மும்மூர்த்திகளும் ஒன்றாக லிங்க வடிவில் காட்சியளிக்கும் அற்புத மலையை பற்றி உங்களுக்கு தெரியுமா
பஞ்ச பூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. ஆறு ஆதாலத் தலங்களில் மணிபூரகத் தலமாகவும் இது விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே இறைவனின் சொரூபமாக காட்சியளிக்கிறது.
கவுரி நகர், தேகநகர்,அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என அனைத்தும் இத்தலத்தினை குறிக்கும் சிறப்பு பெயர்களே.
சைவ சமய குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி அளிக்கும் தலம். இத்தகைய பல சிறப்புகளை கொண்ட திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வரலாற்றையும் சிறப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
அருணாச்சலேசுவரர் திருக்கோயிலானது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில் மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மீ, தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
அதோடு வேலூரிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
வேலூர், கடலூர், சிதம்பரம், சேலம், திருச்சி, விழுப்புரம் முதலிய இடங்களில் இருந்து இந்த கோயிலுக்கு சென்று வர அதிக அளவிலான பேருந்து வசதிகள் உள்ளன.
சென்னையிலிருந்து வந்து செல்வதற்கும் பேருந்து வசதிகள் உள்ளது. ஒரு வழித்தடம் செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், செஞ்சி வழியாகவும் மற்றொரு வழித்தடம் திருபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, போளூர் வழியாகவும் செல்கிறது.
தல வரலாறு:
ஒரு முறை படைக்கும் கடவுளாகிய பிரம்மாவிற்கும் காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவிற்கும் இடையே தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பூசல் எழுந்தது. அப்போது அவர்கள் நடுவில் ஔிப்பிழம்பு தோன்ற, அந்த ஔிப்பிழம்பின் அடியையும், முடியையும் முதலில் யார் கண்டு வருகின்றனரோ, அவரே உயர்ந்தவர் என இருவரும் கூறிக்கொண்டனர்.
வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடியையும் முடியையும் காண இயலவில்லை. தாழம்பூ ஒன்று கீழே வருவதைக் கண்ட பிரம்மா நெருப்பு பிழம்பு குறித்து கேட்க, அதற்கொ தாழம்பூவோ சிவபெருமானே இந்த நெருப்பு பிழம்பு எனவும் இதன் அடியை காண நாற்பதாயிரம் ஆண்டுகளாக பயணித்து வருவதாகவும் கூறியது.
அத்துடன் தன் முயற்சியை கைவிட்ட பிரம்மா தாழம்பூவிடம் ஒரு உதவியை கோரினார். அதன் படி திருமாலிடம் சென்று பிரம்மா நெருப்பு பிழம்பின் முடிய கண்டதாக பொய் கூறியது. அதனை கேட்ட திருமால் தன்னால் அடியை காண இயலவில்லை என பிரம்மாவிடம் கூறினார்.
அதற்கு பிரம்மாவோ நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவன் என நகையாடினார். இதனைக் கேட்டு கோபமடைந்த சிவபெருமான், பத்மகற்பத்தில் திருமாலின் உந்திகமலத்தில் பிரம்மா பிறப்பார் எனவும் அவருக்கு என ஒரு தனி கோயில் அமையாது எனவும் சாபமளித்தார்.
பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம் இனி நீ என்னுடைய வழிபாட்டில் உதவ மாட்டாய் எனக் கூறினார். தவறினை உணர்ந்து மன்னிப்பு கேட்ட தாழம்பூவிடம், “நான் எனது பக்தைக்காகப் புவியில் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கை எனும் திருத்தலத்தில் மட்டுமே பயன்படுவாய்.” என உரைத்தார்.
தொடர்ந்து பிரம்மாவும் சிவபெருமானிடம் மன்னிப்புக்கோரியதால் அவருக்கும் வழிபாடு நிகழும் வகையிலும் திருமாலால் தனது அடியைக் கண்டறிய இயலாததால், திருமாலை சிறியவரென உரைப்பார்களென்பதால், கருணாமூர்த்தியான சிவன், “நாம் மூவரும் ஒருங்கிணைந்து, சிவலிங்கமாக உதிக்கலாம்.” எனக் கூறினார்.
அதன்படியே அடிப்பாகம் பிரம்மராகவும், நடுப்பாகம் திருமாலாகவும், மேல்பாகம் சிவனாகவும் மாறி வேதங்கள் புகழும் சிவலிங்கம் தோன்றியது. மும்மூர்த்திகளும் இணைந்து சிவலிங்கமாக உருவான நாளே மகா சிவராத்திரி நாளாகும்.
தல அமைப்பு:
மலையடிவாரத்தில் 24 ஏக்கர் நிலப்பரப்பில் அண்ணாமலையார் கோயில் பரந்து விரிந்துள்ளது. 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அருணாச்சலேசுவரர் கோயிலில் 6 பிரகாரங்களும் 9 ராஜகோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள 9 கோபுரங்களுள் ராஜ கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகியவை மீதமுள்ள 3 கோபுரங்களாகும்.
இந்த சிவ தலத்தில் 142 சன்னதிகளும், 22 பிள்ளையார் சிலைகளும், 306 மண்டபங்களும், ஒரு ஆயிரங்கால் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அமைந்துள்ள 306 மண்டபங்களுள் ஆயிரங்கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், புரவி மண்டபம், 16 கால் மண்டபம் ஆகியவை குறிப்பிடதக்கனவாகும்.
முதன்மை சன்னதியில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலையே சிவலிங்கம் என்பது மக்களின் பெரும் நம்பிக்கையாக உள்ளது. சன்னதியில் அமைந்துள்ள அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். அருணாச்சலேசுவரர் கோயிலில் சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
தல சிறப்புகள்:
சைவ சமய குரவர்கள் நால்வர் என அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் இத்தலத்தினை தேவாரம் பதிகங்களாக பாடியுள்ளனர். தலத்தின் மூலவராக சிவபெருமான் இருப்பினும் இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்கள் பாடியுள்ளார்.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலை இத்தனை காலங்களாக தோன்றியுள்ள அனைத்து யுகங்களிலும் அழியாமல் உள்ளது. கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது. காமதகனம் நிகழ்வு இத்தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
ஆடிப்பூரத்தன்று மாலையில் உண்ணாமுலையம்மன் சந்நிதி முன் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இவ்வாறு தீமிதி திருவிழா நடைபெறும் ஒரே சிவாலயம் இது மட்டுமே. இந்த தலத்தில் அருணகிரி நாதருக்கு விழா எடுக்கப்படுகிறது.
இத்தலம் சித்தர்களின் சரணாலயமாக திகழ்கிறது. எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் , வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகியவையே அந்த அஷ்டலிங்கங்களாகும்.
கிரி வலம்:
சிவபெருமானே இங்கு மலையாக காட்சியளிப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர். இதனால் மக்கள் இம்மலையை வலம் வருகின்றனர். இவ்வாறு வலம் வருதல் கிரி வலம் என அழைக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இங்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள்.
அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.
கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ (நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ (தேவாரம், திருவாசம்) உச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து வேறு எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ வேகமாகவோ மற்றவர்களை இடித்துக் கொண்டோ செல்லக் கூடாது.
குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து தங்களுக்குக் குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றனர். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
பிரம்மோற்சவம்:
அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்குப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
விழாக்கள்:
வள்ளாள ராஜாவின் மகனாகச் சிவபெருமான் பிறந்ததாக புராணக் கதைகள் கூறுகின்றன. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியைச் சிவபெருமானே நதியில் கரைக்கிறார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர்.
கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்துச் சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
கார்த்திகை தீபத்திருநாளின் பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.
அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது.
பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நிதியில் வைக்கின்றனர். மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. 2,668 அடி உயர மலையில் இந்த மகா தீபம் ஏற்றப்படுகிறது.
வழிபாடுகள்:
இக்கோயிலில் ஆறுகால பூஜை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூஜைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூஜைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூஜைகளாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |