சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிய கோயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

By Aishwarya Jan 17, 2025 01:00 PM GMT
Report

காருண்யத்தின் மையப்பகுதியாகவும் கேட்ட வரத்தினை அளிப்பவளாகவும் மேல்மலையனூர் அங்காளம்மன் திகழ்கிறார். அமாவாசைக்கு பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் அமாவாசை நாட்களில் குறி சொல்லப்படும். நினைத்த காரியம் நடக்குமா?திருமண யோகம் எப்போது? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? வேலைவாய்ப்புகள் அமையுமா? உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, அருள்வந்து ஆடுபவர்கள் குறி சொல்கின்றனர்.

அருள் வாக்கை கேட்பதற்காகவே இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க அங்காளம்மன் கோயில் சிறப்புகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த 5 முக்கிய கோயில்கள்

தல அமைவிடம்:

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாகும். இது விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கி.மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கி.மீட்டர் தொலைவிலும் மேல்மலையனூர் திருத்தலம் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து செல்பவர்கள் காஞ்சிபுரம்-வந்தவாசி-சேத்துப்பட்டு-வளத்தி /அவலூர்பேட்டை -மேல்மலையனூர்; காஞ்சிபுரம்-செய்யாறு-பெரணமல்லூர்-சேத்துப்பட்டு-வளத்தி /அவலூர்பேட்டை -மேல்மலையனூர்; தாம்பரம் -உத்திரமேரூர் -வந்தவாசி-சேத்துப்பட்டு-வளத்தி /அவலூர்பேட்டை -மேல்மலையனூர் வழியாக செல்கின்றனர். மேல்மலையனூருக்கு வேலூரிலிருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் நேரடியாக பேருந்துகள் முக்கியமான நாளன்று செல்கின்றன. இதனால் எல்லா மாவட்டத்திலிருந்தும் மேல்மலையனூருக்கு எளிதாகச் சென்று வரலாம். 

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிய கோயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? | Melmalayanur Angalamman Temple In Tamil

தலத்திற்கான பெயர்க்காரணம்:

ஆரணி, செஞ்சி, திண்டிவனம், போளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பரந்த நிலபரப்பு தண்டகாருண்யம் என அழைக்கப்பட்டது. இதன் மையப்பகுதியே மேல்மலையனூர். தண்டகாருண்யத்தின் பகுதிகளாக விளங்கிய தொண்டை மண்டலம், நடுநாடுப் பகுதிகள் கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டது.

இவர்களின் பரம்பரையில் சிறந்த சிற்றரசனாக விளங்கியவர் மலையன். இவர் ஆண்ட பகுதியே மலையனூர் என அழைக்கப்பட்டது. மலைப்பகுதியை ஆட்சி செய்ததால் மேல்மலையனூர் அறியப்பட்டது. ஒரு கால கட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மனைப் பூங்காவனத்தாள் என்று அழைத்து வழிபாடு செய்துள்ளனர்.

இதற்குச் சான்றாக அங்காளம்மன் பதிகத்தில் பூங்காவில் ஊனுழலுரை ஓங்கார சக்தியே பூங்காவனத் தாயே என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. 

தல வரலாறு:

கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபரா யுகம், கலியுகம் என்ற 4 யுகங்களுக்கு முன்பாக மணியுகம் என்ற ஒன்று இருந்ததாகவும், இந்த யுகத்தில் சிவபெருமான், பிரம்மா இருவருக்கும் 5 தலைகள் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. தோற்றத்தில் சிவபெருமானைப் போன்று இருந்த பிரம்ம ஒரு முறை கயிலாயம் சென்றுள்ளார்.

வந்திருப்பது சிவபெருமான் என எண்ணிய பார்வதி தேவி பிரம்மாவுக்கு பாத பூஜை செய்தார். அதே நேரத்தில் சிவபெருமானும் அங்கு வந்து சேர பார்வதி தேவி தன்னுடைய தவறை உணர்ந்தார். இதனால் கோபமடைந்த பார்வதி தேவி சிவபெருமானை வணங்கி, “இவரும் தங்களை போல இருந்ததால் தவறை செய்து விட்டேன்.

நான் செய்த பூஜைக்கும் இவர் மறுப்பு கூறவில்லை. இதற்கு தண்டனையாக இவருடைய தலையை கொய்திட வேண்டும்.” என வேண்டினார். இதனை கேட்ட சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கொய்தார். வலியால் துடித்த பிரம்மன், சிவபெருமானை பார்த்து, “கிள்ளிய தலை உம்முடைய கையிலேயே ஒட்டிக்கொள்ளட்டும்.உமக்கு வழங்கும் உணவை அந்த தலையே சாப்பிடட்டும்.

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிய கோயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? | Melmalayanur Angalamman Temple In Tamil

பித்தனாக அலையக்கடவாய்.” என சபிக்கிறார். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. துண்டான தலை சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது.

தன் கணவரின் இந்த நிலைக்கு காரணமான பார்வதியை நோக்கி சரஸ்வதி தேவி பின்வருமாறு சபிக்கிறார், “நீ உன் அழகை இழந்து, வயதான கிழவியாய் மாறி, கொக்கிறகை தலையில் சூடி, கந்தல் ஆடையை அணிந்து அலைந்து திரிவாய்.”எனக் கூறுகிறார்.பிரம்மன், சரஸ்வதி ஆகியோரின் சாபப்படி சிவபெருமானும், பார்வதியும் பல இடங்களில் அலைந்து திரிகின்றனர்.

இறுதியாக பார்வதி தேவி திருவண்ணாமலையை சென்றடைகிறார். அங்குள்ள தீர்த்தக் குளத்தில் மூழ்கியதும் பார்வதி தேவியின் சாபம் நீங்கியது. சாபம் நீங்கி பழைய உருவை பெற்ற பார்வதி தேவி கிழக்கு பக்கமாக மேல்மலையனூருக்கு வருகிறார்.

இரவு வேளையானதால் தாயனூர் என்ற ஊரில் ஏரிக்கரை அருகிலேயே தங்கி விடுகிறார். பின்னர் குளித்து விட்டு மேல்மலையனூருக்கு செல்ல முடிவெடுத்தார். குளிக்க போகும் முன்பு தனது ஆரத்தை சிவபெருமான் கழற்றி வைத்தார். அந்த ஆரம் ஒரு பெண்ணாக மாறி பார்வதி தேவியை வணங்கியது.

அவருக்கு ஆசி வழங்கிய பார்வதி, இதே இடத்தில் நீ முத்தாரம்மன் என்ற பெயரில் மக்களுக்கு அருளாசி வழங்குவாய் எனக் கூறிவிட்டு மேல்மலையனூருக்கு பார்வதி புறப்பட்டார். அப்போது அந்த பகுதியை மலையன் ஆட்சி செய்துக்கொண்டிருந்தான். அவனுடைய பூங்காவனத்தில் புற்றுருவில் பார்வதி தேவி வீற்றிருந்தார்.

அந்த பகுதியில் மீனவ குலத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். திடீரென உருவான புற்றுக்கு அந்த மீனவர்கள் மஞ்சள், குங்குமம் வைத்து புடவை சாற்றி, தீபமேற்றி வழிபட்டனர். இதனை அறிந்த மன்னன் மலையன் புற்றை இடித்து அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளான்.

திண்டுக்கல் ஊரில் நாம் பார்க்க தவறிய முக்கியமான ஆலயங்கள்

திண்டுக்கல் ஊரில் நாம் பார்க்க தவறிய முக்கியமான ஆலயங்கள்

மீனவ மக்கள் தடுத்தி நிறுத்தியும் கேட்காமல் புற்று இடிக்க கடப்பாரையை ஓங்கியவுடன் பூதகணங்கள் உருவாகி அங்கிருந்தவர்களை (மன்னன், மீனவ காவலாளிகளை தவிர) மறைய செய்து விடுகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த மன்னன் தன் தவறை மன்னிக்குமாறு அந்த புற்றின் கீழ் மண்டியிட்டு வணங்கினான். அதில் இருந்து பூங்காவனத்தம்மனாக பார்வதி தோன்றி “ஈசனின் சாபத்தை போக்கவே நான் இங்கு வந்து தங்கி இருக்கிறேன்.

என்னை நம்பி வணங்குவோருக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன்.” என்று கூறி மறைந்தார். அன்றைய நாள் முதல் மீனவ பரம்பரையினரே இந்த கோவிலில் பூஜை செய்து வருகின்றனர். அங்கு சென்றால் பாவவிமோசனம் கிடைக்கும் என சிவபெருமானிடம், மகா விஷ்ணு கூறுகிறார்.

அதன்படி பல இடங்களில் அலைந்து திரிந்த சிவபெருமான் இறுதியில் மேல்மலையனூர் சென்றடைகிறார்.அப்போது பார்வதி தேவிக்கும் விஷ்ணு பின்வரும் ஆலோசனைகளை வழங்குகிறார். அதாவது, “சிவபெருமான் இங்கு வந்தவுடன் அவரை சுடுகாட்டில் தங்க வைத்து விட்டு, நவதானியங்களால் செய்யப்பட்ட சுண்டல், கொழுக் கட்டை ஆகியவற்றை சமைத்து அவற்றை ஒன்றாக பிசைந்து 3 சிவலிங்கங்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிய கோயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? | Melmalayanur Angalamman Temple In Tamil

முதல் கவளத்தை சிவபெருமான் கையில் உள்ள திருவோட் டில் போட்டதும் அதனை பிரம்மாவின் தலை சாப்பிட்டு விடும். 2-வது உருண் டையையும் அந்த தலை சாப்பிட்டு விடும். 3-வது உருண்டையை தட்டில் போடுவது போல பாவனை செய்து கீழே போட்டு விட வேண்டும்.

உணவின் சுவையில் மயங்கி கிடக்கும் பிரம்மனின் தலை, தன் நிலையை மறந்து சிவபெருமான் கையை விட்டு கீழே இறங்கி அந்த உருண்டையை சாப்பிட தொடங்கும். அப்போது ஆக்ரோஷமாக உருவெடுத்து வலது காலால் அந்த தலையை மிதித்து விடலாம்.” என ஆலோசனை கூறுகிறார். அதன்படியே பார்வதி செய்ய சம்மதிக்கிறார். பார்வதி தங்கி இருக்கும் இடத்துக்கு வந்த சிவபெருமான் தாயே பிட்சாந்தேகி என்று கேட்கிறார்.

வந்திருப்பது தன் கணவர் என்பதை உணர்ந்த பார்வதி, தன் மகனான விநாயகரை அழைத்து “உன் தந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள். உட்கார்ந்தால் தூங்கி விடுவாய், ஆகையால் நின்று கொண்டே காவல் இரு.” எனக் கேட்டுக்கொண்டார்.

அதன்படி விநாயகரும் காவல் புரிகிறார். உள்ளே சென்ற பார்வதி, மகாவிஷ்ணு கூறியபடி 3 கவளங்களை தயார் செய்து வைத்துவிட்டு, சிவபெருமான் இருக்கும் இடத்திற்கு வந்து அவரை அழைத்துச் சென்று சுடுகாட்டில் தங்கி இருக்குமாறும் காலையில் வந்து பார்ப்பதாகவும் கூறிவிட்டு வருகிறார். சுடுகாட்டில் தங்கிய சிவபெருமான் அங்குள்ள சாம்பலை எடுத்து உடலெங்கும் பூசி கொண்டு படுத்து உறங்குகிறார்.

மறுநாள் காலையில் பார்வதி 3 கவளங்கள் உள்ள தட்டை எடுத்துக்கொண்டு மயானம் வருகிறார். அங்கு மகாவிஷ்ணு கூறியபடியே முதல் உருண்டையை போடுகிறார். அதை பிரம்மனின் தலை சாப்பிட்டு விடுகிறது. 2-வது உருண்டையையும் போடும்போது அதையும் அந்த தலை சாப்பிட்டு விடுகிறது.

3-வது உருண்டையை போடுவதுபோல் பாவனை செய்து கீழே இறைத்து விடுகிறார். உணவின் சுவையில் மயங்கிய பிரம்மனின் தலை தன் நிலையை மறந்து சிவபெருமானின் கையை விட்டு கீழே இறங்கியது. உடனடியாக பார்வதி ஆங்கார உருவம் கொண்டு பிரம்மனின் தலையை தன் வலது காலால் மிதிக்கிறார்.

இதனால் சிவபெருமானுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. உடனே அவர் ஆனந்த தாண்டவம் புரிந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறிவிடுகிறார். சிவபெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்ததால் சிவபெருமானுக்கு தாண்டேஸ்வரர் என்றும், ஆங்காரம் உருவம் கொண்டதால் பார்வதிக்கு அங்காளம் மன் என்றும் பெயர்கொண்டனர்.

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்

 

அம்மனின் கோபத்தை தணிக்க தேவர்கள் முயன்றனர். ஆனால், முடிய வில்லை. முடிவில் ஆலோசனை கூறிய மகாவிஷ்ணு தேவர்களிடம், “அழகான தேரை உருவாக்குங்கள். அதன் மேல் பீடத்தில் நான் கலசமாக மாறி விடுவேன். அதில் அம்மன் அமர்ந்ததும் கோபம் தணியும்.” என்று கூறுகிறார்.

அதன்படி 4 வேதங்கள் சக்கரங்களாகவும், தேவர்கள் ஒருசிலர் தேரின் கால்களாகவும், ஆகாயம் தேர் சீலைகளாகவும், மகாவிஷ்ணு தேரின் மீது உச்சியில் கலசமாகவும் மாறி அழகான தேர் பூங்காவனத்தின் எதிரே நின்றது.

இதைப்பார்த்த அங்காளம்மன் அதன் மீது ஏறி அமர்ந்தார். மற்ற தேவர்கள் அந்த தேரை வடம் பிடித்து பூங்காவனத்தை சுற்றி வந்தனர். அம்மனின் கோபம் முற்றிலும் தணிந்தது. தேவர்கள் அம்மன் மீது பூமாரி பொழிந்தனர்.

அங்காளம்மன் மனம் குளிர்ந்து தேவர்களை வாழ்த்தியதோடு தான் இங்கேயே கோவில் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்கள் வேண்டும் வரத்தினை அளிக்கப்போவதாக கூறினார். அதன்படி இன்றும் அங்காளம்மன் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அளித்து பாதுகாத்து வருகிறார். 

சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கிய கோயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? | Melmalayanur Angalamman Temple In Tamil

தல சிறப்புகள்:

இத்தலத்திற்கு ஒருமுறை வருகை தந்து தங்கள் எண்ணத்தை அம்மனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது வேண்டியபடி நடக்கிறது. மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி நீங்கிய இடமாகக் கருதப்படுவதால் மூன்று அமாவாசை தொடர்ச்சியாக வருகை புரிந்தால் பிணிகள், தோஷங்கள், வைப்பு, ஏவல், பில்லி, சூனியம், காட்டேரி, சேட்டை எதுவாக இருப்பினும் அம்மன் திருவருளால் தானாக விலகுகிறது.

அமாவாசை நாட்களில் இங்கு குறி சொல்லப்படுகிறது. நினைத்த காரியம் நடக்குமா?, திருமண யோகம் எப்போது?, குழந்தை பாக்கியம் கிடைக்குமா?, வேலைவாய்ப்புகள் அமையுமா? உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, இங்கே அருள்வந்து ஆடுபவர்கள் குறி சொல்வார்கள். இதைக் கேட்பதற்காகவே இங்கு ஏராளமான பக்தர்கள் வருகைப்புரிகின்றனர்.

பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச் சேலையுடன் கோவிலுக்கு சென்றவுடன் கோயில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார்.

அதன்பின்னர் கற்பூரத்தை கொளுத்தி, அதை பேய் பிடித்தவர்களிடம் கொடுக்கும் போது அதனை அவர்கள் வாயில் போட்டுக்கொள்கின்றனர். அதில் இருந்து சிறிது நேரத்தில்சம்பந்தப்பட்டவரின் உடலும், மனதும் அமைதியாகி விடுகிறது.

உலகின் முதல் நடராஜர் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?

உலகின் முதல் நடராஜர் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?

விழாக்கள்:

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசைதோறும் நள்ளிரவு 11.00 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. மாசி மாதம் மகா சிவராத்திரியன்று தொடங்கி 7-ம் நாள் தேரோட்டத்துடன் கூடிய பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.

குலதெய்வ வழிபாடு செய்ய மக்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திருக்கோயிலுக்கு வருகை புரிந்து மொட்டையடித்து, காதணி விழா செய்வது, பொங்கல் வைத்து பூஜை செய்வது, அபிஷேக ஆராதனை செய்வது, கஞ்சுலி கபால வேடம், வேப்பஞ்சீலை, மஞ்சள் ஆடை அணிந்து வந்து வேண்டுதல் செய்வது என பல வகையான பூஜைகளை வேண்டுதல்களுடன் செய்கின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US