5000 ஆண்டுகளாக அருள் தரும் பாடி படவேட்டம்மன்
சென்னையில் பாடி என்ற பகுதியில் முக்கிய சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது.
படைவீட்டு அம்மன் என்ற பெயர் படவேட்டம்மன் என்று மாறியுள்ளது. படை வீடு என்றால் போர்ப் பாசறை. போருக்குச் செல்லும் வீரர்கள் தங்கி இருக்கும் இடம். இவர்கள் தங்களின் வெற்றிக்காக வணங்கிச் சென்ற கொற்றவைத் தெய்வமாக படைவேட்டம்மன் விளங்குகிறார்.
படவேட்டம்மன் கோவில்கள் திருவள்ளுவர் மாவட்டத்தில் வடமதுரை என்ற ஊரிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடக்கப்பட்டு என்ற ஊரிலும் குரோம்பேட்டிலும் உள்ளன.
உருண்டு வந்த தலை
சென்னையிலிருந்து திருப்பதிக்கு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்த சிலர் வழியில் ஒரு கல் வட்டமாக உருண்டு ஓடுவதைப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து சென்ற போது அந்தக் கல் சாலை ஓரத்தில் ஒரு இடத்தில் நின்று விட்டது. அந்த கல்லைக் கூர்ந்து கவனித்த போது அது ஒரு அம்மனின் முகம் என்பது தெரிந்தது.
அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது சாமி வந்து 'நான் சோழ மன்னரின் படைவீட்டு அம்மன். எனக்கு இங்கு கட்டப்பட்டிருந்த கோவில் காலப்போக்கில் அழிந்து போய்விட்டது. எனக்கான இடத்தைத் தேடி நான் உருண்டு கொண்டே வருகின்றேன். இன்னும் சிறிது தூரம் சென்றால் அங்கு ஒரு வேப்பமரம் இருக்கும். அதற்கு அடியில் என்னை வைத்து வழிபட்டு வந்தால் உங்கள் அனைவருக்கும் நான் நல்லது செய்வேன்' என்று கூறியது.
வேப்ப மரத்தடியில்
அம்மனின் அருள் வாக்குக் கேட்ட மக்கள் அருகில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் அம்மனின் முகத்தை மட்டும் வைத்து வழிபடத் தொடங்கினர். வேப்ப மரத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ள அம்மன் முகத்திற்கு அக்கினி மகுடமும் இல்லை. அதன் தலையின் மீது நாகங்கள் படம் எடுக்கவும் இல்லை. வெறும் முகம் மட்டுமே உள்ளது ஆயினும் படைவீட்டு அம்மனை வெறும் தலை மட்டுமே வைத்து வழிபடப்படுவதால் இதனை கருமாரி மற்றும் ரேணுகா தேவி அம்மனுடன் இணைத்துவிட்டனர்.
அத்தி மரச்சிலை
அம்மன் முகம் அருகே அருகில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அம்மனின் முழு உருவம் முழு உருவச்சிலை ஒன்று உள்ளது. இவ்விரண்டின் எதிரே ஒரு முனிவரின் சிலை உள்ளது. அம்மனின் முகம் மற்றும் முனிவரின் சிலை ஆகிய இரண்டையும் இணைத்து இவ் அம்மனை ரேணுகாதேவி அம்மன் என்றும் எதிரே இருக்கும் முனிவர் சிலையை பரசுராமர் என்றும் மக்கள் கருதுகின்றனர்.
ரேணுகா தேவி அம்மன் கதை
ஜமதக்னி முனிவரின் மனைவியான ரேணுகாதேவி மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த மன்னனின் மகள் ஆவாள். அவள் ஜமதக்னி முனிவரையே திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பியதால் மன்னர் குடும்பத்தார் அவளை இம்முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். முனிவர் அவளிடம் 'இனி நீ இளவரசி போல இந்தக் காட்டில் வாழ முடியாது. இந்தக் குடிலில் என்னுடைய மனைவியாக எளிமையான வாழ்க்கை நடத்த வேண்டும்'. என்றார். அவளும் ஒப்புக்கொண்டாள்.
ரேணுகாதேவி ரிஷி பத்தினியாக வாழ்ந்து வரும் நாளில் அவள் தினமும் காலையில் ஆற்றுக்குப் போய் அங்கிருக்கும் பச்சை மண்ணை எடுத்து பானை வனைந்து அதில் புதுத் தண்ணீர் கொண்டு வந்து தன் கணவரின் பூஜைக்குக் கொடுப்பாள். ஒரு நாள் அவள் அவ்வாறு ஆற்றுக்குப் போன வேளையில் ஆற்று நேரில் வானத்தில் சென்று கொண்டிருந்த கந்தர்வனின் பிம்பம் தெரிந்தது. இவ்வளவு அழகான ஒருவனா என்று ரசித்தபடி அவனை பார்த்து வியந்தாள்.
ஆகாயத்தில் கந்தர்வனின் புஷ்ப விமானம் போய் மறைந்ததும் அவள் ஆற்று மணலை எடுத்து பானை செய்யத் தொடங்கினாள். பானை வரவில்லை. தன் கணவன் அல்லாத வேறு ஆண்மகனைக் கண்டு அவன் அழகை ரசித்த காரணத்தினால் அவள் வனைந்த போது பானை உருவாகவில்லை. ஆற்று மண் உதிர்ந்து கொண்டே இருந்தது. அது கெட்டிப்பட்டு பானையாக உருப்பெறவில்லை. அவள் அழுது கொண்டே ரிஷியின் குடியிலுக்கு வந்தாள்.
ரேணுகாதேவி தண்ணீர் கொண்டு வராததைக் கண்ட ரிஷி என்ன நடந்தது என்பதை தன் ஞான திருஷ்டியால் புரிந்து கொண்டார். ஜமதக்னி தன் மனைவியின் கற்பு மாசுபட்டதை உணர்ந்து அறிந்து ஆத்திரம் கொண்டார். இனி இவளை தானோ தான் சம்பந்தப்பட்ட எந்த பொருளோ தீண்டக்கூடாது தொடக்கூடாது என்ற முடிவில் தன் மகனை அழைத்து உன் தாயை வெட்டிக் கொள் அவள் கந்தர்வனைப் பார்த்து தன் கற்பை இழந்தாள் என்றார்.
அதிர்ச்சி அடைந்த மகன் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதால் தந்தையின் கட்டளைக்கு இணங்கினான். தன் மகன் தன்னை கொல்ல முடிவெடுத்து விட்டான் என்பதை அறிந்த ரேணுகாதேவி 'மகனே நீ என்னை கொல்லாதே. அந்த பாவம் உனக்கு வரவேண்டாம்' என்று சொல்லி ஓடினாள்.
உயிருக்காக ஓடி வரும் ரேணுகாதேவிக்கு இரு குடியினர் அடைக்கலம் கொடுத்தனர். ஆனாலும் அங்கும் அவளைத் தேடி பரசுராமன் கத்தியோடு வந்து நின்றான். அவன் தன் தாயை வெட்ட வந்த போது குறுக்கே பாய்ந்து தடுத்த ஒரு சலவை தொழிலாளிப் பெண்ணை முதலில் வெட்டிப் போட்டான். சலவைத் தொழிலாளியின் குடிசைக்குள் ஒளிந்திருந்த தன் தாயைக் கண்டுபிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்து வாசலில் வைத்து வெட்டிப் போட்டான். இரண்டு பெண்களும் தலை வேறு முண்டம் வேறாக அங்குக் கிடந்தனர்
பரசுராமன் தன் தஸ்யை வெட்டிய அரிவாளோடு தன் தந்தையிடம் திரும்பி வந்தான். ஜமதக்னி முனிவர் 'நல்லது செய்தாய். உனக்கு வேண்டியதைக் கேள்' என்றார். மகன் தந்தையை பார்த்து 'நன்றி தந்தையே எனக்கு என் தாயார் வேண்டும்' என்றான். முனிவர் அதிர்ந்து போனார். அவளைப் போய் அம்மா என்று சொல்கிறானே என்ற அதிர்ச்சி அவர் மனதுக்குள் தோன்றியது. ஒருவனுக்கு ஒரு தாய் தானே இருக்க முடியும்! எனவே அவன் தன் தாயைக் கேட்பதில் வியப்பொன்றுமில்லை என்பதை உணர்ந்து புண்ணிய தீர்த்தத்தை அவனிடம் கொடுத்து 'இதை தெளித்து உன் தாயை உயிரோடு உயிரோடு எலும்பு' என்றார்.\
பரசுராமன் கையில் தீர்த்தத்துடன் வேக வேகமாக ஓடி வந்தான் தன் தாயும் சலவை தொழிலாளிப் பெண்ணும் வெட்டப்பட்டு கிடக்கும் இடத்திற்கு வந்து முகத்தையும் உடலையும் எடுத்து ஒட்ட வைத்தான். தீர்த்தத்தைத் தெளித்தான். இருவரும் உயர் பெற்றனர். ஆனால் உடலும் தலையும் வெவ்வேறாக இணைக்கப்பட்டிருந்தது. இனி யாரை தாய் என்று அழைப்பது என்று குழம்பினான். அவன் தன் தாயின் முகத்தை மட்டும வைத்து அவளைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினான்.
மாரியம்மன் கதை
ரேணுகா தேவி கதை ஒரு புராணக் கதை. இதைத் தமிழகத்தில் மாரியம்மன் கதையாக வார்த்தனர். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இவளை சீதள தேவி என்பர்.
ஜமதக்னி முனிவர் இறந்ததும் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறினாள். அப்போது மழை பெய்து நெருப்பு அணைந்தது. அவளது ஆடைகள் கரிந்து போயின. உடலில் தீ கொப்புளங்கள் தோன்றின. அவள் அங்கிருந்த வேப்ப மரத்தின் இலைகளை ஆடையாக உடுத்திக் கொண்டு வெளியே வந்தாள். இதனால் இங்கு வேப்பிலை ஆடை உடுத்திக்கொண்டு வந்து நேர்த்தி கடன் செய்கின்றனர்.
அம்மை வந்தவர்கள் மாரியம்மனுக்கு செய்யும் நேர்த்திக்கடன்களை எல்லாம் இங்குப் படவீட்டு ரேணுகாதேவி அம்மனுக்கும் செய்கின்றனர். ரேணுகாதேவி கதையையும் மாரியம்மன் கதையையும் ஒன்று சேர்த்து ஒரே அம்மனாக தற்போது வட தமிழகத்தின் பல பகுதிகளில் வணங்கி வருகின்றனர்.
பாணலிங்கம்
ருத்ர தேவதைகள் வழிபடப்பட்ட இடங்களில் ஆதி சங்கரர் சென்று அவற்றின் தீட்சண்யத்தை குறைக்க தாடங்கம் அணிவித்தல், ஸ்ரீ சக்கரம் பதித்தல், பாணலிங்கம் பிரதிஷ்டை செய்தல் போன்ற செயல்களை செயதுள்ளார். அவ்வாறு இங்கு அம்மனின் வீரியத்தை அடக்க லிங்கம் வைக்கப்பட்டது. பாண லிங்கம் என்பது ஆவுடை இல்லாத லிங்கம் ஆகும். இஃது ஆற்றல் மிக்க வீரியம் மிக்க லிங்கம் ஆகும். இங்கு அம்மனே ஆவுடையாக இருப்பதால் சக்தி தலங்களுள் முக்கியமான தலமாக விளங்குகிறது.
கோவில் அமைப்பு
படவீட்டம்மன் கோயிலில் வேப்ப மரத்தின் கீழ் அம்மனின் சிரசு கருவறைத் தெய்வம் போலக் காட்சி அளிக்கின்றது. அம்மன் முன்பு எருது உள்ளது. அதன் அருகில் விநாயகர் மற்றும் முருகனுக்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கருமாரி அம்மனுக்கு ஒரு தனிச் சன்னதி உள்ளது. படவேட்டம்மன் உற்சவ மூர்த்தியாக நாகங்கள் குடை பிடிக்கும் ஓர் அம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அருகே நாகங்களுக்கும் தனியாக ஒரு சன்னதி உள்ளது. கோவில் நாகம் ஒன்றும் உள்ளது. அது எல்லோர் கண்களுக்கும் தெரிவதில்லை. ஒரு முனிவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. ரேணுகாதேவி கதையினர் இவரைப் பரசுராமர் என்பர். இது பரசுராமர் பிறந்த புண்ய க்ஷேத்திரம் என்றும் கூறுவர். (பரசுராமர் கதை வட நாட்டில் தோன்றிய புராணக் கதை என்பதால் அக்கதை பிற்சேர்க்கை என்பது தெளிவாகின்றது.)'
பிரசாதம்
படவேட்டம்மன் கோயிலில் அருகில் இருக்கும் ஒரு இடத்திலிருந்து கொண்டு வரப்படும் மண் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. வருடா வருடம் ஆனித் திருமஞ்சனம் நடைபெறும் நாளன்று குறிப்பிட்ட அந்த இடத்திற்குச் சென்று அங்குப் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
அந்த மண்ணைப் பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர். நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் குழந்தைகளும் இம்மண்ணை தண்ணீரில் கலந்து அருந்தி குணம் அடைகின்றனர். சங்கரன்கோவிலில் புற்று மண்ணை இதுபோன்று பிரசாதமாக கொடுப்பதுண்டு. புற்று மணல் பல நோய்களை சுகப்படுத்துகின்றது.
நேர்த்திக்கடன்கள்
படவேட்டம்மன் கோயிலில் தங்களுடைய வேண்டுதல் நிறைவேறியதும் எடைக்கு எடை நாணயம் செலுத்துகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கின்றனர். அம்மனுக்குக் கண்மலர் சாத்தும் பழக்கமும் இங்கு உள்ளது. தமது வேண்டுதல் நிறைவேறினால் வேப்பிலை ஆடை உடுத்தி கோவிலை வலம் வருகின்றனர். அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
குழந்தை இல்லாதவர்கள் இங்குத் தொட்டில் கட்டி விட்டு குழந்தை பிறந்ததும் இங்கு வந்து குழந்தைக்கு மொட்டை அடித்து, காது குத்துகின்றனர். ஆடு, சேவல் பலியிடும் வழக்கமும் உள்ளது. உடம்பில் மறு, பரு ஆகியவை குணமாவதற்கு வெல்லமும் மிளகும் வாங்கிக் காணிக்கையாக செலுத்துகின்றனர். கோடி தீபம் ஏற்றுவதும் இத்தளத்தின் சிறப்பு நேர்ச்சை ஆகும்.
சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்த நாட்களாக சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன மாதந்தோறும் பௌர்ணமி அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகின்றது தமிழ் மாத பிறப்பன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன நவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
5000 ஆண்டுக் கோயில்
வீர யுகத்தில் கொற்றவையாக படைவீரர்களால் வணங்கப்பட்டு வந்த படை வீட்டம்மன் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்த கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி ஏழாம் நூற்றாண்டு வரை சாக்த நெறியில் தாந்திரீக பௌத்த பிரிவினரால் (ஆவுடை வழிபாடு) வணங்கப்பட்டாள். அன்று முதல் இன்று வரை சுமார் 5000 ஆண்டுகளாக இத்தலத்தில் படவேட்டம்மன் அருள் தரும் அம்மனாக தாயாக இருந்து மக்களின் குறைகளைப் போக்கி வேண்டும் வரம் அளித்து அருள் பாலித்து வருகிறாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |