திருப்பதி வேங்கடவனும் லட்டு பிரசாதமும்
திருப்பதி ஏழுமலையான் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்கள் இரண்டாவதாக வைத்துப் போற்றப்படுகிறது. ஏழு மலைகளின் அதிபதியாக வெங்கடாசலபதி கோயில் கொண்டுள்ளார். இந்தியாவிலேயே மிக அதிக அளவில் பண வரவு கொண்ட கோவில் ஆகும்.
இத்திருத்தலத்தில் தொடக்கத்தில் வராக மூர்த்தி கோவில் இருந்தது. அதனால் ஏழுமலையான் வராக மூர்த்திக்கு முதல் காணிக்கையை அளிக்க செய்வார். திருப்பதி ரிஷப தேவருக்கு நரசிம்மர் காட்சி தந்த இடம் ஆகும். இங்கு யோக நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
ஏழுமலையான்
தற்போது திருப்பதி ஆந்திர மாநிலத்தின் எல்லைக்குள் இருந்தாலும் இக்கோவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவில் ஆகும். தொல்காப்பியப் பாயிரம் வடவேங்கடம் தென்குமரி தமிழ் கூறு நல் உலகம் என்பதால் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கட மலை இருந்தது உறுதியாகின்றது.
வேங்கடமலை 3200 அடி உயரம் கொண்டது நாகமலை, கருடமலை, நீலமலை, கருமலை, காளை மலை, நாராயண மலை, வேங்கடமலை ஆகிய ஏழுமலைகள் இக்கோவிலைச் சூழ்ந்து உள்ளன. எனவே இங்கு எழுந்தருளியிருக்கும் மலையப்ப சுவாமி ஏழுமலையான் எனப்படுகின்றார்.
மூலவரை மலையப்பர் என்றும் வெங்கடாசலபதி என்றும் அழைக்கின்றனர். கீழ் திருப்பதியில் திருச்சானுர் என்ற இடத்தில் பத்மாவதி தாயார் சேவை சாதிக்கிறார். இவரை அலர்மேல்மங்கை என்றும் அழைப்பர்.
கதை
பெருமாள் பூமிக்கு வந்து கதை
முன்னொரு காலத்தில் உலகம் நலம் பெற வேண்டி ரிஷிகள் யாகம் செய்தனர். அந்த யாகத்தின் பலனை சாந்த மூர்த்தியாக இருக்கும் திருமாலுக்கு வழங்க எண்ணினர். எனவே யாகத்தின் பலனை எடுத்துக்கொண்டு பிருகு முனிவர் திருமாலைக் காண வைகுண்டம் வந்தார்.
அப்போது திருமால் அறிதுயிலில் இருந்ததால் விழித்துப் பார்க்கவில்லை. தான் வந்ததை அறியாமல் உறங்குகின்றாரே என்ற கோபத்தில் பிருகு முனிவர் திருமாலின் நெஞ்சில் எட்டி மிதித்தார். திருமாலின் நெஞ்சில் திருமகள் குடி கொண்டு இருப்பதால் திருமகள் கோபம் கொண்டு பூலோகத்திற்கு வந்து விட்டார்.
திருமகளைத் தேடித் திருமாலும் திருமலைக்கு வந்து ஓரிடத்தில் தவம் இருந்தார். திருமால் நெடுநாள் தவம் இருந்ததால் அவரைச் சுற்றிப் புற்று வளர்ந்து விட்டது. புற்றை அகற்ற விரும்பிய ஒருவர் அதனைக் கடப்பாறையால் இடித்தார். உள்ளே அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த திருமால் நெற்றியில் கடப்பாரை பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
அந்தப் புற்றின் அருகில் குடில் அமைத்து தங்கியிருந்த வகுளா தேவி இவரை சீனிவாசன் என்று பெயரில் அழைத்து வந்து சிகிச்சை அளித்தார் இவர் முற்பிறப்பில் கண்ணனின் தாயார் யசோதாவாகப் பிறந்தவர் இப்பிறப்பில் சீனிவாசனுக்கு கொஞ்ச காலம் தாயாராக இருந்தார்.
வகுளாதேவி தன் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். தான் தங்கி இருந்த ஆசிரமம் அருகே சந்திரகிரி நாடு இருந்தது. அந்தச் சந்திரகிரி நாட்டின் மன்னன் ஆகாச ராஜன் மகளான பத்மாவதி தேவியை வகுளாதேவி தன் மகன் சீனிவாசனுக்குப் பெண் கேட்டார்.
இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்தது. திருமணச் செலவுக்கு சீனிவாசன் குபேரனிடம் கடன் வாங்கினார். அந்தக் கடனுக்கு இன்னும் வட்டி செலுத்தி வருகிறார். இந்த யுகம் முடியும் வரை அவர் கடன் தீராது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எல்லாம் குபேரனுக்குக் கல்யாணக் கடனுக்காக செலுத்தப்பட்டு வருகிறது. ஆகாசராஜன் தன் மகள் பத்மாதேவிக்கு சிறப்பாக சீர் செய்தும் அதில் கறிவேப்பிலை இல்லாதது ஒரு குறையாக சுட்டப்பட்டது.
கோயில் வரலாறு
திருப்பதி ஏழுமலையான் கோவிலைத் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த தொண்டைமான் இளந்திரையன் கட்டினான். ஏழாம் நூற்றாண்டில் இருந்து இக்கோவிலில் சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, பின்பு விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவில் மூன்று பிரகாரங்களைக் கொண்டது. இக்கோவிலில் அந்நியர் படையெடுப்பின் போது ரங்கநாதர் விக்கிரகத்தை கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த மண்டபம் ரங்கா மண்டபம் என்று இப்போது அழைக்கப்படுகிறது.
கோயிலின் முதல் பிரகாரத்தில் கிருஷ்ணதேவராயர் மண்டபம், பிரதிமா மண்டபம், ரங்கராயர் மண்டபம், திருமலைராயர் மண்டபம், கொடிமரம், நரசிம்மர் மண்டபம் ஆகியவை உள்ளன. இரண்டாவது பிரகாரத்தில் மூலஸ்தானம் எனப்படும் கருவறை உள்ளது. மேலும் கல்யாண மண்டபம், விமானம், வெங்கடேஸ்வரர் ஸ்தபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் ஆகியவை உள்ளன.
மூன்றாவது பிரகாரம் என்பது வைகுண்ட ஏகாதசி அன்று சாமி எழுந்தருளி வரும் பிரகாரமாகும். அன்று மட்டுமே இப் பிரகாரம் பக்தர்களுக்கு திறந்து வைக்கப்படும். இந்தப் பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. இவர் திருமாலைப் போன்றே கைகளில் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கின்றார்.
இவர் சிவன் கோவில்களில் இருக்கும் சண்டேஸ்வரரைப் போன்றவர். இங்குப் பெருமாளுக்கு அணிவிக்கப்படும் மாலை படைக்கப்படும் பிரசாதம் ஆகிய அனைத்தும் இவருக்கே வழங்கப்படுகின்றது.
கருவறை நாதர்
திருப்பதி கருவறை நாதர் வேங்கடவனை திருவேங்கடம் உடையான், வேங்கடநாதன், வெங்கடாஜலபதி, வெங்கடேசன், வெங்கடேஸ்வரன், கோவிந்தன், சீனிவாசன், பாலாஜி என்ற பல பெயர்களில் அழைக்கின்றனர். மலைக்கு தலைவன் என்பதால் மலையப்பர் என்பர். குலசேகர ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட கோவில் என்பதால் இங்கு இருக்கின்ற ஒரு படிக்கட்டு குலசேகர ஆழ்வார் படி என்று அழைக்கப்படுகின்றது.
மலைப்பாதை
கீழ்த்திருப்பதியில் இருந்து மலை மேல் ஏறிச் செல்லும் மலைப்பாதையின் ஓரங்களில் ஆழ்வார்களின் சிலைகள் காணப்படுகின்றன. மலைப்பாதையில் கருடாழ்வாரும் கபில தீர்த்தமும் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் சிலையும் முழங்கால் முடிச்சு மற்றும் காளி கோபுரமும் உள்ளன.
மலைக்குச் செல்வதற்கு இன்னொரு பழைய பாதையும் இருக்கின்றது. அந்தப் பாதை வாரிமெட்டு என்ற பகுதியிலிருந்து தொடங்குகின்றது. அந்த வழியாகவும் மலை மேல் ஏறி திருவேங்கடவனைத் தரிசிக்கலாம்.
விழாக்கள்
பிரம்மா தொடங்கி வைத்த பிரம்மோற்சவம் என்ற விழா 10 நாட்கள் நடைபெறும். அது மிகவும் சிறப்பான விழாவாகும். நிரசாய பக்தர்கள் பெருமாளை தரிசிக்க இங்குக் கூடுவார்கள். வசந்தோற்சவம், பத்மாவதி பரிணயம், அபிஷேகம், பூப்பல்லக்கு போன்ற நிகழ்ச்சிகளும் திருமலையில் நடைபெறுகின்றன.
கல்வெட்டுகள்
திருமலை திருப்பதி கோவிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் தெலுங்கு கன்னட மொழி கல்வெட்டுக்கள் சிலவும் காணப்படுகின்றன. மற்றவை அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளன.
திருப்பதி லட்டு
திருப்பதியில் ஸ்ரீவாரி லட்டு என்ற லட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 கோடி லட்டுகள் விற்பனையாகின்றன. திருப்பதி கோவிலில் சுவையான இனிப்பு மிக்க பிரசாதங்கள் நிறைய படைக்கப்பட்டாலும் லட்டு மட்டுமே ராஜ வகை பிரசாதம் எனபப்டுகின்றது.
திருப்பதி கோவிலில் ஆரம்பம் முதல் பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பல்லவர் ஆட்சி காலத்தில் இங்கு மதியம் அன்னதானம் நடந்தது. மேலும் திருபொங்கம் என்ற பெயரில் பொங்கல் வழங்கப்பட்டது. பெருமாளுக்குப் படைக்கும் தயிர்சாதம் பக்தர்களுக்கும் வழங்கப்பட்ட காலமும் இருந்தது.
விஜய நகர சாம்ராஜ்ய மன்னர்கள் தீவிர வைணவர்களாக இருந்ததனால் அவர்கள் பெருமாள் கோவில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துச் சிறப்பு செய்தனர்.. இம்மன்னர்களின் ஆட்சி காலத்தில் பிரசாதங்களின் வகையும் மாறின.
பிரசாத வரலாறு
1445 ஆம் ஆண்டு சுசியம் என்ற இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. 1450 இல் சுசியம் அப்பமாக மாறியது. 1460 இல் அப்பம் வந்தது. 1468 ல் அப்பத்துக்கு பதில் அதிரசம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் சில ஆண்டுகள் பெரிய வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
1546 ல் திருக்கல்யாண உற்சவத்தின் போது கல்யாணத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு வடை, மனோகரம், அவல்பொரி என்று பல வகை பலகாரங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. 1547ல் மனோகரம் என்ற இனிப்பு முறுக்கு பிரசாதமாக மாறியது. இதன் பிறகு முதியோர்களும் எளிமையாக சாப்பிடக்கூடிய மென்மையான லட்டு பிரசாதமாக மாறியது.
1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. 1803 பூந்தியையும் பிரசாதமாக வழங்கினர். அப்போது முக்கியஸ்தர்களுக்கு மட்டும் முழு லட்டு வழங்கும் முறை தோன்றியது. 1932 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் கோயில் நிர்வாகம் வந்தது.
அதன் பிறகு ஒரு திருக்கல்யாண உற்சவத்தின் போது பக்தர் ஒருவர் மடப்பள்ளியில் பணம் கட்டி, கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு பெரிய அளவில் லட்டுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றார். இதனால் ஆயிரக்கணக்கான லட்டு இன்றைக்கு இருப்பது போல பெரிய அளவில் உருட்டி தயாரிக்கப்பட்டது. அதன் சுவையிலும் மணத்திலும் மயங்கிய பக்தர்கள் அதற்குப் பிறகு அந்த லட்டு பிரசாதமாக வேண்டும் என்று கேட்கத் தொடங்கினர்.
1940ல் பூந்திக்கு பதில் லட்டு மட்டுமே எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய பிரசாதம் ஆயிற்று. 1943 ஆம் ஆண்டில் சனிக்கிழமை மட்டுமே இந்த லட்டு பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு லட்டு பிரசாதத்தை தேவஸ்தானம் விலைக்கு விற்கத் தொடங்கியது. ஒரு லட்டு எட்டணா என்று விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு ரூபாய்க்கு இரண்டு லட்டு வாங்கலாம். 1990 வரை கோவிலைச் சேர்ந்த ஒரு பட்டர் குடும்பத்தினர் லட்டு தயாரித்து கொடுத்தனர். அதன் பின்பு தேவஸ்தானம் லட்டு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு நவீனமயமாக்கியது. எந்திரங்கள் பயன்பாடு அதிகரித்தது.
தற்போது ஒரு நாளைக்கு 8 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்க விற்கப்படுகின்றது தேவைப்படுகின்றது 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் லட்டுக்களை எந்திரங்களின் உதவியுடன் தயாரித்து வருகின்றனர். திருப்பதி லட்டு செய்வதற்கு 51 இடுபொருட்கள் தேவை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |