தினம் ஒரு திருவாசகம்
வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும்
அதுதனை நினையாதே
மானி லாவிய நோக்கியர் படிறிடை
மத்திடு தயிராகித்
தேனி லாவிய திருவருள் புரிந்தஎன்
சிவனகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை யோம்புதற் பொருட்டினும்
உண்டுடுத் திருந்தேனே.
விளக்கம்
மலர்க்கணையும், முழுமதியும் காமுகர்க்குத் துன்பந்தரும். 'கணை கிழித்திட மதி சுடும்' என்று தாம் படும் துன்பத்தை விளக்கினார். மருண்ட பார்வையுடையது மான்.
மாதரும் அத்தன்மையுடையராதலின், 'மானிலாவிய நோக்கியர்' என்றார். மத்தினால் கடையப்பட்ட தயிர் கலங்கும்; மகளிரால் பார்க்கப்பட்டோரும் கலங்குவர்.
அதனால் 'மத்திடு தயிராகி' என்றார். கடையப்பட்ட தயிரிலிருந்து பெறப்படும் வெண்ணெயைக் கடைந்தோர் கொள்வர்; தயிருக்குப் பயனில்லை.
கலக்கப்பட்ட காமுகரிடமிருந்து பெறப்படும் பொருளை, பார்த்த பெண்கள் கொள்வர்; காமுகருக்குப் பயனில்லை என்ற உவமை நயமும் காண்க.
திருவருள், தேன் போன்று தித்திக்குமாதலின், 'தேனிலாவிய திருவருள்' என்றார். உயிரைப் பேண வேண்டிய காரியங்களை விடுத்து உடலைப் பேண வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றேன் என்று வருந்துவார், 'உண்டுடுத் திருந்தேனே' என்றார்.
இதனால், உலக போகங்களைத் துய்ப்பதற்கான செயல்களை விடுத்த உயிருக்கு உறுதி தரும் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது கூறப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |