காளியம்மன் விரதம்

By பிரபா எஸ். ராஜேஷ் Oct 04, 2024 11:00 AM GMT
Report

காளி என்றாலே சிவனிடம் தோற்று போனவள் என்ற கதை பரவிய பின்பு காளியை தனிப் பெருந் தெயவமாகக் கொண்டாடவில்லை என்றாலும் தென்பகுதியில் வாழும் ஒரு வணிக சமுதாயத்தினர் காளியம்மனைத் தமது குல தெய்வமாக கொண்டு வணங்கி வருகின்றனர். தமது பிள்ளைகளுக்கும் காளியம்மாள், காளீஸ்வரன் என்று பெயர் சூட்டினர்.

தமிழ்நாட்டில் தஞ்சை, திருச்சி கும்பகோணம் பகுதிகளில் பச்சைக்காளி பவளக்காளி ஊர்வலம், வழிபாடு, விழா, காளியாட்டம் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது. விழா நாட்களில் காளியம்மனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுவார்கள். காளி ஆட்டம் ஆடுவார்கள்.

புரட்டாசி விரதம் - நோக்கும் போக்கும்

புரட்டாசி விரதம் - நோக்கும் போக்கும்

தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் விஜயதசமி வரை 10 நாளும் முன்னும் பின்னும் ஒரு நாள் சேர்த்து 12 நாட்கள் தசரா திருவிழா நடைபெறும்.

சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடையே 3 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரை அருகில் சூரசம்காரமும் பத்தாம் நாள் விஜயதசமி அன்று நடக்கும்.

மகிஷாசுரனை தேவி வதம் செய்யும் இந்நிகழ்ச்சிக்கு பின்பு அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் செய்து அவளைக் குளிர்விப்பர். மறுநாள் தேரோட்டத்தோடு விழா முடியும்.

காளியம்மன் விரதம் | Kali Amman Viratham

வேடமும் விரதமும்

குலசேகரப்பட்டினத்தில் தசரா நடக்கும்.பத்து நாட்களிலும் காளி, சிவன், முருளின், விநாயகர், தேவி, குரங்கு, சிங்கம், பிச்சைக்காரன், வயோதிகர் போன்ற வேடங்கள் புனைந்து வருவது ஒரு நேர்த்திக்கடனாக நிகழ்த்தப்படுகிறது.

இவர்கள் முன்பு 41 நாட்கள் தினமும் ஒருவேளை பச்சரிசி சாதம் மட்டும் உண்டு விரதம் இருந்தார்கள். இப்போது குறைந்தபட்சம் 11 நாட்கள் மட்டும் இந்த விரதத்தைக் கடைபிடித்து வேடமிட்டு வருகின்றனர்.    

அவலோகிதர் - தாரா தேவி

குலசேகரப்பட்டினத்தில் பழைய பெயர் தட்டான்குடி கோவில் ஆகும். அங்குள்ள முத்தாரம்மன் என்ற பெண் தெய்வத்தின் பழைய பெயர் தட்டத்தி. இக்கோவிலில் ஞானமூர்த்தீஸ் ஈஸ்வரரும் முத்தாரம்மனும் கருவறையில் காட்சி ஒரே கல்லில் வடித்த சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர்.

இக்கோவில் ஆதியில் அவலோகிதரும் தாரா தேவியும் இணைந்து காணப்பட்ட பௌத்த விகாரை ஆகும். பௌத்த சமயம் வெளியேற்றப்பட்ட பிறகு ஈஸ்வரர், அம்மன் என்ற பெயர்களில் இயங்குகிறது. அவலோகிதர் கௌதம புத்தரை போல ஞானம் பெற்றவர் என்பதால் அவருடைய சிலை ஞானமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.  

கொடிமரமும் ஆகமமும்

பௌத்த விகாரைகளாக இருந்து கோவில்களாக மாற்றப்பட்ட காலத்தில் கொடிமரமும் ஆகமமுறை வழிபாடுகளும் கிடையாது. ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் இங்குகக் கொடிமரம் வைக்கப்பட்டது. சிவாகம முறைப்படி பூஜைகள் தொடங்கின.  

முத்தாரம்மனை அப்பகுதி வாழ் குறவர்கள் தமது குல குலதெய்வமாகக் கொண்டு தசரா கொண்டாடப்படும் காலத்தில் பெரும் கூட்டமாக வந்து வணங்கிச் செல்கின்றனர்.

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

தமிழ்நாட்டில் இது மட்டுமே..

1.தசரா தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவிலில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மற்ற சிவன் கோவில்களில் நவராத்திரி விழா என்ற பெயரில் என்று சிறப்பு வழிபாடுகள் 9 நாளும் அம்பாளுக்கு நடக்கும்.

2.முத்தாரம்மன் கோவிலில் மட்டுமே அம்மனின் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

3. மறுநாள் அம்மன் தனியாக தேர் பவணியும் வருகிறாள். மற்ற எந்த கோயிலிலும் அம்மனுக்கு தனி தேரோட்டம் இல்லை.  

வேடம் தரித்தவர் பெறும் சிறப்பு

முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை புரட்டாசி பிரதமை தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். பக்தர்கள் வேடம் பூண்டு வருவதாக நேர்த்திக்கடன் வைத்து வேடம் போட்டுக்கொண்டு ஊர் சுற்றி வருவார்கள். முன்பு கோயில் வளாகத்தில் சாமியாடியிடம் தான் என்ன வேடம் போட வேண்டும் என்று கேட்டு அறிந்து அந்த ஆண்டு அந்த வேடம் தரித்து வருவார்கள். தற்காலத்தில் அவ்வாறு சாமியாடியிடம் கேட்பதில்லை. இப்பழக்கம் குறைந்துவிட்டது தனக்கு பிடித்த வேடங்களைத் தாமே தெரிவு செய்கின்றனர். 

காளியம்மன் விரதம் | Kali Amman Viratham

சுற்றத்தார் நேர்ச்சை

பக்தர்கள் தெரிவு செய்யும் வேடத்துக்கு ஆடை அணிமணி வாங்கி தருகிறேன் என்று அவர்களின் சுற்றத்தார், அங்காளி பங்காளி, நண்பர்கள், முறைமைக்காரர்கள் நேர்ச்சை செய்து கொள்வர். இவர்களை அம்மனாகப் பாவித்து உறவினர்கள் முறைமைக்காரர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்து இவர்களுக்கு மதிய உணவு சிறப்பாக வழங்குவார்கள்.

தர்மமும் அங்கப்பிரதட்சனமும் வேடம் தரித்தவர்கள் 11 வீடு, 21 வீடு என்ற கணக்கில் வீட்டின் வாசலில் நின்று தர்மம் வாங்கி அதனைக் கோவிலில் காணிக்கையாக செலுத்துவர். பிரதமை நாள் முதல் தசமி திதி வரை பத்து நாட்களும் இவ்வாறு வேடம் போன்று ஊர் சுற்றி வந்து தர்மம் வாங்கி நேர்த்தி கடனை முடித்த பின்பு கடலில் குளித்து தம் விரதத்தை நிறைவு செய்வர். சிலர் அங்கப் பிரதட்சணம் செய்வதாக நேர்ச்சை செய்து கொண்டு கடலில் குளித்து அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கப் பிரதட்சனம் செய்வர்.

காணிக்கைகள்

பொதுவாக கிராம தெய்வக் கோவில்களில் கிராமத்தின் முதல் விளைச்சல் , கோழி, ஆடு, மாடு ஆகியன ஊர்த் தெய்வத்துக்குக் காணிக்கையாக வழங்கப்படும். இவை தவிர பெண் தெய்வங்களுக்கு 'ஜவுளிக் காணிக்கை' என்ற பெயரில் 12 முழச் சேலை சிவபெருமானுக்கு எட்டு முழ வேட்டி என்று வாங்கி காணிக்கையாக அளிப்பதுண்டு.  

வேடம் தரித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவோருக்கு அவர்களுக்கு தெரிந்த உறவினர்கள் நண்பர்கள் தமது வீட்டுக்கு அழைத்து உணவு பரிமாறும்போது அம்மனுக்கு காணிக்கை அளிப்பதாகக் கருதி இவர்களுக்கும் சேலைகளைக் காணிக்கையாக கொடுப்பார்கள்.

சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்

சஷ்டி விரதங்களின் நோக்கும் போக்கும்

சாமி கதைகள் மூன்று

பௌத்த, சமண, கோவில்கள் பின்பு வைதீகக் கோவில்களாக மாற்றம் பெற்றபோது புதிய தெய்வத்தை வரவேற்கவும் புதிய சமயக்கொள்கையை நிலை நிறுத்தவும் தலபுராணக் கதைகள் உருவாக்கப்பட்டன.

கதைகளில் முன்பிருந்த தெய்வங்கள் (இந்திரன், பிரமன்) சபிக்கப்பட்டனவாகவும் தீய பண்புகள் கொண்டனவாகவும் காட்டப்பட்டன. அதுபோல சமண, பௌத்த தெய்வங்கள் கிராமத் தெய்வங்களாக மாறிய போது இத்தெய்வங்களுக்கென புதிய நாட்டுப்புறக் கதைப்பாடல்களும் வில்லடிப்பாட்டுகளும் தோன்றின.   

வில்லிசைக் கதைப் பாடல்கள் வில்லிசைப் பாட்டு எழுதியவர்கள் கிராம தெய்வங்களை சிவபெருமானோடு தொடர்பு படுத்திப் புதிய கதைகளை உருவாக்கினர். இக்கதைகளை ஆண்டுதோறும் கோவில் விழாக்களில் நிகழ்த்துகலை வடிவில் திரும்பத் திரும்பப் பாடிப் பாடி கதையின் கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தனர்.

இவ்வாறு குலசேகரப்பட்டணத்து முத்தாரம்மனுக்கு மூவர் மூன்று விதமான கதைகளை இசைப்பாடல்களாக இயற்றியுள்ளனர்.

குலசேகரப் பாண்டியன் வெற்றி

1. குலசேகர பாண்டியனுக்கும் திருவனந்தபுரத்து மன்னனுக்கும் இடையில் போர் ஏற்பட்டதில் குலசேகர பாண்டியன் தோல்வி அடைந்தான். அப்போது அவனது கனவில் அறம் வளர்த்த நாயகி 'தொடர்ந்து போரிடு வெற்றி உனக்கே' என்று கூறினாள். தெய்வத்தின் கட்டளையை ஏற்று குலசேகர பாண்டியன் தொடர்ந்து போர் செய்து வெற்றி பெற்றான்.

தனக்கு நல்வாக்கு அருளிய அறம் வளர்த்த நாயகிக்கு இங்குக் கோவில் கட்டினான். இக்கோவிலின் அருகே விஜய கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் என்று இன்னொரு கோவிலும் உண்டு. சிதம்பரேஸ்வரர் கோவில் என்ற சிவன் கோவிலிலும் உள்ளது. குலசேகரபாண்டியனின் பெயரால் இவ்வூர் குலசேகரப் பட்டணம் ஆயிற்று.   

2. குலசேகரப் பட்டணம் என்ற இத்துறைமுகத்தில் இருந்து வாணிபம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் சரக்குக் கப்பல் கடலில் மூழ்கி விட்டது. அப்போது அவர் தன் தலையில் அடித்துக் கொண்டு தெய்வமே என்று அழுதார். அவருடைய கண்ணீரைத் துடைக்க சிவனும் பார்வதியும் காட்சி அளித்தனர்.

தெய்வங்களின் திவ்ய தரிசனம் கிடைத்ததும் தம் துன்பம் நீங்கிய செட்டியார் சிவபெருமானிடம் 'எம்பெருமானே தாங்கள் இங்கேயே எழுந்தருள வேண்டும். இங்கு வந்து உங்களைப் பணிவோருக்கு அவர்களின் துன்பத்தை நீக்கியருள வேண்டும்' என்று வேண்டினார். அன்று முதல் அவர்கள் இங்கே கோவில் கொண்டனர் என்று ஒரு கதை நிலவுகிறது.

3. சம்புத் தீவுக்கு அருகில் ஏழு கடல் கடந்து கமலை என்ற ஒரு சுனை இருந்தது. அச் சுனையின் அருகே மாணிக்கப் புற்று ஒன்று இருந்தது. அந்த மாணிக்கப் புற்றில் ஐந்து தலை நாகம் குடியிருந்தது. அந் நாகம் பல ஆண்டுகளாக விஷத்தைக் கக்காததால் விஷம் கெட்டிப்பட்டு அமுதமாக மாறிவிட்டது. விஷமாகிய அமுதத்திலிருந்து ஏழு அரக்கியர் பிறந்தனர். அவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தார்கள்.

அவர்களின் பெயர் நீலன், குமுதண், ஆதித்தன் என்பனவாகும். இம் மூவரையும் பூலோகத்தில் விட்டுவிட்டு அந்த ஏழு அரக்கியரும் மறைந்து விட்டனர். இம் மூன்று பேரும் காட்டில் உலாவிக்கொண்டு இருந்தனர் அப்போது அங்கு சக்தி முனி என்பவர் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவருடைய யாக குண்டத்திலிருந்து தோன்றிய புகை தேவலோகத்திற்குள் பரவியது. இப் புகையினால் உடல் வியர்த்த பார்வதி தேவி தன் நெற்றி வியர்வையை வழித்து கீழே எறிந்தாள். அவளுடைய வியர்வை முத்தில் இருந்து முத்தாரம்மன் தோன்றினாள்.

காளியம்மன் விரதம் | Kali Amman Viratham

முத்தாரம்மன் காண்டபுரம் என்ற ஊரில் கோட்டை அமைத்து நீலன், குமுதன், ஆதித்தன் ஆகியோரை வளர்த்து வந்தாள். மூவருக்கும் திருமணம் செய்வித்தாள். இவருக்கும் முத்துத் தம்பி, சந்த வாய் குமரன், முத்துக்குமரன் என்று மூன்று பேர் பிறந்தனர்.

இந்த மூன்று பேர்களின் அட்டகாசம் தாங்க இயலாமல் தேவர்கள் விஷ்ணுவிடம் போய் முறையிட்டனர். அவர் தன்னால் ஏதும் இயலாது. அவர்கள் முத்தாரம்மனின் பேரன்கள் என்று சொல்லிவிட்டார். பின்பு அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

தேவர்களின் முறையிட்டைக் கேட்ட சிவபெருமான் கலகலவென்று சிரித்தார். அவர் சிரித்ததும் மூவரின் கோட்டைகளும் எரிந்து போயின. (திரிபுரம் எரித்த கதை முப்புடாதி கதையிலும் உண்டு) .

முத்தாரம்மன் சிவபெருமான் மீது கோபம் கொண்டு தன் மகன்களை உயிர்ப்பித்தாள். உயிர்ப்பித்த பின்பு 'எனக்கு கோடி வரம் கொடு இறைவா 'என்று சிவபெருமானிடம் கேட்டுப் பெற்றாள். கோடி வரம் பெற்றவள் முத்தாரம்மன் என்பதால் அவளிடம் வந்து பணிந்து நின்று தங்கள் குறைகளை சொல்லும் பக்தர்களுக்கு அவள் என்ன கேட்டாலும் தரக்கூடிய சக்தி படைத்தவள்.

சர்வ சக்தி படைத்த முத்தாரம்மன் கோயிலில் பேச்சியம்மனுக்கும் பைரவருக்கும் கருப்பசாமிக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. இங்கு அஷ்ட காளி கோவிலும் உள்ளது அஷ்ட காளி கோவிலில் வீரகாளி பத்திரகாளி, கருங்காலி, முப்புடாதி, முத்தாரம்மன், உச்சினிமாகாளி, மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டி மறிச்சான் என்று எட்டு காளி தெய்வங்கள் உள்ளன.

காளியம்மன் விரதப் பாட்டு முத்தாரம்மனுக்கு விரதம் இருக்கும் பெண்கள் முத்தாரம்மனை வேண்டி தாங்கள் நோன்பு இருக்கும் காலங்களில் தங்களின் துறவு நிலையை உணர்ந்து அம்மன் அவர்கள் கேட்ட வரம் அருள வேண்டும் என்று பாட்டுப் பாடுவர்.

நோன்பிருக்கோம் நோன்பிருக்ககோம் முத்தாரம்மா

தாயே என்ன வேணும்

கேளுங்கம்மா

காளியிடம் ஓடி வந்து

கேளுங்கம்மா  

என்று தாங்கள் விரதம் இருப்பதைச் சொல்லி அம்மனிடம் வரம் கேட்பார்கள். இவ்வாறு பத்து நாட்களும் முத்தாரம்மனுக்கு பாட்டு பாடி வேடமிட்டு விரதம் இருந்து வணங்கித் தேரோட்டம் முடிந்ததும் வழிபாடு நிறைவு பெறுகின்றது.

பச்சைக் காளி, பவளக் காளி

தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம் , நாகப்பட்டினம் (அக்கரைப்பேட்டை) போன்ற ஊர்களில் பச்சை காளி பவளக்காளி என்ற பெயரில் காளி பச்சை வண்ணத்திலும் சிவப்பு வண்ணத்திலும் அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு வரப்படுவாள்.

இவ்வூர் கோவில்களிலும் பச்சை காளி என்பது தாரா தேவியின் மறு வடிவம் ஆகவும் பவளக்காளி என்பது சிவனோடு போராடி தோற்றுப் போன பழைய காளி வடிவமாகவும் விளங்குகின்றது. சிறுவாச்சூர் காளி பவளக்காளி ஆவாள். அவளுக்கு தலை முதல் கால் வரை குங்குமத்தைத் தடவி அவளைச் சிவப்பு காளியாகவே அவள் கோபம் வெளிப்படும் வகையில் வைத்து வணங்குவர்.  

 மதுரை மடப்புரம் காளி பச்சை காளி அவளுக்கு சிங்கப்பல் (வீரப்பல்) இருக்கும். ஆனால் நாக்கு வெளியே தொங்காது. இவ்வாறு தமிழ்நாட்டில் பச்சைக்காளி பவுத்த காளியாகவும் பவளக்காளி சிவனிடம் தோற்றுப் போன வீர யுகத்தின் மூத்த பெண் தெய்வமாகவும் இருக்கின்றாள். இவை தவிர நீலக்காளி, கருங்காளி, வீரங்காளி உச்சனி மாகாளி என்று பல பெயர்களில் காளி வழிபாடும் அதற்குரிய கடுமையான விரதங்களும் உள்ளன.

காளி ஆட்டம்

காளிகள் ஊர்ப் பவனி வரும்போது காளி ஆட்டம் நடைபெறும். காளியாட்டம் காளியின் வர்ணனை, அரக்கனின் வர்ணனை, காளி அரக்கனை அழித்தல், வெற்றிவாகை சூடுதல் போன்றவை ஆட்ட நிகழ்வுகளாக நடத்திக் காட்டப்படும். காளி ஆட்டம் ஆடுவோர் விரதமிருந்து மது, மாது, மைதுனம் நீக்கி ஒரு பொழுது உணவு உண்டு சாமியாட்டம் போல ஆடினர்.   

தற்போது சாமியாடிகள் காளியாட்டம் ஆடுவது குறைந்துவிட்டது. எனவே இளைஞர்கள் இதனை ஒரு நிகழ்கலையாக நடத்தும் முயற்சியில் பயிற்சி பெற்று 'அம்மன் நடன நிகழ்ச்சி' என்று கோயில் விழாக்களில் நடத்தி வருகின்றனர்.

காளியம்மன் விரதம் | Kali Amman Viratham

குல தெய்வப் பிரார்த்தனை

காளியம்மன் குறிப்பிட்ட (நாடார்) சாதியினருக்கு குல தெய்வமாக விளங்குகிறாள். அவர்கள் தத்தம் பகுதிக்கு ஏற்ப காளியம்மனுக்கு ஆடி, பங்குனி, புரட்டாசி என்று குலதெய்வ வழிபாடு (பொங்கல்) கொண்டாடுகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சிப்பட்டியில் நடைபெறும் காலியமன் கோயில் பொங்கல் அங்குள்ள ஆண்டாள் கோயிலின் வைணவப் பாரம்பரியத்தை அடியொற்றி புரட்டாசியில் நிகழ்கிறது. காளியம்மன் கோயில் பொங்கல் நாடார் சமுதாயத்தினரின் குலதெய்வப் பிரார்த்தனை ஆகும்.  

நேர்த்திக்கடன் வகைகள்

பெண்கள் ஆயிரம் கண் பானை எடுத்தல், மூன்று வயது பெண் குழந்தை முதல் ஓலை கொட்டானில் பூக்களை நிரப்பிப் பூச்சட்டி எடுத்தல், பெரிய பெண்கள் தீச்சட்டி எடுத்தல், ஆண்களில் ஏழு வயது சிறுவன் முதல் பெரியவர்கள் வரை கயிறு சுற்றுதல் என்று பல நேர்த்திக் கடன்கள் உண்டு.

கயிறு சுற்றுதல் என்பது சற்று வினோதமானது. ஊசியில் நூலை கோர்த்து சிறுவன் அல்லது இளைஞனின் இடுப்பில் குத்தி எடுத்து பூணூல் போல தோளில் சுற்றிப் போட்டு மறுபக்கம் ஊசியால் குத்தி எடுத்து முடிச்சு போட்டு விடுவார்கள். விரதம் இருப்பதால் இச்சிறுவன் அல்லது இளைஞர்களுக்கு வலி இருக்காது.

வராகி பூஜையும் விரதங்களும்

வராகி பூஜையும் விரதங்களும்

  

விரதம் இருக்கும் முறை

புரட்டாசி மாதம் முழுவதும் காளியம்மனுக்கு விரதம் இருந்து பொங்கல் கொண்டாடுகின்றனர். புரட்டாசி மாதத்தின் முதல் செவ்வாய் கிழமை அன்று விரதமும் வழிபாடும் தொடங்கும். நேர்த்திக்கடன் வைத்திருப்பவர்கள் இம்மாதம் முழுக்க விரதம் இருப்பார்கள்.

இந்த ஒரு மாதமும் வீட்டில் அசைவம் சமைப்பது கிடையாது. வீட்டில் உள்ள எவரும் செருப்பு அணிவதில்லை. விரதம் இருப்போர் இரண்டாவது வாரம் செவ்வாய்க் கிழமையில் இருந்து ஒரு பொழுது மட்டுமே உண்பர்.

ஊர்க்கிணறு (சாதிக் கிணறு)

ஊர் என்பது குறிப்பிட்ட சாதியினர் வாழும் அந்த ஊரை மட்டும் அல்லாது சாதிச் சங்கத்தையும் குறிக்கிறது. ஊர்க் கிணறு என்பது குறிப்பிட்ட சாதியினர் தாம் குளிப்பதற்காக தோண்டப்பட்ட பொது கிணறு ஆகும்.

பெண்கள் காலையில் வீட்டில் குளித்துவிட்டு தங்கள் வேலைகளைப் பார்ப்பார்கள். மாலை நேரத்தில்வீட்டில் இருந்து அரைத்துக் கொண்டு வந்த மஞ்சள் குழம்பை ஊர்ப் பொதுக் கிணற்றுத் தண்ணீரில் போட்டு அந்த கிணற்று நீரை வாளியில் இறைத்து தலைவழியாக ஊற்றிக் குளித்த பிறகு அங்கிருந்து நேராகக் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பின்பு வீட்டிற்குப் போய் பாய் தலையணை இல்லாமல் வெறுந்தரையில் படுத்து உறங்குவர்.

இவர்கள் தினமும் மஞ்சள் நீரில் குளிப்பார்கள். ஆண்கள் காலையிலும் மாலையிலும் தங்களுக்கு என்று தனியாக உள்ள ஊர்ப் பொதுக்கிணற்றில் குளித்து முடித்து வேலைக்கும் செல்வர் கோவிலுக்கும் செல்வர்.

விரதமும் அன்னதானமும்

தெய்வத்திற்கு நேர்ச்சை செய்துகொண்டு இரு வேளை பட்டினி கிடைக்கும் மக்கள் மற்றவர்களுக்கு செவ்வாய் கிழமைகளில் மூன்று கூட்டு பொரியல், அப்பளம், குழம்பு, ரசம், மோர் வைத்து அன்னதானம் செய்வர்.

விரதம் இருப்பவர்கள் வீடுகளில் தங்களால் முடிந்தவரை அண்டை அயலாருக்கு தெரிந்தவர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். சுற்றத்தினர் நண்பர்களோடு மற்ற சாதியினரும் வந்து மகிழ்ச்சியோடு சாப்பிட்டுவிட்டு தங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டும் செல்வார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 20, 30 பேருக்கு தங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரங்களைக் கொண்டு சமைத்து பரிமாறுவார்கள். விரதம் இருப்பவர்கள் வீட்டில் நடக்கும் இந்த அன்னதானம் உணவின் மகிமையை வெளிப்படுத்துகின்றது.

காளியம்மன் விரதம் | Kali Amman Viratham 

தேரும் சப்பரமும்

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா பண்டிகை முடிந்ததும் அம்மனுக்கு தேர்த்திருவிழா நடைபெறும். இது போல் பெண் தெய்வத்துக்கென்று தனியாக தேர்ப்பவனி எந்த ஊரிலும் கிடையாது என்பர்.

கிராம தேவதைகளில் தேர் செய்யும் வசதி இல்லாததால் சப்பரம் செய்து அம்மனை ஊர்வலமாக ஒரு ஊரில் மட்டும் அல்ல தம் சாதியினர் வாழும் பல ஊர்களிலும் சுற்றிக் கொண்டு வருகின்றனர். காளியம்மனுக்கு விரதம் இருந்தவர்கள் மட்டுமே அம்மனின் அலங்கரித்த சப்பரத்தை நிறைவு நாளன்று சுமந்து ஊர் ஊராகக் கொண்டு வருவார்கள்.

ஆராய்ச்சி பட்டியில் பொங்கல் (விழா) நடக்கிறதென்றால் அங்கிருந்து பெருமாள்பட்டி, மங்காபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், கம்மாபட்டி போய்ச் சுற்றி திரும்பவும் ஆராய்ச்சி பட்டிக்குச் சப்பரம் வந்து விடும் 

காளியம்மன் பொங்கல் புரட்டாசி மாதத்தின் முதல் செவ்வாய் அன்று விரதம் தொடங்கும். இரண்டாவது செவ்வாய்க்கிழமை முதல் ஒரு பொழுது உணவு உண்பர். விரதம் இருந்தவர்கள் நான்காவது செவ்வாய்க்கிழமை அன்று கோயிலில் பொங்கல் வைப்பர். 

மறுநாள் நான்காவது புதன்கிழமை அன்று உயிர்ப் பலி கொடுப்பார்கள். பெரும்பாலும் ஆட்டுக்குட்டியைப் பலி பலி கொடுத்து அன்றைக்கும் பொங்கல் வைத்து எல்லோருக்கும் அசைவ உணவு பரிமாறுவர். மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு நடைபெறும்.

மஞ்சள் நீராட்டு

புரட்டாசி கடைசி வெள்ளி அன்று மாலை ஆறேழு மணிக்கு சுமார் ஒரு மணி நேரம் கொதிக்க விட்ட சுடுநீரில் மஞ்சள் தூளைக் கலந்து வைப்பர். அவ்வாறு கலந்தவுடன் காளியம்மனுக்கு, கால சாமிக்கு, வைரவ சாமிக்கு சாமி ஆடுபவர்கள் கையில் வேப்பிலையைப் பிடித்தபடி அந்த கொதி நீருக்குள் கையை விட்டு வேப்பிலையால் சுற்றி அந்த கொதி நீரை தங்கள் தலையிலும் உடம்பிலும் தெளித்துக் கொள்வார்கள்.

அவர்களுக்கு ஒரு வெப்பக் கொப்புளமும் வராது. இது தான் காளியம்மனுக்கு நடைபெறும் மஞ்சள் நீராட்டு ஆகும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தேங்காய் பழம் மட்டும் உடைத்து சாமி கும்பிடுவார்கள். அசைவம் கிடையாது. 

வீர விளையாட்டுகள்

நாடார்கள் வேறு ஆதிக்க சாதியினருடன் போர் செய்ய வேண்டி இருந்ததால் ஊர் கோயில், ஊர் சங்கம், ஊர் கிணறு, என்று ஒரே இடத்தில் கூடிப் பேசித் திட்டமிட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டனர். ஊர் ஆண்களுக்கு சிலம்பு போன்ற வீர விளையாட்டு பயிற்சிகளைச் சிறு வயது முதல் கொடுத்தனர்.

இந்த வீர விளையாட்டுகளைத் தத்தம் ஊர்க் கோவில் திருவிழாவில் நடத்தி (demo) காட்டினர். புரட்டாசி கடைசி சனி அன்று ஊரில் சிலம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுகள் நடக்கும். சிலம்பாட்டப் பள்ளிகளில் இருந்து மாணவர்களும் ஆசான்களும் சிலம்பாட்டம் நடத்தி காட்டுவார்கள்.  

மாரியம்மன் விழாவும் விரதமும்

மாரியம்மன் விழாவும் விரதமும்

ஆட்டுக்குட்டியைத் தூக்கிப் போடுதல்

கடைசிச் சனிக்கிழமை இரவில் ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் ஆட்டுக்குட்டியைத் தன் பல்லால் கடித்துத் தூக்கி தன் முதுகுக்கு பின்னால் போடுவான். இதற்கென்று எடை கூடிய ஆட்டுக்குட்டி கோயில் முன்புள்ள வெற்றிடத்தில் கொண்டுவந்து நிறுத்தப்படும். இளைஞர்கள் முயற்சி செய்வார்கள். யாராவது ஓரிருவரால் தம் பற்களால் கடித்துத் தூக்க முடியும். அப்படியே தலைவழியாக பிடரிக்கு நகர்த்தி அங்கிருந்து கீழே எறிய வேண்டும்.  

இனிபழம்

கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கோயிலில் இருந்து ஊர் உறுப்பினர்கள் அனைவருக்கும் இனி பழம் (பிரசாதம்) கொடுப்பார்கள். ஒரு ஓலை கொட்டானில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தேங்காய், பழம் (6) வெற்றிலை, பாக்கு வைத்து வைத்து வீட்டுக்கு வீடு கொண்டு வந்து கொடுப்பார்கள். இதுதான் இனிப்பழம் என்பதாகும். 

காளியம்மன் தொன்மக் கதைகள்

குறிப்பிட்ட (நாடார்) சமுதாயத்தினரின் குலதெய்வமாக விளங்கும் காளியம்மன் பற்றி இவர்களின் தொழில் சார்ந்த தொன்மக்கதைகள் நிலவுகின்றன.

தொன்மக்கதை என்றால் இயற்கையின் நிகழ்வுக்கு செயற்கையாகக் காரணம் கற்பிப்பது ஆகும். புராணக் கதை என்றால் அதீத கற்பனைகள் நிறைந்த தெய்வக் கதைகள் ஆகும். தொன்மக்கதைகள் உலக நாடுகளில் எல்லா மக்களிடமும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து உள்ளன. 

ஆதியில் ஒரு நாள் காளியம்மன் ஒரு மரமேறியைப் பார்த்து 'எனக்கு கொஞ்சம் பதனி கொடு' என்றார். மரமே,றியும் அம்மாளுக்கு கொடுக்கும் பதனி சுவையாக இருக்க வேண்டும் என்று ஒரு நினைத்து விரலில் தொட்டு ஒரு சொட்டு பதினியைத் தன் நாக்கில் விட்டு சுவைத்துப் பார்த்தான்.

அவன் ஒரு சொட்டு சிதறி காளியம்மாளின் மீது விழுந்து விட்டது. உடனே காளியம்மாள் கோபித்து 'எனக்குத் தர இருக்கும் பதினியை நீ சுவைத்துப் பார்க்கிறாயா? என்மேல் விழுந்த சொட்டு போல இனி மரத்தில் பாளையிலிருந்து சொட்டு சொட்டாக தான் பதனி இறங்கும்' என்று சபித்துவிட்டார்.

அம்மன் சாபத்துக்கு முன்பு வரை பத்துப்படி பிடிக்கும் நார்ப் பெட்டியை பனைமரத்தில் பாளையில் கட்டி வைப்பர். பாளையில் இருந்து பெட்டி நிறைய பதினி வழியும். காவடி போட்டு பதனி நார்ப் பெட்டிகளை சுமந்து கொண்டு வந்து கருப்பட்டி காய்ச்சுவர். நிறைய பதனி வழிந்து கொண்டே இருக்கும். காளியம்மாளின் சாபத்திற்கு பிறகு சொட்டு சொட்டாக வடியத் தொடங்கியதால் முட்டி (மண் சட்டி) கட்டத் தொடங்கினர்.

மரமேறியின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை உணர்ந்த காளியம்மன் இவ்வளவு உயரத்தில் இருந்து தினமும் ஏறி இறங்கிக் கடுமையாக உழைக்கும் இவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். அவனுக்கு உயிர்ப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நினைத்து ஒரு மருந்தை வெற்றிலையில் வைத்து மரமேறியிடம் கொடுத்தாள். அவன் வாங்கும் போது கைதவறி வெற்றிலை கீழே விழுந்து விட்டது. அதை அணில் முதலில் சாப்பிட்டதால் அது பனை மரத்திள் எவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தாலும் உடனே எவ்வித தயக்கமும் இன்றி ஓடிவிடும். அதனால் ஓட முடியும். அதற்கு காயம் படாது. வலி எடுக்காது.

அணில் சாப்பிட்ட பிறகு சிறிதளவு மருந்தை ஓணான் நக்கித் தின்றது. இதனால் ஓணான் பனை மரத்திலிருந்து கீழே விழும் போது ஒரு நொடி நின்று நிதானித்துப் பின்பு ஓடும். இவர்கள் சாப்பிட்ட பின்பு அந்த வெற்றிலையில் ஒட்டிக் கொண்டிருந்த துளியூண்டு மருந்தை மட்டும் மனிதன் சாப்பிட நேர்ந்தது. அவனது வகையறா மட்டும் பனை மரத்திலிருந்து கீழே விழுந்தாலும் சாவதில்லை. பிழைத்துக் கொள்வார்கள். அது எந்த வகையறா என்று இப்போது தெரிந்து கொள்ள முடியவில்லை. மற்றவர்கள் பனை மரத்திலிருந்து கால் தவறி கீழே விழும்போது இறந்து போவார்கள்.

இவ்வாறு தம் குல தெய்வமான காளிக்கு மக்கள் கதை புனைந்து வைத்துள்ளனர். விட்டதாம் இருந்தும் அன்னதானம் வழங்கியும் வழிபடுகின்றனர்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US