பிள்ளை வரம் தரும் திருப்பாம்புரம்
மகப்பேறு இல்லாத மங்கையர் பாம்புப் புற்றினை சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும் என்பது நீண்ட கால நம்பிக்கையாகும். இஃது அறிவியல் உண்மையும் ஆகும். புற்று மண்ணை மிதித்து நடக்கும் போது அந்த பொடி மண் கால் பாதத்தில் உள்ள நரம்பு முடிவுகளை அழுத்துகிறது. இதனால் நரம்பு மண்டலம் தூண்டப்படுவதாக உடலியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்ற்னர்.
நாகர் வழிபாடு
வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டு நாகர் வழிபாடு கீழை நாடுகளிலும் மேலை நாடுகளிலும் மக்களிடையே இருந்து வரும் வருகிறது. நாகம் நம் முன்னோராக நம்பப்படுகிறது. நாகர் குலத்தின் முன்னோரை நாம் வழிபடும்போது நம்முடைய குறைதீர்க்கப்பட்டு நமக்கு வாரிசுகள் தோன்றுகின்றன. இதனால் நாகர் குல மரபு நீடிக்கின்றது.
நாக ஸ்தலங்கள்
தமிழ்நாட்டில் நாகம் முக்கியத் தெய்வமாக விளங்குகின்ற ஊர்கள் பல உள்ளன. இன்றைக்கும் நாகர் வழிபாடு செல்வாக்குப் பெற்ற திருத்தலங்களாக திருநாகேஸ்வரம், நாகநாதர் கோவில் (கும்பகோணம், பரமக்குடி), சங்கரன் கோயில், திருப்பாம்புரம், நாகூர் ஆகியவற்றைக் கூறலாம்.
இத்திருத்தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற ஒரு தலமாக மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் போகும் வழியில் பேரளம் என்ற ஊருக்கு மேற்கே 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பாம்புரம் விளங்குகிறது.
சேஷபுரீச்வரர் - பிரமராம்பிகா
திருப்பாம்புரம் சிவன் கோயில் ராகு கேது தோஷம் விலகவும் நாக தோஷம் நீங்கவும் புத்திர தோஷம் நீங்கவும் பக்தர்கள் ஏராளமாக வந்து வழிபடுகின்ற திருக்கோயிலாகும். இங்கு இறைவனின் பெயர் சேஷபுரீஸ்வரர் அம்மனின் பெயர் வண்டார் குழலி அல்லது பிரம்மராம்பிகா.
ஏற்கனவே மல்லிகார்ஜுனர் கோவில் வரலாற்றில் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் மல்லிகார்ஜுனனருக்கு அல்லது மல்லேஸ்வரருக்கு இணையாக இருக்கும் பெண் தெய்வத்தின் பெயர் பிரம்மராம்பிகா என்று அறிந்து கொண்டோம்.
அதுபோலவே திருப்பாம்புரத்திலும் அம்பாளின் பெயர் பிரம்மராம்பிகா என்பதாகும். மூலஸ்தானத்து லிங்கம் நாக கவசத்துடன் காட்சி அளிக்கின்றது. அதன் வலது புறத்தில் விநாயகரும் இடதுபுறத்தில் சுப்பிரமணியரும் தனித்தனி சந்நிதியில் உள்ளனர்.
பாடல் பெற்ற ஸ்தலம்
திருப்பாம்புரம் சிவனின் திருத்தலங்கலில் 59 ஆவது திருத்தலம் ஆகும். பாடல் பெற்ற 274 திருத்தலங்களில் இத்தலம் 112 வது ஆகும். இது பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்கு சுயம்புலிங்கம் உள்ளது. இத்தலத்தில் அருள் பாலிக்கும் இறைவனை சைவ சமய குரவர் நால்வரும் மாணிக்கவாசகர் நீங்கலாக மற்ற மூவராலும் பாடப்பட்டவர். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியவர்களோடு அருணகிரிநாதரும் இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடியுள்ளார்.
சாபம் பெற்ற நாகம்
பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல என்பது கோயில் வரலாறுக்கும் பொருந்தும். ஆதியில் வெறும் பாம்புப் புற்றாக இருந்தது. பிள்ளை இல்லாத பெண்கள் அதனைச் சுற்றி வந்து வழிபட்டனர். பின்பு பௌத்த சமயம் பரவிய போது அஷ்ட நாகங்கள் புத்தரின் தாமரை சுலோகத்தை காது கொடுத்து கேட்டன.
இந்திரன் கோவிலின் பொக்கிஷத்துக்குக் காவல் இருந்தன. இந் நாகங்களைத் தெய்வமாக பௌத்தர்கள் வணங்கினர். அதன் மிச்ச சொச்சமாக இங்கு ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருக்கின்றனர்
சைவ சமயப் பேரெழுச்சி ஏற்பட்ட காலத்தில் ஆதிசேடனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட சிவன் கோவிலாக உருவெடுத்தது. புதிய கடவுளும் கோயிலும் அறிமுகம் செய்யப்படும் போது பழைய கடவுள் சக்தி இல்லாதவராகவும் சபிக்கப்பட்டவராகவும் புதிய தெய்வத்தால் அவர் மீண்டும் சக்தி பெற்றவராகவும் கூறும் கதைகள் ஸ்தல புராணக் கதைகள் தோன்றின.
ஒவ்வொரு ஸ்தலத்த தின் புதிய கதையும் பழைய தெய்வத்தைப் (இந்திரன், நாகம்) பழித்தும் புதிய தெய்வத்தை உயர்த்தியும் போற்றியது. இக்கதையில் இங்கு வழிபடு தெய்வமாக அது நாள் வரை இருந்த நாகங்கள் சபிக்கப்பட்டு சிவபெருமானால் சாப விமோசனம் பெற்றன.
மூன்று ஈச்வரர்
திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர், மலையேஸ்வரர் வன்னீஸ்வரர் என்று மூன்று ஈஸ்வரரரும் மகாலிங்கம், பானலிங்கம், என்று தனியாக இரண்டு லிங்கங்களும் உள்ளன. முதல் இரண்டு ஈஸ்வரனுக்கு சன்னிதிகள் உண்டு.
இங்கு சேஷபுரீஸ்வரர் கருவறைத் தெய்வமாக இருந்து அருள் பாலிக்கின்றார். மூலவர் விமானத்தின் கீழ் தெற்கு நோக்கி சட்டநாதர் எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு தெற்கே படிக்கட்டுகள் ஏறிச் சென்றால் ஒரு தனிச்சன்னதியில் மலை ஈஸ்வரர் உள்ளார்.
வன்னி மரத்தடியில் வன்னிச்வரர் உள்ளார். வன்னி மரம் தல விருட்சமாக இருப்பதனால் இங்கே எழுந்தருளி இருக்கும் லிங்கம் வன்னீஸ்வரர் எனப்படுகிறார். மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட இக் கோவிலில் தீர்த்தத்தின் பெயரும் ஆதிசேஷன் தீர்த்தம் தான்
அம்மன்
திருப்பாம்புரத்து அம்மன் தனிச் சன்னதி கொண்டு வண்டார் குழலி, வண்டு சேர் குழலி, பிரம்மராம்பிகா என்ற பெயர்களில் விளங்குகிறாள். ஒரு கையில் தாமரையும் மறுகையில் அபய முத்திரையும் அதே கையில் ருத்ராட்சமும் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள். மலை ஈஸ்வரர் என்ற பெயரில் இத்தலத்தில் ஒரு சிவன் இருப்பதனால் அம்மனுக்கும் மாமலையாட்டி என்ற பெயரும் வழங்குகின்றது
திருச்சுற்றுத் தெய்வங்கள்
சிவன் கோவிலில் இருக்கும் இதர தெய்வங்களும் இங்கே சான்னீத்தியம் பெற்றுள்ளன. வைரவர், சூரியன், சந்திரன், விஷ்ணு, பிரம்மா, நால்வர், மகாலிங்கம், பானலிங்கம், சனீஸ்வரன் ஆகியவை திருச்சுற்றுத் தெய்வங்கள் ஆகும். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும் விஷ்ணு துர்க்கையும் இடம் பெற்றுள்ளனர்.
விநாயகரின் சிறப்பு
இங்கு தனி சன்னதி கொண்டுள்ள விநாயகரின் பெயர் ராஜவிநாயகர். புத்தர் கோயிலாக இருந்து சிவன் கோவிலாக மாற்றப்பட்ட இடங்களில் உள்ள விநாயகர் சிறப்புப் பெயருடன் விளங்குவார். திருவெண்ணெய் நல்லூரில் ஆதி விநாயகர், இங்கு ராஜ விநாயகர், தில தர்ப்பனீஸ்வரர் கோவிலில் மனித முகம் கொண்ட நர விநாயகர் அல்லது ஆதி விநாயகர், பொள்ளா பிள்ளையார் என்று தனிச் சிறப்புடன் வழங்குவார்.
விநாயகர் என்ற பெயர் கௌதம புத்தருக்கு வழங்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இப்பெயர் புத்தரின் செப்புத் திருமேனிகளில் காணப்படுகின்றன. நாகப்பட்டினத் தில் இருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த சமயம் சார்ந்த செப்பு திருமேனிகள் உள்ளன.
அவற்றில் கௌதம புத்தர் திருமேனிகளில் அவரது பெயர் விநாயகர் (சிறந்த நாயகன் / தலைவன்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (எ-டு) ஆளுடைய நாயகர் (திருமேனி எண் 74 ) தேவப்பிள்ளை நாயகர் (எண் 142) சீராவியான் நாயகர் (எண் 174), உயக்கொண்ட நாயகர் (எண் 175), செல்லாயி நாயகர் (எண் 171) நித்தன மதி நாயகர், புத்துடையான் பெருமாள் நாயகர் (புற்றுக் கோயிலில் உள்ள புத்தர்). விநாயகர் என்ற பெயரும் அக்காலத்தில் கௌதம புத்தரைக் குறித்துள்ளது.
வழிபட்டோர் பட்டியல்
திருப்பாம்புரம் கோவிலை வழிபட்டவர்கள் என்று ஒரு பெரிய பட்டியல் காணப்படுகின்றது. சுனிதன், கோச்சங்கண்ணான், இந்திரன், சந்திரன்,, கங்கை, அக்கினி, பிரம்மன், பார்வதி என்று பலரும் இக்கோவிலை வழிபட்டு சென்றதாக புராணக்கதை கூறுகின்றது.மூன்றாம் குலோத்துங்க மன்னனின் கல்வெட்டு கோவில் சுவரில் காணப்படுகின்றது.
பாம்பு நடமாட்டம்
திரு பாம்புரம் கோவில் பாம்பின் பெயரால் அழைக்கப்படுகிறது. இத் தலம் முதலில் பாம்புப் புற்றாக இருந்து பின்னர் கோவிலாக கட்டப்பட்டதனால் ஏற்கனவே புற்றில் வாழ்ந்த பாம்புகள் இங்கு வசிப்பதாகவும் அவை இரவில் வந்து போவதாகவும் ஆனால் பக்தர்களுக்கு எந்த விதத் தீங்கும் இப் பாம்புகளால் நேராது என்றும் நீண்ட காலமாக இப்பகுதியில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.
கருவறையில் கிடைத்த ஐந்தடி நீளமுடைய பாம்பின் சட்டை கண்ணாடிப்பேழையில் வருது பாதுகாக்கப்படுகிறது. எனவே ராகு, கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் நாக தோஷம் விலகுவதற்கான சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும்.
தோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலம்
ராகு கேது ஆகியவை ஜாதக கட்டத்தில் ஏழு, எட்டு, இரண்டு போன்ற இடங்களில் இருந்தால் ஜாதகருக்குத் திருமண தடை உண்டு. உரிய வயதில் திருமணம் நடப்பதில் காலதாமதம் ஆகும். இவர்கள் இக்கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்லலாம்.
கால சர்ப்ப தோஷம்
நீங்க ஜாதகக் கட்டத்தில் ராகு கேதுக்களுக்கு இடையில் மற்ற கிரகங்கள் யாவும் சிக்கிக் கொண்டால் அதனைக் காலசர்ப்ப தோஷம் என்று அழைப்பர். ஜாதகருக்கு இளமை கழிந்த பின்பு 36, 37 வயதுக்கு மேல் திருமணம் நடைபெறும். திருமண சுகம் கிட்டாது.
இவர்கள் காளஹஸ்திக்குச் சென்று பரிகாரம் செய்வது வழக்கம். காளகஸ்தி வரை போக இயலாதவர்கள் திருப்பாம்புரத்திற்கு வந்து இங்கே வன்னி மரத்தினடியில் உள்ள சிவலிங்கத்தை வணங்கினால் காலசர்ப்ப தோஷம் விலகும்.
திசா, புத்தி தோஷம் அகல
கேது திசை ராகு திசை நடப்பவர்களும் விஷ கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடுபட இக்கோவிலுக்கு வருவது சாலச் சிறந்தது. அவரவர் வசதிக்கேற்ப ஆண்டுக்கு ஒரு முறையோ வாரத்திற்கு ஒரு முறையோ மாதத்திற்கு ஒரு முறையோ வந்து செல்லலாம். இதனால் விஷ கடி குறையும். வைரஸ், பேக்ட்டிரியா, விஷக் கிருமிகளின் பாதிப்புகளும் வராது.
புத்ர தோஷம் விலக
ராகு கேதுக்கள் ஐந்தாம் இடத்தில் இருந்து சுபர் பார்வை, சேர்க்கை இல்லாத போது புத்திர தோஷம் ஏற்படும். அவர்களும் திருப்பாம்புரம் வந்து இறைவனை வணங்கிச் செல்வதால் புத்திர தோஷம் நீங்கி நல்ல ஆயுள் விருத்தியும் ஆரோக்கியமும் உடைய சத் புத்திரர்கள் பிறப்பார்கள்.
இங்கு வந்து குழந்தைக்காக வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் குழந்தை பிறந்ததும் வன்னி மரத்தடியில் நாகர் சிலை செய்து வைப்பதாக வேண்டி கொள்வர். குழந்தை பிறந்ததும் அம்மரத்தின் கீழ் நாகர் சிலையை கொண்டு வந்து வைக்கின்றனர்.
தலபுராணக் கதை - 1
விநாயகர் ஒருமுறை கைலாயத்திற்கு தன் தந்தை சிவபெருமானை காணச் சென்றார். சென்றவர் சிவபெருமானின் முன்பு தலைவணங்கி நின்றதும் சிவனது கழுத்தில் கைகளில் ஊர்ந்து சென்ற பாம்புகள் விநாயகர் வணங்கியது தம்மை தான் என்று கர்வம் கொண்டன.
விநாயகரை பார்த்து 'நல்லா இரு நல்லா இரு' என்றன. இதைக் கேட்டதும் விநாயகர் கோபம் கொண்டு 'நீங்கள் பூலோகத்திற்கு போய் தரையில் ஊர்ந்து திரிய வேண்டும்' என்று சாபமிட்டார். அவை சாபம் பெற்று விழுந்த இடம் திருப்பாம்புரம் ஆகும்.
பின்பு ஆதிசேஷனும் நாகங்களின் தலைவனான வாசுகியும் அஷ்ட நாகங்களான அனந்தன், வாசுகி, தட்சன், பத்மன், மகா பத்மன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன் ஆகியனவும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தன. சிவன் காட்சி அருளி பாவ விமோசனம் கொடுத்தார். பாம்புகள் தவம் செய்த தலம் என்பதால் ராகுவும் கேதுவும் ஒரே உடலாக இருந்து காட்சியளிக்கின்றனர்.
பொதுவாக நவக்கிரக சந்நிதியில் ராகு பாம்பு தலையுடனும் கேது பாம்பின் உடலோடும் காட்சியளிப்பது வழக்கம் அவ்வாறு இன்றி இருவரும் ஒரே ஒரே ஆளாகக் காட்சி அளிக்கின்ற நிலையை இக்கோவிலில் காணலாம்.
கதை - 2
ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே போட்டி வந்தது. வாயு பகவான் காற்றை வேகமாக வீசி மலைகளைப் பெயர்த்து கீழே விழச் செய்ய முயன்றார். ஆனால் ஆதிசேஷன் தன் முதுகினால் உறுதியாகத் தாங்கி அந்த மலைகளைப் பெயர விடாமல் தாங்கிக் கொண்டது.
எனவே மலைகள் பெயர்ந்து கீழே விழவில்லை. இவ்வாறு வாயு பகவானும் ஆதிசேஷனும் போட்டி போட்டுக் கொண்டிருந்தபோது தேவர்கள் அவர்கள் இருவரையும் கண்டித்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமான், அவர்கள் தங்களின் தேவர் தன்மையை இழந்து பூலோகத்திற்கு இறங்க வேண்டிய சாபத்திற்கு உள்ளாகினர். இங்கு வந்து சிவபெருமானை வணங்கி இத்தலத்தில் இருந்தபடி சாப விமோசனம் பெற்றனர்.
வழிபாட்டு முறைகள்
திருப்பாம்புரம் வந்து சட்டநாதரையும் சேஷபுரீஸ்வரர் ஆலயம் மலையேஸ்வரரையும் வன்னிஸ்வரரையும் வணங்கி செல்லும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு உளுந்த மாவு கொள்ளு மாவு படைத்து அன்னம் சமர்ப்பித்து நிவேதனம் செய்ய வேண்டும்.
கருவறை ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்த பின்பு வஸ்திரம் சாத்துவது என்று ஒரு நேர்த்திக்கடன் உண்டு. பலரும் அவ்வாறு வஸ்திரம் சாந்தி வணங்கிச் செல்கின்றனர்.
அமாவாசையில் ஐந்து நாக வழிபாடு
திருப்பாம்புரத்தில் மகா சிவராத்திரி அன்று விசேஷ வழிபாடுகள் நடக்கும். நாகதோஷம் உள்ளவர்கள் மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்குச் சென்று வணங்கி இரண்டாம் காலத்தில் திரு நாகேஸ்வரம் சென்று வணங்கி மூன்றாம் காலத்தில் இங்கே திருப்பாம்புரம் வந்து வணங்கிய பின்பு நான்காம் காலத்தில் நாகூர் செல்ல வேண்டும். இவ்வாறு பல ஊர்களிலும் அடுத்தடுத்து வணங்கி வந்தால் நாகதோஷம் அவர்களை விட்டு நீங்கிவிடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |