உத்தரவு பெட்டி உள்ள சிவன்மலை
அருணகிரிநாதரின் பாடல் பெற்ற சிவன்மலை முருகன் கோவில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயத்திற்கு அருகில் உள்ளது. இங்கு சிவவாக்கியர் தவமிருந்து முருகன் சிலையை செய்து வைத்து வழிபட்டார். பின்பு சுரங்கப்பாதை வழியாக பழனிக்குச் சென்று அங்கு உள்ள முருகனை வழிபட்டார்.
சிவன்மலையின் மூலவர் வள்ளி மணாளனாகிய ஸ்ரீ முருகன் ஆவார். 14ஆம் நூற்றாண்டிற்கு பிறகு கந்தபுராணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பின்பே தெய்வானை திருமணம் இங்கே பிரபலம் ஆயிற்று. அதன் பின்பு கட்டப்பட்ட கோயில்களிலும் முருகனுக்கு எழுப்பிய சந்நிதிகளிலும் வள்ளி தெய்வானை சமேதராகிய கந்தன் என்ற சுப்பிரமணியர் இடம்பெற்றார்.
தமிழ்க் காதல் தலம்
தமிழ்ச் சமய வரலாற்றில் முருகனுக்கு ஒரே ஒரு மனைவி வள்ளி மட்டுமே உண்டு. முருகன் மலைக் கடவுள். வள்ளியும் மலையில் பிறந்தவள். இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தொல்காப்பியம் காதல் களிறு தரு புணர்ச்சி, பூத் தரு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி என்று மூன்று வழிகளில் காதல் தோன்றும் என வகைப்படுத்துகின்றது.
தொல்காப்பியத்தின் காதல் வகைகள்
மலைக் காட்டில் கன்னி.பெண்கள் யானையைக் கண்டு மிரண்டு பயந்து ஓடும் போது யாரேனும் ஓர் இளைஞன் வந்து காப்பாற்றினால் அவனது வீரத்தைக் கண்டு வியந்து காதலிப்பது முதல் வகை. இதுவே வள்ளி திருமணத்திலும் நடந்தது.
அடுத்தது அரிய பூவைக் கண்டு ஒருத்தி ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயற்சி செய்யும்போது அவ்வழியே வந்த ஒரு இளைஞன் அவளுக்காக அந்தப் பூவை பறித்துத் தந்தால் அவன் மீது அவளுக்கு காதல் தோன்றலாம். இது பூத்தது புணர்ச்சி ஆகும்.
அடுத்தது, ஒரு இளம்பெண் ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட போது அங்கு துணிச்சல் உள்ள ஓர் இளைஞன் தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஆற்றில் குதித்து அப்பெண்ணைக் காப்பாற்றினால் அவன் வீரத்தைக் கண்டு அவள் காதல் கொள்வாள். இது புனல் தரு புணர்ச்சியாகும். மதுரை வீரன் பொம்மி காதல் கதை இவ்வகையைச் சார்ந்தது.
வள்ளி திருமணம்
பண்டையத் தமிழ் இலக்கண முறைப்படி நடந்த காதல் நிகழ்வாகும். யானையைக் கண்டு அஞ்சிய வள்ளியை முருகன் காப்பாற்றியதால் தோன்றிய காதல் கதை. இம்மலையில் வள்ளியும் முருகனும் கோவில் கொண்டுள்ளனர்.
எனவே தமிழ்ச் சமய வரலாற்றில் மிகவும் பழைய கோவில் ஆகும் எனவே இக்கோவிலில் முதல் பூசை முருகனுக்கே செய்யப்படுகின்றது. இங்கு முருகனே முழுமுதல் வழிபடு கடவுள். மற்ற கோவில்களில் விநாயகருக்கு முதல் பூசை நடைபெறும். இக்கோவிலில் சனீஸ்வரனுக்கும் காலபைரவருக்கு தனி சன்னதிகள் உண்டு. நவக்கிரக சந்நிதியில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடி உள்ளன.
புதிய தெய்வ சந்நிதிகள்
சிவன் மலை முருகன் கோவிலில் சைவ சயப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் புதிய சிவாலயம் நிர்மானிக்கப்பட்டது. சிவன் கோயிலுக்குரிய அனைத்து அம்ஸங்களும் இக்கோவிலில் இடம்பெற்றன. தெற்கு பிரகாரத்தில் சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர்.
கன்னி மூலையில் விநாயகர் குபேர மூலையில் தண்டபாணி சன்னிதிகளும் உள்ளன. வாயிலில் சுமுகர், சதேகர் என்ற துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன. . தல விருட்சமாக தொரட்டி மரம் உள்ளது
கதை 1
கி.மு.3ஆம் நூற்றாண்டில் பௌத்தர்கள் இம்மலையில் தங்கள் மடாலயத்தை அமைத்து மருத்துவ சேவை செய்தனர். கௌதம புத்தர் வணங்கப்பட்டதற்கான அடையாளமாக இங்கு கௌதமரிஷி முசுகுந்த சக்கரவர்த்தியின் நோய் தீர்த்த கதை வரலாறு தலபுராணக் கதையாக சொல்லப்படுகிறது
சிலப்பதிகாரத்தில் முசுகுந்தன்
முசுகுந்தன் என்றால் குரங்கு முகம் கொண்டவன் என்பது பொருள் வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது சிலப்பதிகாரத்தில் 'அமரனில் பெற்று தமர் தந்து' என்ற வரி இவன் அமரலோகத்துத் தலைவனாகிய இந்திரனிடமிருந்து நாளங்காடிப் பூதத்தை பெற்று தன் உறவினர்களான பூம்புகார் சோழனுக்குக் கொடுத்தான் என்பதை உணர்த்துகின்றது. சோழர்கள் முசுகுந்தனோடு தொடர்புடையவர்கள் நாளங்காடி பூதம் என்பது பகலில் திறந்திருக்கும் சந்தை தெருவில் சந்தை கடையில் இருக்கும் பூத சிலை ஆகும்
சப்தவிடங்கத் தலங்கள்
முசுகுந்தன் தேவலோகத்தில் இந்திரன் பூசித்து வந்த 7 லிங்கங்களைப் பெற்று அவற்றை திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்காராயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு இடங்களில் கோயில் கொள்ளச் செய்தான்.
அந்த ஏழு இடங்களும் சப்த விடங்க தலங்கள் என்று பெயர் பெற்றன என்று திருவாரூர் நான்மணிமாலை குறிப்பிடுகின்றது. எனவே புதிதாக சிவாலயம் தோற்றுவித்த ஊர்களில் முசுகுந்தன் கதையும் சேர்ந்துகொண்டது.
முசுவின் சிவ பூசை
முசுகுந்தன் முற்பிறவியில் குரங்காக இருந்தான். அந்த குரங்கு ஒரு நாள் இரவு ஒரு மரத்தின் மீது அமர்ந்தபடி இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தது. கீழே தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமான் மீது மரத்தின் இலைகள் விழுந்து மூடிவிட்டன.
கண்விழித்துப் பார்த்த சிவபெருமான் தன்னை வில்வ இலைகளால் சிவராத்திரி அன்று விடிய விடிய அர்ச்சித்து மூடியவர் யார் என்று அண்ணாந்து பார்த்தார். அங்கு ஒரு குரங்கு இருந்தது. அவனது குரங்குப் பிறவியை மாற்றி மனிதனாக்கினார்.
ஆனால் மனிதப் பிறவி சூதுவாது நிறைந்தது என்பதால் தான் குரங்கு முகத்துடனேயே இருக்க விரும்புகிறேன் என்று முசுமுந்தன் வேண்டினான். குரங்கு முகமும் மனித உடலும் கொண்டு சூரிய குலத்தில் உதித்த சோழச் சக்கரவர்த்தியாக புதுப்பிறவி எடுத்தான். அவன் திருவாரூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
கௌதமரும் முசுகுந்தனும்
முசுகுந்தச் சோழன்ன் சுர நோயால் அவதிப்பட்டான். இந்நோயைத் நிற்கும்படி கௌதம ரிஷியிடம் தீர்க்கும் படி வேண்டினான். அவர் 'சிவன் மலைக்குப் போ. அங்கு உன் நோய் தீரும்' என்றார் . இதுவும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இக்கதை இம்மலையில் பௌத்தர்களின் மருத்துவ சேவை நடந்ததை உணர்த்துகின்றது. கௌதம ரிஷி என்பது கௌதம புத்தர் நிலையை அடைந்த அவலோகதீஸ்வரரைக் குறிக்கின்றது. முசுகுந்தச் சோழன் இம்மலைக்கு வந்து நோய் தீர்ந்து நலம் அடைந்தான்.
மிளகு ரசம் மருந்து
பௌத்தர்கள் காலத்துக்குப் பின் இம்மலையில் சிவாலயம் வந்தபோது மூலவருக்கு சுரநாதர் என்றும் அம்மனுக்கு சுரலோக நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டது. கைலாசநாதர் என்றும் ஞானாம்பிகை என்றும் அழைக்கின்றனர்.
இன்றைக்கும் காய்ச்சலால் வாடுகின்றவர்கள் மிளகு ரசம் வைத்து இங்கு வந்து பூசாரியிடம் கொடுத்து வாங்கி அருந்தினால் அவர்களுக்கு சுரம் நீங்கும். பொதுவாக சுரநாதருக்கு சந்தனக் காப்பு நேர்ச்சை செய்து கொண்டால் சுரம் நீங்கிவிடும்
எட்டு அம்மை
சிவன் மலை அருகே உள்ள பகுதிகளில் ஒவ்வொரு ஊரிலும் பெண் தெய்வ வழிபாடு சிறப்பாக இருந்தது. எட்டு ஊர்களின் அம்மனை எட்டு அம்மை என்றும் வடமொழியில் அஷ்ட மாத்ரிகா என்றும் சிவன் மலை குறவஞ்சி தெரிவிக்கின்றது. எட்டு துர்கை என்று அழைக்கப்படுகின்றனர்.
அஷ்ட மாத்ரிகா என்ற எட்டு பேங்ளுடன் பார்வதியையும் சேர்த்து நவகன்னியருக்கு சிவன் தரிசனம் தந்தார். அஷ்டமாத்திரிகா பற்றிய தகவல் தேவி பாகவதம், லிங்க புராணம் ஆகியவற்றில் காணப்படுகின்றது. சப்த கன்னியருடன் மகாலட்சுமி / ருத்ராணி/ நரசிம்மி/ மகாலட்சுமி/ ஆஞ்நேயிகா ஆகியோரில் ஏதேனும் ஒருவரை சேர்த்து அஷ்ட மாத்ரிகா என்று அழைக்கின்றனர்.
படிகளும் பாதையும்
சிவன் மலை மேல் இருக்கும் கோவிலுக்குச் செல்ல படிகளும் உண்டு. வாகனங்கள் செல்கின்ற பாதையும் உண்டு. படிகளில் ஏறி செல்பவர்கள் இளைப்பாறிச் செல்ல வழியெங்கும் கல் மண்டபங்கள் உண்டு.
அமனலிங்கேஸ்வரர் கோவிலின் முன் வாயிலில் இருப்பது போல சிவன்மலை முருகன் கோவில் வாயிலிலும் தீபத் தூண் உண்டு. இத் தூணின் தண்டு பகுதியில் கிழக்கு நோக்கி விநாயகரும் தெற்கில் சூலாயுதமும் வடக்கில் மயிலும் மேற்கே தண்டபாணி சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.
கதை 2
சிவன் மலையின் தோற்றம்
சிவன் திரிபுரத்தை அழிக்க மேரு மலையை வில்லாக வளைத்த போது மேருமலையிலிருந்து சிதறிய துண்டு தான் சிவன்மலை என்று நம்பப்படுகின்றது. இதே கதை இப்பகுதியில் உள்ள மற்ற மலைகளில் உள்ள மற்ற மலைகளுக்கும் சொல்லப்படுகிறது.
உத்தரவுப் பெட்டி
மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பம்சம் சிவன்மலையில் காணப்படும் உத்தரவு பெட்டியாகும். இங்கு யாரேனும் ஒருவருக்கு கனவில் வந்து ஒரு பொருளை உத்தரவு பெட்டி எனப்படும் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கும்படி இறைவன் கூறுவார்.
மறுநாள் அவர் கோவிலுக்கு வந்து தகவலைத் தெரிவித்ததும் கோவிலில் அவர் சொல்வது உண்மையா என்று பூ கட்டி போட்டு பார்ப்பர். உண்மை என்று தெரிந்ததும் அவர் சொன்ன பொருளை கண்ணாடி பெட்டியில் வைப்பதுண்டு. அந்தப் பொருளின் மகத்துவம் அந்த ஆண்டு அதிகரிக்கும். சேலை வைத்தால் சேலை விலை கூடும். அடுத்த தகவல் வரும் வரை அதே பொருள் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கும்.
மறைந்து வாழும் சித்தர்கள்
சிவன் மலையில் ஏராளமான சித்தர்கள் இருப்பதாகவும் அவர்கள் உண்மையான பக்தர்களுக்கு மட்டுமே கண்ணில் தென்படுவர் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. இதே நம்பிக்கை திருவண்ணாமலை, சதுரகிரி போன்ற மலைகளிலும் உண்டு.
சித்தர்கள் விலங்கு, பறவை ரூபமாக மக்கள் கண்களில் தென்படுவர் என்ரம் கூறுவர். இந் நம்பிக்கைக்குக் காரணம் சித்தர்கள் (துறவிகள்) யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்வதாகும். இவர்கள் மறைந்து வாழ்ந்ததற்கு ஓர் காரணம் உண்டு.
வாதங்களில் தோற்ற பௌத்தத் துறவிகளை நாக்கை வெட்டியும் ஊரை விட்டு விரட்டியும் கடுமையான தண்டனைகள் கொடுத்ததனால் பல பௌத்த துறவிகள் மேற்கு மலைத்தொடர்களில் சென்று மறைந்து வாழ்ந்தனர்.
இவர்கள் பொது மக்களைக் காண அஞ்சி மேலே மலைக்குகைகளில் ரசவாதம், மருத்துவம், வானவியல் சாஸ்திர நூல்களைப் பரிபாஷையில் எழுதினர். இவர்களில் சிவவாக்கியர் இச் சிவன் மலையிலும் போகர் பழனி மலையில் முருகன் சிலையைச் செய்து வணங்கியதாக வரலாறுகள் உள்ளன. எனவே மலைகளில் இவர்களைப் பார்த்தால் புண்ணியம் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.
காசி தீர்த்தத்தில் வரலாறு
சிவன்மலையில் உள்ள தீர்த்தத்தின் பெயர் காசி தீர்த்தம். முருகனின் பக்தையான ஒரு பெண் காசிக்கு போய்க் கருமத்தை தொலைக்க வேண்டும். ஆனால் அங்கு போக வசதி இல்லையே என்று வருந்தி வாடி முருகனிடம் வேண்டிய போது, முருகன் அருளால் இங்கு ஒரு ஊற்று கிளம்பியது.
அந்த ஊற்று நீர் காசி நீர் என்று நம்பப்பட்டதால் இத்தீர்த்தம் காசி தீர்த்தம் ஆயிற்று. அவள் தீர்த்தத்தில் நீராடி காசிக்குப் போன புண்ணியத்தைப் பெற்றாள்.
வழிபாட்டின் பலன்
சிவன்மலையில் உள்ள முருகன் கோவிலுக்குத் திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழிலில் திடீர் இழப்பை சந்தித்தவர்கள், தீராத நோயினால் தாக்கப்பட்டவர்கள் வந்து வணங்குகின்றனர் வழிபாட்டுக்குப் பின்பு அவர்களின் துன்பங்கள் தீர்க்கப்பெற்று நல்ல நிலையை அடைகின்றனர்.
திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடைபெறுகின்றது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கின்றது. தொழிலில் நஷ்டத்தை சந்தித்தவர்களுக்குத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கின்றது.
தீராத நோயையும் தீர்க்கும் மலையாக சிவன் மலை விளங்குகின்றது. இக்கோவில் முருகன் கோயில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இடைப்படட காலத்தில் இங்கு பௌத்த துறவிகளில் மடாலயம் இருந்து மருத்துவ சேவைகள் செய்திருக்கும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |