ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி தரும் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Feb 07, 2025 05:30 AM GMT
Report

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டுக்கு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில். உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் யோக நிலையில் ஹயக்ரீவர் சன்னதி அமைந்துள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் பெருகி வரும் இக்காலத்தில் வரதராஜ பெருமாள் கோவில் என்ற கருவறை நாதர் பெயரில் குறிப்பிடாமல் ஹயக்ரீவர் கோவில் என்று மக்கள் இக்கோவிலை அழைக்கின்றனர்.

ஒளித்து வைத்த விக்கிரகங்கள்

ஒரு காலத்தில் இந்து சாமி சிலைகளுக்கு ஆபத்து வந்த காலத்தில் கடலூர் அருகே உள்ள திருவேந்திரபுரத்திலிருந்து பெருமாள் மற்றும் ஹயக்ரீவர் விக்ரகங்களை எடுத்து வந்து செட்டிபுண்ணியம் கிராமத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

இத்தகவலை பெரியவர்கள் மற்றவர்களிடம் சொல்லி வைக்காத காரணத்தால் சில ஆண்டுகள் கழித்து இவ்வூரில் தெய்வ விக்கிரகங்கள் இருப்பதே எவருக்கும் தெரியவில்லை. செட்டிபுண்ணியம் புற நகர்ப் பகுதியிலுள்ள குறைந்த அளவில் மக்கள் வாழும் சிறிய ஊர் ஆகும் . இதற்குச் சரியான சாலை வசதிகள் கூட கிடையாது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி தரும் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் | Chettipunniyam Hayagriva Temple

புதிய வரதராஜப் பெருமாள்

கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ராவ்சாகிப் ரங்கச்சாரி சுவாமி என்பவர் 1848 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இங்கு வரதராஜ பெருமாள் கோவில் என்ற பெயரில் ஒரு கோவிலைக் கட்டினார்.

அதன் கருவறையில் கடலூர் அருகே உள்ள திருவேந்திரபுரத்தில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் தேவநாதப் பெருமாள் கோலத்தில் எடுத்துவரப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோவிலையும் மக்கள் ஸ்ரீ தேவநாத பெருமாள் கோவில் என்று அழைக்கின்றனர். ஹயக்கிரீவ்ர் விக்ரகத்தையும் திருவேந்திரபுரத்தில் இருந்து இங்கு கொண்டு வந்தனர். இக்கோவிலில் ஹயக்ரீவருக்கு தனி சந்நிதி உள்ளது.

வராகியின் வரலாறும் வழிபாடும்

வராகியின் வரலாறும் வழிபாடும்

ஹயக்கிரீவ்ர் -விளக்கம்

ஹயக்ரீவர் என்பவர் குதிரை முகம் கொண்ட ஆண் கடவுளாவர். இங்கு ஹயக்ரீவர் யோக நிலையில் அமர்ந்த காலத்தில் காணப்படுகின்றார். நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக அபய முத்திரையுடன் யோக நிலையில் அருள் பாலிக்கின்றார். கல்வியில் சிறந்த நிலை அடைய ஹயக்ரீவரை மக்கள் குறிப்பாக மாண்வர்கள் பெருவாரியாக் வந்து வணங்குகின்றனர். 

வழிபாட்டின் பலன்

செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவிலுக்கு ஹயக்ரீவரின் ஜென்ம நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தன்று அல்லது பெருமாளுக்கு உகந்த நாளான புதன்கிழமையகளில் வந்து ஏலக்காய் மாலை சாத்தி வழிபட்டால் கல்வியால் நல்ல பலன் கிடைக்கும்.

பகுப்பாய்வுத் திறன் (analytic skill) வளரும். புலப்பாட்டுத் திறன் (communicative skill) மேம்படும். இங்குத் தல விருட்சமாக அழிஞ்சில் மரம் இருக்கின்றது. பக்தர்கள் இம்மரத்தில் தங்களுடைய கோரிக்கைகளை எழுதி கட்டி விட்டு செல்கின்றனர்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி தரும் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் | Chettipunniyam Hayagriva Temple

கதை 1
வேதங்களை மீட்டுத் தந்தவர்

புதிய கோவில்கள் எழுப்பப்படும் போதும் பழைய கோவில்கள் புதிய கோவில்கள் ஆக்கப்படும் போதும் புதிய கதைகள் எழுதப்படுவது மரபு. இக்கதைகள் பல கோவில்களுக்கும் ஒரே மாதிரியான கதைகளாக இருப்பது. உண்டு. அதுபோல இத்திருத்தலத்திற்கும் பழைய கதையொன்று சொல்லப்டுகின்றது.

பெருமாள் யோக நித்திரையில் இருந்த காலத்தில் அவருடைய நாபிக் கமலத்தின் தாமரை இதழ்களில் இருந்து இரண்டு நீர்த் துளிகள் தெறித்தன. அவை இரண்டும் மது கைடபர் என்று அரக்கர்களாக உருமாறின. இவர்கள் பெருமாளிடம் இருந்து தோன்றிய தைரியத்தினால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகப்பெரிய இடையூறுகளைச் செய்தனர்.

யாராலும் இவர்களது கொட்டத்தை அடக்க முடியவில்லை.இவர்கள் இருவரும் அதிக வலிமை படைத்தவர்களாக இருந்த காரணத்தினால் பிரம்ம தேவனிடமிருந்து வேதத்தைப் பறித்து இவர்களே படைப்புத் தொழிலை செய்ய விரும்பினர். வேதங்களை பிரம்மனிடமிருந்து பறித்துக் கொண்டு பாதாள லோகத்திற்குள் சென்று மறைந்து விட்டனர். 

பாதாளத்தில் அரக்கர்கள்

வேதங்களை இழந்த பிரம்ம தேவன் பெருமாளிடம் சென்று முறையிட்டார். பெருமாள் பாதாள லோகத்தில் சென்று மது கைடபர்களை தேடிய போது அவர்களை காணவில்லை. அவர்கள் இருவரும் குதிரை உருவத்தில் உலவுவதை அறிந்து கொண்டு பெருமாளும் குதிரை உருவெடுத்தார். குதிரையோடு குதிரைகள் போரிட்டன. மது கைடபர் அழிக்கப்பட்டனர்.

முருகன் வரலாறும் வழிபாடும் -1

முருகன் வரலாறும் வழிபாடும் -1

வேதங்களை உச்சிமுகர்ந்தார்

மது கைடபர்களிடம் இருந்து வேதங்களைப் பெற்றுக் கொண்டு வந்த குதிரை முகக் கடவுளான பெருமாள் அவற்றை பிரம்ம் தேவனிடம் கொடுத்தபோது வேதங்கள் பெருமாளிடம் தங்கள் குறையைக் கூறி அழுதன. அதாவது அரக்கர்களின் கைபட்டதால் தங்களின் தூய்மை அழிந்து விட்டதாகவும் தங்களைத் தூய்மைப்படுத்திப் பிரம்ம தேவனிடம் கொடுக்க வேண்டும் என்றும் வேதங்கள் பெருமாளை கேட்டுக் கொண்டன.

வேதங்களின் குறைதீர்க்க மனம் கொண்ட பெருமாள் வேதங்களை உச்சி முகர்ந்தார். அவருடைய மூச்சுக்காற்று பட்டதால் வேதங்கள் தூய்மையாயின. பின்பு அவற்றை பிரம்மனிடம் கொடுத்து படைப்புத் தொழிலைத் தொடங்குமாறு கூறினார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி தரும் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் | Chettipunniyam Hayagriva Temple

லட்சுமி ஹயக்கிரீவர்

அரக்கர்களை அழித்த ஆக்ரோஷத்தில் கோபரூபமாக இருந்த பெருமாளை குளிர்விக்க லக்ஷ்மி அவரை ஆரத்தழுவி அவர் மடியில் அமர்ந்தார். இப்போது பெருமாள் மனம் குளிர்ந்து அகமும் முகமும் மலர்ந்தார். லட்சுமி ஹயக்ரீவராகத் தேவர்களுக்கு காட்சி அளித்தார்.

பொதுவாகக் கல்வி இருக்கும் இடத்தில் செல்வம் இருக்காது என்பார்கள். ஆனால் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கும் இடத்தில் கல்வியும் செல்வமும் இணைந்து இருக்கும். யோக ஹயக்ரீவர் இருக்கும் இடத்தில் சகல யோகங்களும் கல்வியும் நிறைந்திருக்கும்.

பிரசாதப் பார்சல்

இக்கோவிலுக்கு வந்து நேரில் எம்பெருமானை வழிபட இயலாதவர்களுக்கு கோவிலில் இருந்து யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படமும் பிரசாதமும் தேர்வெழுதும் மாணவர்களுக்கு பேனாக்களும் கொண்ட பார்சல் அனுப்பி வைக்கப்படுகிறது.  

கல்விக்கடவுள்

ஹயக்ரீவர் வழிபாடு கல்வியும் செல்வமும் பெருக துணை புரிகின்றது. கல்வியால் செல்வம் பெற விரும்புவோர் ஹயக்கிரீவரை வணங்கி வரலாம். பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதுகின்ற மாணவர்களும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போட்டித் தேர்வு எழுதுகின்ற இளைஞர்களும் தாங்கள் தேர்வு பயன்படுத்தும் பேனாவை கொண்டு வந்து ஹயக்ரீவர் பாதத்தில் வைத்து வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.தேர்வு காலங்களில் இக்கோவிலில் கூட்டம் அதிகம் இருப்பதை காணலாம்.

காளியம்மன் விரதம்

காளியம்மன் விரதம்

சிறப்பு வழிபாடுகள்

திருமணத்தடை நீங்கவும் வியாபாரம் பெருகவும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கவும் இங்குச் சிறப்பு யாகங்கள் செய்யப்படுகின்றன. ஹயக்ரீவருக்கு திருமஞ்சனம் செய்து புத்தாடை அளித்தும் துளசியால் சிறப்பு அர்ச்சனைகள் செய்தும் மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

இராமர் சன்னதி செட்டி புண்ணியம் தேவநாத பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் தவிர இராமருக்கும் தனிச் சன்னதி உண்டு. செட்டிபுண்ணியம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட அதே நாளில் இராமரும் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இராமர் சிலையின் கணுக்காலில் ஒரு ரட்சை கட்டப்பட்டுள்ளது. இந்த ரட்சைக்கு ஒரு கதை வழங்குகிறது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி தரும் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் | Chettipunniyam Hayagriva Temple

கதை 2
அக்கிரமத்தை அழிக்கும் ரட்சக ராமர்

இராமரை தாடகை வதத்துக்கு அழைத்துச் சென்ற விசுவாமித்திரர் அவருக்கு திருஷ்டிப் படாமல் இருக்கவும் அமானுஷ்ய தீய சக்திகளால் இடையூறுகள் ஏற்படாமல் இருக்கவும் அவரது காலில் ஒரு தாயத்தைக் கட்டி விட்டார்.

இந்தக் காலத்தில் மேலதிகாரிகளின் தொல்லை, மேட்டுக்குடியினரின் ஆதிக்கம், அரசியல்வாதிகளால் இடையூறு, உறவினர்களால் தொந்தரவு, அண்டை வீட்டாரால் அவமானம் போன்ற எந்த பிரச்சனையில் தவிப்பவராக இருந்தாலும் செட்டி புண்ணியம் கோவிலில் உள்ள இராமர் சன்னதிக்கு வந்து தொடர்ந்து வணங்கி வந்தால் தீமைகள் விலகும், நன்மைகள் பெருகும்.

திருமண நலம் தரும் சீதாராமர் இராமர்

இச்சன்னதியில் சீதாராமராகக் காட்சி தருவதால் குடும்பப் பிரச்சனை உள்ளவர்கள், ஒன்று சேர விரும்பும் பிரிந்திருக்கும் கணவன் மனைவியர், திருமணம் ஆகாமல் திருமணம் தடைபடும் காதலர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் இத்தலத்திற்கு வந்து சீதாராமரை தொடர்ந்து வழிபட்டு வர நல்ல குடும்பம் அமையும். குடும்ப வாழ்வில் அமைதியும் அன்பும் அன்னியோன்யமும் அதிகரிக்கும். சிறப்பான பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும்.

6000 ஆண்டு வரலாறுடைய சென்னை கோலவிழி அம்மன் ஆலய சிறப்புக்கள்

6000 ஆண்டு வரலாறுடைய சென்னை கோலவிழி அம்மன் ஆலய சிறப்புக்கள்

சிறப்பு வழிபாட்டு நாட்கள்

ஆவணி மாத பௌர்ணமியும் திருவோணமும் சேர்ந்து வரும் நாள் ஹயக்ரீவர் பிறந்த நாள் என்று கருதப்படுவதால் அன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இந் நந்நாளில் தான் கேரள மக்கள் ஓணம் பண்டிகையும் கொண்டாடுகின்றனர். ஹயகிரீவ் ஜெயந்தி அன்று யோக ஹயக்ரீவர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நவராத்திரியில் வரும் மகா நவமி யோக ஹயக்ரீவரை வழிபடுவதற்கு மிகச்சிறந்த நாளாகும். 

கதை 3
ஹயக்கிரீவர் ஓர் அசுரன்

வேதங்களை மீட்டு தந்தவர் ஹயக்கிரீவர் என்ற கதைக்கு நேர் மாறாக மற்றொரு கதையும் புராணத்தில் உள்ளது. பாகவத புராணத்தில் ஹயக்ரீவர் வேதங்களை திருடி சென்ற அசுரன் என்றும் அவர் பாதாளத்திற்குள் போய்விட்டதால் பெருமாள் மச்ச அவதாரம் எடுத்து மீன் வடிவில் கடலுக்குள் நீந்தி சென்று பாதாளத்திற்ககுள் போய் ஹயக்ரீவன் என்ற அசுரனை வென்று வேதங்களை மீட்டுக் கொண்டு வந்தார் என்றும் ஒரு கதை உள்ளது.

பாகவத புராணம் பிரம்மதேவன் நாரதருக்கு உரைத்ததாகும். ஆனால் பஞ்சராத்திர வைணவ மரபினர் ஹயக்கிரீவரை வேதங்களை மீட்டு தந்தவர் கல்வியின் காவலர் என்றே வணங்கி வருகின்றனர்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி தரும் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் | Chettipunniyam Hayagriva Temple

முன் வரலாறு

சிவன் விஷ்ணு கோவில் கதைகளில் இரண்டு கருத்துக்கள் தொடர்ந்து வருகின்றன. ஒன்று, பிரம்மனின் ஆணவத்தை சிவன் அடக்கி பிரம்மனுக்கு கோவில் இல்லாமல் சபித்தார். இக்கதை சைவ சமயத்தின் கதையாகும். இரண்டாவது பிரம்மன் அரக்கர்களின் கொடுமையால் அவதிப்பட்ட போது அவரது வேண்டுகோளுக்கு இணங்க பெருமாள் பிரம்மனுக்கு வாழ்வளித்தவர்.

பிரம்மன் தன் பெருமையை இழந்தான் என்பதே இவ் இரண்டு சமயங்கள் கூறும் கதைகளிலும் தெளிவாகின்ற உண்மை ஆகும். ஹயக்கிரீவர் வழிபாடு பௌத்த சமயத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. பௌத்தம் செல்வாக்கு இழந்ததும் தெய்வ வழிபாடுகளும் சிக்கலை சந்தித்தன.

அவ்வமயம் இவ்வழிபாடு வைணவ சமயத்தாரால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. புதிய கதைகள் தோன்றின. புராண கதைகள் ஏழு எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்டவை ஆகும். புராணக் கதைகள் எழுதப்படுவதற்கு முன்பு இந்தியா முழுக்க செல்வாக்கோடு விளங்கிய பௌத்த சமயம் தன்னுடைய மதத்தை அதி திவிரமாகப் பரப்பியது.

புத்தருக்குப் புதுக் கோயில்களை எழுப்பியது. பூவும் புகையும் மணியோசையும் கொண்ட வழிபாட்டு முறைகளைக் கற்பித்தது. சிலை வணக்கத்தை அறிமுகம் செய்தது. மருத்துவம், சோதிடம், இரசவாதம், வானவியல் ஆகிய துறைகளில் சிறப்பாக விளங்கியது. மக்களுக்கும் இவற்றின் பயன்களை கொண்டு சேர்த்தது.

நோய் தீர்க்கும் காவல் தெய்வம் சமயபுரம் மாரியம்மன்

நோய் தீர்க்கும் காவல் தெய்வம் சமயபுரம் மாரியம்மன்

இச்செயற்பாடுகளால் பௌத்த சமயம் மக்களின் அன்றாட வாழ்வோடு பௌத்தம் பின்னிப்பிணைந்து கிடந்தது. சைவ சமய ஏழுச்சி ஏற்பட்டபோது பழைய கதைகளையும் பழைய கடவுள் பெருமைகளையும் மறக்கடிக்கச் செய்யும் நோக்கத்தில் புதிய கதைகள் பக்திப் பாடல்கள், பக்திக் காப்பியங்கள் தோன்றின. இப்படைப்புகளில் பழைய தெய்வங்களான பிரம்ம தேவனும் இந்திரனும் தங்களின் பெருமையை இழந்தனர்.

ஹயக்ரீவர் கதையிலும் பிரம்மன் மது கைடபர்களிடம் தோற்றுப்போய் பெருமாளின் உதவியைப் பெற்று தன் படைப்புத் தொழிலை தொடர்ந்தான் என்று அறிகின்றோம். வைதிக சமயப் பேரெழுச்சிக் காலத்தில் சமண, பௌத்த சமயம் வழங்கி வந்த, குறியீடுகளுக்கும் சமயச் சின்னங்களுக்கும் புதிய கதைகளும் காரணங்களும் உருவாக்கப்பட்டன.  

புத்தரின் மகன்கள் - சிங்கம்

சிங்கம், யானை, குதிரை ஆகிய மூன்று விலங்குகளும் பௌத்த சமயச் சின்னங்களாகப் புகழ் பெற்று விளங்கின. சிங்கம் புத்தர்கள் மகன்கள் (Sons of Buddha or Buddha Lions) என்று அழைக்கப்பட்டன. புத்தர் அல்லது போதி தத்துவர்களின் ஆசனம் சிங்கங்களுடன் கூடிய சிம்மாசனமாக விளங்கியது. சிங்கம் தர்மத்தின் காவலனாக போற்றப்பட்டது.

புத்தரின் குறியீடு யானை

காவலனாக மனோபலமும் உடல் பலமும் நிறைந்ததாக இந்திரனின் வாகனமாக போற்றப்பட்டது. போதி சத்துவரின் உருவமாக யானை முகம் கொண்ட உருவம் வனங்கப்பட்டது. புத்தர் யானை வடிவானவர் என்றும் ஆயிரம் யானை பலம் கொண்டவர் என்றும் பௌத்த சமயத்தினர் போற்றினர்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளில் வெற்றி தரும் செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் | Chettipunniyam Hayagriva Temple

தர்மத்தின் வெற்றி -குதிரை

பௌத்த சமயத்தில் மகலி, ஹயகிரீவ் என்று இரண்டு குதிரைக் கடவுளர் உள்ளனர். மஹலி எனப்பட்டவர் குதிரையைத் தன் வாகனமாகக் கொண்ட தர்மத்தின் காவலர் ஆவார். ஹயக்கிரீவர் குதிரை முகம் கொண்ட பௌத்தக் கடவுள் ஆவார். இவர் வெள்ளைத் தாமரையில் வெள்ளை உடை உடுத்தி வீற்றிருப்பார். பௌத்த ஹயக்கிரீவர் அசுரர்கள் மீதான வெற்றிக்குக் குறியீடு ஆவார்.

பௌத்தத்தில் குதிரையைக் காற்றின் வேகத்துடன் இணைத்து wind horse என்பர். குதிரை பிராண வாயுவைக் குறித்தது. குதிரையின் கனைத்தல் குரல் (neigh) உறங்குவோனை எழுப்பி அறவழியில் வாழச் செய்யும் எழுப்புதல் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டது. குதிரை ஒரு மனிதனை அறவழியில் வாழ உதவும் சக்தியையும் முயற்சியையும் வேகத்தையும் குறிக்கும் குறியீடாக விளங்கியது.(Ref. symbolism of animals in Buddhism , Ven. Nampa Chikku, Buddhist Himalaya, Vol 1. No. 1 Summer 1988. Copyright 1988 by Vallen Co. Ltd. )

பௌத்த சமயத்தில் தாத்தா கதா இரத்தின சாம்பவா என்பவர் என்பவரின் சிம்மாசனத்தைக் குதிரைகள் தாங்குகின்றன. இவை சூரியனின் ரதத்தையும் இழுத்துச் செல்கின்றன

திபெத்தின் தரம்பாலர் ஹயக்கிரீவர்

திபெத் நாட்டில் பௌத்தர்கள் ஹயக்ரீவரின் ஜோடியாக வஜ்ரவராகியை வணங்குகின்றனர். இவர்கள் ஹயக்ரீவரை தர்மத்தின் காவலராக தர்ம பாலர் என்று அழைக்கின்றனர். திபெத் மொழியில் ஹயக்ரீவரை Tamdrin tsog kong என்று அழைக்கின்றனர்.

இந்நாட்டில் ஹயக்ரீவரை நாகர் என்ற அரக்கர்களால் உருவாகும் புற்றுநோய், தொழுநோய், காக்கா வலிப்பு, பக்கவாதம் மற்றும் தீய ஆவிகளால் ஏற்படும் இடையூறுகளில் இருந்து மக்களை காப்பாற்றும் கடவுளாக பூஜித்து வருகின்றனர்.

நிறைவு

பௌத்தம் செல்வாக்கு இழந்ததும் அதன் கடவுளர்களில் சிலரது (பிரம்மன், இந்திரன், தவ்வை) செல்வாக்கு ஒழிக்கப்பட்டது. ஒளிக்கப்பட்டது. வேறு வடிவில் மாற்றப்பட்டது. இக்கருத்துகளை ஒவ்வொரு கோவிலின் கதைகளும் எடுத்துரைக்கின்றன. ஒரு நாட்டில் சமயங்கள் மாறும்போது தெய்வங்களின் நிலையும் கதைகளும் செல்வாக்கும் வழிபாட்டு முறைகளும் மாறுகின்றன. மாற்றம் ஒன்று தான் மாறாதது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
















+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US