இந்த ஒன்று உங்களிடம் இருந்தால்.. எந்த கெட்ட நேரமும் உங்களை நெருங்காது
இந்த பூமியில் மனிதன் வெற்றி பெறுவதற்கு திறமையை காட்டிலும் பொறுமையே தேவை. அதாவது ஒருவன் பொறுமையாக இருப்பதன் வழியாக அவன் எவ்வளவு பெரிய காரியத்தையும் சாதித்து விடலாம்.
பொறுமையாக இருக்கக்கூடிய மனிதனுக்கு தான் தன்னை திருத்திக் கொள்ளவும், புதிதாக ஒரு விஷயத்தை தேடி கற்றுக் கொள்ளவும், தோல்வியே சந்தித்துக் கொண்டிருந்தாலும் அது ஒருநாள் வெற்றியாக மாறும் என்ற ஒரு மனநிலையை இந்த பொறுமை என்ற ஒரு அற்புதமான சக்தி கொடுக்கிறது.
உதாரணத்திற்கு, தண்ணீரை சல்லடையில் எடுத்து சென்று வர முடியுமா? இதை கேட்கும் பொழுதே எல்லாருடைய மனதிலும் இது எவ்வாறு சாத்தியம் என்ற ஒரு கேள்விதான் வந்திருக்கும். ஆனால் நிச்சயமாக தண்ணீரை சல்லடையில் எடுத்துச் செல்ல முடியும்.

தண்ணீர் பனிக்கட்டியாக உறையும் வரை ஒருவன் பொறுமையோடு காத்திருந்தால் நிச்சயம் தண்ணீரையும் அவனால் சல்லடையில் எடுத்துச் செல்ல முடியும். இவ்வளவு தான் வாழ்க்கை. இது புரிந்து விட்டால் எந்த கஷ்டமும் பிரச்சனையாகவே தெரியாது.
வேதங்களில் பொறுமையைப் பற்றி மிக அழகான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். இந்த பொறுமை என்பது முதலில் எதனால் எதனை வெல்லலாம் என்று நமக்கு அழகாக கற்றுக் கொடுக்கிறது.
- பொறுமையால் கோபத்தை வெல்ல வேண்டும்
- சாது தன்மையால் கொடியவர்களை வெல்ல வேண்டும்
- தானத்தினால் தான் கஞ்சனை வெல்ல வேண்டும்
- உண்மையினால் பொய் பேசுபவனை வெல்ல வேண்டும்
இது பிரகஸ்பதி உடைய ஒரு நீதியாகும்.

ஆக பொறுமையாக இருந்தால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய நிம்மதியை நாம் சம்பாதித்து விடலாம். நம்முடைய நிம்மதியால் இந்த உலகையே நிம்மதியாக மாற்றி விடலாம். ஆக பொறுமையாக இருக்கின்ற பட்சத்தில் எல்லா மாறுபடுகிறது.
நாம் பொறுமையாக செல்லும்பொழுது நம்முடைய எதிரியும் பொறுமை அடைவான். இதனால் தான் வேதம் ஆரம்பத்திலும் முடிவிலும் "சாந்தி, சாந்தி, சாந்தி" என்று சொல்கிறது. அதோடு வரலாறுகளில் எதை புரட்டிப் பார்த்தாலும் அந்த வெற்றி காவியத்திற்கு பின்னால் பொறுமை என்ற ஒரு மிகப்பெரிய சக்தி அவர்களை வழிநடத்தி இருக்கும்.
ஆக நீங்கள் எதுவாக மாற வேண்டும் என்று நினைத்தாலும் முதலில் ஒரு பொறுமையாக இருக்கக்கூடிய மனிதனாக மாறுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தான் ராஜா.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |