வாழ்க்கையை மாற்றும் கிருஷ்ணரின் கணக்கு... மகாபாரதத்தில் மறைந்திருக்கும் அரிய உண்மை
கிருஷ்ண பகவான் என்றாலே அவர் கணக்குகளில் மிகச் சிறந்தவர். அப்படியாக, கிருஷ்ண பகவான் நமக்கு ஒரு வியக்கத்தக்க கணக்கை சொல்லுகிறார். அதைப்பற்றி பார்ப்போம். கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்றது.
துவந்த யுத்தம் என்றால் இருவருக்கும் இடையே மட்டும் நடக்கக்கூடிய போராகும். இந்த போர் மிகவும் ஆக்ரோஷமான போர். இந்த துவந்த யுத்தத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்மால் யூகிக்கவே முடியாது. ஒரு கட்டத்தில் பார்த்தன் மிகவும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை எய்தி கர்ணனின் தேரை 100 கஜம் தூரத்திற்கு தள்ளிவிட்டார்.

அதாவது, ஒரு கஜம் என்றால் மூன்று அடிகள் ஆகும். ஆனால், அதிலிருந்து மீண்டும் முன்னேறிய கர்ணன். அதேபோன்று சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை அர்ஜுனன் தேர் மீது எய்தினான். அதனால், பத்து கஜம் தூரத்திற்கு பின்னோக்கி சென்றது பார்த்தனின் தேர்.
அப்போது, தேரில் சாரதியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ண பகவான் "ஆகா! அற்புதம் அற்புதம் என்று அவரையும் அறியாமல் கர்ணனின் பராக்கிரமத்தை சிலாகித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனனுக்கு ஒரு பக்கம் ஆச்சரியம். மறுபுறம் பொறாமை உண்டாயிற்று.
அர்ஜுனன் நினைக்கின்றான் நாமும் இதே அஸ்திரத்தை எய்தி கர்ணனின் தேரை நூறு கஜ தூரத்திற்கு தள்ளினோம். அப்பொழுது கண்ணன் சிலாகிக்கவில்லை. பாராட்டவில்லை. ஆனால், கர்ணன் வெறும் பத்து கஜ தூரத்திற்கு நம்முடைய தேரை தள்ளியதை இவ்வளவு புகழ்ந்து பேசுகிறாரே இது என்ன நியாயம் என்று அர்ஜுனன் நினைத்துக் கொள்கிறான்.
அதுமட்டுமல்லாமல், இதற்கு முன்பாக கர்ணன் தன் கிரீடத்தை தனது அஸ்திரத்தை கொண்டு வீழ்த்திய போது கூட கண்ணன் அவனை இவ்வளவு சிலாகிக்கவில்லை. அது ஒரு மிகப்பெரிய தீரச் செயலாகும். அப்போது கூட பாராட்டத கண்ணன் இப்போது இவ்வளவு தூரம் பாராட்டுவதற்கான காரணம் என்ன? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

நம் மனதில் என்ன நினைக்கின்றோம் என்பதை கண்ணன் அறியாமல் இருப்பாரா? கண்ணனும் சரி அர்ஜுனனாக இதைக் கேட்கட்டும் என்று காத்திருக்கிறார். கண்ணன் நினைத்தது போலவே அர்ஜுனனும் தன்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்த சந்தேகத்தை கண்ணனிடம் கேட்கிறார். கண்ணா! கர்ணன் தன்னுடைய அஸ்திரதால் எனது கிரீடத்தை பரக்கச் செய்தபோது கூட நீங்கள் சிலாகிக்கவில்லை.
ஆனால், என்னை விட 10 ஒரு பங்கு தேரை அஸ்திரித்தால் தள்ளியதற்கு இவ்வளவு தூரம் நீங்கள் சிலாகிப்பதற்கான காரணம் என்ன? கண்ணா என்று கேட்கிறார். கிருஷ்ண பகவான் அப்பொழுது அர்ஜுனனை பார்த்து ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு அவர் பேசத் தொடங்குகிறார்.
அர்ஜுனா நீ கர்ணனின் தேரை நூறு கஜம் தள்ளினாய். அவன் பதிலுக்கு அஸ்திர பிரயோகம் செய்து உன்னுடைய தேரை 10 கஜம் தூரம் அவன் தள்ளினான். இருந்தாலும் அவன் செயல் தான் உன் செயலை விட பாராட்டுகூறியது. காரணம், இது தூர கணக்கு அல்ல பாரக் கணக்கு என்கிறார் கண்ணன்.
அதாவது அவனுடைய தேரை போலவே உன் தேரிலும்ஒரு தேரோட்டியும் ஒரு வீரனும் நின்று கொண்டு இருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், அது உண்மையல்ல. உன் தேரினுடைய கொடியை பார். அந்த கொடியில் அஞ்சனை மைந்தன் அனுமன் இருக்கின்றான்.
ஏதோ அவன் உருவம் மட்டும் கொடியில் அடையாளத்திற்காக பொறிக்கப்பட்டு இருப்பதாக நீ நினைத்துக் கொள்ளாதே. ஆனால், உண்மையில் அந்த உருவத்தில் அனுமன் கண்ணுக்குத் தெரியாமல் தோன்றியிருக்கிறான் அதை நீ மறந்து விட்டாயா அர்ஜுனா?

அனுமன் இருக்கும் இடம் மந்திர தந்திரங்கள் பலனற்று போகும் என்பதால் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உன்னை காப்பதற்காக உன்னுடைய தேரில் உன்னுடன் இருக்கிறான் அனுமன். அவ்வப்போது அனுமனுடைய சக்தியை வெளிப்படுத்தி உனக்கு உதவி கொண்டிருக்கிறார்.
அனுமன் மட்டும் இல்லை என்றால் என்றோ மந்திரம் அஸ்திரங்கள் உன்னுடைய தேரை சாம்பலாக்கி இருக்கும். கர்ணன் உன் தேரை பின்னிற்கு தள்ள அஸ்திரம் எய்தும் போது அனுமன் "மகிமா" என்னும் சித்தியை பயன்படுத்தி மலை போன்ற கனமுடையவராக மாறி உன்னை காத்தருளினார்.
உன் தேரை அசைய விடாமல் செய்ததற்கு பின்னால் இதுதான் ஒரு மிகப்பெரிய பலம். ஆனால், ஆஞ்சநேயருடைய சக்தியையும் மீறி கர்ணனின் அம்பு உன்னுடைய தேரை 10 கஜம் தூரம் பின்னுக்குத் தள்ளி இருப்பது ஆச்சரியம் தானே! அப்பொழுது நீயே பார்த்துக்கொள், கர்ணனின் அஸ்திர பிரயோகத்தின் தீரத்தை. எனவே தான் நான் கர்ணனை மெச்சினேன் என்றார் நம்மை ஆளும் கண்ணன்.
இதைக் கேட்டு அர்ஜுனன் தலை குனிந்தான். உண்மைதான் கண்ணா, உன் சக்தியாலும் அனுமனுடைய சக்தியாலும் தான் நான் இந்த போரில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். கர்ணனை போன்ற மாவீரனிடம் துவந்த யுத்தம் செய்வதே எனக்கு பெருமை தான் என்று சரணடைந்தான் அர்ஜுனன்.
இப்படித்தான் நம்முடைய வாழ்க்கையிலும் இறைவன் நம்முடன் இருந்து பல கஷ்டங்களை தாங்கி அதிலிருந்து கடந்து வருவதற்கு அருள் புரிகிறார் என்பதை பல நேரங்களில் மறந்து விடுகின்றோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |