தினம் ஒரு திருவாசகம்
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றாற்போல்
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
விளக்கம்
அண்ணாமலையாரின் திருவடிகளைச் சென்று தொழும், விண்ணவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் எல்லாம் (இறைவரின் திருவடியின் ஒளியின் முன்னம்) தம் ஒளி குறைந்து தோன்றுவது போல், (இறைவன் பேரொளிக்கு முன் மற்றெவரும் சிறு ஒப்புமைக்கும் உரியவரல்லர்.)
கண்ணான கதிரவனின் ஒளி தோன்றி இருட்டினை நீக்க, அந்நிலையில் தம் குன்றிய ஒளி மறைக்கப்பட்டு, விண்மீன்கள் காணாது போகின்றன. பெண், ஆண், அலி மற்றும் ஒளி வெடிப்புகள் நிறைந்த விண்ணும் மண்ணுமாகி நின்று, இவை அத்தனையிலிருந்தும் தான் வேறாகவும் நிற்கின்றானை, கண்கள் பருகி மகிழும் அமுதமாக நின்றானுடைய கழல் பூண்ட திருவடிகளைப் பாடி, இந்தப் பூம்புனலில் பாய்ந்தாடலாம், பெண்ணே!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |