கோவை மாவட்டத்தில் பச்சமலை பவளமலை என்று இரண்டு மலைகள் உண்டு. இரண்டிலும் முருகன் கோவில்கள் உள்ளன. இக்கோவில் காலத்தால் மிகவும் பிந்தியது. 19ஆம் நூற்றாண்டில் அண்மையில் கட்டப்பட்ட கோவிலாகும்.
பவளமலை முருகன் கோவில் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாரியூர் போகும் வழியில் முருகன் புதூர் அருகே உள்ளது. பவள மலை சிறிய மலைக் குன்றாகும். இம்மலையின் மேல் குமரக் கடவுளாகிய முத்துக்குமாரசாமி கோயில் வள்ளி தெய்வானையுடன் கோயில் கொண்டுள்ளார்.
இங்கு நவகிரக சந்நிதி உண்டு. இடும்பனுக்குத் தனி சன்னதி உண்டு. முருகனின் தமையனான கணபதிக்கும் தனி சந்நிதி உண்டு.
திரி சதம்
பவளமலை முருகனுக்கு திரி சதம் என்னும் அர்ச்சனை செய்யப்படுகிறது. திரி சதம் என்றால் மூன்று x100 எனப் பொருள் தரும். இந்திரனின் தலைமையில் தேவர்கள் செய்யும் அர்ச்சனை தான் திரி சதம் ஆகும். அதாவது 300 பெயர்களால் முருகனைப் போற்றி வணங்குவதாகும்.
திரிசத அர்ச்சனை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சக்திக்கும் செய்யப்படுவதுண்டு. இங்கு முருகனுக்கு இச் சிறப்பு அர்ச்சனை நடைபெறுகின்றது. ஒரு முகத்துக்கு 50 போற்றி என ஆறுமுகத்துக்கும் 300 போற்றிகள் சொல்லப்படுகின்றன.
திருமணத் தடை உள்ளவர்களும் குழந்தை பேறு இல்லாதவர்களும் திரிசத அர்ச்சனை செய்தால் தடை விலகி திருமணம் நடைபெறும். திரிசத அர்ச்சனை செய்து முருகனை வேண்டி கொண்டவர்களுக்கு நல்ல குழந்தை பிறக்கும்.
கைலாசநாதர்
பவளமலை முருகன் கோவிலில் சிவபெருமானும் எழுந்தருளி இருக்கின்றார். இங்கு அவருடைய பெயர் கைலாசநாதர். அம்மனின் பெயர் பெரிய நாயகி. புதிதாக சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சன்னிதி எழுப்புவோர் கைலாசநாதர் என்றும் பெரிய நாயகி அம்மன் என்றும் பெயர் சூட்டுவது மரபு. இங்கு எழுந்தருளி இருக்கும் கைலாசநாதர் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கம் ஆகும்.
புராணக்கதை
வாயு பகவானுக்கும் பூமியைத் தாங்கி நிற்கும் ஆதிசேஷன் என்ற ஆயிரம் தலை பாம்புக்கும் ஒரு முறை போட்டி வந்தது. இக்கதை வேறு பல தல புராணங்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் திருத்தலத்திற்கும் இக்கதை வழங்குகின்றது.
வாயு பகவான் கோபம் கொண்டு மிக வேகமாக வீசினார். கோரப் புயல் போல் காற்று அடித்த காரணத்தால் பூமியின் மீது இருந்த மேரு மலை நொறுங்கிச் சிதறியது. அவ்வாறு சிதறிய மலையின் ஒரு பகுதி தான் இந்தப் பவளமலை என்று தலபுராணம் கூறுகின்றது.
கோவில் விழாக்கள்
பவள மலை முருகன் கோவிலில் கார்த்திகை பெருவிழா சிறப்பாக நடைபெறும். மலைக்கோவில் என்பதால் சித்ரா பௌர்ணமி முழு நிலா தரிசனம் சிறப்பு பூசைகள் உண்டு. முருகன் பிறந்த வைகாசி விசாகம் அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
சூரனை சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் இங்குப் பக்தர்கள் கூட்டம் அதிகம் வரக் காணலாம். மூன்று கால பூஜை நடக்கின்ற இக்கோவிலில் தை மாசம் தை மாசம் தேர்த்திருவிழா நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |