இலையில் காட்சியளித்த லட்சுமி-நரசிம்மர்
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகில் அமைந்துள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு மிகுந்த புகழ் உண்டு. "தட்சிண அஹோபிலம்" என்றும் போற்றப்படும் இத்தலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மரை வழிபட்டால், ஆந்திர மாநிலம் அஹோபிலம் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இப்போது தல பெருமைகளை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
இறைவனை எதிர்த்த மன்னன்:
இறை நம்பிக்கையற்ற பல்லவ மன்னன் ஒருவன் சைவ, வைணவ கோயில்களை இடித்து தரைமட்டமாக்கினான். பிறருடைய ஆன்மிக நம்பிக்கைகளிலும், வழிபாடுகளிலும் தலையிடுவதும், அவர்களது இறைத் தலங்களை நிர்மூலமாக்குவதும் தகாத செயல்,
இந்த அராஜகம் ஒரு மன்னனுக்கு ஆகாது என்று பலரும் அவனுக்கு அறிவுறுத்தினர். ஆனால் அவற்றை அவன் செவிமடுக்காததோடு, அந்த ஆன்றோர்களை சிறையிலிட்டும் துன்புறுத்தினான்.
முனிவரின் சாபம்:
ஆனால், தனக்கு என்ன தண்டனை கிடைத்தாலும் கவலையில்லை என்ற மனவுறுதியுடன் மன்னனின் கொடுமைகளை பகிரங்கமாகத் தட்டிக் கேட்டார் நரஹரி என்ற முனிவர். அவர் மீதும் ஆத்திரம் கொண்ட மன்னன், கொடிய முறையில் அவரை தண்டிக்க எண்ணி அவரைக் கழுவிலேற்றுமாறு ஆணையிட்டான்.
அதைக் கேட்ட நரஹரி, அவனுக்குப் பலவகையிலும் துன்பங்கள் உண்டாகும் என்று சபித்தார். பிறகு அமானுஷ்யமாக பளிச்சென்று மறைந்துவிட்டார்.
சாபத்தின் விளைவுகள்:
முனிவரின் சாபமும் பலித்தது. மன்னன் அடுத்தடுத்து பல சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் உள்ளானான். அவன் அணிந்த உடைகள் எல்லாம் துர்நாற்றம் வீசின. உணவு உட்கொள்ளப் போனால், அந்த உணவு வகைகளில் புழுக்களும், வண்டுகளும் நெளிந்தன.
அந்தப்புர மஞ்சக் கூடங்கள், பஞ்சு மெத்தை, படுக்கை விரிப்புகள் அனைத்துமே மனிதத் தோலாகவும், சதையாகவும், எலும்புகளாகவும் தோன்றி அவனைப் பெரிதும் பயமுறுத்தின.
மன்னனின் வருத்தம்:
இதனால் நொந்துப்போன மன்னன், இதற்கு முனிவரின் சாபமே காரணம் என்பதை வெகு தாமதமாக உணர்ந்தான். சாப விமோசனம் பெற, அவரைத் தேடி எங்கெல்லாமோ அலைந்தான், திரிந்தான். ஆனால் எந்தப் பயனும் இல்லை.
இறைவனின் அருள்:
ஓர் இரவு படை வீரர்கள் சூழ்ந்திருக்க பூவரச மரத்தின் கீழ் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது, “மன்னனே, ஆன்றோர்கள் எவ்வளவோ அறிவுறுத்தியும் அவர்களையெல்லாம் புறந்தள்ளியதோடு, அவர்களுக்கு தண்டனையையும் வழங்கிப் பெருங் குற்றம் புரிந்த நீ, இப்போது பிராயசித்தம் தேடி அலைகிறாய்.
சரி, இங்கே என் அடியவனான நரஹரி அதிகாலையில் வருவான். உனக்கு சாப விமோசனம் அருள்வான். கவலைப்படாதே,’’ என்று இறையருள் ஒலித்தது. தனக்கும், தன் பக்தர்களுக்கும் என்னதான் ஒருவன் கேடு செய்தாலும், அதை உணர்ந்து அவன் வருந்தும்போது அவனைக் காக்க வேண்டியது தன் கடமை என்ற இறைவனின் தயாள குணத்தை மன்னன் புரிந்து கொண்டான்.
லட்சுமி நரசிம்மரின் தரிசனம்:
அதை எண்ணி அவன் நெகிழ்ந்திருந்தபோது பூவரச மரத்திலிருந்து ஓர் இலை அவன் மேல் விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த அவன் உள்ளமும், உடலும் சிலிர்த்தன. ஆமாம், லட்சுமி நரசிம்மர் அந்த இலையில் காட்சியளித்தார்.
அப்படியே உருகி, மருகிய அவன், அந்த இலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டான். ஏதோ உணர்வு உந்த அவன் தலை நிமிர்ந்தபோது, எதிரே நரஹரி முனிவர் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தார்.
அவர் கால்களில் அப்படியே மன்னன் விழுந்தான். தனக்கு சாபவிமோசனம் தருமாறு கெஞ்சினான். முனிவரும் மகிழ்ந்து அவனுடைய குற்றங்களை மன்னிக்க, அதுவே சாபவிமோசனமாகி, மன்னன் மீண்டும் தன்னுடைய அழகிய தோற்றமும், பொலிவும் பெற்றான்.
தென் அகோபிலம்:
புதுவாழ்வு கிடைத்த அந்தப் பூவரச மங்கலம் என்ற தலத்தில் லட்சுமி நரசிம்மருக்கு திருக்கோயில் ஒன்றை நிர்மாணிக்குமாறு முனிவர் கேட்டுக்கொண்டார். மன்னனும் அவ்வாறே அவருடைய மேற்பார்வையிலேயே கோயில் கட்டி, குடமுழுக்கு நடத்தி, நரசிம்மரின் திருவருளைப் பெற்றான்.
பூவரச மரங்கள் அடர்ந்திருந்த வனமான அந்த ‘பூவரச மங்கலமே’ தற்போது ‘பூவரசன்குப்பம்’ என்று வழங்கப்படுகிறது. பெண்ணையாற்றின் வட கரையில் அமைந்திருக்கும் இத்திருத்தலம் ‘தென் அகோபிலம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது.
கருவறையில் புன்னகை முகத்துடன் லட்சுமி நரசிம்மர் அருள்கிறார். பின் கரங்கள் இரண்டில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன் இடக்கையால் அமிர்தவல்லித் தாயாரை அணைத்துக் கொண்டு, வலக் கரத்தால் பக்தர்களுக்கு ஆசி அருள்கிறார்.
இடக்காலை மடக்கி வைத்து வலக்காலை கீழே தொங்க விட்டிருக்க அந்தப் பாதத்தை தாமரை மலர் ஒன்று தாங்கியிருக்கிறது. நரசிம்மர் மடியில் அமர்ந்துள்ள லட்சுமி, தனது வலக் கரத்தால் நரசிம்மரை அணைத்துக் கொண்டிருக்கிறார். இடக்கரத்தில் தாமரை மலரைப் பிடித்தபடி பேரழகுடன் தரிசனம் அருள்கிறார்.
அமிர்தவல்லி:
அமிர்தம் போன்ற அற்புத பலன்கள் பலவற்றை வாரி வழங்கும் வள்ளல் இந்த அன்னை என்பதாலேயே இவருக்கு அமிர்தவல்லி என்று பெயர். சந்நதியின் எதிரே கருடாழ்வார் கைகூப்பி வணங்குகிறார். தென்புறம் நோக்கி பக்த ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார்.
விஜயநகர கலைச்சிறப்பு:
மகா மண்டபத்தில் திருமாலின் தசாவதாரங்கள் புடைப்புச் சிற்பங்களாகப் பொலிகின்றன. ஊஞ்சல் மண்டபத்தில் வேணுகோபாலன், ஆதிசேடன், விஷ்வக்சேனர், ஆஞ்சநேயர், கருடாழ்வார், யோக நரசிம்மர், தசாவதாரங்கள், கிருஷ்ணர், வசுதேவர், புருஷோத்தமர், பிரதியும்னர், சங்கர்ஷனர், அநிருத்தர் ஆகியோரது கவின்மிகு சிற்பங்கள் விஜயநகர பேரரசின் கலைத் திறனுக்கு சாட்சிகளாக விளங்குகின்றன.
திருவிழாக்கள்:
வைகுண்ட ஏகாதசி, சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தி, வைகாசி விசாகம் கருட சேவை, தமிழ் வருடப் பிறப்பு, நவராத்திரி, தை மாத தீர்த்தவாரி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இதைத்தவிர மாத சுவாதி நட்சத்திரம், புரட்டாசி சனிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெறுகின்றது. பிரார்த்தனை, நேர்த்திக்கடன்: இந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால், கடன் தொல்லைகள் தீரும்.
வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பும், வேலை இருந்தும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் பதவி உயர்வு உடனடியாக கிடைக்கும். எதிரிகள் எல்லாம் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை நிறைவேறியதும் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். திருவிழா நாட்களிலும், கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களிலும் கோயில் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றங்கள் இருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
விழுப்புரம் பண்ருட்டி சாலை வழியே வருபவர்கள், கள்ளிப்பட்டி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த கோயிலை அடையலாம்.
இந்த கோயில் விழுப்புரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்து நேரடி பேருந்து வசதிகளும், தனியார் வாகன வசதிகளும் எளிய முறையில் உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |