2025 திருக்கார்த்திகை அன்று விளக்கு ஏற்றும் முறையும் சொல்ல வேண்டிய மந்திரங்களும்
இந்த 2025 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் சிவபெருமானுக்கும், முருக பெருமானுக்கும் விரதமிருந்து வழிபாடு செய்வது ஒரு மிகச்சிறந்த பலனாக கருதப்படுகிறது.
அதாவது கார்த்திகை மாதம் சிவபெருமானுக்குரியது என்றாலும் அவர் ஜோதி வடிவமாகவும் அர்த்தநாரீஸ்வரராகவும் காட்சி தந்த திருநாளான கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் அன்று சிவபெருமானை வேண்டி விரதம் இருந்தால் நமக்கு வேண்டிய வரம் கிடைக்கும். அப்படியாக திருக்கார்த்திகை அன்று அதிகாலை எழுந்து தலைக்கு குளித்து விரதத்தை துவங்க வேண்டும்.
வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவபெருமானையும் முருகப்பெருமானையும் மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு விரதம் இருக்கலாம்.

முடியாதவர்கள் கட்டாயம் பால், இளநீர், பழச்சாறு, பழங்கள் ஆகிவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இதைவிட முக்கியமாக மௌன விரதம் இருந்து அன்றைய தினம் கடைபிடிப்பது மிகவும் விசேஷமானது ஆகும்.
மேலும் மாலை நேரத்தில் திருவண்ணாமலையில் அர்த்தநாரிஸ்வரரையும் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தையும் முடிந்தவர்கள் நேரில் சென்று தரிசிக்கலாம் முடியாதவர்கள் தொலைக்காட்சி வாயிலாக தரிசனம் செய்த பிறகு வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்.
திருக்கார்த்திகை அன்று கட்டாயமாக வீடுகளில் 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கையில் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். முருகப்பெருமானுக்கு என்று ஷட்கோண தீபம் ஏற்றி ஆறு நெய் விளக்குகள் ஏற்றுவது சிறப்பு.
மேலும் அன்றைய நாள் ஒரு அகல் விளக்கு ஏற்றி அதில் இருந்து நாம் பிற விளக்குகள் ஏற்ற வேண்டும்.

மந்திரங்கள்:
நாம் எப்பொழுதும் வழிபாடு செய்யும்பொழுது அந்த வழிபாட்டிற்குரிய மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்யும் பொழுது அவை இன்னும் மிக சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. அப்படியாக நாளைய தினம் கார்த்திகை தீபத்திருநாள் அன்று வீடுகளில் விளக்கேற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்களை பற்றி பார்ப்போம்.
"விளக்கினை யேற்றி வெளியை அறிமின்,
விளக்கினின் முன்னே வேதனை மாறும்,
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்,
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே"
நாம் எவ்வாறு விளக்கேற்றும் பொழுது மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்கின்றமோ அதேபோல் விளக்கு ஏற்றி முடித்த பிறகும் நாம் மந்திரங்களை பாராயணம் செய்வது அவசியமாகும். அவ்வாறு விளக்கேற்றி முடித்ததற்கு பிறகு நாம் சொல்ல வேண்டிய மந்திரங்கள்.

"இல்லக விளக்கது இருள் கெடுப்பது,
சொல்லக விளக்கது சோதியுள்ளது,
பல்லக விளக்கது பலரும் காண்பது,
நல்லக விளக்கது நமச்சிவாயவே"
இவ்வாறு அன்றைய தினம் நம் வீடுகளில் மந்திரங்கள் சொல்லி விளக்கேற்றி மனதார வழிபாடு செய்து கொள்வது நிச்சயம் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் கொடுக்கும். மேலும் நாளை கார்த்திகை தீபத்திருநாள் அன்று நெய்வேத்தியமாக பொரியும், பொரிகடலை தேங்காய் வெல்லம் எள் கலந்த உருண்டையும் படைக்க வேண்டும்.
இல்லை என்றால் இலைபோட்டு சாதம் சாம்பார், கூட்டு, பொரியல், அப்பளம். பாயாசம் ஆகியவற்றை படைத்து வழிபாடு செய்யலாம். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ், கந்தர் அனுபூதி ஆகிய பாடல்களை பாராயணம் செய்து விரதங்களை கடைபிடிக்க வேண்டும். இந்த முறையில் நாளைய தினம் விளக்கேற்றி வீடுகளில் வழிபாடு செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் உள்ள இருள் விலகி நன்மை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |