தினம் ஒரு திருமணம் செய்யும் நித்திய கல்யாணப் பெருமாள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு எம்பெருமான் நித்திய கல்யாணப் பெருமாளாக, ஆதி வராக மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். இதனால் இவ்வூர் வராகபுரி என்றும் அழைக்கப்பட்டது.
இங்கு எழுந்தருளியிருக்கும் வராக பெருமாள் லட்சுமி வராக மூர்த்தியாக அன்யோன்ய கோலத்தில் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் அகிலவல்லி தவிர கோமளவல்லி நாச்சியார் என்னும் தாயாரும் தனிச் சந்நிதி கொண்டுள்ளார்.
பெருமாளின் திருக்கோலம்
நித்யகல்யாண பெருமாள் தனது இடது மடியில் அகில வல்லி என்னும் நாச்சியாரை இருத்தி வலது கையால் அவரை அனைத்து படி, இடது கையால் அன்னையின் திருப்பாதத்தைத் தாங்கிய படி காட்சி அளிக்கின்றார். பெருமாளின் வலது கால் பூமியில் பதிந்திருக்க அக்காலின் கீழே ஆதிசேஷன் காணப்படுகின்றான்.
வலது மேல் கையில் சக்கரமும் இடது மேல் கையில் சங்கும் உள்ளது இத்தகைய அன்யோன்ய கோலத்துடன் ஆதி வராக மூர்த்தி காட்சியளிக்கும் இத்திருக்கோயிலுக்கு பிரிந்த தம்பதியர் வந்து வேண்டிக் கொண்டால் முன்பை விட பிரியமாகவும் சிநேகமாகவும் அந்யோந்யமாகவும் இருப்பார்கள்.
கோஷ்டத்தில் விநாயகர்
நித்திய கல்யாண பெருமாள் கோவில் கோஷ்டத்தில் விநாயகரும் வைஷ்ணவியும் காட்சியளிப்பது தனிச் சிறப்பாகும். பொதுவாக வைணவக் கோயில்களில் விநாயகரைப் பார்ப்பது அரிது. ஓரிரு கோவில்களில் தும்பிக்கையாழ்வார் என்ற பெயரில் தூணில் இருப்பார். இக்கோவிலில் கோஷ்டத்தில் இடம்பெற்றுள்ளார்.இக்கோவிலில் 12 ஆழ்வார்களுக்கும் மணவாள மாமுனிகளுக்கும் ராமானுஜருக்கும் சன்னதிகள் உள்ளன.
கல்யாணக் கதை
ஆதி வராக மூர்த்திக்கு தினமும் ஒரு கல்யாணம் நடப்பதால் நித்திய கல்யாணப் பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். காலவ ரிஷி என்பவருக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர் தன்னுடைய அனைத்துப் பெண் குழந்தைகளையும் பெருமாளே மனமுவந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தவம் இருந்தார்.
அவருடைய தவத்தின் உறுதியைக் கண்ட பெருமாள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார். இத்தலத்தில் எழுந்தருளி காலவ ரிஷியின் மகள்களை அங்கு அழைத்து வரச் செய்து தினம் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆக 360 நாட்களும் இவருக்கு இங்குத் திருமணக் கொண்டாட்டம் தான். இவர் மணமகன் கோலத்தில் இருப்பதால் அவரது தாடையில் இயற்கையிலேயே திருஷ்டி போட்டு உள்ளது. எனவே கண் திருஷ்டி உள்ளவர்கள் இங்கு வந்தால் கண் திருஷ்டி விலகும்.
திருமணத் தடை விலக
கல்யாண தீர்த்தம் என்று அழைக்கப்படும் இத்தலத்திற்கு திருமணத்தடை உள்ளவர்கள் வந்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு உடனே திருமணம் நடைபெறும். திருமண தோஷம் உள்ளவர்கள் இரண்டு மாலைகளை வாங்கி வந்து ஒன்றைப் பெருமாளுக்கு சாத்தி வணங்கவேண்டும்.
மற்றொன்றை பட்டர் பெருமாளிடம் வைத்து தோஷம் உள்ளவரின் கையில் கொடுப்பார். அவர் அந்த மாலையுடன் கோவிலை ஒன்பது சுற்று சுற்றி வந்த பின்பு கொடி மரத்தின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பின்பு மாலையுடன் வீட்டுக்கு செல்ல வேண்டும்.
திருமணம் ஆனதும் தம்பதி சமேதராய் இங்கு வந்து அந்த மாலையை இங்கே உள்ள புன்னை மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும். கோவிலை மூன்று முறை வலம் வந்து பெருமாளையும் தாயாரையும் சேவிக்க வேண்டும்.
மணமகனுக்குப் பஞ்சம்
திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள வராக மூர்த்தியும் திருவிடந்தை வராக மூர்த்தியும் ஒருவரே என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. திருமலையில் பல்லவ மன்னன் ஒருவன் தினம் ஒரு ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் பெண் கிடைத்து விட்டாள். ஆனால் அவளுக்கு ஏற்ற மணமகன் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று அவன் கலங்கி நிற்கையில் எளிவந்த பிரானாகிய எம்பெருமான் இரக்கம் கொண்டு அவனுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற விரும்பி மணமகன் கோலத்தில் அங்கு வந்தார். அவனுடைய பிரார்த்தனை நிறைவேறியது.
சுக்கிர தோஷம்
நீங்கும் திருவிடந்தையில் வராக மூர்த்திக்கு பசு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அபிஷேகம் செய்பவருக்கு சகல தோஷங்களும் நிவர்த்தி அடையும். இது சுக்கிர தோஷம் தீரும் தலம் என்பதால் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொண்டால் திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர்.
வெளிப்பிரகாரத்தில் ஆண்டாளுக்கு தனி சன்னதி உண்டு. அங்கே ரங்கநாதன் ரங்கநாயகிக்கும் சன்னதிகள் உள்ளன. சுக்ர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்க நாதனை போல் திருவிடந்தை ரங்கநாதனும் திருமண தோஷத்தை நீக்குவார்.
நாகதோஷம் நீங்கும்
திருவிடந்தைக்கு வந்து ரெங்கநாதனையும் வராக மூர்த்தியையும் வந்து வணங்கினால் நாகதோஷமும் நீங்கிவிடும். ஜாதகத்தில் ஏழு எட்டாம் இடங்களில் ராகு கேது இருப்பதால் நாக தோஷம் காரணமாக திருமணத் தடை ஏற்படும். இவர்களுக்கு இத்திருத்தலம் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். மக நட்சத்திரமன்ற இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. அன்றைக்கு இக்கோவிலுக்கு வந்து வணங்கினால் மோட்சம் கிட்டும் என்பதும் ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.
புராணக்கதை 2.
மேகநாதன் என்ற அசுரனின் மகன் பெயர் பலி என்பதாகும். இவன் மிகச் சிறந்த நீதிமான். மாலி, மாலியவான், சோமாலி என்ற மூன்று அசுரர்களும் தேவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வந்தனர் ஆனால் தேவர்கள் இம்மூவரையும் போரில் தோற்கடித்து விரட்டி விட்டனர்.
தோற்றுப் போன மூவரும் பலியிடம் வந்து சரணாகதி அடைந்து தேவர்களை வெற்றி கொள்ள தங்களுக்கு உதவுமாறு வேண்டி நின்றனர். பலியும் இவர்களோடு சேர்ந்து தேவர்களோடு போரிட்டு அவர்களை வென்றான்.
தேவர்களுடன் போரிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க பலி இத்திருத்தலத்திற்கு வந்து வராக தீர்த்தத்தில் குளித்து தினமும் எம்பெருமானுக்கு பூஜை செயதான். மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று எம்பெருமான் காட்சி கொடுத்து அவனுக்கு மோட்சமும் அருளினார் என்பது இத்தல புராணக் கதை ஆகும்
திருத் தலப் பெருமை
நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் கோவிலில் வைகாணச ஆகமப்படி நான்கு கால பூஜை நடைபெறுகின்றது. திருமங்கையாழ்வார் இக்கோவிலின் மீது 10 பாசுரங்கள் பாடியுள்ளார். அழகிய மணவாளதாசர் 108 திருத்தலங்களையும் போற்றும் வகையில் 108 திருப்பதி அந்தாதி பாடினார்.
அதில் 'தொண்டானேன் திருவிடை என்றைக்குமே தெரிந்து' என்று இத்தலத்திற்குத் தான் தொண்டனாகியதைக் குறிப்பிட்டுள்ளார். இவரைப்போல் குரவை ராமானுஜ தாசரும் 108 திருத்தலங்களைப் பற்றி 108 திருப்பதி திருப்புகழ் என்ற நூலை இயற்றினார்.
இந்நூலில் 92 ஆவது பாசுரத்தில் திருவிடந்தையைக் குறிப்பிட்டுள்ளார். 'விட எந்தை பதிவாழ் மேவிய பெருமாளே' என்று பெருமாளை அழைத்து வணங்குகின்றார். கோவில் விழாக்கள் திருவிடந்தையில் மாதந்தோறும் ஒரு விழா நடைபெறுகின்றது.
சித்திரையில் பிரம்மோற்சவம், வைகாசியில் வசந்தோற்சவம், ஆனி மாதம் கருட சேவை, ஆடிப்பூரத்தில் நாச்சியாருக்கு விழா, ஆவணியில் கஜேந்திர மோட்சம், கண்ணனின் பிறப்பைக் கொண்டாடும் போது உறி அடி திருவிழா, புரட்டாசி மாதம் நவராத்திரி மற்றும் விஜயதசமி விழா, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபம், மார்கழியில் தனுர் மாச பூசை, மாசி மாதம் மாசி மகம், பங்குனி மாதம் பங்குனி உத்திரம் என்று 12 மாதமும் இங்குக் கோயில் விழாக் கோலம் கொண்டிருக்கும்.
இக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு வீடு கட்டுதல், மனையடி வாங்குதல் ,பதவி உயர்வு, நல்ல சம்பள உயர்வு, நல்ல வேலை கிடைத்தல், விருப்பப்பட்ட வாகனங்கள் வாங்குதல் என்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்ற நல்ல பலன்கள் கிடைக்கும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |