உலகின் முதல் சிவன் கோயில்: ராவணன் திருமணம் நடைபெற்ற திருத்தலம்
உலகின் முதல் சிவன் கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ மங்களநாதர் சுவாமி திருத்தலம் இராமாநாதபுரம் மாவட்டத்தின் உத்தரகோசமங்கையில் அமையப்பெற்றுள்ளது.
3000 ஆண்டுகள் பழமையான இத் திருத்தலத்தில் தாழம்பூ கொண்டு வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
பரதநாட்டியக் கலையை உலக மக்களுக்கு சிவபெருமான் அறிமுகம் செய்த தலம், உலகிலேயே முதல் நடராஜர் தோன்றிய ஊர், சித்தர்கள் வழிபாடு செய்த தலம், சிவபெருமான் பிறந்த ஊர், ராவணன்- மண்டோதரி திருமணம் நடைபெற்ற தலம் என பல சிறப்புகளை பெற்றுள்ளது உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதர் சுவாமி திருத்தலம்.
மாணிக்கவாசருக்கு உருவக்காட்சி கொடுத்த திருத்தலமும் இதுவே, மறுபிறவி வழங்கக்கூடிய இத்தலம் அனைவருக்கும் மறு பிறவி அளிப்பதாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக கூறப்படுகிறது, சொக்கலிங்கப் பெருமான், பார்வதி தேவியை பரதவர் மகளாக சபித்து, பின் சாப விமோசனம் தந்து அம்பாயை இத்தலத்தில் மணந்து கொண்டுள்ளார்.
பின்னர் அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து அம்பிகையுடன் சேர்ந்ததாக மதுரை புராணத்திலும் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்த மண்டோதரியை ராவணன் திருமணம் செய்து கொண்ட தலம் இதுவாகும், இதற்கான ஆதாரங்கள் அங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ மங்களநாதர், மங்கள நாயகிவை வழிபடுவதற்கு முன்பாக பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ நாளில் சிவனுக்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர், சிவனுக்கும், அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் விலகுமாம்.
தீராத நோய்கள் தீர மரகத நடராஜர் மீது சாத்திக் கொடுக்கப்படும் சந்தனத்தை வெந்நீரில் கலந்து அருந்த வேண்டும்.