திருவெண்ணெய் நல்லூரில் சிவபெருமான் நடத்திய அதிசயங்கள்
திருவெண்ணைநல்லூர் கோவில்
விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பாதையில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டார். கிபி ஏழாம் நூற்றாண்டில் பிற்பகுதியும் கிபி எட்டாம் நூற்றாண்டில் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் சுந்தரர். அவர் வன்தொண்டர் எனப்பட்டார்.
38000 பதிகங்கள் பாடினார்.இவை அனைத்தும் சுத்த தமிழ்ப் பண்ணோடும் தாளத்தோடும் அமைந்தவை. இறைவன், வேதம், வேதியர், யாகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாமல் அவற்றை எதிர்த்து மதப் பிரச்சாரம் செய்து வந்த புறச்சமயத்தாராகிய சாக்கியர்களையும் (பௌத்தர்) சமணர்களையும் வன்மையாகப் பதிகம்தோறும் கண்டித்தார்.
நால்வகை நெறிகளில் சுந்தரர் சக மார்க்கத்தைப் பின்பற்றினார். எனவே தம்பிரான் தோழன் எனப்பட்டார். இக்கோயிலில் திருமணம் செய்யப் போகும்போது இவரை இறைவன் தடுத்து ஆட்கொண்டதால் தடுத்தாட்கொண்ட நாதர் என்று இக்கோயிலில் உறையும் சிவபெருமான் அழைக்கப்படுகின்றார்.
திருவெண்ணெய் நல்லூர்நாதர்
பல கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் இறைவனின் பெயர் இடம் பெற்றுள்ளது. முதலாம் இராசராசன் கல்வெட்டில் திருவெண்ணெய்நல்லூர் திருஅருள்துறை ஆள்வார் என்றும் இரண்டாம் இராசாதி ராசன் கல்வெட்டுகளில் திருவெண்ணைநல்லூர் ஆட்கொண்ட தேவர் என்றும் இறைவனின் பெயர் இடம் பெற்றுள்ளது.
தாருகா வனத்து ரிஷிகளின் கர்வத்தை அழித்து அவர்களுக்கு அருள் பாலித்ததால் இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அருள் துறை நாதர் என்றும் கிருபாபுரி ஈஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
தீர்த்தங்கள்
திருவெண்ணெய்நல்லூர் நீர்வளம் மிக்க ஊர். இவ்வூரின் அருகே இராசராசப் பேரேரி என்ற பெரிய ஏரி உண்டு. இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் இருப்பது மிகப்பெரிய சிறப்பாகும். இங்குள்ள தண்டு தீர்த்தத்தைச் சிவனார் கேணி என்று அழைக்கின்றனர்.
பெண்ணை நதி இங்கு ஓடுவதால் இவ்வாறு திருவெண்ணெய் நல்லூர் என்று ஆற்றின் பெயரால் அழைக்கப்படுகின்றது. நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருள் உறை தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம் என்று வேறு பல தீர்த்தங்களும் இத்திருத்தலத்தில் உள்ளன.
தலவிருட்சம் திருவெண்ணைநல்லூரில் தலவிருட்சமாக மூங்கில் மரம் விளங்குகின்றது. இவ்வூர் ஆதியில் மூங்கில் காடாக இருந்ததனால் மக்கள் வேணுவனம் என்று அழைத்தனர். அதனால் இறைவனை வேணுபுரீஸ்வரர் என்றும் இறைவியை வேல்கன்னி நாயகி என்றும் அழைக்கின்றனர்.
சிவலிங்க வழிபாடு திருவெண்ணெய்நல்லூரில் பல தேவர்கள் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தல புராணம் கூறுகின்றது. அர்ஜுனன் வழிபட்ட லிங்கம் சுந்தரலிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம் சங்கரலிங்கம். இங்கு நவகிரகங்களும் தன் பாவம் தொலைய சிவபெருமானை வழிபட்டுள்ளனர். அவர்கள் வழிபட்ட லிங்கம் ஜோதிலிங்கம்
பெண்ணை வெண்ணையான வரலாறு
பெண்ணை ஆற்றின் கரையில் நல்லூர் என்ற கிராமத்தில் கோயில் அமைந்தது. இதனை ஆதியில் பெண்ணை நல்லூர் என்றனர். பின்பு திருவெண்ணைநல்லூர் என்று அழைத்து அதற்கு ஆதாரமாக ஒரு கதை கூறினர்.
தேவர்களும் அசுரர்களும் பால்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் தோன்றியது. அந்த விஷத்தை உருண்டையாக உருட்டிக் கொண்டு வந்து சிவபெருமானிடம் உண்ணக் கொடுத்தவர் சுந்தரர். எனவே ஆலால சுந்தரர் என்றும் அழைக்கப்பட்டார்.
விஷத்தை சிவபெருமான் விழுங்கிய போது அது அவரது கழுத்திலேயே தங்கி விடுகிறது அதன் வெம்மை தாங்காமல் சிவபெருமான் தவித்தார். உடனே உமாதேவியார் பசு வெண்ணையால் கோட்டை கட்டி அதற்குள்ளே பஞ்சாக்கினியை வளர்த்து இத்திருவெண்ணெய் நல்லூரில் தவமிருந்தார். எனவே இவ்வூர் வெண்ணை நல்லூர் என்று பெயர் பெற்றது
சுந்தரர் தோன்றிய வரலாறு
பனிபடர்ந்து ஒளி வீசும் திருக்கைலாயத்தில் தன்னுடைய பிம்பத்தின் அழகைப் பனியில் கண்ட சிவபெருமான் அப் பிம்பத்தைப் பார்த்து 'சுந்தரா வா' என்று அழைத்தார். உடனே சுந்தரர் தோன்றினார். இதுதான் சுந்தரர் தோன்றிய வரலாறாகும்.
பூலோகம் வந்த சுந்தரர்
கைலாயத்தில் ஒரு முறை சுந்தரர் சிவ பூஜைக்காகக் உள்ள நந்தவனத்துக்குப் பூப்பறிக்கப் போனார். அப்போது அங்கு பார்வதி தேவியின் அணுக்கத் தோழியரான கமலினியும் அணிந்திதியும் பூப்பறித்துக் கொண்டிருந்தனர் அவர்களைக் கண்ட சுந்தரர் அவர்கள் அழகில் மயங்கி அவர்களின் மீது காதல் கொண்டார்.
சுந்தரரின் காதலை அறிந்த சிவபெருமான் அவரைப் பூலோகம் சென்று காதல் ஆசையை நிறைவேற்றிய பின்பு சிவலோகம் வரும்படி ஆணையிட்டார். இதனால் சுந்தரர் பூலோகத்தில் வந்து திரு நாவலூரில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் திருமகனாக அவதரித்தார்.
இவருடைய இயற்பெயர் நம்பி ஆரூரர். இவருடைய அழகையும் அறிவையும் கண்டு நரசிங்க முனையர் என்ற சிற்றரசர் தன்னுடைய அரண்மனையிலேயே ஞானக் குழந்தையை வளர்த்து வந்தார்.
சுந்தரரும் இரு மனைவியரும்
சுந்தரர் திருவாரூரில் பதியிலார் எனப்படும் தேவரடியார் குலத்தைச் சேர்ந்த பரவையார் என்ற பெண்ணைக் கண்டு விரும்பி அவளை மணந்து கொண்டார். பின்பு சிவபெருமானைத் துதிக்க பல்வேறு சிவத்தலங்களுக்குப் புறப்படடுப் போனார்.
போன இடத்தில் இன்னோரு பெண்ணைக் கண்டு காதலித்து மணந்துகொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் என்ற ஊரில் சங்கிலியார் என்ற அழகிய பெண்ணைக் கண்டார். காதலித்தார். அவளையும் மனந்தார். இவ்விரு மனைவியுடன் திருவெண்ணெய்நல்லூரில் தனி சன்னதி கொண்டுள்ளார். இவ்விருவரும் அவர் கைலாயத்தில் கண்டு ரசித்த பெண்கள். இவர்களைத் திருமணம் செய்து வாழ்வதற்கு மட்டுமே சிவபெருமான் ஆணையிட்டார்.
தடுத்தாட் கொள்ளுதல்
நரசிங்க முனையார் சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைப் பெண் கேட்டு திருமணம் பேசினார். திருமண ஏற்பாடுகள் நடந்து தாலி கட்டும் வேளையில் ஒரு முதியவர் வந்து தடுத்தார். 'இவன் என் அடிமை. எனக்குத் தொண்டு செய்வதே இவன் கடமை' என்றார்.
பெண் வீட்டார் ஆதாரம் கேட்டனர். முதியவர் சுந்தரரின் பாட்டனார் எழுதிக் கொடுத்த ஓலையைக் காட்டினார். சுந்தரர் ஏற்கவில்லை. 'ஏய் பித்தா (பைத்தியமே), என்னுடன் எனது சொந்த ஊரான திருவெண்ணெய் நல்லூருக்கு வா.
ஓலையில் இருப்பது என் பாட்டனாரின் கையெழுத்து தானா என்று ஊர்ப் பெரியவர்களைக் கேட்டறிவோம்' என்று அந்த முதியவரைத் தன் ஊருக்கு அழைத்து வந்தார். சொந்த ஊரில் அவருடைய பாட்டனார் கையெழுத்திட்ட ஓலைச்சுவடி இருந்தது. அந்த ஓலைச்சுவடியின் கையெழுத்தும் முதியவர் வைத்திருந்த ஓலைச்சுவடியின் கையெழுத்தும் ஒன்று போல இருந்ததனால் ஊர் பெரியவர்கள் அடிமைச் சாசனத்தைப் உண்மை என்று ஒப்புக்கொண்டு சுந்தரரை முதியவருடன் அனுப்பினர்.
வேறு வழியின்றி சுந்தரரும் முதியவருடன் சென்றார். 'என்னை எங்கே அழைத்துக் கொண்டு போகிறீர்' என்று கேட்டார் 'வா என் வீட்டுக்குத்தான்' என்று சொல்லி அவரை அழைத்துச் சென்ற சிவபெருமான் திருவெண்ணைநல்லூர் ஆலயத்திற்குள் சென்று மறைந்தார்.
பித்தா பிறைசூடி
முதியவர் கோயிலுக்குள் சென்று மறைந்ததும் அவர் தான் சிவபெருமான் என்பதை உணர்ந்த வினாடியே சுந்தரருக்குத் தன் கைலாய வாசம் நினைவுக்கு வந்தது. தன் பிறப்பின் நோக்கத்தைத் தெரிந்து கொண்ட சுந்தரர் சிவபெருமானை நோக்கி
கோதிலா அமுதே என்றுன்
குணப் பெருங்கடலை
நாயேன் யாரினை அறிந்து என்சொல்லிப் பாடுகிறேன்
என்று சிவபெருமானை நோக்கி கருவறையின் முன் நின்று கேட்க 'என்னை பித்தன் என்று சொன்னாய் அல்லவா அதனையே முதலாகக் கொண்டு பாடு' என்று இறைவன் முதல் சொல்லை எடுத்துக் கொடுத்தார். அதன்படியே சுந்தரர்
பித்தா பிறைசூடி பெம்மானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா எனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
கோயிலின் உள்ளே
கோயிலுக்குள் நுழைந்ததும் சுந்தரரும் முதியவரும் வழக்காடிய மண்டபம் இருக்கிறது. கருவறையின் முன்னே சிவபெருமானும் பார்வதியும் சுந்தரருக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்ததைப் பார்க்கலாம் சிவபெருமானின் காலடியில் சுந்தரர் ஓலையோடு நிற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சிகள் விழாவாக நிகழ்த்தப்படுகின்றன. வழக்குத் தீர்த்த மண்டபத்தில் சுந்தரருக்கு தனிச் சந்நிதி உண்டு. இங்கு பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
சிவன் கோவில் அம்சங்கள்
திருவெண்ணெய் நல்லூர் கோயில் சிவன் கோயிலுக்குரிய சகல அம்சங்களும் பொருந்திய கோயில் ஆகும். வெளிப்பிரகாரத்தில் அறுபது மூன்று நாயன்மார்கள், அவர்களை அடுத்து சப்த மாதர், தொடர்ந்து சம்பந்தர், மகாவிஷ்ணு, அருள்நந்தி சிவம், மெய்கண்ட தேவர் திருமேனிகள் உள்ளன. இவை தவிர விநாயகருக்கும் சுப்பிரமணியருக்கும் தனி சன்னதிகள் உண்டு.
கஜலட்சுமிக்கு ஒரு சன்னதியும். நவக்கிரக சன்னதியும் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளன. அம்பாள் நின்ற கோளத்தில் வேற்கண்னியாகக் காட்சி அருளுகிறாள். அம்பாள் சன்னதியில் பள்ளியறை உள்ளது. கோயிலின் உட்புறத் தூண்களில் பைரவரும் தட்சிணாமூர்த்தியும் சிற்பங்களாக காட்சி தருகின்றனர்
தேவர்களின் சிவலிங்க வழிபாடு திருவெண்ணெய்நல்லூரில் பல தேவர்கள் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகத் தல புராணம் கூறுகின்றது. அர்ஜுனன் வழிபட்ட லிங்கம் சுந்தரலிங்கம். இந்திரன் வழிபட்ட லிங்கம் சங்கரலிங்கம்.
இங்கு நவகிரகங்களும் தன் பாவம் தொலைய சிவபெருமானை வழிபட்டுள்ளனர். அவர்கள் வழிபட்ட லிங்கம் ஜோதிலிங்கம். மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவலிங்க பூஜை நடத்தினார் .தேவேந்திரனும் இத்தலத்தில் சிவபூஜை செய்தான்
பாவம் தொலையும் புண்ணியத்தலம்
அர்ஜுனன் ஒருநாள் தன் அண்ணன் தர்மரின் செருப்பு வெளியே கிடந்ததை பார்க்காமல் அவசரமாக வீட்டிற்குள் போனான். தர்மரும் பாஞ்சாலியும் மகிழ்ந்திருந்த வேளையில் அவர்களைக் கண்ட பாவத்தை தொலைக்க இத்திருத்தலத்துக்கு வந்தான்.
இங்கு சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி சிவ பூஜை செய்து தன் பாவத்தைத் தொலைத்தான். அதன் பின்பு அவன் பாஞ்சாலியுடன் கூடிய நல்ல மகப்பேறு பெற்றான். வித கோத்திரர் என்பவர் கருவுற்ற பசுவை வேள்வியில் இட்ட பாவத்தைத் தொலைக்க இங்கு வந்து சிவபெருமானைத் துதித்து பசுஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார்.
அடியவர்கள் வாழ்ந்த தலம்
திருவெண்ணெய்நல்லூரில் சந்தன குரவரான மெய்கண்டார் வாழ்ந்தார். அவர் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். இங்குக் கோயில் கொண்டிருக்கும் சுயம்பு பிள்ளையாரான பொல்லாப் பிள்ளையார் இவருக்கு ஐந்து வயதிலேயே ஞானம் அருளினார்.
ஆயிரத்தில் ஒருவர்
கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு ஆதரவளித்த சடையப்ப பிள்ளை இங்கு வாழ்ந்தார். கம்பர் தன்னுடைய இராமாயணத்தில் 100 பாடலுக்கு ஒரு பாடலாகத் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை போற்றி இருந்தார். இந்நூலின் அரங்கேற்றம் திருவரங்கத்தில் நடந்த போது அறிஞர் பெருமக்கள் கம்ப ராமாயணத்தில் நரஸ்துதி அதிகம் தென்படுகிறது என்றனர்.
சடையப்பரை தான் அதிகம் பாராட்டியது குறித்து இக்குற்றசாட்டு எழுந்ததைக் கம்பர் உணர்ந்தார். உடனே 'அதுவும் சரிதான். சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவரல்ல. அவர் ஆயிரத்தில் ஒருவர். எனவே பாடல் எண்ணிக்கைகளை குறைத்து ஆயிரத்துக்கு ஒரு பாடலாக மட்டும் வைத்துக் கொள்கிறேன்' என்றார்
பாத தரிசனம்
திரு திருப்பாதங்களை வைத்து வழிபடும் மரபு பௌத்த சமயத்தின் மரபாகும். இராமாயணத்தில் பாதுகைகளை பெற்று பரதன் சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்தான் என்ற தகவல் இருந்தாலும் முதலில் புத்த ஜாதகக் கதைகளில் தான் ராமாயணக் கதை உள்ளது. பவுத்தர்களின் பாதத் தரிசனத்தை தொடர்ந்து சைவக் கோவில்களிலும் பாதக் குறடு எனப்படும் திருப்பாதங்கள் வழிபடப்படுகின்றன.
திருவெண்ணெய் நல்லூரில் பாத குறடு வழிபாட்டுக்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் திருநாவலூர் கோவிலுக்குள் நடக்கும் சுந்தரர் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வந்தபோது அவர் தன் பாதக்குறடுகளை வெளியே கழட்டி வைத்து விட்டு வந்தார்.
அந்தப் பாதக்குறடுகள் இன்று வழிபடும் பொருளாக உள்ளன. பௌத்த கோயிலாக இருந்து பின்பு சிவன் கோவில்களாக மாற்றப்பட்ட இடங்களில் மக்கள் வழிபட்டு வந்த திருப்பாதங்களை அகற்றாமல் அதற்குரிய கதைகளை மட்டும் மாற்றி சைவ வைணவ சமயங்கள் பாத தரிசன வழிபாட்டை தொடர அனுமதித்தன.
அதற்கான ஒரு சான்றாக இந்தக் கோவிலிலும் பாத வழிபாடு சிறப்பாக விளங்குகின்றது. இத் தலத்தில் சிவபெருமானின் பாதக் குறடுகளுக்கு பக்தர்கள் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
கல்வெட்டுகள்
கல்வெட்டு சிறப்பு மிக்க கோயிலாக திருவெண்ணெய் நல்லூர் கோயில் விளங்குகிறது. இங்கு சோழன், பாண்டியன், பல்லவன், சம்புராயன் என்று பல வகையான மன்னர்களின் கல்வெட்டுகளும் உள்ளன.
சோழர்களான முதலாம் ராஜராஜ சோழன், கோப்பர கேசரி, ராஜேந்திர தேவன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராசாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன், பாண்டியர்களான ஜடா வர்ம திரிபுவனச் சக்கரவர்த்தி, வீரபாண்டிய தேவன், விக்ரம பாண்டியன் , பல்லவர்களான முதலாம் கோப்பெரும் சிங்கப்பல்லவன்,விஜயநகர மன்னனான மகா மண்டலகேஸ்வரன், வீர பூபதி உடையார், விஜயமகாராயர் ,விருப்பாச்ச மகாராஜர், குமார மல்லிகார்ஜுனராயர், சாளுவ மன்னர்களில் மகா மண்டலகேஸ்வரன், நரசிங்க தேவ மகாராயர், சம்புவராய மன்னர்களில் ராஜநாராயண சம்புவராயர் போன்றோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன.
ஊரும் பேரும்
கிபி 1148 இல் திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் உள்ள ஒரு தெருவுக்கு ஆலாலசுந்தர பெருந்தெரு என்ற பெயரிட்டதாகக். கல்வெட்டு வாயிலாக அறிகின்றோம். நம்பி ஆரூரன் கோன் என்னும் ஒரு ஊருக்கு தடுத்தாட்கொண்ட நல்லூர் என்று பெயர் சூட்டப்பட்டதாக கல்வெட்டு வாயிலாக அறிகின்றோம்.
இவ்வூரில் இருந்த பெரிய ஏரிக்கு ராஜராஜபேரரி என்ற பெயர் சசூட்டப்பட்டதாகக் கோப்பர கேசரி ராஜேந்திர தேவரின் ஆறாம் ஆண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு தெரிவிக்கின்றது.
சுந்தரர் விடைபெற்றார்
அவிநாசியில் ஒரு சிறுவன் தண்ணீருக்குள் இறங்கிய போது அங்கு மறைந்திருந்த முதலை அவனது காலை கவ்வி மெல்ல மெல்ல விழுங்கியது. அவ்வழியே வந்த சுந்தரர் எற்றான் மறக்கேன் எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடினார்.
அவர் பாடப் பாட முதலை மெல்ல மெல்ல குழந்தையை விட்டுவிட்டு தண்ணீருக்குள் சென்று விட்டது. இந்நிகழ்ச்சியுடன் அவர் தன்னுடைய வாழ்க்கையை நிறைவு செய்தார். இதுவே அவர் பாடிய கடைசிப் பதிகம் ஆகும்.
யானை மீதேறி கைலாயம் பயணம்
சுந்தரர் பூவுலகில் இருந்து விடை பெற நினைத்ததும் சிவபெருமான் வெள்ளை யானை ஒன்றை அனுப்பி வைத்தார். அதன் மீது ஏறி சுந்தரர் சிவலோகம் சென்றார். அங்கு சிவபெருமானையும் உமாதேவியாரையும் கண்டு வணங்கி சிவானந்த வெள்ளத்தில் ஆழ்ந்தார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |