2026 ஆம் ஆண்டு பிறப்பதற்குள் வீடுகளில் இந்த 5 பொருட்களை அகற்றி விடுங்கள்
புதுவருடம் என்பது எல்லோருக்கும் ஒரு சந்தோஷத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. கட்டாயமாக புது வருடத்தில் என்ன நிகழ்வுகள் நடக்க இருக்கிறது என்பதை யாரும் அறியாத நிலையிலும் புது வருடம் நிச்சயம் ஒரு நல்ல பலன்களை கொடுக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் எல்லோரும் ஆவலுடன் காத்திருப்போம்.
அப்படியாக ஒவ்வொரு புது வருடம் பிறப்பதற்கு முன்னர் மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் இருந்து ஒரு சில விஷயங்களை அகற்றி விடுவது நல்லது. அது தீய எண்ணங்களாக இருக்கட்டும் அல்லது வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்களாக இருக்கட்டும் புது வருடத்தை நோக்கி செல்லும் பொழுது நாம் புது மனிதராக செல்வது என்பது மிகவும் அவசியமாகவும் நம்முடைய வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்கிறது.
அப்படியாக 2026 ஆம் வருடத்திற்குள் செல்வதற்கு முன் நம் வீடுகளில் ஒரு சில பொருட்களை அகற்றி விட்டால் நிச்சயம் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

1. உடைந்த பொருட்கள்:
வீடுகளில் எப்பேர்ப்பட்ட அழகான பொருட்கள் உடைந்து நிலையில் இருந்தால் அதை உடனடியாக அகற்றி விடுங்கள். இவை நமக்கு எதிர்மறை ஆற்றல்களை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் மனரீதியாக நாம் நகர முடியாத ஒரு தன்மையை இந்த உடைந்த பொருட்கள் நமக்கு கொடுக்கிறது.
2. பழைய பேப்பர்கள்:
சிலர் வீடுகளில் தினசரி செய்தி தாள்கள் வாங்கி படிப்பதுண்டு. அவ்வாறு வாங்கிய செய்தி காகிதங்கள் நம்முடைய வீடுகளில் தேங்கி விடுகிறது. இந்த பேப்பர்களை நாம் உடனடியாக அல்லது அவ்வப்போது அகற்றி விடுவது நமக்கு நன்மையை தரும். வீடுகளில் பேப்பர்கள் அதிக அளவில் சேரும் பொழுது அது தூசிகள் அடைந்து ஒரு சில எதிர்மறை விளைவுகளை கொடுக்கும்.
3. காலாவதியான மருந்துகள்:
ஒவ்வொருவர் வீடுகளிலும் கட்டாயமாக ஏதேனும் ஆரோக்கிய குறைபாடுகளுக்காக மருந்துகள் வாங்கி சாப்பிட்டு இருப்போம். சில நேரங்களில் அந்த மருந்துகளை நாம் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு இருப்போம்.
அவ்வாறு காலாவதியான மருந்துகள் உங்கள் வீடுகளில் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள். இதை தெரியாமல் சமயங்களில் ஒரு சிலர் எடுத்து சாப்பிடுவதற்கான சாத்தியங்களும் இருக்கிறது. அதை போல் இந்த மருந்துகளை நாம் அகற்றி விடுவதால் வீடுகள் சுத்தம் அடைந்து சில தீய விளைவுகள் விலகும்.

4. கிழிந்த ஆடைகள்:
வீடுகளில் கட்டாயமாக கிழிந்த ஆடைகள் அல்லது பயன்படுத்தாத ஆடைகள் என்று இருக்கும். அந்த ஆடைகளை நாம் அகற்றி விடுவது நல்லது. முடிந்தால் அந்த ஆடைகள் புதிதாக இருக்கும் பட்சத்தில் நாம் பிறருக்கு கொடுக்கலாம் இல்லையென்றால் அதை அகற்றி விடுவது நம்முடைய வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்கும்.
5. காய்ந்த செடிகள்:
நம் வீடுகளில் பராமரிக்கப்படாத அல்லது காய்ந்த செடி கொடிகள் இருந்தால் அதை அகற்றி விடுவது நல்லது. இந்த செடிகள் தண்ணீர் ஊற்றாமல் வளர்ச்சி அடையாமல் இருக்கும் பொழுது அந்த இடங்களில் ஒரு எதிர்மறை மற்றும் தீய சக்திகள் உருவாகின்றது. ஆதலால் முடிந்த அளவிற்கு அந்த செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்க்க முடிந்தால் வளர்த்து விடுங்கள் இல்லை என்றால் அதை உடனடியாக அகற்றி விடுங்கள்.
ஆக, இவ்வாறான பொருட்களை சிலர் அவ்வப்போது அகற்றி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் இதை நாம் பிறகு சுத்தம் செய்து கொள்ளலாம் என்று போட்டு வைத்து விடுவார்கள். இவ்வாறு செய்வதால் நம் வீடுகளில் எதிர்மறை ஆற்றல்கள் சூழ்வது மட்டுமல்லாமல் நமக்கும் ஒரு வகையான பாரத்தை கொடுக்கும்.
நம் வீடுகள் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய எண்ண ஓட்டங்களும் நம்முடைய வாழ்க்கையும் மாற்றம் அடையும். அதனால் இந்த புத்தாண்டை வரவேற்கும் வகையில் நம்முடைய வீடுகளை சுத்தம் செய்து முடிந்த அளவிற்கு பொருட்களை சரியான இடங்களில் வைத்து தேவையில்லாத பொருட்களை அகற்றிவிட்டு ஒரு சுத்தமான சூழலிலும் அதிர்ஷ்டம் உண்டாக்கக்கூடிய சூழலிலும் வாழ்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |