குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட நந்தி பகவான் திருத்தலம்
திருநெல்வேலி- தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள முறப்பநாடு திருத்தலத்தில் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் உள்ளது.
சிவபெருமான் குரு பகவானாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு இந்தக் கோயிலுக்கு மட்டுமே உண்டு.
மேலும் இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இந்தக் கோயிலில் உள்ளது.
இங்குள்ள இறைவனையும் அம்பாளையும் வழிபட திருமணத்தடை நீங்கும். நல்ல குடும்பம் அமையும். உடல் ஆரோக்கியம் கிட்டும்.
இக்கோவிலில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
அந்தவகையில், இத்திருத்தலத்தில் உள்ள நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்டார் என கூறப்படுகிறது.
சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகத்துடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் குதிரை முகம் மாற வேண்டி பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வழிபட்டான்.
சிவபெருமான் மன்னன் முன்பு தோன்றி, ''முறப்பநாடு சென்று அங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடு" என்று ஆசி வழங்கினார்.
சிவபெருமானின் திருவுளப்படி மன்னன் தனது மகளோடு இத்தலம் வந்து தட்சிண கங்கை தீர்த்தக் கட்டத்தில் நீராடினான்.
அந்த மன்னனின் மகள் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிகவும் அழகாக விளங்கினாள். மன்னன் மகளின் குதிரை முகத்தை இக்கோயிலில் உள்ள நந்தி ஏற்றுக் கொண்டது.
இக்கோயில் நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிப்பதை இன்றும் காணலாம். உடனே மன்னன் சிவபெருமானுக்கு இங்கு ஒரு கோயில் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |