வேண்டிய நிமிஷத்திலேயே பலன் தரும் நிமிஷாம்பாள் திருக்கோவில்
சென்னை பிராட்வேயில் உள்ள சவுகார்பேட்டையில் காசிசெட்டி தெருவில் முக்தீஸ்வரர் நிமிஷம்பாள் கோயில் உள்ளது. இப்பகுதியில் வாழும் பலர் நிமிஷாம்பாளைத் தங்கள் குலதெய்வமாக நினைத்து வணங்கி வருகின்றனர். இது தனிப்பெண் தெய்வக் கோவில் என்றாலும் வழக்கம் போல இங்கும் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முக்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றது.
காசிச்செட்டி தெரு நிமிஷாம்பாள்
சென்னை சவுகார்பேட்டையில் வாழும் பல வடநாட்டவர் இத் தெய்வத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டு வணங்கி வருகின்றனர். பரபரப்பான காசிச் செட்டி தெருவில் சிறு பகுதியில் ஒரு சிறிய சன்னதியில் சிறிய விக்கிரகமாக இவ்வம்மன் வீற்றிருந்து பெரிய அளவில் இப்பகுதி மக்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.
வேறு பல மாநிலங்களிலும் நிமிஷாம்பாளுக்கு கோவில்கள் உள்ளன. 17 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மன்னர் முதன்முதலில் நிமிஷம்பாளுக்கு கோவில் கட்டினார்.
பிற மாநிலங்களில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானக் மாநிலங்களிலும் நிமிஷாம்பாளுக்கு தனி கோயில்கள் உள்ளன. பெங்களூரில் அக்கி பேட் ராஜராஜேஸ்வரி நகர் கர்னூல் தவணகிரி என நான்கு இடங்களில் நிமிஷாம்பிகாவுக்கு கோவில்கள் உள்ளன. நிஜாமாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நிமிஷாம்பிகாவுக்கு கோவில் உள்ளது.
பிற மாநிலங்களில்
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானக் மாநிலங்களிலும் நிமிஷாம்பாளுக்கு தனி கோயில்கள் உள்ளன. பெங்களூரில் அக்கி பேட் ராஜராஜேஸ்வரி நகர் கர்னூல் தவணகிரி என நான்கு இடங்களில் நிமிஷாம்பிகாவுக்கு கோவில்கள் உள்ளன. நிஜாமாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நிமிஷாம்பிகாவுக்கு கோவில் உள்ளது.
பெயர்க் காரணம்
பக்தர்களின் வேண்டுதலை நிமிஷத்தில் நிறைவேற்றுவதால் அவளுக்கு நிமிஷாம்பாள் என்று பெயர். நிமிஷம் என்றால் கண் என்று சமஸ்கிருதத்தில் பொருள்படும் பக்தர்களை கருணைக் கண் கொண்டு பார்ப்பவள் என்பதால் கிட்டத்தட்ட மீனாட்சி என்பது போல் இவளுக்கு நிமிஷாம்பாள் என்று பெயர்.
தேவியின் பெயர்களில்
ஒன்று நிமிஷாம்பாள் பக்தர்களின் தீவினை கர்மங்களை அழிக்கும் சக்தி பெற்றவள். தேவியின் 1008 பெயர்களை வரிசையாக சொல்லும் லலிதா சகஸ்ரநாமத்தில் நிமிஷாம்பா என்ற பெயரிலும் தேவியை அழைப்பதை காணலாம்.
கதை ஒன்று
முக்தராஜன் என்ற மன்னன் ஆட்சி பரிபாலனம் செய்து வந்த காலத்தில் மக்கள் அவனுடைய நீதியான நேர்மையான ஆட்சியின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவ்வமயம் ஜானு சுமண்டலன் என்ற அரக்கன் முக்தராஜனின் குடிமக்களிடம் தொந்தரவுகள் செய்தான்.
முக்தராஜன் தன் அரண்மனையின் ஆன்றோர் சான்றோர் பெருமக்களை அழைத்து இவனை நம் நாட்டை விட்டு துரத்துவதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தான். 'இவன் சிவபெருமானிடம் வரம் வாங்கி வந்து இவ்வாறு நமக்கு தொல்லை கொடுக்கின்றான். எனவே நாம் சிவபெருமானின் மனைவியாகிய உமையாளிடம் சென்று முறையிட்டால் அவள் நமக்கு உதவுவாள்.
அன்னையின் கருணையே பெருங்கருணை' என்றனர். முக்தராஜன் அன்னை பிரதட்சணமாக வேண்டும் என்று மிகப் பெரிய யாகம் வளர்த்தான். அவன் பக்திக்கு மெச்சி அன்னை அஷ்டபுஜ ரூபிணியாக துர்க்காதேவி எனத் தோன்றினாள். எட்டுக் கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி உக்ர தேவதையாகக் காட்சி கொடுத்தாள்.
அப்போது அவளிடம் மன்னன் 'என் குடிமக்களுக்குத் துன்பம் விளைவிக்கின்ற அசுரனை கொன்று அழிப்பாயாக' என்று வேண்டிக் கொண்டான். அன்னை பார்வதி அசுரன் இருந்த பக்கம் திரும்பி உக்கிரமாகப் பார்த்தாள்.
அசுரன் அம்மனின் கோபாக்கினியில் எரிந்து சாம்பாலானான். அடுத்து அன்னை மன்னனிடம் 'இன்னும் உனக்கு என்ன வேண்டும் ?' என்று கேட்டாள். 'எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இந்த நாடும் நாட்டு மக்களும் வருங்காலத்தில் அரசன் இன்றித் தவிக்கக்கூடாது. எனவே ஒரு நல்ல குழந்தை வேண்டும்.
இந்நாட்டை ஆள ஓர் இளவரசன் பிறக்க வேண்டும்' என்று கேட்டான். உடனே பார்வதி அவன் கையில் ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தாள். மன்னனும் மகாராணியும் அகம் மகிழ்ந்து சென்றனர். தன் கோபப் பார்வையால் ஒரே நிமிஷத்தில் அசுரனைக் கொன்றவள் என்பதால் அவளை மக்கள் நிமிஷாம்பாள் என்று அழைத்தனர்.
கதை இரண்டு
நிமிஷாம்பாள் மன்னருக்குக் காட்சி கொடுத்த போது எட்டுக் கைகளிலும் ஆயுதம் ஏந்தி காட்சி கொடுத்தாலும் சென்னை கோயிலில் இவள் நான்கு கரங்களுடன் சாந்தமாக அமர்ந்திருக்கும் சிலையே வழிபடு தெய்வமாக உள்ளது. அதற்கு ஒரு கதையும் வழங்குகிறது. இவள் மன்னர்களின் தெய்வம்.
சத்ரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் இவளைத் தெய்வமாக வழிபடுகின்றனர். தமிழகத்திற்கு வியாபார நிமித்தம் வந்து இங்கு குடியேறிய வட மாநில மக்கள் தங்களுக்கு என்று இங்கு சொந்தமாக வீடுகளை கட்டத் தொடங்கினர். அவ்வாறு ஒருவர் வீடு கட்ட கிணறு வெட்டிய போது மண்வெட்டியில் நங்கு நங்கு என்று உலோகச் சத்தம் கேட்டது.
அந்த இடத்தில் இருக்கும் மண்ணை அகற்றி விட்டுப் பார்த்தால் அங்கு நிமிஷாமபாளின் ஐம்பொன்னால் ஆன சிலை கிடைத்தது. நம் வீட்டுக் கிணற்றில் இருந்து கிடைப்பதால் இதுவே நம் குலதெய்வம் என்று கருதி வடமாநிலத்து மக்கள் அங்கேயே அவளுக்குக் கோவில் கட்டி வழிபட்டனர். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 400 ஆண்டுகள் ஆகின்றன.
சென்னை கோயில் அமைப்பு
நிமிஷாம்பாள் கோயில் பரபரப்பான கடைவீதி பகுதியில் இருந்தாலும் அக்கோவிலுக்குள் அமைதியும் தெய்வீகமும் நிலவுகிறது. அம்மன் சாந்த சொரூபியாகக் காட்சி தருகின்றாள். அவளது கருவறைக்கு மேல் விமானமும் வாசலில் மூன்று நிலை கொண்ட கோபுரம் அமைந்துள்ளது.
அம்மன் சன்னதிக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சன்னதி சிவபெருமான் சன்னதி நவக்கிரக சன்னதி ஆகியவை காணப்படுகின்றன.
சாந்தமாக்கினர்
நிமிஷாம்பாள் கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் சினம் கொண்ட சிங்கப்பெண் என்பதால் அவளது சினத்தைத் தவிர்க்கவும் ஆக்ரோஷத்தைக் குறைக்கவும் கருவறையின் முன்னே மேரு என்ற ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவள் ருத்திர தேவதையாக இல்லாமல் கருணை வடிவாக மாறி பக்த கோடிகளுக்கு நிமிஷத்தில் வேண்டிய வரம் வேண்டிய படியே அருள் கின்றாள்.
பக்தர்களின் பாசம் சௌகார்பேட்டையில் வாழ்கின்ற வியாபாரிகள், வடநாட்டவரும் தென்னாட்டவரும் காலையில் தங்கள் கடை மற்றும் தொழில் நிலையங்களைத் திறப்பதற்கு முன்பு அம்பாளை தரிசித்து வணங்கி ஆசி பெற்றுச் செல்கின்றனர். விசேஷ நாட்களில் அம்மனுக்குப் பிரசாதம் படைப்பதும் வஸ்திரம் படைப்பதும் பொதுவான நேர்த்திக்கடன்கள் ஆகும்.
கதை
மூன்று
அம்பாளின்
தவம் ஜல முசுண்டனை வதம் செய்த அம்பிகை அவனைக் கொன்ற தோஷம் நீங்க கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். தொடர்ந்து சிவ தியானம் செய்ததால் சிவபெருமான் அவள் தவத்தைக் கண்டு மகிழ்ந்து காட்சி அளித்தார்.
அம்பிகை தான் கொன்று போட்ட சிவ பக்தனான ஜல முசுண்டனுக்கு தாங்கள் முத்தி அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் அம்பிகையின் தவத்தில் மகிழ்ந்து தன் பக்தனான ஜல முசுண்டனுக்கு முக்தி அளித்தார்.
இதனால் அவர் முக்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். கர்நாடகாவில் மவுத்திகேஸ்வரர் என்று அழைக்கின்றனர்.
கதை நான்கு
முக்த்ன் கட்டிய கோயில் கர்நாடகாவில் ஸ்ரீரங்கம் பட்டினம் அருகில் கஞ்சம் என்னும் இடத்தில் முக்தராஜன் கட்டிய ஈஸ்வரன் கோவில் என்பதால் முத்தீஸ்வரன் என்று கருவறை நாதர் அழைக்கப்பட்டார். ஆனால் இங்கும் நிமிஷாம்பாள் மாரியம்மன், காளியம்மன் போல தனித் தெய்வமாக இருந்து அருள் வழங்குகின்றாள். இவள் சிவனின் இணை அல்ல.
கர்நாடகக் கோவிலில் ஐந்து நிலை கோபுரம் உள்ளது. அம்பாள் கிழக்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் துர்க்கையின் அம்சமாக வெற்றித் தெய்வமாக போர்த் தேவதையாக கொற்றவை வடிவில் காட்சியளிக்கின்றாள்.
அவளது கோபத்தைக் குறைப்பதற்காக இங்கும் அவள் சிலைக்கு முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவள் தலைக்கு மேலே தர்மசக்கரமே குடையாய் அமைக்கப்பட்டுள்ளது .முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தமாக உள்ளன.
தலைக்கு மேல் தர்மச் சக்கரம் இருப்பதால் இக்கோவில் பழைய தாரா தேவிக் கோவில் என்றும் ஈஸ்வரன் சன்னதி காலத்தால் பிந்தியது என்பதையும் அறிந்து கொள்ளலாம். இக்கோவிலில் காலப்போக்கில் லட்சுமி நாராயணர் சன்னதி விநாயகர் சன்னதி அனுமன் மற்றும் சூரியனுக்கும் தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன.
சிறப்பு வழிபாடுகள்
சென்னை காசிச் செட்டி தெருவில் உள்ள நிமிஷாம்பாள் கோவிலில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். நிமிஷாம்பாள் ஜெயந்தி, நவராத்திரி, பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு.
திருமணத் தடை நீங்கும்
சென்னையில் அம்மன் சந்நிதிக்கு முன்பு ஐந்து நெய் விளக்கு ஏற்றுகின்றனர். அத்துடன் வாசமுள்ள மரிக்கொழுந்து மலரை அம்மனுக்குச் சூட்டி வழிபடுகின்றனர். இதனால் திருமணத் தடைகள் அகன்று விரைவில் நல்ல மணமகன் அல்லது மணமகள் கிடைப்பாள். குடும்பத்தில் வறுமை நீங்கி செல்வம் தழைக்கும். தொழிலில் மேன்மை கிடைக்கும். சென்னை நிமிஷாம்பாள் கோவிலில் உள்ளே நுழைந்த உடன் கருவறை நாயகி காட்சி தருகின்றாள்.
சுற்றுப் பிரகாரத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடன் கூடிய வெங்கடாசலபதிக்கு தனி சன்னதி உள்ளது. கருவறையின் முன்பு நவக்கிரக சந்நிதி உள்ளது. இந்தச் சன்னதியில் சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரில் வருவது போல் சிலை வைக்கப்பட்டுள்ளது.
நிமிஷாம்பாள் ஜெயந்தி
வைகாசி மாதம் வளர்பிறை தசமி திதியில் நிமிஷாம்பாள் முக்த ராஜனுக்குக் காட்சி கொடுத்து அவன் வேண்டுதலை நிறைவேற்றினாள் என்பதால் அந்த நன்னாள் அவளது பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகின்றது. நிமிஷாம்பாள் ஜெயந்தி அன்று அம்மனுக்கு 108 கலச அபிஷேகமும் துர்கா பூஜையும் நடைபெறுகின்றன.
முன் வரலாறு
நிமிஷாம்பாள் போர் தேவதையாக வணங்கப்படுவதும் அவள் தலைக்கு மேல் தர்மச்சக்கரம் வண கொற்றக் குடையாக விளங்குவதும் அவள் பழைய தாரா தெய்வம் என்பதை உறுதி செய்கிறது. எனவே தான் அவள் தனித் தெய்வமாக விளங்குகிறாள். சிவலிங்க சந்நிதி பிற்சேர்க்கை ஆகும்.
மஹாயானா, வஜ்ராயான பௌத்த பிரிவினர் தாராவின் காவல் தெய்வாம்சத்தை உஷ்ணிஷா சீதாதபத்ரா என்ற பெயரில் வணங்கினர். இப்பெண் தெய்வத்துக்குத் தர்மச் சக்கரத்தை நீதி நியாயத்தைக் குறிக்கும் வெண் கொற்றக் குடை உண்டு.
சீதா என்றால் வெண்மை ஆபத்ரா என்றால் குடை. இவள் தீமையை (அசுரனை) அழித்து நன்மையை (குழந்தையை) தரும் தெய்வம் ஆவாள். இவளை வெண் குடை தெய்வம் (White Umbrella Goddess) என்பர்.
இவள் தலைக்கு மேல் தங்கத்தாலான தர்மச் சக்கரம் சுழல்வதும் உண்டு. தீமை விளைவிக்கும் எல்லா அசுரர்களையும் கொல்லும்படி புத்தர் இவளுக்குக் கட்டளையிட்டார். இவள் தீமையை அழித்து நன்மையை அளிக்கும் பெண் தெய்வம் ஆவாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |