சென்னையில் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய நரசிம்மர் கோயிகள்
சென்னையிலும் சென்னையைச் சுற்றியும் பல தனி நரசிம்மர் கோவில்கள் உள்ளன. நவ நரசிம்மர் கோயில்களும் உண்டு. கிபி ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முதலாம் நரசிம்மவர்மன் நரசிங்கப் பெருமாளுக்கு குகை கோவில்களை உருவாக்கினான்.
நாமக்கல் மலையடியில் தென்மேற்கு மூலையில் உள்ள நரசிங்கப் பெருமாள் கோவில், மதுரை நரசிங்கம்பட்டியில் உள்ள யோக நரசிம்மர் கோவில் போன்றன இவன் காலத்திய கோவில்கள் ஆகும்.
புராணங்களின் வரலாறு
புராணங்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு க்குள் எழுதப்பட்டவை ஆகும். நான்கு முதல் எட்டாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்ட தேவி புராணம், கூர்ம புராணம், மச்ச புராணம், வாமன புராணம், வராக புராணம், வாயு புராணம், விஷ்ணு புராணம் ஆகியவை.
அடுத்த கட்டத்தில் (8-11) எழுதப்பட்டவை அக்கினி புராணம், பாகவதம், பவிஷ்ய புராணம், பிரம்ம புராணம், பிரம்மவைவர்த்தம் தேவி பாகவதம் கருட புராணம், லிங்க புராணம், பத்ம புராணம், சிவபுராணம் மற்றும் கந்தபுராணம் ஆகும்.
இவற்றுள் மச்ச புராணம் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக மிகவும் பழையதாக கருதப்படும். இப்புராணங்கள் 14ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ன.
வைணவப் பேரெழுச்சி
14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய விஜயநகர சாம்ராஜ்யம் தெற்கே பரவியபோது வைணவம் தலை தூக்கியது. பெருமாளுக்குப் பல புதிய கோவில்கள் தோன்றின. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நரசிம்ம புராணம் கி.பி. 1300 களில் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டது.
இபுராணம் 68 காண்டங்களைக் கொண்டது. விஷ்ணு புராணம் மற்றும் அக்கினி புராணத்தில் உள்ள பிரகலாதன் கதையை அடிப்படையாகக் கொண்டது. விஷ்ணு அவதாரங்களில் சூரியவம்சம் என்பது புத்தர் வரையிலும் சந்திர வம்சம் என்பது சேமக வரையிலும் இப்ப புராணத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
கௌதம புத்தரையும் இப்புராணம் விஷ்ணுவின் அவதாரமாகவே எடுத்துக் காட்டுகின்றது. எனவே கௌதம புத்தர் விகாரைகள் விஷ்ணு கோவில்களாக மாற்றப்பட்ட வைணவ திருத்தலங்களில் நரசிம்மர் அங்கு முக்கியத் தெய்வமாக இடம் பெற்றார்.
நரசிம்மர் காட்சி அளித்த தலங்கள்
தமிழகத்தில் எட்டு ஊர்களில் நரசிம்மர் ரிஷிகளுக்கு காட்சி அளித்த இடங்களில் தனிக் கோயில்கள் நரசிம்மருக்குக் கட்டப்பட்டன. இரணிய வதம் முடிந்ததும் அதுவரை அவனுக்குப் பயந்து ஓடி ஒளிந்த விஷ்ணு பக்தர்களான ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எட்டு இடங்களில் நரசிம்மர் காட்சியளித்தார்.
அவை பூவரசங்குப்பம் ,சோளிங்கநல்லூர் ,நாமக்கல், அந்திலி, பரிக்கல், சிங்ககிரி, சிந்தனவாடி போன்ற திருத்தலங்கள் ஆகும். இவற்றில் பூவரசன் குப்பம் , பரிக்கல், சிங்ககிரி ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பதால் இவற்றை ஒரே நாளில் வழிபடுவது மிகச் சிறப்பான பலனைக் கொடுக்கும்.
வைணவ சமயப் பேரெழுச்சி
விஜயநகர சாம்ராஜ்யம் தெற்கே பரவியபோது வைணவம் அதிக செல்வாக்குப் பெற்றது. இம்மன்னர்களின் பிரதிநிதிகளாக இங்கு ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் ராமசாமி கோயில், கோபால்சாமி கோயில் என்ற பெயர்களில் புதிய கோயில்களையும் தென் மாவட்டங்களில் அதிகமாகக் கட்டினர். நரசிம்மர் எல்லா கோயில்களிலும் தனிச் சிறப்பு பெற்றார்
நரசிம்ம வர்மனும் நரசிம்ம மூர்த்தியும்
முதலாம் நரசிம்ம பல்லவண் ஆட்சி காலத்தில் அவனது பெயர் விளங்கும் வகையில் அவன் ஆட்சி நடந்த இடங்களில் நரசிம்மர் வழிபாட்டுத் தலங்கள் தோன்றின. நாமக்கல், மதுரை நர்சிங்கம்பட்டி குகை போன்ற இடங்களில் நரசிம்ம பல்லவன் காலத்து யோக நரசிம்மரின் புடைப்புச் சிற்பம் பெரியளவில் செதுக்கப்பட்டு அக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக இருந்து வருகின்றன.
நரனும் சிம்மமும்
மனிதனும் விலங்கும் சேர்ந்திருக்கும் உருவ வழிபாடு உலகின் பல்வேறு நாடுகளின் சமய மரபுகளில் காணப்படுகின்றது. காட்டு விலங்கின் ராஜாவான சிங்கத்தை மனித உருவோடு சேர்த்து உருவாக்குவதன் அடிப்படை காரணம் அதீத செயலாற்றல் அல்லது செயல் ஊக்கம் ஆகும்.
சிங்கத்தைப் போன்ற வேகமும் மனிதனுக்குரிய அறிவு நுட்பமும் கொண்டு செயல்படக்கூடிய ஓர் பரப்பிரம்மமாக தெய்வ உருவமாக நரசிம்மர் விளங்குகின்றார். இவர் எதிரிகளை அழித்து ஒழிப்பதில் ஈவு இரக்கம் காட்டாதவர் என்பதே வெற்றி நாயகனாக நரசிம்மர் உருவத்தின் தாத்பரியம் ஆகும். இக்கருத்து வைணவ பக்தர்கள் மனதில் ஆழமாகப் பதிந்ததால் நரசிம்மரின் எண்ணிக்கையும் அதிகம் ஆயிற்று.
நவ நரசிம்மர்
உத்திர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், வீர நரசிம்மர், யோக நரசிம்மர், கோப நரசிம்மர், விளம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று பலவகையான நரசிம்ம மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து கோயில்கள் கட்டினர்.
ஒரே ஊரில் ஒன்பது நரசிம்மர்
ஊருக்கு ஊர் கோவிலுக்கு கோவில் நரசிம்மர் வைப்பது என்ற மரபையும் கடந்த நிலையில் ஒரே ஊரில் ஒன்பது நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்த அதிசயமும் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவணியாபுரம் என்ற பகுதியில் ஒரு சிறிய குன்றின் மீது நவ நரசிம்மருக்கு என்று ஒரு ஆலயம் உள்ளது.
இங்கு அவர் லட்சுமி நரசிம்மராகக் காட்சியளிக்கின்றார். இங்கு லட்சுமியும் சிம்ம முகத்துடன் காட்சி அளிப்பது ஓர் புதுமை. இங்கு பஞ்ச நரசிம்மர் என்று வரிசையாக 5 நரசிம்மர்கள் உள்ளனர். இரண்டாவது பிரகாரத்தில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.
உற்சவமூர்த்தியம் சிம்ம முகத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளிக்கின்றார். ஆக மொத்தம் ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் இங்கு சேவை சாதிக்கின்றனர்.
தாழம்பூரில் நவ நரசிம்மர்
நவ நரசிம்மர் எழுந்தருளியிருக்கும் இன்னொரு ஊர் நாவலூர் அருகில் உள்ள தாழம்பூர் ஆகும். ஆந்திராவில் உள்ள அகோபில மடத்தில் நவ நரசிம்மர் கோவில் உள்ளது. அங்கு சென்று நவ நரசிம்மரைத் தரிசிக்க இயலாதவர்களுக்காக சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள இவ்வூரில் புதிதாக நவநரசிம்மர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் நரசிம்மரை காணலாம். இவரைச் சுற்றி ஒன்பது நரசிம்மர்கள் தனித்தனி சன்னதிகளில் இடம் பெற்றுள்ளனர்.
நங்கைநல்லூர் நரசிம்மர்
சென்னையில் லட்சுமி என்ற நங்கையின் பெயரில் உள்ள ஊரில் கட்டப்பட்டுள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரு காலத்தில் மண்ணுக்கு அடியில் புதைந்து இருந்தது. தட்சண தீபாலயா என்று அழைக்கப்பட்ட இவ்வூரில் பரசுராமனின் தந்தை ஜமதக்னி முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க நரசிம்மர் தனிக் கோவில் கொண்டு அருளினார். 1975இல் இங்கே ஓரு கோயில் கட்டலாம் என்று பிரசன்னம் பார்த்தபோது உள்ளே புதைந்திருந்த நரசிம்மரைப் பற்றிய தகவல் கிடைத்தது. இந்த நரசிம்மர் பல்லவர் காலத்துச் சிற்பம் ஆகும்.
நங்கநல்லூரில் ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. இங்கு ரெங்கநாதன் தெற்கு நோக்கி சயன கோலத்தில் காட்சி தருகின்றார். வடக்கில் நர்த்தன கிருஷ்ணன் ஆடுவதைக் காணலாம். நரசிம்மரும் நர்த்தன கிருஷ்ணரும் சேர்ந்து இருப்பதனால் இக்கோவிலுக்கு லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோவில் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
கிழக்கில் லட்சுமி நரசிம்மர் மூலவராக நான்கு கரங்களோடு காட்சி அளிக்கின்றார்.மெலிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். கீழ் வலது கரத்தில் அபய முத்திரை காட்டுகின்றார். கீழ் இடது கை மடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியின் அணைத்தபடி இருக்கின்றது. இக்கோவிலில் சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், 11 ஆழ்வார்கள், ஆண்டாள் ஆகியோரின் சன்னதிகளும் தனித்தனியே உள்ளன.
சிங்கப் பெருமாள் சந்நிதி
சென்னையில் மிக முக்கியமான இன்னொரு நரசிம்மர் கோயில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவிலுக்கு பின்புறத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலாகும். இதுவே ஆதிகோயில் என்பாரும் உண்டு. செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் சிங்கப்பெருமாள் கோவில் தீர்த்தத்தை தங்கள் மீது தெளித்துக் கொண்டு நலம் பெறுவர்.
பிரசன்ன வேங்கட நரசிம்மர்
மேற்கு மாம்பலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஸ்ரீ வேங்கட நரசிம்மர் கோவிலில் உள்ள நரசிம்மர் பிரசன்ன வேங்கட நரசிம்மர் என்று அழைக்கப்படுகின்றார்.
தமிழ்நாட்டின் பெரிய நரசிம்மர்
செங்குன்றம் பகுதியில் மூலக்கடைக்கு அருகில் பொன்னி மேட்டில் இந்தியாவிலேயே உயரமான இரண்டு நரசிம்மர் கோவிலில் ஒரு நரசிம்மர் எழுந்தருளிய கோவில் உள்ளது. இவர் லட்சுமி தேவியுடன் காட்சி அளிக்கின்றார். இவர் தமிழக நரசிம்மர்களில் மிகவும் உயரமானவர்.
யோக நரசிம்மரும் யோக அனுமனும்
திருப்போரூர் அருகே உள்ள செங்காட்டுப் பகுதியில் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் ஆகிய இருவருக்கும் ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஆதிசேஷன் மடியில் நரசிம்மர்
சென்னைக்கு அருகில் உள்ள மறைமலைநகர் பகுதியில் போர்டு மோட்டார் கம்பெனி அருகில் புதிதாக கட்டப்பட்ட நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வித்தியாசமான ரூபத்தில் காட்சி தருகின்றார். இங்கு ஆதிசேஷனின் மடியில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்துள்ளார்.
ஆதிசேஷன் லட்சுமி நரசிம்மருக்கு தன் நாகபடத்தால் குடை பிடித்துள்ளது. இதன் மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமியும் நரசிம்மரும் ஒருவரை ஒருவர் அணைத்த கோலத்தில் உள்ளனர். குடும்பம் பிரிந்து இருப்பவர்கள் இக்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வந்தால் குடும்பம் ஒற்றுமையாகும்.
பிரிந்த தம்பதியர் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். நரசிம்மருக்கு சாளக்கிராமமும் அச்சர மாலையும் சாத்தப்பட்டுள்ளது. தாயார் சன்னதியில் தாயாருக்கும் மகா லட்சுமி மந்திரத்தால் ஆன அட்சய மாலை அணிவித்துள்ளனர். இவர் வரப்பிரசாதி. கேட்ட வரம் அருளும் தயாநிதி. பெருமாளும் தாயாரும் தாமரை மலரின் மீது தங்கள் பொற்பாதங்களை வைத்துள்ளனர்.
வேளச்சேரி யோக நரசிம்மர்
வேத நாராயணபுரம் என்றும் என்ற சதுர்வேதி மங்கலம் வேதஸ்சேனி என்றும் வேள்விச்சேரி என்றும் அழைக்கப்பட்டு இப்போது வேளச்சேரி என்றாகிவிட்டது. இங்கு ஒரு யோக நரசிம்மர் கோவில் உள்ளது. இவர் மேற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார்.
மூலவரின் முகமும் அதன் விழிகளும் பார்ப்பவரைத் தன்பால் ஈர்ப்பவை. வேத நாராயணர் என்ற பெயருடன் மூலவர் வலது கையில் பிரயோகச் சக்கரத்துடன் நிற்கின்றார். பக்தர்களின் கோரிக்கையைக் கேட்டு உடனே அவர்களின் எதிரிகளை அழிக்க தயாராக நிற்கும் நிலையில் காட்சியளிக்கின்றார்.
அருகில் ஸ்ரீதேவி பூதேவியும் உள்ளனர். உற்சவமூர்த்தியின் பெயர் பக்தவத்சலப் பெருமாள். பக்தர்களிடம் வாத்சல்யமாக அன்பாக இரக்கமாக இருக்கம் பெருமாள் என்பதால் இவர் பக்தவத்சலப் பெருமாள் எனப்படுகின்றார்.
இங்குப் பிரகலாதனும் உற்சவமூர்த்தி ஆக விளங்குகிறார். தாயார் அமிர்தவல்லி நாச்சியார் தனிச் சன்னதி கொண்டு உள்ளார். வேளச்சேரி யோக நரசிம்மர் கோயிலில் ஆடி வெள்ளி தை வெள்ளி நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
இராமர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். இவருடைய வில்லில் பூ முடித்து வைத்தால் திருமணத் தடை விலகும். விரைவில் திருமணம் நடக்கும் என்பதால் இக்கோவில் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது.
இலட்சுமி நரசிம்மர்
தீபாராதனையின் போது கண்கள் மின்னும் இன்னொரு வைணவ திருத்தலமமும் உண்டு. அது சவுகார்பேட்டையில் பைராகி மடத்துக்கு அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
காரணம் சூட தீபாராதனையின் போது மூலவரின் கண்கள் சிங்கத்தின் கண்கள்ப் போல மினுமினுப்பாகத் தெரியும். அந்தப் பரவசத்த்தில் திளைக்க பக்தர்கள் தொடர்ந்து இக்கோவிலுக்கு வருகின்றனர்.
மணி கட்டும் நரசிம்மர் கோயில்
ஆழ்வார பேட்டை அபிராமபுரத்தில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் கோவில் கொண்டுள்ளனர். இங்கும் லட்சுமி நரசிம்மர் சன்னதி தனியாக உள்ளது. இங்கு மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது. இந் நரசிம்மரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் மனக்கவலைகள் தீர்ந்து நிம்மதியாக வாழலாம்.
தன் வேண்டுதல் என்னவோ அதை மனதில் நினைத்துக் கொண்டு நரசிம்மர் சன்னதியில் மணியை வாங்கிக் கட்ட வேண்டும். ஒரு மணியை வாங்கிக் கொண்டு போய் அர்ச்சகர்ரிடம் கொடுக்க வேண்டும். அவர் அதை பூஜை செய்து கொடுத்ததும் அதை அங்கேயே கட்டி விட்டு வந்து விட வேண்டும்.
இவ்வாறு மணி கட்டி விட்டு வந்த 48 நாட்களுக்குள் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுகின்றன. இவ்வாறு ஏராளமான நரசிம்மர் கோயில்கள் சென்னைப் பகுதியில் உள்ளன. மக்கள் நரசிம்மருக்கு உகந்த செவ்வாய்க் கிழமைகளில் சந்தனம் வாங்கிக்கொண்டு போய் நரசிம்மருக்கு சார்த்தி வேண்டிக்கொண்டு வருகின்றனர். அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |