தினம் ஒரு திருவாசகம்
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
பொருள்
பசுமையான குவளையின் கருமையான மலர் களை உடைமையாலும், செந்தாமரையின் குளிர்ந்த மலர்களை உடைமையாலும், கையில் வளையற் கூட்டத்தை உடைமையாலும் பின்னிக் கிடக்கின்ற பாம்பினாலும் தங்கள் மலம் கழுவுவார் வந்து நீக்கிக் கொள்ள அடைதலாலும், எம்பெருமாட்டியையும் எங்கள் பெருமானையும் போன்று பொருந்திய நீர் பொங்குகின்ற மடுவை யுடைய பொய்கையில் புகும்படி வீழ்ந்து, மூழ்கி, நம் சங்கு வளையல்கள் கலகலக்கவும் காற்சிலம்புகள் கலந்து ஒலிக்கவும் தனங்கள் பூரிக்கவும், முழ்குகின்ற நீர் பொங்கவும் தாமரை மலர்கள் நிறைந்த நீரில் பாய்ந்து ஆடுவாயாக
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |