும் போக்கும் | Somavara Viratham In Tamil  

சோமவார விரதம் என்பது ஆரம்பத்தில் சந்திர வழிபாடாக இருந்தது. சோமன் என்றால் சந்திரன். சந்திரனை வழிபடுவது என்பது தொல் தமிழ் பாரம்பரியத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது.

செந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் கடவுள் வாழ்த்துப் பகுதியில் திங்களைப் போற்றுதும் திங்களை போற்றுதும் என்று சந்திரனை வணங்கிப் பாடுகின்றது. வளர்பிறை சந்திரன் முழு நிலவு ஆகியன காலங்காலமாக வழிபாட்டுக்குரியனவாக இருந்துள்ளன.    

சந்திர தியானம்

பௌத்தர துறவிகள் சந்திரனை நீண்ட நேரம் பார்த்து சந்திர தியானம் செய்து வந்தனர். ஜப்பானில் உள்ள பௌத்த குரும்பங்கள் moon viewing என்ற பெயரில் வீட்டுக்குள் இருந்தபடியே சந்திர தியானம் செய்வர். சைவ வைணவ சமயங்களின் எழுச்சிக்குப் பிறகு சைவ சமயம் சந்திர வழிபாட்டை தனக்குரியதாக்கியது.  

சிவனுக்கு சோமவார விரதம், விநாயகருக்கு சங்கடகர சதுர்த்தி விரதம், முருகனுக்கு கிருத்திகை விரதம், அம்பிகைக்கு பௌர்ணமி பூஜை என்று சந்திர வழிபாடு சைவ சமயத்தில் பல பெயர்களில் உருமாற்றம் பெற்றது.

புரட்டாசி விரதம் - நோக்கும் போக்கும்

புரட்டாசி விரதம் - நோக்கும் போக்கும்

புராணக் கதை

சந்திர வழிபாட்டை தனக்குள் உள்வாங்கிக் கொண்ட சைவ சமயம் அதற்கென்று ஒரு கதையை உருவாக்கி. உறுதி செய்தது. தட்சாதிபதிக்கு 27 பெண்கள் இருந்தனர். 27 பெண்களையும் சந்திர தேவனுக்குத் திருமணம் செய்வித்தான்.

ஆனால் சந்திரன் ரோகிணி என்ற பெண்ணுடன் மட்டும் அதிகப் பிரியமாக இருந்தான். சங்க இலக்கியத்தில் கார்த்திகை மாதம் ரோகினியும் சந்திரனும் கூடியிருக்கும் நன்னாளில் திருமணம் நடந்ததாகக் குறிப்பு உள்ளது.    

சாபம் பெற்ற சந்திரன்

மனம் உடைந்த மற்ற 26 பெண்களும் ரேவதி தலையையில் தன் தந்தையிடம் போய் இவர்கள் இருவரையும் பற்றி முறையிட்டனர். உடனே தட்சாதிபதி சந்திரனை அழைத்து 'நீ செய்வது தவறு 27 பேரும் உன்னுடைய மனைவி தானே அனைவரிடமும் சமமாக அன்பு காட்டு' என்று அறிவுரை கூறினார் ஆனால் சந்திரனும் ரோகினையும் அதை ஏற்கவில்லை. இதைக் கண்டு கோபமுற்ற தட்சாபதி சந்திரனை தேய்ந்து போகும் படி சபித்தான்.

சந்திரனும் ரோகினியும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். சோம வார விரதம் இருந்து அவரை வணங்கி வந்தனர். இவர்களின் சோமவார விரதத்தைக் கண்டு வியந்த சிவபெருமான் சந்திரனைத் தன் தலையில் சூடிக்கொண்டார். சந்திரன் பிரகாசித்தான். இதன் பின்பு பதினைந்து நாள் தேய்ந்து பதினைந்து நாள் வளர்ந்து வந்தான்.

சிவபெருமானுக்கு உகந்த விரதமாக சோமவார விரதம் கருதப்படுகிறது.

சோமவார விரதம் - நோக்கும் போக்கும் | Somavara Viratham In Tamil

புதிய சமயங்கள் எழுச்சி பெரும் போது பழைய சமயங்களின் கடவுளர் பதவி நீக்கம், பண்பிறக்கம் செய்யப்படுவர். இவற்றைப் பிரசாரம் செய்ய புதிய கதைகளும் பாடல்களும் வழிபாட்டுச் சடங்குமுறைகளும் உருவாக்கப்படும்.

இந்திரன் கோயில்கள் சிவன் கோயில்களான போது இந்திரன் சபிக்கப்படட சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம் அளித்த கதைகள் எழுதிப் பரப்பப்பட்டன. சந்திர வழிபாடு சிவன் வழிபாடாக மாற்றப்பட்ட போது சந்திரன் சாபம் பெற்றதாகவும் சிவபெருமான் பாவ விமோசனம் அளித்ததாகவும் கதைகள் தோன்றின..

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

சோமநாதர் வரலாறு

சிவபெருமான் சந்திரனுக்கு மீண்டும் சந்திர கலைகளை வரமாக அருளினார். அன்று முதல் சிவபெருமானை சோமசுந்தரர் என்றும் சந்திர சேகர் என்றும் சந்திரமவுலீஸ்வரர் என்றும் அழைத்தனர்.

சந்திரன் கோயில் சோமநாதர் கோயிலாக குஜராத் மாநிலத்தில் மாற்றம்.பெட்டாது. பொதுவாக பௌத்த மடாலயங்களில் ரசவாதம் செய்த தங்கம் நிறைய உண்டு. இக்கோயிலிலலும் நிறைய தங்கம் இருந்தது.

இக் கோவிலின் பொக்கிஷத்தை இஸ்லாமிய மன்னர் முகமது கஜினி 17 முறை வந்து கொள்ளையடித்துச் சென்றான். இங்கு சந்திர காந்தக் கல்லாலான சுவர்களும் நடுவில் இந்திரனின் கந்தும் (லிங்கம்) இருந்தது. இங்கு உள்ள (சிவ)லிங்கம் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும்.  

விரதம் இருக்கும் முறை

சோமவார விரதம் இருப்போர் காலையில் குளித்து முடித்து கோவிலுக்குப் போய் இறைவனை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து உப்பில்லாத உணவு அல்லது பால், பழம், இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை உண்டு விரதம் இருக்க வேண்டும்.

எதுவுமே உண்ணாமல் உண்ணா நோன்பு இருந்தும் அன்றைய நாளை இறைவனை பற்றிய சிந்தனையில் கழிக்கலாம். பசி தாங்க இயலாதவர்கள், வயோதிகர், நோயாளிகள், குழந்தைகள் போன்றோர் காலையில் பால் பழம் சாப்பிட்டு இறைவனை வணங்கித் திரும்பிய பிறகு அரை நாள் மட்டும் விரதம் இருந்துவிட்டு மதியத்துக்குப் பிறகு எளிய உணவு உட்கொள்ளலாம். 

கோயில் வழிபாடு

வீட்டுக்குள்ளேயே படுத்துக்கொண்டு டிவியில் சாமி படம் பார்த்த படி பழம், பால், அவல், பொரி தின்றபடி இருப்பது விரதம் ஆகாது. விரதம் இருந்தால் உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் குறையவேண்டும் என்று பெரியோர் சொல்வர். எனவே காலையிலும் மாலையிலும் கோயிலுக்குப் போவது கட்டாயம். அங்குப் போய் சிவபெருமானை வணங்கி சந்திர தரிசனம் முடித்து திரும்பி வரவேண்டும்.

சோமவார விரதம் - நோக்கும் போக்கும் | Somavara Viratham In Tamil  

செய் & செய்யாதே

சோம வார விரதத்தன்று பொய் சொல்லக்கூடாது, புறம் பேசக்கூடாது, வசைச் சொல் கூடாது. தூங்க கூடாது. கொட்டாவி விடவோ நெட்டி முறிக்கவோ கூடாது. முடி வெட்ட சவரம் செய்ய கூடாது. தேவார திருவாசகப் பாடல்களை மனனம் செய்யலாம்.

ஒவ்வொரு சோமவார விரதமத்தின் போதும் கொஞ்சம் கொஞ்சமாக தேவார திருவாசகப் பாடல்களை அல்லது பன்னிரு திருமுறையை மனனம் செய்து நல்ல வழியில் பக்தி மார்க்கத்தில் அன்றைய நாளை கழிக்கலாம். குழந்தைகளுக்கு. இப்பயிற்சியைக் கொடுக்கலாம். சமயத்தைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள இம்மனனப் பயிற்சி உதவும்.

வீட்டில் என்ன. செய்ய வேண்டும்? திங்கட்கிழமை அதிகாலை எழுந்து வீடு வாசலைக் கூட்டித் துடைத்து சுத்தம் செய்து குளித்து முடித்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.

வீடு முழுவதும் கூட்டித் துடைத்து சுத்தப்படுத்த இயலாதவர்கள் பூஜை அறையை மட்டுமாவது அவ்வாறு பெருக்கி துடைத்து சுத்தப்படுத்தலாம் அல்லது பூஜை அலமாரியை மட்டுமாவது இவ்வாறு சுத்தப்படுத்திய பிறகு வீட்டில் இருக்கும் எல்லா சாமி படத்துக்கும் பூ வைக்க வேண்டும். விளக்கேற்ற வேண்டும்.

வீட்டில் யாருக்கும் புகை, வாசனை அலர்ஜி இல்லை என்றால் பத்தி, சாம்பிராணி பொருத்தி வைக்கலாம். அல்லது நெய் விளக்கு ஏற்றியதோடு நிறுத்திக் கொண்டு கோவிலுக்குச் சென்று சிவனை வணங்கி வரலாம்.

சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்

சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்

  

புகை நமக்கு பகை

வயதானவர்கள், சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் புகையைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இக்காலத்தில் பத்தி, சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றில் நிறைய ரசாயனப் பொருட்களின் கலப்படம் இருப்பதனால் ஆஸ்துமா, மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.  

உப்பில்லா உணவு ஏன்?

கல் உப்பை ருசிக்கல் என்பர் பெரியோர். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பு இல்லை என்றால் உணவில் ருசி இருக்காது. உப்பிட்ட உணவை ருசித்துச் சாப்பிடத் தொடங்கினால் அதிக அளவில் சாப்பிட்டு மந்தத்தன்மை வரும். பின்பு உறக்கம் வரும்.

மயக்கம் வரும். இறைவனை நினைக்க இயலாது. எனவே இறைவனை நினைத்து விரதம் இருக்கும் நாட்களில் உணவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும் என்ற காரணத்திற்காக உப்பில்லாத உணவு உண்ணும் படி பெரியவர்கள் பழக்கியிருக்கின்றனர். 

உப்பு என்பது உணர்ச்சியைத் (கோப தாபத்தை) தூண்டக் கூடியது. 'நீ உணவில் உப்பு போட்டுத் தின்கிறாயா இல்லையா?' என்று கேட்டால் 'உனக்கு வெட்கம், மணம், ரோஷம் இல்லையா?' என்று கேட்பதாக பொருள். எனவே உப்புப் போட்டு விரத நாட்களில் சாப்பிட்டால் கோபதாபங்கள் உண்டாகும். இதனால் விரதம் கெட்டுப் போகும்.

விரதம் என்பது துறவு மனப்பான்மையோடு இறைவனை அணுகுவதாகும். எனவே அன்றைக்கு மட்டுமாவது கோபதாபங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள உப்பு, காரம், புளிப்பு ஆகியவற்றை நீக்கிவிட வேண்டும். உப்புச் சப்பில்லாத எளிய உணவைத் தயாரித்து உண்ண வேண்டும்.

கோயிலில் செய்ய வேண்டியவை

விரதம் முடிந்ததும் மாலை வேளையில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனுக்கு வில்வ இலைகளும் அம்மனுக்கு குங்குமத்தையும் கொடுத்து அர்ச்சனை செய்யலாம் அல்லது கொடுத்து விட்டு வரலாம்.

அவரவர் வசதிக்கேற்ப ஏதேனும் பிரசாதம் செய்து கொண்டு போய் கோவிலுக்கு வந்திருப்பவர்களுக்கு வழங்கலாம். 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் உணவு தேவைப்படும் எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். சாப்பாட்டுப்.பொட்டலம் வாங்கித் தரலாம்.    

வராகி பூஜையும் விரதங்களும்

வராகி பூஜையும் விரதங்களும்

  

பகட்டு இல்லாத தானம்

வசதியானவர்களை அழைத்து இலை போட்டு 16 வகை காய்கறியோடு உணவு பரிமாற வேண்டியது இல்லை. வஸ்திர தானம் செய்து விரதத்தை முடிப்பதும் சிறப்பு. பணியாளர்களின் குழந்தைகளுக்கு அல்லது தெரிந்தவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடைகள் தேவைப்பட்டால் வாங்கித் தரலாம்.

முதியவர்களுக்கு ஒரு மாத மருந்து வாங்கித் தரலாம். இவ்வாறு தேவைப்படுவோருக்கு தேவைப்படுவதை வாங்கித் தருவது தான் தருவதுதான் தானமே தவிர ஆடம்பரத்திற்காகவும் பகட்டுக்காகவும் 100 பேருக்கு அன்னதானம் செய்தோம்.

200 பேருக்கு வஸ்திரதானம் செய்தோம் என்று பகட்டு, ஆடம்பரம் ஆகியவை கூடாது. தானம் பெற்றோர் மனதார வாழ்த்த வேண்டும். அவர்கள் மனதில் கவலை தீர்ந்து மகிழ்ச்சி தோன்றி நிம்மதி பெருமூச்சு விட்டால் அதுவே சிறந்த வாழ்த்தும் நன்றியும் ஆகும்.  

கோவிலுக்குப் போய்…

சிவபெருமானை நினைத்து சோமவாரக் கதையைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு கதையைச் சொல்வதால் மற்றவர்களும் இவ் விரதத்தை கடைப்பிடிக்கும் எண்ணம் ஏற்படும். இதன் மூலம் சைவ சமயமும் சைவ சமய நடைமுறைகளும் பரவும். எனவே இவ்வாறு கதை சொல்வதையும் விரதத்தின் நடைமுறைகளில் ஒன்றாக இணைத்துள்ளனர்.  

கோவிலுக்கு ஒருமுறையாவது அல்லது காலை, மாலை என இரண்டு முறையும் போய் வரவேண்டும். கோவிலுக்குள் பரிவார சன்னதிகளுக்குச் சென்று அனைத்துத் தெய்வங்களையும் வணங்கி மஞ்சள் பொடி, குங்குமம், விபூதி, நெய் விளக்கு என அந்தந்த தெய்வத்திற்கு ஏற்றவற்றைப் படைத்து அந்தந்த தெய்வத்திற்குரிய திருப்பாடல்களை பாடித் துதிக்க வேண்டும்.

பின்பு சிவனையும் அம்மனையும் வணங்கி கோவிலை வலம் வந்து கொடி மரத்திற்கு முன்பு விழுந்து எழுந்து அங்கேயே அமர்ந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை (பஞ்சாட்சரத்தை) 108 முறை 1008 முறை என மனதுக்குள் சொல்லியதும் எழுந்து வீட்டுக்கு வர வேண்டும்.

கோவிலுக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து விரதம் விடுவது என்பது வயோதிகர்களுக்கு பொருந்தி வரும். நடக்க முடிந்தவர்கள் கோவிலுக்குள் போய் கோவிலைச் சுற்றி வந்து தான் விரதத்தை முடிக்க வேண்டும்.

மந்திர உச்சாடனம்

சோமவார விரதம் - நோக்கும் போக்கும் | Somavara Viratham In Tamil

சோமவாரம் இருக்கும் நாட்களில் சமஸ்கிருத மந்திரம் உச்சரிப்பு தவறாமல் சொல்லத் தெரிந்தவர்கள் மகா மிருத்தியஞ்சய மந்திரத்தை சொல்லலாம். அல்லது

ஓம் நமோ பகவதே ருத்ராய

என்ற ருத்ர மந்திரத்தை 108 முறை ஒவ்வொரு வேளையிலும் சொல்லலாம். அல்லது

ஓம் புருஷாய வித்மஹே

மகாதேவாய தீமஹி

தந்நோ ருத்ர பிரசோதயாத்

என்ற சிவ காயத்திரியை 108 முறை காலையிலும் மாலையிலும் மதியத்திலும் மனதுக்குள் சொல்லலாம்.

இவ்வாறு ஏதேனும் ஒரு மந்திரத்தை ஜெபம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.   

சிவ சிந்தனையில் இருப்பது தான் விரதமே தவிர நம்முடைய அன்றாட வேலைகளைப் பார்த்துக் கொண்டு பால் பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டும் இருப்பது விரதம் ஆகாது. அன்றைக்கு ஒரு நாள் உலகப் பொறுப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் விடுபட்டு இறைவனை மட்டுமே தியானித்து இறைவனுடைய மந்திரங்களை ஜெபித்து கொண்டு இருக்க வேண்டும்.

யார் விரதம் இருக்கலாம்?

திருமணத்திற்குக் காத்திருக்கும் திருமண தோஷம் நாக தோஷம் உடைய இளம் ஆண்களும் பெண்களும் சோமவார விரதம் இருந்தால் நல்ல கணவன் அல்லது மனைவி கிடைக்கும். விரைவில் திருமணம் நடந்தேறும். ஜாதகத்தில் இருக்கும் திருமணத் தடை விலகும்.

திருமணம் முடித்தவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் .பிரிந்தவர்களில் யாராவது ஒருவர் இந்த விரதத்தைச் செய்து வந்தாலும் கூட அவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையோடு இணையும் பாக்கியத்தை பெறுவார்கள்.

காரணம், இவ்விரதத்தைச் சந்திரனும் ரோகினியும் மீண்டும் சேர்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்ததால் அவர்களுக்குக் கிடைத்த பலன் இங்குள்ள பிரிந்த தம்பதியர் இணைந்து வாழவும் கிடைக்கும். 

மாரியம்மன் விழாவும் விரதமும்

மாரியம்மன் விழாவும் விரதமும்

சந்திரன் அருளும் நன்மைகள்

கி.பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு சந்திரனுக்கு நடந்த வழிபாடு பின்பு சிவ வழிபாடாக மாறியது என்பது வரலாறு. இவ்விரதத்தால் பல நன்மைகளை சந்திர பகவான் அருள்வார். ஜோதிடத்தில் சந்திரன் மனோகாரகன் எனவே இவ்விரதம் இருப்பதால் மனக்கவலை, மன அழுத்தம், மனக் குழப்பம் தீரும். மன நலம் சிறக்கும். சந்திர தரிசனம் செய்துவிட்டு விரதம் விடும்போது அவர்களுக்கு மன நிம்மதி உண்டாகும்.   

சந்திரன் ஜோதிடத்தில் தாயாருக்கு உரியவன். எனவே தாயாருக்கு நோய், நொடி, பிணி, பீடை, வழக்கு வியாஜ்யங்கள் இருந்தால் அக்கஷ்ட நஷ்டங்கள் தீரும். அவர்களுக்காக பிள்ளைகள் இவ் விரதத்தை மேற்கொள்ளலாம். இவ்விரதத்தை இளம் ஆண்கள், பெண்கள், இளம் தம்பதியர் தம் குடும்ப வாழ்க்கைக்காக மேற்கொள்ளலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US