பிள்ளை வரமருளும் திருவதிகை வீரட்டானேஸ்வரர்

By பிரபா எஸ். ராஜேஷ் Feb 26, 2025 02:07 PM GMT
Report

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. தமிழ்நாட்டின் எட்டு வீர சைவக் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். திருவதிகை நடுநாட்டில் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவரும் பாடிய 218 ஆவது தேவாரத் திருத்தலம். திருவதிகையின் பழைய பெயர்கள் அதிராஜமங்கலம் அதிராஜமங்கலியாபுரம், ஆகியன. கல்வெட்டுகளில் திருவதிகையின் பெயர் இவ்வாறு காணப்படுகின்றது.

மூலவர்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலின் மூலவர் வீரட்டானேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இவரது சிவலிங்கத் திறமையை நீ தஞ்சையில் உள்ள பெரிய ஆவுடையார் போல 16 பட்டைகளுடன் உயரமாக காட்சியளிக்கின்றது சிவலிங்க திருமேனிக்கு பின்புறம் அம்மையப்பர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையின் விமானம் எண்கோணத்துடன் கூடிய தேர் வடிவில் உள்ளது. அம்மனின் பெயர் பெரியநாயகி என்ற திரிபுர சுந்தரி. கருவறை கோஷ்டத்தில் வீரட்டானேஸ்வரருக்குப் பின்னால் லிங்கோத்பவரும் கோமுகம் அருகே துர்க்கையும் தனி சன்னதியில் சண்டிகேஸ்வரரும் உள்ளனர். இங்கு சிவனே சிவனை வழிபடுவதாக கருதப்படுகிறது. அருகில் சூல தீர்த்தம் உள்ளது

பிள்ளை வரமருளும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் | Thiruvathigai Veerattaneswarar Temple 

தீர்த்தங்கள் பல

திருவதிகையில் மருள்நீக்கியாருக்கு சூலை நோய் வர வேண்டும் என்று சிவபெருமான் சூலாயயுதத்தால் பூமியில் குத்தினார். அங்கு நீர் பீறிட்டு பொங்கியது. அதுவே இன்று சூலத் தீர்த்தம் எனப்படுகின்றது. இது தவிர இப்பகுதியில் பாயும் கெடில நதியும் இங்குத் தீர்த்தமாகக் கருதப்படுகின்றது. இங்குக் கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்று வேறு இரண்டு தீர்த்தங்களும் உள்ளன.

கோவில் அமைப்பு

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேர் வடிவில் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் நிழல் தரையில் விழுவது கிடையாது. இக்கோவிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஏழு நிலைகளுடன் ஏழு கலசங்களுடன் உயர்ந்து காணப்படுகின்றது.

கருவறைக்கு முன்னால் 14 கால் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில்வாகனன் போன்றோரின் சிற்பங்கள் உள்ளன. இக்கோவிலுக்குத் திருப்பணி செய்த செட்டியாரின் சிற்பங்களும் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய தம்பிரானின் சீடர் சிவஞானத் தம்பிரான் இக்கோவிலில் முதன்முதலாக அப்பர் பெருமானுக்கு 10 நாட்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார் அது சமயம் அப்பருக்கு உற்சவம் மூர்த்தியும் தனிச் சன்னதியும் எழுப்பப்பட்டது அப்பரின் தமக்கை திலகவதியாருக்கும் அவரது சிவத்தொண்டின் சிறப்புக் கருதி தனிச் சந்நிதி உள்ளது.

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

மாரியம்மன் வரலாறு வழிபாடும்

கோபுர வாசல்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் கோபுர வாயிலின் இரண்டு பக்கமும் 108 தாண்டவக் கோலங்கள்/ கரணங்கள் காணப்படுகின்றன. தென்பகுதியில் சக்கர தீர்த்தமும் வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பெரிய புத்தர் சிலையும் உள்ளது. இவை இரண்டும் இக்கோயில் பழைய பௌத்தக் கோயில் என்பதைச் சுட்டுகின்றன.

இரண்டாவது கோபுரத்தின் வாசலில் விநாயகர் சன்னதி காணப்படுகிறது. இரண்டாவது கோபுரம் ஐந்து நிலைகளை உடைய கோபுரமாகும். இங்குக் கொடி மரமும் பலிபீடமும் உள்ளது. நந்தி சிலை நடுவிலும் முருகர் கணபதி சந்நிதிகள் இரு புறங்களிலும் உள்ளன. 

பிள்ளை வரமருளும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் | Thiruvathigai Veerattaneswarar Temple

திருச்சுற்றுக் கடவுளர்

மற்ற சிவன் கோவில்களில் இருப்பதைப் போலவே திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலிலும் சனீஸ்வரருக்கும் பைரவர்க்கும் துர்க்கை அம்மனுக்கும் தனித் தனி சன்னதிகள் உள்ளன. மூன்றாவது பிரகாரத்தில் மூலவர் வீரட்டானேஸ்வரர் 16 பட்டைகளுடன் சோடச சுயம்புலிங்கமாகக் காட்சி தருகின்றார்.

இவை தவிர கருடன், பிரம்மா, பெருமாள் மற்றும் பஞ்சபாண்டவர்களும் இக்கோவிலில் சாந்நித்யம் பெற்றுள்ளனர். கோவிலின் முதல் பிரகாரத்திற்கு சென்று இடது புறமாக சுற்றி வந்தால் அப்பருக்கு உற்சவர் சந்நிதி உள்ளது. தெற்கே தலவிருட்சமும் 63 நாயன்மார்கள் சன்னதியும் திலகவதியாருக்கு தனிச் சன்னதியும் உண்டு. தென்மேற்கு திசையில் சித்தி விநாயகருக்கு தனி சந்நிதி உள்ளது.

மேற்கில் பல்வேறு லிங்கங்கள் காணப்படுகின்றன. அங்குப் பள்ளியறையும் உள்ளது. வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி காசி விஸ்வநாதர் விசாலாட்சி சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகியவை உள்ளன. வடக்கில் திருமால்பட்டி மண்டபமும் யாகசாலை மண்டபமும் காணப்படுகின்றன.

மனதில் கூத்தனான் கூத்தன் காளிங்கராயன் என்பவன் இக்கோவிலுக்கு பொன்வேய்ந்தான் நூற்றுக்கால் மண்டபமும் மடப்பள்ளியும் கட்டினான் அம்மனுக்கு கோவில் கட்டியவனும் இவனே.

திருமணத் திருத்தலம்

மூலவருக்கு வலது புறம் அம்மனின் சன்னதி இருப்பதினால் திருவதிகை திருமணத் திருத்தலமாக கருதப்படுகின்றது. அம்பாள் சன்னதியில் திருமால் பூசித்த லிங்கம் ஓன்று உள்ளது. இறைவன் பார்வதியைத் இத்திருத்தலத்தில் பங்குனி உத்திரத் திருநாளில் திருமணம் செய்து கொண்டார்.

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல்

வாஸ்து சாஸ்திரத்தின் நுண் அறிவியல்

பஞ்ச முக சிவலிங்கம்

தென்மேற்கு மூலையில் பஞ்ச முக லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் ஐந்து முகங்களைக் கொண்டுள்ளது. வெளிச்சுற்றில் தென்மேற்குத் திசையில் நான்கு திசைகளை நோக்கி நான்கு முகங்களும் மேலே ஆகாயத்தை நோக்கியபடி ஒரு முகமும் உள்ளது. இந்தப் பஞ்சமுக சிவலிங்கம் பல்லவர் காலத்து சிவலிங்கம் என்று கருதப்படுகிறது.

பிள்ளை வரமருளும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் | Thiruvathigai Veerattaneswarar Temple

வழிபட்டோர்

திருவதிகை வீரட்டானேஸ்வரரை இந்திரன் பிரம்மன் வருணன் எமன் வாயு பகவான் திருமால் மற்றும் பலர் வழிபட்டதாக தலபுராணம் எடுத்துரைக்கின்றது. இக்கோவில் தேர் வடிவக் கோவிலாகும். இக்கோவிலல் கர்ப்பக் கிரகத்தின் மேல் உள்ள விமானத்தைப் பார்த்துத் தான் இராஜராஜ சோழன் தஞ்சாவூரில் பெரிய கோவிலைக் கட்டினான் என்பர். 

பழையன கழிதலும் புதியன புகுதலும்

பௌத்தக் கோயில் இருந்த இடங்களில் சிவன் கோயில் வந்தால் சைவத்தின் வலிமையை உணர்த்த அங்குத் திரிபுரம் எரித்த சிலையும் கதையும் காணப்படும். வைணவக் கோயில் வந்தால் ஹரியை வணங்கக் கூடாது என்று சொன்னவனின் குடலைக் கிழித்துக் கொன்ற நரசிம்மரின் சிலை முன் கோபுர வாசலில் வைக்கப்படும். 

திரிபுரம் எரித்த கதை

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலின் தல புராணக் கதை சிவன் திரிபுரம் எரித்த கதையாகும். இதனால் பெரிய நாயகி அம்மன் திரிபுர சுந்தரி எனப்பட்டாள். தாரகாசுரன் பிரம்மாவிடம் கடும் தவமிருந்து பல அதிசய வரங்களைப் பெற்றான். வரங்கள் கிடைத்ததும் அவன் ஆணவத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான்.

தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினர். முருகப்பெருமான் தாரகாசுரனை அழித்தார். அவனது மகன்கள் கமலாட்சகன் முதலான மூவரும் பிரம்மாவை நோக்கி நீண்ட தவம் புரிந்தனர். அவர்களுக்குப் பிரம்மா தங்கம், வெள்ளி மற்றும் பித்தளையினால் ஆன மூன்று கோட்டைகளை அளித்தார். அசுரர்கள் பெற்ற மூன்று கோட்டையும் பறக்கும் சக்தி பெற்றவை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவை பறந்து ஒன்றுக்கொன்று அருகில் வரும். அவ்வாறு நெருங்கி வரும் போது இந்த மூன்றும் அழிந்து விடும் என்றும் கூறியிருந்தார். மூன்று ராட்சசர்களும் பறக்கும் கோட்டையிலிருந்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தங்கள் தந்தையைப் போலவே மிகுந்த தொல்லை கொடுத்தனர்.

பிள்ளை வரமருளும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் | Thiruvathigai Veerattaneswarar Temple

தேவர்கள் கைலாயத்தில் இருக்கும் சிவபெருமானைச் சந்தித்து தங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினர். சிவபெருமான் தேவர்களை நோக்கி 'உங்கள் ஒவ்வொருவருடைய தவ ஆற்றலில் இருந்தும் பாதி ஆற்றலை எனக்கு அளித்தால் மட்டுமே அந்த மூன்று கொடும் அசுரர்களையும் கொல்ல முடியும்' என்றார். தேவர்கள் வேறு வழியின்றி சம்மதித்தனர்.

தேவர்கள் ஒப்புக்கொண்டதும் சிவபெருமான் கீழ்ப்புறமாக ஏழு தட்டுக்களும் மேல்புறமாக ஏழு தட்டுக்களும் கொண்ட ஒரு தேரை உருவாக்கும்படி கூறினார். அவர் நடுவில் பூமியை மையமாக வைத்து இருந்து கொண்டார். அந்தத் தேருக்கு சூரிய சந்திரர்கள் இருவரும் சக்கரங்களாக உருமாறினர்.

சூரிய சந்திரர்கள் உதிக்கின்ற மலையும் அஸ்தமிக்கின்ற மலையும் தேர்ச் சக்கரங்களின் அச்சுக்களாக மாறின. சிவபெருமான் செய்யச் சொன்ன தேர் நான்கு பருவங்களையும் கால்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நான்கு வேதங்களும் நான்கு குதிரைகள் ஆயின.

ஓம் என்னும் பிரணவ மந்திரம் குதிரைகளை அடித்து விரட்டும் சாட்டையாக மாறியது. பிரம்மா தேரோட்டியாக வந்து தேரில் அமர்ந்தார். கங்கை முதலிய நதிகள் சிவபெருமானுக்கு சாமரம் வீசியது. உயரமான விந்திய மலை குடையாக மாறியது. வைதீகத்தேர் என்று அழைக்கப்பட்ட தேரில் சிவபெருமான் ஏறி நின்றார். அவர் மேரு மலையை தனக்கு வில்லாக்கி கொண்டார்.

வாசுகி பாம்பை அந்த வில்லில் நாணாக இறுக்கிக் கட்டினார். திருமாலை அம்பின் தண்டாகவும் வாயுவை அதன் சிறகாகவும் மாற்றினார். அக்கினியை அம்பின் நுனியில் வைத்தார். அந்த அம்பை கையில் ஏந்தியபடி உமாதேவியுடன் இணைந்து மூன்று அசுரர்களையும் அழிக்கப் புறப்பட்டார். சிவபெருமானை எதிர்ப்பதற்காக மூன்று அசுரர்களும் ஒன்று சேர்ந்து வந்தனர்.

என்றைக்கு மூன்று கோட்டைகளும் ஒன்று சேருமோ அன்று அவர்கள் அழிவது உறுதி என்ற வரம் பிரம்மா கொடுத்திருந்த காரணத்தால் இவர்கள் மூவரும் ஒரே இடத்தில் வந்து நிற்கவும் இவர்களின் அழிவு உறுதி ஆயிற்று.

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

சதுர்த்தி விரதம் - நோக்கும் போக்கும்

சிவபெருமான் அவர்கள் மீதும் அம்பை எய்வதற்காக தனது வில்லை வளைத்தார். தேவர்கள் தங்களின் பாதி ஆற்றலால் தான் சிவபெருமான் வில்லை வளைத்து நாண் ஏற்றப் போகிறார் என்று நினைத்து அந்த அகந்தையில் அவர்கள் தேரை விட்டு விலகிக் கொண்டனர். தேர் கீழே விழப் பார்த்தது. இவர்களின் கருத்தை அறிந்த சிவபெருமான் லேசாக நகைத்தார்.

அவர் சிரித்ததும் தேர் முறிந்தது. தேவர்கள் செய்வது அறியாமல் கலங்கி நின்றனர். திருமால் காளை வடிவம் எடுத்து இறைவனை தன் மேல் தாங்கிக் கொண்டார். சிவபெருமான் இரண்டாவது முறையாக சிரித்தார். அவர் சிரித்ததும் பெரிய தீப்பிழம்பு ஒன்று உருவாகி அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரத்தை) எரித்துச் சாம்பலாக்கியது.

சிரிப்பினால் தாங்கள் அழிந்து போவோம் என்று கனவிலும் நினைத்திடாத அந்த மூன்று அசுரர்களும் எங்கள் மீது ஒரு அம்பை எய்து எங்களைக் கொல்லுங்கள் ஐயா என்று சிவபெருமானை வேண்டி நின்றனர். அவர்களளின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் அவர்கள் மீது அம்பு எய்தி அவர்களை ஆட்கொண்டார்.

திருவதிகை திரிபுரம் எரித்த தலம் என்பதால் இக்கோவிலின் அலங்கார மண்டபத்திற்கும் அர்த்தமண்டபத்திற்கும் இடையில் திரிபுரமூர்த்திக்கு தனிச் சிற்பம் உள்ளது. இவர் தெற்கு நோக்கி அம்மையப்பராகக் காட்சி தருகின்றார்.  

பிள்ளை வரமருளும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் | Thiruvathigai Veerattaneswarar Temple

சைவச் சிறப்பு நிகழ்வுகள்

திருவதிகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன அவை இரண்டுமே சைவ சமய வரலாற்றில் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இறைவன் ஞானசம்பந்தருக்கு தனது திருநடனத்தைக் காட்டிய தலம் திருவதிகை ஆகும். திருவதிகை கோயிலுக்கு வந்து திலகவதி அம்மையார் தன் தம்பி சமண சமயத்தினர் ஆக வாழ்ந்து வருகின்றானே என்று சிவபெருமானிடம் அழுது மன்றாடிய போது அவனுக்கு சூலை நோய் கொடுத்து அவனை சைவத்தின் பால் ஈர்ப்பேன் என்று சிவபெருமான் அருள்வாக்கு அருளினார்.

இதன் பின்பு மருள்நீக்கியாருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. அப்போது திலகவதியார் 'உன் சமணர்களால் இந்த நோயைக் குணப்படுத்த இயலவில்லை என்றால் நான் உனக்கு விபூதி கொடுத்து குணப்படுத்துவேன். நீ சிவபக்தன் ஆகிவிட வேண்டும்' என்று தன் தம்பியிடம் கூறினார். அவரும் ஒப்புக்கொண்டார்.

மருள்நீக்கியாரின் வயிற்று வலியை சமணர்களின் மருந்துகளால் தீர்க்க இயலவில்லை. வலி தாங்க இயலாது துடித்த மருள்நீக்கியார் தன் தமக்கையாரிடம் வந்து 'நான் சிவ பக்தன் ஆகிறேன் எனக்கு விபூதி பூசி என் வயிற்று வலியை குணமாக்குங்கள்' என்று வேண்டினார். திலகவதியாரும் அவ்வாறே செய்தார். அன்று முதல் அவர் திருநாவுக்கரசர் என்ற பெயரில் சிவ பக்தர் ஆனார்.

திருநாவுக்கரசர் திருவதிகையில் இருந்து தன் உழவாரப் பணியைத் தொடங்கினார். வயதான காலத்தில் இவர் தொடர்ந்து சிவத்தொண்டு புரிந்து வந்ததால் அப்பர் என்று மற்ற சைவத் தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இவருடைய சூலை நோயைத் தீர்க்க திலகவதியார் அங்கிருந்த தீர்த்தக் குளத்தில் இருந்து தண்ணீர் (தீர்த்தம்) எடுத்துக் கொடுத்தார். அதனால் அந்த தீர்த்தம் அன்று முதல் சூலத் தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

108 பீடங்கள் சக்தி தேவி துதி

108 பீடங்கள் சக்தி தேவி துதி

 

 சித்தி விநாயகர்

திருவதிகையில் உள்ள சிவன் கோவிலில் இருக்கும் விநாயகருக்கு பெயர் சித்தி விநாயகர் என்று பெயர். இவரை வணங்குவதால் நினைத்தது நிறைவேறும் பாவங்கள் விலகும். சாபம் தோஷங்கள் நிவர்த்தியாகும். எதிரிகளின் போட்டி பொறாமையிலிருந்து விடுபடுவர்.

தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து விநாயகர் காப்பாற்றுவார். வீரட்டானம் உடையார் கோவிலின் விநாயகர் பெயர் மூத்த நயினார் என்பதாகும். மூத்த நயினார் என்பது கௌதம புத்தரைக் குறித்த பெயர். இதுவே பின்பு சித்தி விநாயகர் என்று மாற்றப்பட்டது.

பிள்ளை வரமருளும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் | Thiruvathigai Veerattaneswarar Temple

உண்மை விளக்கம்

மணவாசகம் கடந்தார் என்ற சிவத்தொண்டர் பிறந்த ஊர் திருவதிகை ஆகும் என்பது இவ்வூரின் மூன்றாவது சிறப்பு ஆகும். இவர் சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் ஒன்றான உண்மை விளக்கம் என்ற நூலை எழுதினார் அவர் இங்கேயே சுந்தரருடன் தங்கியிருந்து அவரிடம் தீட்சை பெற்றார்.

சித்தர வட மடம்

திருவதிகை திருத்தலம் சித்தர்கள் வாழ்ந்த இடம் என்பதைக் குறிக்கும் வகையில் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சித்த வட மடம் என்ற பகுதி உள்ளது. அங்கு இருக்கும் சிவன் கோவிலில் சித்த அம்பர ஈஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சித்த வடமடத்தை சித்தாண்டி மடம் என்றும் சித்தாந்த மடம் என்றும் அழைத்தனர். சித்தர்களின் மறைவுக்கு பின்பு இவ்விடம் கோடாலம்பாக்கம் என்று அழைக்கப்பட்டது.

பெரிய தியான புத்தர் சிலை

சித்த வட மடம் என்பது புத்த மதம் இங்கு சிறப்பாக இருந்ததனை உணர்த்துகின்றது புத்த மதத்தை சேர்ந்த துறவிகள் பிற்காலத்தில் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டதையும் உறுதி செய்கின்றது ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டில் பவுத்தம் இங்கு சிறப்பாக இருந்ததனை இங்கே உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. திருக்கோயில் வளாகத்தில் தியான நிலையில் ஒரு பெரிய புத்தர் சிலை ஒன்றும் உள்ளது.

இதைப் போன்ற மற்றொரு புத்தர் சிலை திருவலஞ்சுழி என்ற ஊரில் வலஞ்சுழி நாதர் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது அந்த புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். புத்தர் கோவில்கள் சிவன் கோவில்களாக மாற்றப்பட்ட காரணத்தினால் கோவில்களில் இருக்கும் புத்தர் சிலைகள் அகற்றப்பட்டன. 

கோவில் விழாக்கள்

ஆண்டுதோறும் சித்திரை மாதம் சதய நாளை ஒட்டி பத்து நாட்கள் விழா நடைபெறும். அப்போது அப்பர் மோட்சம் திருக்கைலாய காட்சி ஆகியவை நடைபெறும். வைகாசி மாதம் 10 நாள் திருவிழா நடைபெறும். அப்போது பஞ்சம் மூர்த்தி வீதி உலா வாகனப் புறப்பாடு ஆகும்.

திருத்தேர் வீதி உலாவும் உண்டு. ஆடி மாதத்தில் ஆடிப்பூர உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அப்போது மாணிக்கவாசகர் உற்சவம் சேர்ந்து நடைபெறும். கார்த்திகை மாதம் ஐந்து சோமவாரமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மார்கழி மாதத்தில் திருவதிகையில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அப்போது நடராஜர் தீர்த்தவாரி ஆருத்ரா தரிசனம் ஆகியவற்றைக் காணலாம். மாசி மாதம் மாசி மகா சிவராத்திரி அன்று ஆறு கால பூஜை நடைபெறும். பங்குனி மாதத்தில் திலகவதியார் குருபூஜை நடைபெறும். பங்குனி உத்திரத்தன்று சுவாமிக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண விழா நடைபெறும்.

பிள்ளை வரமருளும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் | Thiruvathigai Veerattaneswarar Temple

வழிபாட்டின் பலன்

குழந்தை இல்லாத தம்பதியர் சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்தினால் உடனே குழந்தை பிறக்கும் மருள் நீக்கி யார் சமண சமயத்தை விட்டு நீங்கி சைவ சமயத்தைத் தழுவியது போலவே மகேந்திரவர்ம பல்லவர் மன்னனும் சமண சமயத்தை விட்டு நீங்கி சமணப் பள்ளிகளை இடித்து நொறுக்கினான்.

சிவபெருமானுக்காக குணபரேச்சுரம் என்ற கோவிலை எழுப்பினான். இக்கோயில் திருவதிகைக்கு மேற்கில் இடிந்த நிலையில் காணப்படுகின்றது. சாளுக்ககிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் காலத்தில் இக்கோவில் போர் வீரர்கள் தங்கும் கோட்டையாக இருந்தது.

கல்வெட்டுகள்

திருவதிகை கோவிலில் பல மன்னர்களின் கல்வெட்டுகள் அவர்கள் அளித்த நிவந்தங்கள் (கொடைகளைத்) தெரிவிக்கின்றன. கங்க மன்னர்களில் நிருபதுங்கவர்மர் பல்லவர்களில் பரமேஸ்வர போத்தரையர் தெள்ளாறு எறிந்த நந்திவர்மர் பிற்காலப் பல்லவர்களில் கோப்பெருஞ்சிங்கன் பிற்காலச் சோழ மன்னர்களில் ராஜகேசரிவர்மன் மதுரை கொண்ட கோபரமேஸ்வர வர்மன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதல் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜாதி ராஜன் காலங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் கோவிலில் காணப்படுகின்றன சுந்தரபாண்டியன், விக்ரம பாண்டியன், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் திரிபுவன சக்கரவர்த்தி, வல்லப தேவர் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன.

விநாயகர் துதியும் துணையும்

விநாயகர் துதியும் துணையும்

கேரளா தேசத்து மன்னன் இரவிவர்மன் குலசேகர தேவர் காலத்திலும் வெட்டிய கல்வெட்டு உள்ளது. சாளுக்கிய மன்னர்களில் மகா மண்டலேஸ்வரரான நரசிங்க தேவ மஹாராசர் கல்வெட்டு கம்பன்னருடைய கல்வெட்டு அச்சுத தேவ மகாராயர், ஸ்ரீரங்க தேவ மஹாராயர், சதாசிவ தேவ மகாராயர் போன்ற விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகளும் சின்னப்ப நாயக்கர் என்ற தஞ்சை நாயக்க மன்னரின் கல்வெட்டுகளும் உள்ளன. 

திருவதிகை வரலாறு

திருவதிகை என்ற இத்திருத்தலத்தின் பெயர் நிருப துங்கபல்லவ மன்னர் காலத்தில் அதிரையமங்கலம் என்றும் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் அதிராஜமங்கலம் என்றும் அடுத்த காலத்தில் அதிராஜமங்கல்யபுரம் என்றும் அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிங்க ராயன் காலத்தில் தான் அதிகை என்று இப்பெயர் சுருக்கப்பட்டுள்ளது.

முதலாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு அதிராச மங்கல்யபுரம் எனப்படுகிறது. முதல் குலோத்துங்க சோழன் கல்வி கொண்ட வளநாட்டு திருமுனைப்பாடி ஆம்பூர் நாட்டு அதிராச மங்கல்ய புறம் எனப்படுகிறது.

பக்தி இயக்க காலத்தில் திரு அதிகை என்று மாறியது. இதனால் இங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமானின் பெயர் 'அதிகைநாயகர் அண்ணல்' என்றும் பெரியநாயகி 'அதிகையான் ஆகம் பிரியாத பெண்ணின் நல்லாள்' என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.  

ரிஷப ராசியினரின் பரிகார ஸ்தலம் நெய் நந்தீஸ்வரர் கோயில்

ரிஷப ராசியினரின் பரிகார ஸ்தலம் நெய் நந்தீஸ்வரர் கோயில்

திருக்காமக் கோட்டம்

திருவதிகை கோவிலில்எழுந்தருளி அம்மன் பெயரால் திருக்காமக்கோட்டம் என்று இக்கோயில் முன்பு அழைக்கப்பட்டது. அருமறை மாதா வின் அறக்காம கோட்டம், திருவதிகைக்கே அமைய செய்து காமக் கோட்டம் என்று அழைக்கப்பட்ட இக்கோவில் குலோத்துங்கச் சோழன் காலத்தில் அறக்காமக்கோட்டம் என்று அழைக்கப்படலாயிற்று காமக்கோட்ட ஆளுடைய நாச்சியார் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஐந்து பெண் தெய்வக் கோவில்கள் மட்டுமே உள்ளன.அவற்றில் ஒன்று அதிகை அம்மன் கோவிலாகும்.

மடங்களும் மடப்பள்ளியும்

இக்கோவிலில் வாகீசர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் பெயரால் மடம் ஒன்று குலோத்துங்கச் சோழ தேவரின் 44 வது ஆட்சி ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான எல்லை குறிக்கப்பட்டு 2000 குழி பரப்பளவு உள்ள அந்த இடத்தை வாங்கி வாகிசர் மடத்துக்காக எட்டு காசுக்க எட்டுக் காசு பெற்றுக்கொண்டு மன்னர் கொடுத்திருக்கின்றார்.

கோயிலின் தெய்வத் திருமணத்திற்கு வருவோர் போவோருக்கு உணவு அளிப்பதற்காக அன்னதானம் செய்யும் பொருட்டு மதுராந்தகத் தேவன் பொன்னம்பலக்கூத்தன் தனக்கு சொந்தமாய் இருந்த 4800 குழி புன்செய் நிலத்தை முதலாம் குலோத்துங்கனின் 48 ஆம் ஆட்சி ஆண்டில் அளித்தான். 

பிடாரி கோவில்

பௌத்த கோவில்கள் இருந்த இடங்களில் எல்லாம் அதற்கு முந்தைய காலத்து நாகர் வழிபாட்டின் தொடர்ச்சியான பிடாரி அம்மனுக்கு கோவில்கள் இருப்பது வழக்கம். நாகர் வழிபாடு நடந்த இடங்களில் பௌத்தர்கள் தங்கள் கோவிலை எழுப்பினார்கள்.

எனவே அவ்விடத்தில் இருந்த பழைய பிடாரி கோவிலை அவர்கள் வேறு பெயரில் அழைத்து மக்களையும் அவ்வாறு அழைக்கும்படிச் செய்தனர் திருவதிகையில் உள்ள பிடாரி கோவிலுக்கு வடக்கே ஒரு காடு இருந்தது அந்த காட்டில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு அங்கு ஒரு நல்ல சாலை அமைத்து அந்த சாலைக்கு திருநாவுக்கரசர் வீதி என்று பெயர் சூட்டினர். இதனால் அங்குக் காட்டுக்குள் இருந்த பிடாரி கோவில் அகற்றப்பட்டது.

பள்ளியறை பூஜை

பள்ளியறை பூஜைக்கு என்று தனி நிலத்தை பாண்டிய மன்னர் இக்கோவிலுக்கு வழங்கினர். திரு வீரட்டானம் உடையார் திரு அர்த்தசாமத்து திருப்பள்ளிக்கட்டில் ஏறி அருளினார். அமுது செய்து அருள அமுது படி, வெஞ்சனத்துக்கு காளிங்கராயன் பெயரால் அதியனூருக்கு காலனை என்ற நிலத்தை திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ வல்லப தேவ பாண்டியர் தன் 33 ஆட்சியாண்டில் கொடுத்திருக்கிறான்.

இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் விளைச்சல் அதிலிருந்து பெறக்கூடிய தொகை அர்த்த ஜாமத்தில் நடக்கும் பள்ளியறை பூசைக்கு செலவு செய்யப்படும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US