தீரா நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோயில்
புள்ளிருக்க வேளூர் என்ற ஊர் சிதம்பரம் மயிலாடுதுறை பாதையில் சீர்காழி செல்லும் வழியில் உள்ளது. இவ் ஊரில் எழுந்தருளியிருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலின் மூலவரான வைத்தியநாதன் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார்.
அம்மனின் பெயர் தைலநாயகி என்ற தையல்நாயகி. இத்தலம் மருத்துவத் திருத்தலமாக விளங்குவதால் இங்குத் தலவிருட்சம் வேப்பமரம் ஆகும். இக்கோவிலில் சிவபாலனாகிய முருகனும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்.
முருகனுக்க்குப் புனுகு, சந்தனம், பச்சை கற்பூரம், பன்னீர், பால், எலுமிச்சை சாறு போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பால் சாதம் நிவேதனமாகப் படைக்கப்படும் இந்த அர்த்த அர்த்த ஜாமப் பூசை முடிந்த பின்பே கருவறை நாதருக்குப் பூசை நடக்கும். நடக்கும்.
தையல்நாயகி
வைத்தீஸ்வரன் கோவிலின் அம்பாளாக விளங்கும் அம்மனாக விளங்கும் கையல்நாயகிக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் அம்மனை பெரும் பணக்காரியாக செல்வம் செல்வாக்கு பெற்றவளாக விளங்குகின்றாள் 95 வேலி நிலம் சொந்தமாக உள்ளது.
அம்மனை வழிபட வந்தபோது தனக்கு 100 வேலி நிலம் இருப்பதால் அம்மனை விட தனக்கு அதிகமான நிலம் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் அம்மனுக்கு ஐந்து வேலி நிலத்தை எழுதி வைத்தார் இதனால் அம்மனுக்கு நூறு வேலி நிலமும் பண்ணையாருக்கு 95 வெள்ளி நிலமும் சொந்தமாக உள்ளது ஊருக்கு ஊருக்கு பொய்யா நல்லூர் என்ற பெயரும் உள்ளது.
உப சன்னதிகள்
வைத்தியநாதர் கோவிலில் சிவன், முருகன் தவிர அங்காரகன் ஆகிய செவ்வாய் கிரகம், தன்வந்திரி, ஜடாயு, பத்திரகாளி மற்றும் அறுபத்து மூவர் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் நவக் கிரகங்கள் ஆளுக்கு ஒரு திசையை பார்த்தபடி நிற்காமல் வரிசையாக நின்று வைத்தீஸ்வரனை வணங்குகின்றன.
கோயிலின் கிழக்கே பைரவரும் மேற்கே வீரபத்திரரும் தெற்கே விநாயகரும் வடக்கே காளியும் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். இங்கே உள்ள கற்பக விநாயகர். வேண்டும் வரம் தரும் கற்பக விருட்சத்தைப் போன்ற தெய்வ சக்தி படைத்தவர் ஆவார்.
விசேஷப் பிரசாதம்
வைத்தியநாதர் கோவிலில் திருச்சாந்து உருண்டைகள் என்ற பெயரில் சிறிய விபூதி உருண்டைகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. சந்தனம் சேர்க்கப்பட்டு சிறப்பு பிரசாதமும் தனியாக வழங்கப்படுகின்றது. இந்த திருச்சாந்து உருண்டைகளை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தீராத நோயும் தீரும்.
சித்தாமிர்த தீர்த்தம்
வைத்தியநாதர் கோவில் உள்ள தீர்த்தத்திற்கு பெயர் சித்தாமிர்த தீர்த்தம் ஆகும். காரணம் இங்கு சித்தர்கள் வைத்தியம் செய்து வந்தபோது அவர்கள் கொடுத்த மருந்து அமிர்தம் போல செயல்பட்டது. இறந்து போகும் நிலையில் இருப்பவருக்கும் மறுவாழ்வு அளித்தது.
இத்தீர்த்தத்தில் 18 தீர்த்தங்களின் புனித நீர் கலந்து உள்ளது. தோல் நோய், பால் பரு, மறு, தேமல், அரிப்பு, படை, சொரி குணமாக இத் தீர்த்தத்தில் வெல்லம் வாங்கி போட்டனர். வெல்லம் கரைவது போல் நோய் கரைந்துவிடும்.
கதை 1
பாம்பும் தவளையும்
சித்தாமிர்த தீர்த்தத்துக்கு ஒரு கதை உள்ளது. சதானந்த முனிவர் இக்குளக்கரையில் தவம் இருந்தபோது அங்கு பாம்பின் வாயில் சிக்கிய தவளை கத்திக் கொண்டிருந்த சத்தம் அவருடைய தவத்தைக்கு இடையூறாக இருந்தது.
கண்விழித்துப் பார்த்த சதானந்த முனிவர் இனி இந்த பக்கம் தவளையும் பாம்பும் வரக்கூடாது என்று சாபமிட்டார். எனவே இக்குளத்தில் தவளை பாம்பு போன்றவை இருப்பதில்லை. கழுகும் முருகும் ஜடாயு புள் என்றால் பறவை. வேள் என்றால் இளைஞன்.
புள் என்பது இங்கு கருட பறவையைக் (ஜடாயுவை) குறிக்கின்றது. வேள் என்பது குமரக் கடவுளைக் குறிக்கின்றது. புள்ளும் வேளும் இருக்கும் ஊர் புள்ளிருக்குவேளூர் ஆகும்.
கதை 2
ஜடாயு மோட்சம்
இராவணன் சீதையை தூக்கிச் சென்ற போது ஜடாயு என்ற கழுகரசன் அவனுடன் போரிட்டுத் தோற்றுப் போனான். இ ராவணன் ஜடாயுவின் இரண்டு இறக்கைகளையும் வெட்டிப் போட்டான். அதனால் உயிரிழந்த ஜடாயுவுக்கு இராம லக்ஷ்மணர்கள் மகன் ஸ்தானத்திலிருந்து இத்திருத்தலத்தில் திதி கொடுத்தனர்.
அவர்கள் ஓம குண்டம் வளர்த்து ஜடாயுவுக்காக திதி கொடுத்த இடம் ஜடாயு குண்டம் என்று அழைக்கப்படுகின்றது. இக் கதையை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலில் ஜடாயு மோட்சம் சிலை வடிவாக காணப்படுகின்றது.
இங்குஜடாயு உற்சவமூர்த்தி ஆகவும் விளங்குகின்றார். சம்பாதியும் ஓர் கழுகரசன். அவன் ஜடாயுவின் அண்ணன். அவனும் இங்கே எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி இறையருள் பெற்றதால் இரண்டு கழுகுகளின் பெயராலும் இத்திருத்தலம் புள் இருக்கும் வேளூர் என்று அழைக்கப்படுகின்றது. மருத்துவத் திருத்தலம் வைத்தியநாதர் கோவில் ஆதியில் மருத்துவ சேவை செய்த இடம் என்பதால் மருத்துவத்தின் தலைமைப் பீடமாக விளங்கியது.
இக்கோவிலில் தன்வந்திரிக்கு தனி சந்நிதி உண்டு தன்வந்திரி ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இத்தலம் மருத்துவ திருத்தலமாக விளங்குகின்றது4448 வகையான நோய்கள் இங்க குணமாயின. இங்கே உள்ள புற்றுமண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக விபூதி, சந்தனம் போன்றவை ஷயரோகத்தைக் கூட தீர்க்கும் ஆற்றல் பெற்றவை என்று ஸ்தல புராணக் கதை கூறுகிறது.
நோய் தீர்ந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பை வெள்ளியில் செய்து வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
கதை 3
ஷயரோகம் சுகமான கதை
இக்கோயில் மருத்துவ தலம் என்பதற்கான கதைகள் நிறைய வழங்குகின்றன. ஒரு காலத்தில் வீரசேனன் என்ற மன்னன் ஷயரோகம் என்ற எலும்புருக்கி நோயினால் (டி.பி.) பாதிக்கப்பட்டு வேதனை பட்டுக்கொண்டிருந்தான்.
தந்தையின் துயரத்தை காண பொறுக்காத அவன் மகன் சித்திர சேனல் இத்திருத்தலத்தைப் பற்றி கேள்விப்பட்டு 'தந்தையே புள்ளிருக்கும்வேளூர் சென்று அங்கிருக்கும் சித்தாமிர்த குளத்தில் குளித்து தினமும் இறைவனை வழிபட்டு வந்தால் உங்களை பீடித்திருக்கும் இந்நோய் விலகும் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள். வாருங்கள் அங்கு போவோம்' என்று தன் தந்தையை இத்திருத்தலத்திற்கு அழைத்து வந்தான்.
இங்கிருக்கும் குளத்தில் தினமும் குளித்து ஜடாயு குண்டத்தில் உள்ள விபூதியை எடுத்து மன்னன் பூசி வந்தான். மெல்ல மெல்ல வீரசேனனைப் பிடித்திருந்த நோய் விலகியது. அவனுக்கு இருந்த இளைப்பு நோய் அகன்றது. எனவே இவன் கோவிலுக்கு பொன்னால் திருப்பணிகள் செய்தான்.
கீரணி அம்மன்
வைத்தீச்வரன் கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நகரத்தார் எனப்படும் செட்டியார்கள் மாட்டு வண்டிகளில் பயணமாக வந்து இறைவனை வணங்கிச் செல்கின்றனர். சுமார் 200 ஆண்டுகளாக இவ்வண்டிப் பயணமும் வழிபாடும் தொடர்கின்றது.
இவர்கள் கீரணிப்பட்டி என்ற ஊரில் கீரணி அம்மனை வணங்கி வருபவர்கள் ஆவர். அந்த ஊரில் இருந்து கிளம்பி இங்கு வருவதற்கு முன்பு கீரணிப்பட்டி கீரணி அம்மனுக்கு வழிபாடு நடத்தித் திருவிழாவை முடித்துவிட்டு அம்மனையும் கையோடு கூட்டிக்கொண்டு வருவார்கள்.
செல்வ முத்துக்குமாரசாமி
வைத்திச்வரன் கோயிலில் செவ்வேள் எனப்படும் முருகன் தனி சந்நிதி கொண்டுள்ளார். இங்கு முருகனை அதி தேவதையாக கொண்ட மேஷம் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாயும் தனி சந்நிதியில் ஆட்டு வாகனத்துடன் காட்சி தருகின்றார். இங்கே உள்ள முருகனின் பெயர் செல்வ முத்துக்குமாரசாமி ஆகும். இவர் மீது குமரகுருபர அடிகள் பிள்ளைத்தமிழ் பாடி இருக்கின்றார். அருணகிரிநாதரும் இத்தலத்து முருகனை போற்றிப் பாடியுள்ளார்.
கதை 4
செவ்வாய் கிரகம்
வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரகத்திற்கு என்று தனி சந்நிதி உள்ளது. அதற்கென்று ஒரு தனி கதையும் வழங்குகின்றது. செவ்வாயின் பிறப்பு பற்றிய கதை விசித்திரமான ஒரு கதையாகும். ஏறத்தாழ இக்கதை முருகனின் பிறப்புப் பற்றிய கதையை போலவே உள்ளது. சிவபெருமானின் வியர்வைத் துளி பூமியில் விழுந்ததும் பூமாதேவி ஓர் குழந்தையைப் பெற்றாள்.
பூமாதேவி அக்குழந்தையை மங்களன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தாள். மங்களன் வளர்ந்ததும் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் மேற்கொண்டான். அப்போது அவனது உடம்பின் உஷ்ணம் தாங்காமல் உடம்பு தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அவன் தோல் உரிந்து வெண்மையாக மாறிவிட்டது. தனக்குப் பழைய இயற்கையான சிவந்த தோல் வர வேண்டுமே என்று வருந்தினான். அப்போது அசரீரி ஒலித்தது. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்குள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி வந்தால் அவன் பழைய நிலையை அடைவான் என்று அசரீரி ஒலித்தது.
அவன் புள்ளிருக்கு வேளூர் என்ற திருத்தலத்திற்கு வந்து அசரீரி சொன்னபடி செய்தான். பார்வதி தேவி அவன் குளித்து குளத்தை விட்டு வெளியே வந்ததும் அவனுக்குத் தன் கையில் இருந்த கிண்ணத்தில் இருந்து மருந்தை கொடுத்து அந்தத் தைலத்தை உடம்பில் தடவி வர வர தோல் பழைய நிலையை அடையும் என்றாள்.
எனவே இங்கு அம்பாள் தைலநாயகியாக கையில கிண்ணத்துடன் காட்சி தருகின்றாள். தைலநாயகியின் ஆணைப்படி மங்களன் செய்துவர தன் பழைய பொலிவான தேகத்தைப் பெற்றான். சிவபெருமான் அவனது பக்தியை மெச்சி அவனுக்கு திருத்தலத்தில் சாந்நித்யம் அருளினார். இவனுக்கு இன்னொரு கதையும் சொல்லப்பட்டுள்ளது
கதை ஐந்து
மங்களன் செவ்வாயான கதை
மங்களன் சிவனின் மைந்தன் அல்லன். அவன் பரத்வாஜ முனிவருக்குப் பிறந்தவன். அவனை பூமாதேவி எடுத்து வளர்த்து வந்தாள். அவனுக்கு பரத்வாஜ் முனிவர் பல கலைகளைக் கற்பித்தார். அவன் சிறப்பாக வளர்ந்து வந்ததைப் பார்த்து அவர் இன்னும் அவன் மேன்மை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சிவனை நோக்கித் தவம் இருக்கும்படி அறிவுரை கூறினார்.
மங்களனும் தந்தை சொல் தவறாத தனயனாக சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். சிவனும் அவன் தவத்தை மெச்சி கிரகப்பதவியை அருளினார். அன்று முதல் அவன் அங்காரகன் அல்லது செவ்வாய் பகவான் ஆனான். இக்கதை மச்ச புராணத்தில் உள்ளது
செவ்வாய் கிரகத்தின் பண்பு
செவ்வாய் கோபம் மிகுதியாக கொண்டவன். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் குறிப்பாக மேஷ ராசியினர் முன்கோபிகள் முரட்டுத்தனம் உடையவர்கள். காவல்துறை, தீயணைப்புத் துறை ராணுவத் துறையில் பணிபுரிகின்ற பலர் மேஷ ராசியினராக இருப்பார்கள். செவ்வாய் சிவந்த நிறத்துக்கு அதிபதி. விஞ்ஞானிகளும் வானியல் நிபுணர்களும் இன்றைக்கும் செவ்வாய் கிரகம் சிவப்பாக இருப்பதை ஒப்புக்கொள்கின்றனர்.
செவ்வாய்க்கு மறு பெயர்கள்
செவ்வாய் சிவந்த நிறம் உடையவன் என்பதால் அவனுக்கு அவன் பண்பு சார்ந்த பல பெயர்கள் வழங்குகின்றன. அவை வருமாறு செவ்வாய், செம்மீன், லோகிதாங்கன், ரத்தாய தேசனன், ரத்தவர்ணன், மகா காயன், மங்களன், தனப்பிரதன், ஹேம குண்டலி, காமதன், வித்யூபிரபன், ரோக குரு, ரோக நாசனன், குணகர்த்தா
ஆட்டுக்கிடா வாகனம்
செவ்வாய்க்குரிய வாகனம் வீரமும் வேகமும் நிறைந்த ஆட்டுக்கிடா ஆகும். முருகனுக்கு வேலும் மயிலும் கிடைக்கும் முன்பு அவனும் ஆட்டுக்கடாவைத் தான் தனது வாகனமாகக் கொண்டிருந்தான். பழந்தமிழ்த் தெய்வங்கள் புராணங்கள் வருவதற்கு முன்பு ஆட்டுக்கிடாவை வாகனமாகக் கொண்டிருந்தன. புலி, சிநகம் போன்ற வாகனங்கள் புழக்கத்தில் இல்லை.
அன்னை மீனாட்சி ஆட்டுக்கடா வாகனத்தில் தான் திக் விஜயம் போருக்குச் சென்றாள். தொல்காப்பியம் சுட்டும் போர்க் கடவுளான கொற்றவை 'கலை ஊர்திக் கன்னி'யாக வணங்கப்பட்டாள். அவளுக்கு கலைமானே வாகனமாகும். இக்கோவிலிலும் முருகன் முருகனைப் போல செவ்வாயும் பிறப்பாலும் வாகனத்தாலும் ஒன்று போல உள்ளனர். செவ்வாய் பூமாதேவியின் மகன் என்பதால் நிலத்துக்கு அதிபதி ஆவான்.
மண்ணுக்குச் சொந்தக்காரன். பஞ்ச பூதங்களில் பிரித்திவி ஆவான். நிலத்தில் விளையும் பயிர் பச்சை, காய்கறி, மரம், செடி கொடிகளுக்கு செவ்வாயே அதிபதியாவான். செவ்வாய் கிரகத்திற்கு சூரிய மண்டலத்தில் சிவப்பு குடையுடன் ஆட்டுக்கடா படம் வரைந்த கொடி மற்றும் மகுடம் தரித்து முக்கோண மண்டலத்தில் வீற்றிருப்பார்.
இவர் தெய்வீக ரதத்தில் அமர்ந்து மேருமலையை வலம் வருவார் என்று புராணம் கூறுகின்றது. நான்கு கரங்களைக் கொண்டவர். முன் கரங்களை அபய வரத அஸ்தமாக கொண்டிருக்கிறார். மற்ற பின் இரண்டு கரங்களிலும் சூலாயுதம் கதாயுதம் ஏந்தி உள்ளார்
வீரபத்திர சாமி சந்நிதி
பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு கந்தபுராணம் மக்களிடையே செல்வாக்கு பெற்ற காலத்தில் சிவன் கோவில்களிலும் முருகன் கோவில்களிலும் வீரபத்திரனுக்கு என்று தனி சந்நிதி அமைக்கும் பழக்கம் மரபு தோன்றியது. அதற்கென்று தனி கதையும் உருவாயிற்று. வைத்தீஸ்வரன் கோவிலிலும் வீரபத்திரனுக்கு தனி சன்னதி உண்டு அதற்கென்று ஒரு கதையும் வழங்குகின்றது
கதை 6
வீரபத்திர சாமி கதை
தட்சன் நடத்திய யாகத்திற்குச் சிவபெருமானை அழைக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தட்சனின் யாகத்தை அழித்து விடும்படி தன்னுடைய அம்சமான வீரபத்திரனை அனுப்பி வைத்தார். வீரபத்திரனும் அவ்வாறே செய்தான். அவன் யாகத்தை அழித்த பின்பும் அவன் கோபம் தனியாமல் ஆக்ரோஷமாகவே நின்றான்.
அவனுடைய சினத்திற்கு முன்பு உலகம் நடுங்கியது. அவனுடைய உடம்பின் உக்கிரம் தாளாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் வீரபத்திரனின் கோபத்தை தணித்து அவனை சாந்த சுரூபியாக மாற்றினார். எனவே இங்கு இருக்கும் வீரபத்திரன் சிவனின் அம்சமாக விளங்குகிறான்.செவ்வாய்க் கிழமைகளில் வீரபத்திர சாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
நரி ஓட்டம்
வைத்தியநாதர் கோவிலில் நடைபெறும் நரி ஓட்டம் ஒரு விசித்திரமான வழிபாட்டுச் சடங்குமுறை ஆகும். இதற்கான மூல காரணம் இக்கோவில் பழைய பௌத்த கோயில் என்றாலும் தற்சமயத்துக்கு வேறு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.
குழந்தையாகிய முருகனுக்கு விளையாட்டு காட்டுவதற்காகநரி ஓட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது என்பர். முருகனை யானை விரட்டுவதும் யானையை முருகன் விரட்டுவதுமாக இந்த நரி ஓட்டம் நிகழ்ச்சி தற்போது நடைபெறுகின்றது.
சிறப்பு விழாக்கள்
வைத்தியநாதர் கோவிலில் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அந்நாட்களில் செல்வ முத்துக்குமாரசாமி தினமும் வீதி உலா வருவார்.ஐப்பசி மாதம் முருகனுக்கு கந்த சஷ்டி விழா நடத்தப்படும் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு பூசணிகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அந்த நாட்களில் பஞ்சமூர்த்திக்ளூடன் சிவன் வீதி உலா வருவார்
வணங்கி அருள் பெற்றோர்
வைத்தியநாதர் கோவிலில் முருகன், சூரியன், செவ்வாய், ராம லட்சுமணர், அனுமன், ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, துர்க்கை, பராசரர், துர்வாச முனிவர், சரஸ்வதி, லட்சுமி, சிவசன்மன் ஆகியோர் வணங்கி பயன்பெற்றதாகக் கதைகள் கூறுகின்றன.
வழிபாட்டின் பலன்
செவ்வாய் தோஷம் பிடித்தவர்கள் ரத்தம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து தொடர்ந்து வழிபட்டு செல்வதால் அந் நோய்கள் நீங்கி நலமடைவர். ஜாதகத்தில் செவ்வாய் நிஜம், வக்ரம் நிலையில் இருந்து அங்கார தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அங்காரகனைத் தொடர்ந்து வணங்கி வர அவர்களின் தோஷம் நிவர்த்தி ஆகும்.
செவ்வாய் பகவான் சந்நிதியில் செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு தனி பூஜைகள் செய்யப்படுகின்றன செவ்வாய் வேளாண் குடிகளின் தெய்வம். விவசாயிகள் செவ்வாயைத் தொடர்ந்து வணங்கி வர விளைச்சல் பெருகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து செவ்வாய் பகவானை தொடர்ந்து வழிபட அவர்களின் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
2700 ஆண்டு பழைய வரலாறு
வீர யுகத்தின் வேள் வழிபாடு வைத்திச்வரன் கோயில் கி.மு ஏழு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் , இயற்கை வழிபாடு , முன்னோர் வழிபாடு நடந்த போது வீர வழிபாடு நடந்த இடம் ஆகும். இதனை வேள் (குமரன்/ இளைஞன்) என்ற பெயரால் அறியலாம்.
இதுவே பின்னர் குமரன் / முருகன் கோயிலாக மாறியுள்ளது.. அக்காலத்தில் இவ்வீரன் பல குடும்பங்களுக்குக் குலசாமியாக இருக்கக்கூடும். குமரன் முத்துக்குமரன் ஆகி பின்பு செல்வ முத்துக்குமரனாகச் சிறப்பு பெற்றுள்ளார்.
பௌத்த மருத்துவ சேவை
கிமு மூன்றாம் நூற்றாண்டில் பௌத்த சமண சமயங்களின் வருகைக்குப் பின்பு வீரக் குமரனின் கோயிலருகே பௌத்தக் கோயில் தோன்றியுள்ளது. தைல நாயகி என்று இன்று அழைப்படும் அம்மன் பர்நஷ்வரி என்கிற பெயருடைய மருத்துவ புத்தர் (பெண்) ஆவாள். அவளே கையில் மருந்துக் கிண்ணத்துடன் இருப்பாள்.
பல ஊர்களில் இப் பௌத்த பெண் தெய்வம் தொற்றுநோயில் இருந்து மக்களைக் காக்கும் தெய்வமாக வணங்கப்பட்டாள். பௌத்த துறவிகள் தங்கள் மடாலயங்களில் புத்தர், இந்திரன், குபேரன், தாரா தேவி ஆகியோருக்குக் கோயில் எழுப்பினர்.
யோகம் தியானம் பயிற்சி அளித்தனர். மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்தனர். இக்கோயில்கலின் கடவுளர் பின் வந்த காலத்திலும் தொடர்ந்து வழிபடப்பட்டனர். ஆனால் பெயர்களும் கதைகளும் காரணங்களும் மாறிப் போயின பௌத்த துறவிகள் ரிஷிகள், முனிகள், சாமிகள் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவர்கள் மருத்துவ சேவை மையங்களில் முதலில் குளம் வெட்டினர், பின்பு மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைத்தனர்.
தோல் நோய்க்கும் விஷ கடிக்கும் பிள்ளைப்பேற்றுக்கும் சிறப்பு சிகிச்சைகள் அளித்தனர். மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க நெருப்பு, நீர் சார்ந்த சில நேர்த்திக் கடன்களையும் வழிபாட்டு முறைகளையும் கற்பித்தனர். முடி காணிக்கை, தீ சட்டி எடுத்தால், பூ குழி இறங்குதல், மா விளக்கு ஏற்றல் குளத்தில் வெல்லம், மிளகு தூவுதல் போன்றவற்றை செய்யும்படி கூறினர். இவை இன்றும் தொடர்கின்றன.
கழுகு (கருடன்/ ஜடாயு)
பூர்விக நாக வழிபாட்டை வெற்றி கொண்ட பௌத்த சமயத்தின் வெற்றிச் சின்னமாக கழுகு விளங்குகின்றது. எனவே அவர்கள் பல இடங்களில் கழுகுக்கு கோயில் கட்டினர். பௌத்தர்களிடம் இருந்தே வடமொழிப் புராணங்கள் கருடன் அல்லது கழுகின் பெருமை பேசும் கதைகளை உருவாக்கின. கழுகு பழந்தமிழ்க் கடவுளான நாகருக்குப் பகை ஆகும்.
காலப்போக்கில் பௌத்த சமயம் உள்ளூர்த் தெய்வமாக விளங்கிய நாகத்துடன் சமரசம் செய்து கொண்டது. நாகங்களுக்கு தன் மறை நூல்களில் அதிக முக்கியத்துவம் தந்தது. கம்போடியாவில் நாகம் மக்களின் மூதாதையராகவும் புத்தரின் பாதுகாவலராகவும் போற்றப்படுகின்றது. பௌத்த சமய நூல்கள் கருடனைத் (கழுகை) பொன்னாலாகிய சிறகுடைய பறவை என்று சிறப்பித்து அழைக்கின்றது.
திபத்து நாட்டில் வீடு மற்றும் கடைகளின் வாசலில் ரட்ச்சை ஆகவும் தாயத்து போல கழுகின் படத்தை வைத்துள்ளனர். வடக்கு திசையின் காவலனாக கழுகு விளங்குகின்றது. கழுகு அல்லது கருடன் பறவையில் கருப்பு என்றும் சிவப்பு என்றும் இரண்டாக வகைப்படுத்தி பௌத்த சமயத்தின் தத்துவங்களை விளக்குகின்றனர்.
புத்த தத்துவத்தின் சின்னமாக (போதிசித்தா) கழுகு/ கருடன் விளங்குகின்றது. எனவே இத்தலத்தில் ஜடாயு, சம்பாதிக்குக் கூறப்படும் கதைகள் பௌத்தர்கள் இங்கு எழுப்பிய கழுகுக் கோயிலுக்கான புதிய கதைகள் ஆகும்.
நரி
வைத்திய நாதர் கோயிலில் காணப்படும் நரி ஓட்டம் இக்கோயில் பழைய பௌத்த கோயில் என்பதை உறுதி செய்கிறது. நரி பௌத்தர்களின் அதிர்ஷ்ட தேவதை ஆகும். பௌத்தத்தில் இனாரி என்ற தேவதையை வளமைத் தெய்வமாக நரி உருவில் வணங்குகின்றனர். நரி முகத்தில் விழித்தால் அன்று அதிர்ஷ்டம் உண்டு என்பது பௌத்தர்களிடமிருந்து வந்த நம்பிக்கையாகும்.
புதைத்த பிணத்தை நரி இழுத்துத் தின்றால் இறந்தவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதும் பௌத்தர்களிடம் இருந்து வந்த நம்பிக்கைகளில் ஒன்றாகும். இனாரி என்ற தெய்வம் நரி ரூபத்தில் வரும் என்பதால் புதிதாக மகுடாபிஷேகம் செய்யப் புறப்படும் ஜப்பான் மன்னர்கள் இனாரி என்ற நரியைப் பார்த்து விட்டு தான் மகுடாபிஷேகம் செய்து கொள்வர்.
நரியைக் கூண்டில் அடைத்து விழா நாளன்று வீதி வலம் கொண்டுவரும் கோயில்கள் தமிழகத்தில் உண்டு. எனவே இத்தலத்தில் இருந்த பழைய பௌத்தக் கோவிலில் நரி தொடர்பான சில வழிபாட்டுச் சடங்குகள் நடைபெற்றிருக்கும். அதுவே தொடர்ந்து இன்று நரி ஓட்டமாக தொடர்கின்றது.
2700 ஆண்டுப் பழைய கோயில்
பழந்தமிழர் வீர வழிபாட்டுத் தலங்களை பௌத்தர்கள் ஆக்கிரமித்து தங்கள் மத நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் பரப்பி அவ்விடங்களில் பௌத்தக் கோயில்கள் எழுப்பி மருத்துவ சேவைகள் செய்து வந்தனர்.
அவர்கள் விடைபெற்றதும் அதே இடங்களில் சைவ வைணவக் கோயில்கள் தோன்றின. இவை மக்கள் மனங்களில் நிலை பெறுவதற்காக புதிய கதைகளும் தெய்வ உருவங்களும் தோன்றின. அவ்வாறு தோன்றிய வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள செல்வ முத்துக்குமாரசாமி என்ற தெய்வம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வழிபடு கடவுள் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |