நீண்டகாலமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஒருமுறை செல்ல வேண்டிய அனுவாவி முருகன் ஆலயம்
இயற்கை எழில் கொஞ்சும் அனுவாவி முருகன் கோயில் மருதமலை கோயிலுக்கு பின்புறம் அழகுற கட்டமைக்கப்பட்டுள்ளது. அனுமனுடைய தாகத்தினை தீர்த்து வள்ளி, தெய்வானையுடன் அழகுற காட்சியளிக்கும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் வரலாற்றினையும் சிறப்புகளையும் தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் கோயம்புத்தூரில் இருந்து 19 கி.மீ. தொலைவில், மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்தின் கணுவாய் என்ற பகுதியில் அமைந்துள்ளது. சரியாக கூற வேண்டுமென்றால் இந்த கோயில் மருதமலை மலையின் வடக்குப் பக்க சரிவில் அமைந்துள்ளது.
கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் 18 கி.மீட்டர் தொலைவு சென்றால் சின்னதடாகம் என்ற பகுதி உள்ளது. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி 2 கி.மீட்டர் தொலைவு சென்றால் கோயில் இருக்கும் மலைப்பகுதியை அடையலாம்.
மலையடிவாரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லலாம்.கோயிலின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை அகலமான சுமார் 500 படிகள் உள்ளன.
தல வரலாறு:
இலங்கையை ஆண்ட ராவணன், சீதையை கடத்தி சென்று இலங்கையில் சிறை வைத்தான். மனைவியை மீட்க ராமபிரான் ராவணனுடன் போர் புரிந்தபோது, ராவணனின் மகனால் விடப்பட்ட நாகாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மூர்ச்சையானார். அவரை காக்க சஞ்சீவி மலையில் உள்ள அரிய மூலிகை தேவைப்பட்டதால் அதை கொண்டு வர அனுமன் சென்றார்.
மூலிகையை தேடி பறிக்க நேரமாகும் என்பதால் அந்த மலையை அப்படியே பெயர்த்து எடுத்து கொண்டு அனுமன் பறந்து சென்றார். செல்லும் வழியில் அவருக்கு தாகம் ஏற்பட, அவர் முருகப்பெருமானை வேண்டினார். அவர் தனது வேல் கொண்டு ஒரு சுனையை உருவாக்கி அனுமனின் தாகத்தை தீர்த்த இடமே அனுவாவி. அனுமனின் தாகம் தீர்த்ததால் அந்த சுனை ‘அனுமர் தீர்த்தம்’ என அழைக்கப்பட்டது. ["அனு' என்றால் ஆஞ்சநேயர். "வாவி' என்றால் ஊற்று அல்லது நீர்நிலை என்று பொருள்.]
அனுமார் தீர்த்தம் இருப்பதால் இந்த பகுதி அனுமர்வாவி என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி அனுவாவி என அழைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள ஊற்று நீரின் ஆரம்பம் எங்குள்ளது என்பதை தற்போதுவரை கண்டறிய முடியவில்லை.
தல அமைப்பு:
வடக்கே குரு விருட்சமலை, தெற்கே அனுவாவி மலை, மேற்கே கடலரசி மலை என்று 3 பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வாணை சன்னதிகளும், சிவன், ஆஞ்சநேயர், கன்னிமூலகணபதி, நவகிரகம், இடும்பன், பாதவிநாயகர் உப சன்னதிகளும் உள்ளன.
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. அனுவாவி முருகன் கோயிலில் இருந்து சற்று மேற்பகுதியில் சிவன் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
தல சிறப்புகள்:
அனுமன் குளத்தில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னால் குளித்தால் மன நோய், தோல் நோய் உள்ளிட்ட சகல நோய்களும் உடனடியாக குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
திருமணத்தில் தடை ஏற்படுபவர்கள், சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், 5 செவ்வாய் கிழமை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயில் வந்து வழிபட்டால், நினைத்தது நடக்கும்.
வழிபாடுகள்:
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூஜைகள் நடைபெறுகின்றன.
திருவிழாக்கள்:
தைப்பூசம் 2-ம் நாள் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் சூரசம்காரம், திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.
கோயில் சீரமைப்பு:
அனுவாவி கோயில் 1957-ம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் சேதமடைந்த நிலையில் 1969-ம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |