நண்டும் இந்திர பகவானும் சாப விமோசனம் பெற்ற திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் ஆலயம்

By Aishwarya Mar 09, 2025 06:00 AM GMT
Report

 மாயவரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் காவேரி ஆற்றின் வடக்கு பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது கற்கடேஸ்வரர் ஆலயம். தேவலோக தேவதை ஒருத்தி நண்டாக வந்து சாப விமோசனம் பெற்ற புனித தலம் இது.

கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமமான திருவிசைநல்லூரில் இருந்து சற்று தள்ளி உள்ள குக்கிராமமான திருந்துதேவன்குடி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய இடம் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும்.

நண்டும் இந்திர பகவானும் சாப விமோசனம் பெற்ற திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் ஆலயம் | Sri Karkadeswarar Temple

துர்வாசரின் சாபம்:

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், மாமுனிவரான துர்வாச முனிவர் ஒரு காட்டில் சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வனப்பகுதிக்கு வந்த ஒரு தேவதை அவர் யார் என்பதை அறியாமல் அவர் செய்த பூஜையை விமர்சித்து, நண்டு போல உருமாறி அவரை கேலி செய்தாள்.

தனது பூஜையை அவமதித்த தேவதை பூமியிலேயே நண்டாக பிறக்கட்டும் என முனிவர் சாபமிட்டார். நண்டான தேவதை: தன் சுயநினைவுக்கு வந்த தேவதை, தான் அவமதித்தது மாமுனிவரான துர்வாசர் என்பதை அறிந்து அவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டாள்.

அறியாமையினால் செய்த பிழையை மன்னித்து சாபத்தை விலக்குமாறு வேண்டிக் கொண்டாள். கொடுத்த சாபத்தை விலக்க இயலாது என்றாலும், நண்டு பூமியிலே சென்று வாழ்ந்து கொண்டு தினமும் ஒரு தாமரை மலரை கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்தால், அவர் காட்சி தந்து சாப விமோசனம் தருவார் என்று கூறினார் துர்வாசர். அடுத்த கணமே அந்த தேவதை நண்டாக மாறி பூலோகம் சென்றது.

முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?

முன் ஜென்ம பாவங்களை போக்கி சனி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற வேண்டுமா?

கற்கடேஸ்வரர் ஆலயம்:

நண்டு பூலோகம் சென்ற இடம் தான் தற்போது கற்கடேஸ்வரர் ஆலயம் உள்ள இடம். அந்த ஆலய பகுதி வெற்று இடமாக இருந்தது. அதை சுற்றி நாலுபக்கமும் அகழி இருக்க அதன் நடுவில் ஒரு தாமரை குளமும் இருந்தது. அந்த குளம் முழுவதும் தாமரை மலர்கள் பூத்து இருந்தன.

அந்த வெற்றுப் பகுதியில் சிவபெருமான் ஒரு சில காரணங்களுக்காக ஒரு சிவலிங்க உருவில் அமர்ந்திருந்தார். நண்டுக்கு மன மகிழ்ச்சி கிடைத்தது. சிவபெருமானுக்கு தினமும் ஒரு தாமரை மலரைப் போட்டு பூஜை செய்து சாபவிமோசனம் பெற நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்து இருந்தது.

நண்டும் இந்திர பகவானும் சாப விமோசனம் பெற்ற திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் ஆலயம் | Sri Karkadeswarar Temple

இந்திரனின் பூஜையும் நண்டின் பக்தியும்:

தேவலோக அதிபதியான இந்திரன், சிவபெருமானுக்கு தினமும் 1008 தாமரை மலர்களை போட்டு பூஜை செய்து வந்தார். அசுரர்களுடன் பலமுறை போரிட்டு பலத்தை இழந்திருந்த இந்திரனுக்கு, 48 நாட்கள் தினமும் 1008 தாமரை மலர்களை போட்டு சிவபெருமானை ஆராதித்தால் இழந்த பலன்கள் மீண்டும் கிடைக்கும் என வியாழ பகவான் அறிவுறுத்தி இருந்தார்.

இந்திரனும் தினமும் பூஜை செய்து வந்தார். தினமும் 1008 தாமரை மலர்கள் அந்த தாடகத்தில் பூக்க வருண பகவான் ஏற்பாடு செய்து இருந்தார். இவை எதுவுமே நண்டுக்கு தெரியாது. தாடகத்தில் ஆயிரக்கணக்கான பூக்கள் உள்ளதை கண்டு மகிழ்ந்த நண்டு, தினமும் அதில் இருந்து ஒரு பூவை எடுத்துச் சென்று சிவபெருமானுக்கு பூஜை செய்து வந்தது.

பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

குறையத் தொடங்கிய மலர்கள்:

தினமும் இந்திரன் போடும் தாமரையில் ஒன்று குறைவாக உள்ளது என்ற உண்மை அவருக்கு தெரியவில்லை. வருண பகவான் தினமும் சரியாக 1008 பூக்கள் பூக்க ஏற்பாடு செய்து இருந்ததினால் அவர் பூக்களை எண்ணி எடுத்துக் கொண்டு செல்லவில்லை. தாடகத்தில் இருந்த அத்தனை பூக்களையும் பறித்துக் கொண்டு சென்று பூஜித்து வந்தார்.

ஆகவே அவர் 1008 பூக்களுக்கு பதிலாக 1007 பூக்களைக் கொண்டு பூஜை செய்து வந்திருந்தார். நண்டும் தனது கடமையை தவறாமல் செய்து வந்தது. ரகசியம் வெளியாகிறது: சில நாட்கள் சென்றன.

ஒருநாள் வியாழ பகவானுக்கு 1008 பூக்களுக்கு பதிலாக 1007 பூக்களைக் கொண்டு இந்திரன் பூஜை செய்து வந்ததால் அவர் செய்து வந்த பூஜையை சிவபெருமான் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை தெரிந்தது. உடனே இந்திரனிடம் சென்று இதைப் பற்றிக் கூறினார்.

அதிர்ந்து போன இந்திரனுக்கு, வருண பகவான் தினமும் தான் பூக்க வைத்த மலர்கள் 1008 உள்ளது என்பதை உறுதி செய்தார். ஆகவே யார் ஒரு பூவை தினமும் திருடுகிறார்கள் என்பதை ரகசியமாக இந்திரன் கண்காணிக்க முடிவு செய்தார். மறுநாள் விடியற்காலை நண்டு எப்போதும்போல ஒரு பூவை பறித்துக் கொண்டு சென்று சிவபெருமான் தலையில் போட்டு பூஜை செய்வதை பார்த்து விட்டார்.

நண்டும் இந்திர பகவானும் சாப விமோசனம் பெற்ற திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் ஆலயம் | Sri Karkadeswarar Temple

சாப விமோசனம்:

கோபம் அடைந்த இந்திரன் நண்டைக் கொல்ல வாளினை உருவாக்க, நண்டு தப்பிக்க முயன்றபோது சிவலிங்கத்தின் தலையில் ஒரு பள்ளம் தோன்றியது. நண்டு அந்த பள்ளத்தில் சென்று மறைந்து கொள்ள, வாளைக் கொண்டு சிவலிங்கத்தை எப்படி வெட்டுவது என இந்திரன் திகைத்து நிற்க, அடுத்தகணம் அந்த நண்டு தேவதையாக உருமாறியது.

இருவர் முன்னும் சிவபெருமான் காட்சி அளித்து அருள் புரிந்தார். நடந்தவை இருவருக்கும் தெரிந்தது. மீண்டும் அதே இடத்தில் 48 நாட்கள் 1008 தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்தால் மட்டுமே இந்திரன் இழந்த பலத்தை மீண்டும் பெற முடியும் என்பது விதியானதால், மீண்டும் 1008 பூக்களைக் கொண்டு 48 நாட்கள் பூஜை செய்து இழந்த அனைத்து பலத்தையும் பெற்றார்.

அதன் பின் அவரவர் தத்தம் இடங்களுக்கு சென்றுவிட சிவபெருமான் சில காரணத்துக்காக அங்கேயே பூமிக்குள் சிவலிங்க உருவில் மறைந்து கொண்டார்.

குழந்தை பாக்கியம் வேண்டுமா?பில்லி சூனியம் அகல வேண்டுமா?அப்போ ஒருமுறை இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க

குழந்தை பாக்கியம் வேண்டுமா?பில்லி சூனியம் அகல வேண்டுமா?அப்போ ஒருமுறை இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க

சோழ மன்னனும் அற்புத மருத்துவர்களும்:

சில ஆயிரம் வருடங்கள் உருண்டன. சோழ மன்னர் பரம்பரையை சேர்ந்த ஒரு மன்னன் அந்த பூமியை ஆண்டு வந்தார். அவருக்கு தீராத பக்கவாத நோய் ஏற்பட்டது. எழுந்திருக்க முடியவில்லை. அவருடைய நோயை யாராலும் தீர்க்கவும் முடியவில்லை.

அந்த நிலையில் திடீர் என ஒருநாள் சிவபெருமானும் பார்வதி தேவியும் மருத்துவர் உருவில் அரண்மனைக்கு வந்து அவருடைய நோயை தீர்ப்பதாகக் கூறினார்கள். மன்னனின் நெற்றியில் திருநீர் இட்டபின் ஒரு ருத்ராக்ஷ மாலையையும் அணிவித்து விட்டு அவர் வாயில் எதோ மூலிகை மருந்தையும் ஊற்றினார்கள்.

மறுநாள் மீண்டும் வருவதாக கூறிவிட்டு சென்றார்கள். படுத்தப் படுக்கையாக வீழ்ந்து கிடந்த மன்னன் மறுநாள் காலையில் எழுந்து தாம் செய்து வந்த வேலைகளை தாமே செய்யத் தொடங்கினார். அனைவரும் அதிசயித்து நின்றார்கள். 24 மணி நேரத்துக்குள்ளாகவே வியாதி பூரண குணம் ஆனதை எண்ணி, மருத்துவத்தின் சக்தியை வியந்தார்கள்.

காலையில் மீண்டும் மருத்துவர்கள் வந்தார்கள். அரசன் அவர்களை வெகு விமர்ச்சையாக வரவேற்று கௌரவித்து பல பரிசுகளையும் பொருட்களையும் தந்தார். அவர்கள் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை.

நண்டும் இந்திர பகவானும் சாப விமோசனம் பெற்ற திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் ஆலயம் | Sri Karkadeswarar Temple

தாம் தமது கடமையை மட்டுமே செய்ததாகக் கூறி, சன்மானத்துக்குப் பதிலாக குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கூறி அங்கு பூமியில் மறைந்துள்ள சிவலிங்கம் மற்றும் பார்வதி தேவியின் சிலையை வெளியில் எடுத்து அங்கேயே ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறினார்கள்.

அப்படி செய்தால் அந்த ராஜ்யமே வளம் பெரும் என்றும் கூறினார்கள். அதுவே தம்முடைய சன்மானம் என்றார்கள். ஆனால் அவர்கள் யார் என்பது எவருக்கும் தெரியவில்லை.

ஆலயத்தின் மறு உருவாக்கம்:

அடுத்த நாள் காலையில் மன்னன், மருத்துவர்கள் அழைத்துச் சென்ற இடத்துக்கு சென்று ஆட்களை விட்டு பூமியை தோண்டச் செய்தார். அங்கு சிவலிங்கம் மட்டுமே கிடைத்தது. பார்வதி தேவியின் சிலை கிடைக்கவில்லை.

மருத்துவர்களைக் கேட்கலாம் என எண்ணி தேட, அவர்கள் காணவில்லை. எவராலும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. வந்திருந்தவர்கள் தெய்வங்களாகவே இருக்க வேண்டும் என்பதை மன்னன் புரிந்து கொண்டான்.

சிவலிங்கத்தை வெளியில் எடுத்து பார்வதியின் சிலை ஒன்றை வடிவமைத்து அங்கேயே ஆலயம் எழுப்பினார். பல காலம் பொறுத்து அதே இடத்தின் வேறு மூலையில் தோண்டியபோது மருத்துவர்கள் கூறிய பார்வதி தேவியின் சிலை கிடைத்தது. அதையும் அங்கேயே பிரதிஷ்டை செய்தார்கள்.

கற்கடேஸ்வரர்:

கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது.

ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டுள்ளது. கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது.

நண்டும் இந்திர பகவானும் சாப விமோசனம் பெற்ற திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் ஆலயம் | Sri Karkadeswarar Temple

கற்கடேஸ்வரர் ஆலயம் - சிறப்பம்சங்கள்

அதற்குப் பிறகே மன்னனுக்கும் அந்த ஆலயத்தின் மேன்மைக் குறித்த அனைத்து விவரங்களும் துர்வாச முனிவரின் சீடர்களான பிற முனிவர்கள் மூலம் தெரிய வந்தது.

இந்த மேன்மைகள் உலகத்துக்கு தெரிய வரத் தொடங்கியது. ஆலய மூலவரை கற்கடேஸ்வர் (கர்கட் என்றால் நண்டு என்று அர்த்தம்) அதாவது நண்டின் சாபத்தை விலக்கியவர் என்ற பொருளில் அழைத்தார்கள். மருத்துவ உருவில் பார்வதி தேவியும் வந்ததினால் அவளை அருமருந்துநாயகி என பெயரிட்டு அழைத்தார்கள்.

பிறகு கிடைத்த பார்வதி தேவியின் அபூர்வ சிலைக்கு அபூர்வநாயகி என பெயரிட்டார்கள். நண்டுக்கு சாபம் விலக்கியதினால் நண்டை ராசியாகக் கொண்டவர்களுக்கும் கடக ராசிக்காரர்களுக்கும் இது பரிஹாரஸ்தலம் ஆயிற்று.

இந்த ஆலயத்தின் இன்னொரு மேன்மை என்னவென்றால் வேறெந்த சிவபெருமான் ஆலயத்திலும் இல்லாத நிலையில் பார்வதி தேவிக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. இரண்டிலும் அவள் வெவ்வேறு தோற்றத்தில் காணப்படுகிறாள்.

இந்த ஆலயத்தில் சந்திர பகவான் யோக நிலையில் அமர்ந்தவண்ணம் காணப்படுகின்றார். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி மருத்துவர்கள் உருவில் வந்து மன்னனின் நோயை குணப்படுத்தியதால் அவர்கள் செய்த பணியை தொடர தன்வந்தரி பகவானும் இந்த ஆலயத்தின் ஒரு சன்னதியில் காணப்படுகின்றார்.

சாதாரணமாக தன்வந்தரி பகவான் விஷ்ணு பெருமான் ஆலயத்தில் மட்டுமே காணப்படுவார். எந்த நோயாளின் நோயும் விலக இங்கு வந்து தன்வந்தரி பகவானை வேண்டினால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது.

டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் 10 கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோயில்

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோயில்

அருமருந்தம்மை

இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது.

நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சந்திரன் வழிபாடு

சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான்.ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும்.

கோயில் அமைப்பு

கோயில், நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளன. அருகில் ஊர் எதுவும் இல்லை.கோயில் மதில்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது.

முதலில் செங்கல்லால் கட்டப்பட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

வழிபாட்டு நேரம்:

இக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் மக்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.

செல்லும் வழி:

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US