நாம் எந்த ஒரு கோயிலுக்கு செல்லும் முன் அந்த கோயிலை பற்றிய முக்கிய தகவல்கள் கட்டாயம் தெரிந்த பின்னர் செல்வது நல்லது.காரணம்,அந்த கோயிலில் நடக்கும் முக்கியமான பூஜைகளை கணக்கில் கொண்டு அந்த வேளையில் செல்லலாம்.
அல்லது நாம் சில முக்கிய நிகழ்வுகளை தரிசிக்க தவறி விட வாய்ப்புகள் உள்ளது.அப்படியாக,நாம் சில முக்கிய கோயில்களில் நடக்கும் முக்கிய விசேஷங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
1.பகவதி அம்மன் என்றாலே மிகவும் சக்தி வாய்ந்தவள்.அதிலும் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் நம் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றமும் அதிசயமும் செய்யக்கூடியவள்.அங்கு அம்மனுக்கு ஒரு நாளில் மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.
காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்,உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்,மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.
2.திருவண்ணாமலை ஒரு ஆன்மீக பூமி என்றே சொல்லலாம்.அப்படியாக திருவண்ணாமலை சென்று ஈசனை தரிசனம் செய்ய செல்பவர்கள் கட்டாயம் இந்த ஆலயம் செல்வது சிறந்த பலன் கொடுக்கும்.
இந்த கோயிலுக்கு திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள்.
காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.இவரை தரிசனம் செய்தால் உடல் சம்பந்த பட்ட வியாதிகள் எல்லாம் விலகும்.
3.அதே போல்,108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.
4.108 திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம்.இங்கு சென்று வர மனதிற்கு ஒரு விதமான அமையும் நிம்மதியும் கிடைக்கிறது.
5.மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் மிகவும் விஷேசமானது.இங்கு இன்னும் கூடுதல் விஷேசமாக திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம்.
இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.இந்த தரிசனத்தை காண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் உண்டாகும்.
6.முருகனின் வாகனம் மயில் என்று தான் அனைவரும் அறிவோம்.ஆனால் முருகப்பெருமானுக்கு யானை வாகனமாக கொண்டுள்ள கோயில் ஒன்று உள்ளது.
அதாவது முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது.
இந்த கோயிலை முதலாம் ஆதித்த சோழன் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை இருப்பது சிறப்பம்சம்.
இங்கு முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |