ராமநாதபுரத்தில் தரிசிக்க வேண்டிய முக்கியமான ஆலயங்கள்
தமிழ்நாட்டில் ராமநாதபுரம் ஒரு புண்ணிய தலம் என்றே சொல்லலாம்.காசிக்கு அடுத்தபடியாக பாவங்கள் கரைக்கும் இடமாக ராமநாதபுரம் திகழ்கிறது.
மேலும் நம் தமிழ் நாட்டுக்கே பெருமை சேர்த்து கொடுத்த வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த இடம் என்று பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்தது இந்த ராமநாதபுரம் மாவட்டம்.
அப்படியாக ராமநாதபுரம் என்றாலே உலகம் எங்கிலும் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தான்.
பலருக்கும் ராமநாதசுவாமி அடுத்து ராமேஸ்வரம் சென்றால் பல முக்கிய கோயில்கள் இருப்பது தெரிவதில்லை அதனால் அவற்றை தரிசிக்க தவறி விடுகிறார்கள்.அப்படியாக ராமநாதபுரத்தில் நாம் தரிசிக்க வேண்டிய முக்கியமான பல கோயில்கள் இருக்கிறது.
யாரும் எதிர்பார்த்திடாத அளவு நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொடுக்க கூடிய கோயில்கள் இந்த ராமநாதபுர மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது.உண்மையாக இங்கு இருக்கும் ஒவ்வொரு கோயில்களுக்கு சென்றால் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் விலகி நல்ல மாற்றம் உண்டாகும்.
இப்பொழுது ராமநாதபுரத்தில் நம் தவறாமல் தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்களை பற்றி பார்ப்போம்.
1.ராமநாதசுவாமி கோவில்,ராமேஸ்வரம்
இந்த கோயிலை அறியாத மக்களே இந்தியாவில் இருக்க முடியாது.அவ்வளவு பிரபலமான கோயில்.இன்றும் பல மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து இக்கோயிலுக்கு வருகை புரிகின்றனர்.
இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் இக்கோயிலின் கட்டிட கலை மனதை கவரும் வகையில் அமைந்து இருப்பது தான். சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.1212 தூண்கள் 690 ஆதி நீளம் 435 அகலம் கொண்ட இக்கோயில் மூன்றாம் பிரகாரம் உலக புகழ் பெற்றது.
இந்தியாவில் 12 ஜோதிர் லிங்க தலங்களில் தமிழகத்தில் இருக்கும் ஒரே ஜோதிர் லிங்க தலம் எனவும் குறிப்பிடத்தக்கது. மேலும்,இராமாயண கால வரலாற்றோடு தொடர்புடையது.
அதாவது ஸ்ரீஇராமபிரான் இராவணனை வதம் செய்ததால் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலக, அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்திருத்தலத்திற்கு சீதை, இலட்சுமணனுடன் வந்து, சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல நேரம் குறித்து, கைலாசத்திலிருந்து சிவலிங்கம் கொண்டு வரும்படியாக இராமபிரான் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து அனுமன் சிவலிங்கம் கொண்டு வருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை விளையாட்டாக மண்ணைக் கையில் பிடித்துச் செய்த சிவலிங்கத்தையே நல்ல நேரம் முடிவதற்குள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
கைலாசத்திலிருந்து திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை.
அனுமனை சாந்தப்படுத்த இராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விசுவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, இனி அதற்கே பூசை முதலியன முதலில் செய்ய வேண்டுமென்று இராமபிரான் ஆணையிட்டார்.
இத்திருக்கோயிலில் அனுமனால் கொண்டுவரப்பட்ட விசுவநாதருக்கே தினந்தோறும் முதல் பூசை நடைபெறுகிறது. இராமபிரான் ஈஸ்வரனை வழிபட்டதால் இத்திருத்தலம் இராமேசுவரம் எனப் பெயர் பெற்றது.
மேலும்,இக்கோயிலை ராமர் வழிபட்டதால் பெருமாளுக்கு உரிய தீர்தத்தையே பிரசாதமாக தரப்படுகிறது.மேலும் பதஞ்சலி முனிவர் முக்தி பெற்ற தலம் என பல சிறப்புகள் கொண்டது.
வழிபாட்டு நேரம்
4:30AM - 1PM மற்றும் 3PM - 8:30PM
இடம்
ராமேஸ்வரம், தமிழ்நாடு 623526
2.அருள்மிகு மங்களநாதார் திருக்கோயில்,உத்திரகோசமங்கை
சிவன் கோயில்களில் மிக முக்கியமான கோயில்களில் உத்திரகோசை மங்கை முதல் இடம் பிடிக்கிறது.ஏன் என்றால் சிவன் கோயில்கள் உலகில் தோன்றிய முதல் கோயிலாக இந்த கோயில் கருதப்படுகிறது.இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
மேலும் இக்கோயில் மிகவும் தொன்மை நம்மை வியக்க வைக்கிறது. அதாவது மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது.
அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது என்பது விஷேசமானது. மேலும் வேறு எங்கும் பார்த்திடமுடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இருக்கிறது.பொதுவாக கோயிலுக்கு சென்றால் ஒரு முறை பூஜையை தரிசித்து விட்டு வந்துவிடுவோம்.
ஆனால் இந்த கோயிலுக்கு சென்றால் மூன்று முறை தரிசித்து விட்டு வந்த பலன் கிடைக்கிறது.இவ்வளவு சிறப்பு வாய்ந்த பல வரலாற்று சிறப்புக்கள் கொண்ட கோயிலை தரிசித்து மங்களநாதர் அருளை பெற்று வாருங்கள்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையம்,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்
ஸ்ரீ மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவில், உத்ரகோசமங்கை, ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு 623533.
3.பஞ்சமுகி ஹனுமான் கோவில்,ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் என்றாலே ராமர் சீதை ஹனுமான் இவர்களுடைய தொடர்பு அதிகம் உள்ள இடமாக கருதப்படுகிறது.உண்மையில் ராமர் சீதை அங்கு வந்து சென்றத்துக்கான உணர்வை ஊரின் காற்றும் கடல் அலைகளும் நமக்கு உணர்த்தும்.
அவ்வளவு அழகான ஆன்மிகம் நிறைந்த இடமாக இருக்கும்.அப்படியாக ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கிமீ தொலைவில் பஞ்சமுகி ஹனுமான் கோயில் அமைந்து இருக்கிறது.இங்கு ஹனுமான் ஐந்து முகம் கொண்ட ஹனுமானுக்காகவே அமையப்பெற்று இருக்கிறது.
இறைவன் தனது ஐந்து முகங்களையும் இங்கே வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது, எனவே, அனுமன் சிலையின் நடுவில் நரசிம்மர், ஆதிவராகர், கருடன் மற்றும் ஹயக்ரீவர் ஆகியோரின் முகங்களுடன் ஐந்து முகங்களுடன் காட்சிகொடுக்கிறார்.
1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு, ராமர் மற்றும் சீதா தேவியின் சிலைகள் இந்தக் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு இங்கு வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலின் முக்கிய சிறப்பு இங்குள்ள மிதக்கும் கற்கள்.இந்த மிதக்கும் கற்கள் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சேது பந்தனம் என்ற மிதக்கும் பாலத்தை கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
இதனால் ராமர், லக்ஷ்மணர் மற்றும் பிறருடன் சேர்ந்து சீதா தேவியை மீட்பதற்காகவும், ராவணன் என்ற அரக்கனின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கைக்குச் செல்லவும் முடியும்.
மேலும் இங்குள்ள ஆஞ்சிநேயருக்கு முன்பாக ராமர் பாதம் அமைந்து இருக்கிறது.இத்தலத்தில் இருக்கும் ஐந்து முகம் கொண்ட ஆஞ்சிநேயரை வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள பயம் நீக்குவார் என்பது பக்தர்களின் கருத்து.மேலும் இக்கோயிலில் இவரை வழிபட வெள்ளைக்கிழமை உகந்த நாள் ஆகும்.
அன்றைய தினத்தில் இவருக்கு தேங்காய் வெல்லம் அவல் சேர்ந்த கலவையை விஷேச நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.மேலும் முகப்பில் கடல் மணலால் ஆன சுயம்பு ஆஞ்சிநேயர் காட்சி கொடுக்கிறார்.
வழிபாட்டு
நேரம் காலை 6:00 - மாலை 7:00 மணி வரை
இடம்
பஞ்சமுகி அனுமன் கோவில் ராமேஸ்வரம் , தமிழ்நாடு , 623526
4.அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயில்,தேவிபட்டினம்
தேவிபட்டிணம் ராமநாதபுரத்தில் ஒரு முக்கிய இடமாக கருதப்டுகிறது.அதாவது பல மாவட்டங்களில் இருந்து இந்த தேவிபட்டிணதிற்கு வந்து மக்கள் தங்களுடைய வேண்டுதல்கள் பரிகாரம் செய்கின்றனர்.இந்த நவபாஷாண நவக்கிரக கோயில் தேவிபட்டினம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.
இக்கோயில் 2000 ஆண்டு பழமையானது. இங்கு சிறப்பு என்னவென்றால் இங்கு ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண நவகிரகம் தான்.கடலுக்குள் இருக்கும் இந்த நவபாஷாண நவகிரகம் அன்றைய நாளில் அலையைப் பொறுத்து சிறிது அல்லது முழுமையாக நீரில் மூழ்கி இருக்கும்.
இக்கோயிலுக்கு தினமும் தங்களுடைய தோஷம் நிவர்த்தி செய்ய பல நூறு பக்தர்கள் வருகை புரிகின்றனர். களத்திர தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், பிதுர் தோஷம், ஆயுள் தோஷம் அல்லது ஆயுள் தோஷம், நட்சத்திர தோஷம், சனி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம், செவ்வாய் தோஷம். க்ஷேத்திர சங்கல்ப நவக்கிரக பூஜை, ராகு கேது பூஜை மற்றும் முன்னோர்களுக்கு ஆண்டு விழா.
ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற காலங்களில் தமிழகம் மட்டுமின்றி, வடகிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.கண்டிப்பாக இந்த தேவிபட்டிணம் சென்று வர வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் விலகும்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை
இடம்
அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயில்,தேவிபட்டினம் 623 514
5.அருள்மிகு ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில்,ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் மிக மிக முக்கியமான தலங்களில் இந்த ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயிலும் ஒன்றாகும்.இந்த கோயில் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்து உள்ளது.
அதாவது இராவணனைக் கொன்று சீதையை மீட்ட பிறகு, சிவபெருமானை வழிபடுவதற்கு முன், ராமர் தனது தலைமுடியை இந்த நீரில் கழுவினார் என்ற புராண உண்மையின் காரணமாக இந்த குளம் கோயிலில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
இந்த குளத்தில் நீராடினால் வறுமை,மன குழப்பங்கள் விலகி மனம் தெளிவு பெரும் என்று நம்பப்படுகிறது.மேலும் இந்த கோவிலில் ராமர் மற்றும் ஹனுமான் சிலை உள்ளது
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணி முதல் 11.00 வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 8.00வரை
இடம்
ராமநாதபுரம், கோயம்புத்தூர், தமிழ்நாடு 623526
6.அருள்மிகு வெயிலுகந்த விநாயகர்,உப்பூர்
தமிழகத்தில் விநாயகர் என்றால் பிரம்மச்சாரியாகத்தான் எல்லா கோயில்களிலும் காட்சி தருகிறார். ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் உள்ள "வெயிலுகந்த விநாயகர்" தன் மனைவிகளான சித்தி புத்தியுடன் காட்சி தருகிறார்.
இவரது திருமண கோலத்தை பார்க்க நமக்கும் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.மிகவும் ஆணவம் கொண்டவர் தட்சன். அவர் மகளான தாட்சாயிணியை சிவபெருமான் மணமுடித்துக் கொண்டார்.
ஒரு முறை தட்சன் தேவர்களை அழைத்து யாகம் நடத்த, அதற்கு தன் மருமகனான சிவபெருமானை மட்டும் அவர் அழைக்கவில்லை.ஆனால், அந்த யாகத்திற்கு சூரிய பகவானை தட்சன் அழைக்க, சூரிய பகவானும் அந்த யாகத்தில் கலந்து கொண்டார்.
இதை அறிந்த சிவபெருமான் சூரியபகவான் மீது மிகுந்த சினம் கொண்டார்.சூரிய பகவான் அதற்கு பரிகாரமாக பாண்டிய நாட்டில் கீழ கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புனவாசல் ஆகிய தலங்களுக்கு அருகில் உள்ள வன்னிமந்தாரவனம் என பகுதிக்கு வந்தார்.
இங்கு வந்து இங்குள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டு தன்னுடைய பாவத்தை போக்குவதற்கு வேண்டுதலில் ஈடுபட்டார். இவருடைய தவத்தால் மணமகிழிந்த விநாயகர் அவர் முன் காட்சி அளித்து பாவத்தை போக்கினார்.
மேலும் சூரியவாகவான் தனக்கு அருள் புரிந்தது போல பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வணக்க, அதோடு விநாயகரின் திருமேனி மீது தனது ஒளி கதிர்கள் விழுந்து வணங்க வழிகாட்டுமாறு விநாயகரிடம் வரம் பெற்றார்.இதனால் இவர் "வெயிலுகந்த விநாயகர் "என்ற பெயர் பெற்றார்.
இவர் மீது தட்சிணாயன காலத்தில் தெற்கு பகுதிகளும், உத்திராயண காலத்தில் வடக்கு பகுதிகளும் சூரியக் கதிர்கள் விழுகிறது.தமிழகத்தில் முதல் முதலாக விநாயகருக்கு சித்தி புத்தி தேவியர் உடன் திருமணம் இங்கே தான் நடக்கிறது. சதுர்த்திக்கு முதல் நாள் நடக்கும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விநாயகரை நாம் தரிசித்தால் திருமணத்தடை விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என் பக்தர்கள் கூறுகின்றனர்.ஆதலால் நாமும் இவரை வணங்கி வாழ்வில் உள்ள அனைத்து தடைகள் விலகி அருள் பெறுவோம்.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணி முதல் 11.00 வரை,மாலை 4.00 மணி முதல் 8.00 வரை
இடம்
வெயிலுகந்த விநாயகர் கோயில்,உப்பூர், இராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு – 623525.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |