இறைவனை முழுமையாக நம்பினால் என்ன நடக்கும்?
எத்தனை யுகம் பிறந்தாலும் இறைவன் முழுமையாக ஒரு துளி சந்தேகம் இல்லாமல் நம்பினால் நிச்சயம் அவன் கைவிடமாட்டான்.அப்படியாக,ஒரு முறை ஒரு அந்தணரும் அவரின் மனைவி மகனுடன் மதுரை நோக்கி செல்ல வழியில் சற்று களைப்பாக இருக்கிறது என்று காட்டு பகுதியில் ஓய்வு எடுக்க அமர்ந்தனர்.
அவ்வேளையில் அந்த அந்தணர் அவரின் மனைவியையும் மகனையும் மரத்தடியில் அமர வைத்து விட்டு கூஜாவுடன் அருகில் இருக்கும் நீரோடையை நோக்கி நீர் எடுக்க சென்றார்.அப்பொழுது அந்தணரின் மனைவியும் மகனும் களைப்பாக இருக்கிறது என்று மரத்தடியில் சற்று ஓய்வு எடுக்க படுத்தனர்.
காற்று கொஞ்சம் பலமாக வீச கிளையில் தொங்கி நின்ற அம்பு படுத்திருந்த அந்தப் பெண்ணின் வயிற்றில் தைத்து அவரின் உயிர் பிரிந்தது.அப்போது அங்கே ஒரு வேடன் வந்தான்.அங்கு ஒருபெண் இறந்து கிடப்பதையும் அருகில் அவளது குழந்தையும் அழுது கொண்டிருப்பதையும் பார்த்து மனம் நோக அதற்க்குள் அந்தணரும் அந்த இடத்திற்கு விரைந்துவிட்டார்.
அந்தணர் அவரின் மனைவி வயிற்றில் அம்பு தைத்து இறந்து கிடந்த நிலையை பார்த்து அருகில் நின்ற வேடனிடம் சந்தேகம் கொண்டு,பாவி!என்ன நோக்கத்தில் என் மனைவியைக் கொன்றாய்? நீ வேட்டைக்காரனா? அல்லது காமுக நோக்குடன் இப்படி செய்தாயா? நீ நல்லவன் என்றால், கடவுளின் மீது சத்தியமாக இங்கிருந்து ஓடாதே.
இப்பொழுதே என்னுடன் வா.என் ஊர் மன்னன் இந்த அநியாயத்திற்கு ஒரு நல்ல தீர்ப்பு வழங்கட்டும் என்று அழைத்து சென்றான்.அப்பொழுது அந்தணர் ஐயா!தங்கள் மனைவி யார்?உண்மையில் என்ன நடந்தது என்று எந்த விவரமும் நான் அறியமாட்டேன்.நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கலங்கினான், கதறினான்.அந்தணர் செவி கொடுக்கவில்லை.
அந்தணரோ கோபத்தின் உச்சத்தில் மனைவியின் உடலை தோளிலும், ஒரு கையில் குழந்தையுடனும் அரண்மனைக்கு வந்தார்.அங்கு இருந்த மன்னனிடம் நடந்த விவரத்தை கூறினான் அந்தணர்.வேடனோ!மன்னனிடம் மன்னா!நான் எதுவும் அறியாதவன்.என்னை அடித்தாலும் உதைத்தாலும் இது தான் உண்மை.நீங்கள் என் சொல் நம்பாமல் என்னை கொன்றாலும் பரவாயில்லை,உண்மை சாகக்கூடாது மன்னா என்று கெஞ்சினான்.
மன்னனும் இவனை இப்போதைக்கு சிறையில் அடையுங்கள் என்று கூறிவிட்டார்.அந்தணரிடம், உம் மனைவியின் ஈமக்கிரியையை முடித்து விட்டு நாளை வரும், என சொல்லிவிட்டான்.
பிறகு,மிகுந்த குழப்பத்துடன் மன்னன் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் சென்று சுந்தரேஸ்வரா நான் ஒரு காலமும் தவறான தீர்ப்பு வழங்கி விடக்கூடாது என்று வேண்டினான்.அதற்கு நீயே அருள் செய்ய வேண்டுமென பிரார்த்தித்தான்.
அன்றிரவே கனவில் வந்த சுந்தரேஸ்வரர்,நீ நாளை மாசிவீதியிலுள்ள மண்டபத்தில் நடக்கும் திருமணத்துக்கு செல்.அங்கு உனக்கான விடை கிடைக்கும் என்றார்.மறுநாள் மன்னனும் அந்தணரும் மாறுவேடத்தில் அங்கு சென்றனர்.அப்போது சமையலறையில் இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.
ஆனால், பேசுபவர்களின் உருவம் தெரியவில்லை.தூதனே! நம் எமதர்ம மகாராஜா, இந்த மண்டபத்தில் திருமணம் செய்யப்போகும் மணமகனின் உயிரைப் பறிக்க உத்தரவிட்டுள்ளார்.இவனோ மணமேடையில் ஆரோக்கியத்துடனும், உறவினர்கள் புடைசூழவும் இருக்கிறான். என்ன செய்வது? என்றது ஒரு குரல்.
மற்றொரு குரல், தூதர் தலைவரே கவலை வேண்டாம். நேற்று காட்டில் இருந்த அந்தணரின் மனைவியின் மீது மரத்தில் தங்கியிருந்த விஷ அம்பை எப்படி அவளது வயிற்றில் விழச்செய்து உயிரைப் பறித்தோமோ, அதே போல இந்த தெருவில் நிற்கும் காளையை மிரளச்செய்து மண்டபத்திற்குள் விரட்டி விடுவோம்.
கூட்டம் கலைந்தோடும் போது, காளை மணமகனை முட்டிக் கொல்லட்டும், என்றது. மன்னரும் அந்தணரும் உண்மை நிலையைப் புரிந்து கொண்டனர்.அதை கேட்டு மன்னரும் அந்தணரும் அன்றைய இரவு நடந்த உண்மையை புரிந்து கொண்டனர்.
பிறகு அந்தணர் வேடனிடம் மன்னிப்பு கேட்டார்.சிறையில் வைத்ததற்காக மன்னன் அவனுக்கு ஏராளமான பொருளை நஷ்ட ஈடாக கொடுத்து அனுப்பி வைத்தான்.
உங்கள் பக்கம் உண்மை இருக்க,மனதில் இறைவனின் முழுமையாக நம்பிக்கை இருக்க இறுதி நொடியாயினும் இறைவன் உங்களுக்கு அதிசயம் நிகழ்த்துவார்.ஆக,உண்மை ஒரு நாள் வெல்லும்.இந்த பாரதம் அதை போற்றும்.
ஓம் நமச்சிவாய
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |