சூரியபகவான் வழிபாடும் அதன் சிறப்புகளும்
கதிரவன் வழிபாடு உலகளாவிய கடவுள் கோட்பாடு ஆகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே உலகின் பல நாடுகளில் குறிப்பாக வேளாண்மை சிறந்து இருந்த நாடுகளில் விவசாயத்துக்கு விளைச்சலுக்கு கதிரவன் ஒளி தேவை என்பதைப் புரிந்து கொண்ட உழவர் பெருமக்கள் கதிரவனைக் கடவுளாக வழிபடத் தொடங்கினர்.
மேட்டுப்பகுதியில் வாழ்ந்த இன்கா இனத்தவர் மழையைத் தருவது நல்ல வெயில் தான் என்று நம்பி கதிரவனை வழிபட்டனர். ரோம் நாட்டில் கதிரவனை Sol என்றும் (solar) நெருப்பை igni என்றும் (ignite) பெயரிட்டு அழைத்தனர். கிரேக்கர்கள் கதிரவனை அப்பல்லோ என்றனர்.
அங்குக் கதிரவனின் இரட்டை பிறவியாகப் பிறந்த தங்கை ஆர்டிமஸ் சந்திரனாக வணங்கப்பட்டாள். வேளாண்மைக்குரிய மழைத் தெய்வமாக அப்பலோவும் வேட்டைக்குரிய தெய்வமாக அவனது தங்கை ஆர்ட்டிமேசும் விளங்கினர். தமிழ்நாட்டில் வேளாண் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் கதிரவன் வழிபாடு சிறப்பிடம் பெற்றது.
இந்தியாவில் பரவலாகக் காணப்பட்ட கடவுள் வழிபாட்டு முறைகளை ஆதிசங்கரர் ஆறு பிரிவாகப் பிரித்தார். அப்போது கதிரவன் வழிபாடு மிகுந்த செல்வாக்கு பெற்று இருந்ததனால் அதனை சவுமாரம் (சூரிய) என்று அழைத்தார். கதிரவன் வழிபாடு தனி வழிபாடாக இருந்த நிலை கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மாறியது. நவக்கிரகங்களின் நாயகனாகவும் வைணவர்களின் நாராயண வழிபாட்டில் சூரிய நாராயணன் என்ற பெயரிலும் இடம்பெற்றது.
இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பு ஈரான், ஈராக், எகிப்து போன்ற நாடுகளில் கதிரவன் வழிபாடு சிறப்பாக இருந்தது. ஈரான் நாட்டைச் சேர்ந்த ஜோராஷ்டிரிய சமயத்தினர் நெருப்பை வழிபடுவர். இவர்கள் காலப்போக்கில் நெருப்பு வழிபாட்டில் இருந்து சூரிய வழிபாட்டுக்கு மாறினர். இவர்களின் வழி வந்தவர்களே சௌராஷ்டிரர் ஆவர். சௌராஷ்ட்ர் இன்றைக்கும் நெருப்பை கதிரவனாக சூரிய நாராயணப் பெருமாள் ஆகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ சமயம் பரவுவதற்கு முன்பு (pre Christian era) நாட்டுப்புறச் சமயங்களில் கதிரவன் வழிபாட்டு விழா ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ சமயம் பரவத் தொடங்கியதும் இத் திருநாளைத் தனதாக்கிக் கொண்டு கிறிஸ்துவின் பிறந்த தின விழாவாக கிறித்துவ சமயம் மாற்றியது.
மேலும் புதுத் தளிர் தோன்றும் வசந்த விழாவையும் ஈஸ்டர் என்று மறுபிறப்பு விழாவாக மாற்றியது. இத்தகைய மாற்றங்களை வைதீக இந்து சமயத்திலும்காணலாம். பௌத்த சமண பண்டிகைகளான தீபாவளி இம்மதங்களின் செல்வாக்குப் குறைந்த பின்பு இந்து பண்டிகையாக மாற்றம் பெற்றது.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் கதிரவன் வழிபாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் எகிப்து நாட்டில் ரே என்ற பெயரிலும் வழங்கியது . அதிகாலை இளம் கதிரவனை கேப்பர் (keper) என்றும் உச்சி கதிரவனை ரே (Rae) என்றும் மாலை அந்தி சூரியனை அந்துன் (antun) என்றும் பெயர் சூட்டி வழிபட்டனர்.
இந்தியாவில் ஒரிசாவிலும் குஜராத்திலும் சூரியனுக்கு என்று பிரபலமான தனிக் கோயில்கள் உண்டு. மேலும் குஜராத் ஹரியானா ஜம்மு காஷ்மீர் கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களிலும் சூரியனுக்கு என்று தனிக் கோவில்கள் உண்டு..இந்தியாவில் 12 ஊர்களில் சூரியனுக்கு கோவில்கள் உள்ளன.
ஒரிசாவில் கொணாரக் என்ற ஊரில் உள்ள கோவில் மிகவும் புகழ்பெற்ற சூரியக் கோவிலாகும். ஆந்திராவில் அரசவல்லி என்ற ஊரில் இருக்கும் சூரிய நாராயண பெருமாள் கோவில் கலிங்க மன்னன் தேவேந்திர வர்மாவால் கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
அசாமில் உள்ள சூரிய பகர் கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சூரிய பகவானுக்காகக் கட்டப்பட்டது. பீகாரில் டியோ (Deo) என்ற இடத்தில் சூர்யா மந்திர் என்று கோவில் உண்டு.
தமிழ்நாட்டில் ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் உள்ளது. சூரிய தோஷம் உடையவர்கள் இக்கோவிலுக்கு சென்று வணங்கி வருகின்றனர்.
குஜராத்தில் புஷ்பவதி ஆற்றங்கரையில் மொதரா என்ற ஊரில் சூரியன் கோவில், ஜம்மு காஷ்மீரில் மார்த்தாண்ட சூரியன் கோவில், குவாலியரில் கொனாரக் சூரிய கோவில் மாதிரியே தோன்றும் மற்றொரு சூரியன் கோவில் , மத்திய பிரதேசத்தில் உணாவோ என்ற ஊரில் உள்ள சூரிய கோவில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரத்திற்கு 39 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியன் கோயில் என்று சூரியனுக்குப் பல ஊர்களில் தனிக் கோவில் உள்ளது.
அல்மோரா அருகே கதர்மால் என்ற இடத்தில் சூரியனுக்கு ஒரு தனிக் கோவில் உண்டு. இக்கோவில் தேவதாரு மரங்களுக்கு நிறைந்த அடர்ந்த காடுகளுக்கு நடுவில் உள்ளது. அசாமில் கோபால் நகரத்திற்கு அருகில் சூரியனுக்கு என்று தனி கோவில் உண்டு.
பெங்களூரு அருகே சூரிய நாராயணர் கோவில் சூரியனுக்குரிய கோவிலாகும். தயாவில் தட்சிணார்காவில் சூரியனுக்கு ஒரு கோவில் உண்டு.
மன்னர்கள் கதிரவன் வழியில் வந்தவர்களாகவும் சந்திரன் வழியில் வழியினராகவும் கருதும் போக்கு உலகெங்கும் காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் சோழர்கள் சூரிய குலத்தவர் பாண்டியர் சந்திரகுலத்தவர் சேரர் வானவர் குலத்தவர் என்று கருத்தியதைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.
ஜப்பான் நாட்டு மன்னர் பரம்பரை சூரிய குலத்தில் இருந்து உதித்தது என்று இன்றும் நம்பப்படுகிறது. ஜப்பான் நாட்டையும் உதயசூரியனின் நிலம் என்று அழைக்கின்றனர்.
ஜப்பானில் பௌத்த சமயம் பரவுவதற்கு முன்பு இருந்த பூர்வீக சமயமான ஷிந்தோஷி சமயம் கதிரவனை அமைத்தரசு என்ற பெயரில் கொண்டாடியது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்பு அங்குப் பரவிய பௌத்த சமயம் கதிரவனை ஜூனி தென் என்று அழைத்தது.
கதிரவனைப் பெண்ணாக கருதும் மரபு பல நாடுகளில் உண்டு.. ரோம் நாட்டில் கதிரவனைப் பெண்ணாகக் கருதி சோல் (Sol) என்ற பெயரால் அழைக்கின்றனர். சிரியாவில் அரினா என்றும் இன்க்கா இனத்தவர் இன்டி என்றும் ஈரான், பாரசீகம் போன்ற நாடுகளில் மித்ராஸ் என்ற பெயரிலும் சூரிய கடவுளைப் பெண்ணாகப் போற்றுகின்றனர்
மேசப்போட்டேமியாவில் உது என்றும் ஷாமாஷ் என்றும் சூரிய தேவதை அழைக்கப்படுகின்றாள். சிலேவிக் இனத்தவர்கள் சூர்யாவை சூரியனை ஜோர்யா என்று பெண் பெயரிட்டு அழைக்கின்றனர். ஜெர்மனியில் வாழ்ந்த பழங்குடியினர் சுனோ என்ற பெயரில் சூரியனைப் பெண்ணாகவும் சந்திரனை ஆணாகவும் கொண்டு வழிபடுகின்றனர்.
சங்க இலக்கியத்தில் மன்னர்களைப் பாராட்டும் போது 'நீ ஞாயிறு போலப் பகைவர்களைச் சுட்டெரிப்பாய். நீண்ட காலம் புகழோடு விளங்குவாய். சந்திரனைப் போல உனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நிழலாக குளிர்ச்சியாக விளங்குவாய்' என்று வாழ்த்தினர்.
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில்
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
என்று இளங்கோவடிகள் மங்கல வாழ்த்துப் பாடலில் கதிரவன், சந்திரன், மழை ஆகிய மூன்றையும் வாழ்த்தி வணங்குகிறார். காவிரி நாட்டை ஆளும் மன்னனின் (அற ஆழி) தர்மச் சக்கரம் போல சூரியன் மேரு மலையைச் சுற்றி வருகின்றது, என்று மன்னனின் தர்மசக்கரத்தோடு சூரியனை உவமிக்கின்றார்.
உலகப் புகழ்பெற்று விளங்கும் கதிரவன் வழிபாடு நம் நாட்டில் தற்போது சூரிய நமஸ்காரம் என்ற பெயரில் அதி காலையிலும் அந்தி மாலையிலும் நடைபெறுகின்றது. இவ்வழிபாட்டைத் தினந்தோறும் செய்வது உடல் ஆரோக்கியத்தையும் மன நலத்தையும் வழங்கும்.
அதிகாலை சூரியனின் சிவந்த கதிர்கள் உடம்பின் மீது படும்போது உடம்புக்கு புத்துணர்ச்சியும் மனதுக்கு உற்சாகமும் உண்டாகும். மூளையில் டோப்போமின் அதிமாகச் சுரக்கும் நேரம் அதிகாலை என்பதால் அதிகாலையில் செய்யப்படும் கதிரவன் வழிபாடும் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் அன்றைய நாள் முழுவதும் மனத் தளர்ச்சி ஏற்படாமல் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.
டோபோமின் சுரப்பினால் அன்றைக்குச் சந்திக்கும் பிரச்சனைகள் பெரிதாகாமல் தீர்க்கக் கூடிய மதிநுட்பம் உருவாகும். மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விடாது.
அதிகாலையில் செய்யும் 12 ஆசனங்கள் உண்டு. யோகாசனம் தவிர சூரியனை நோக்கி செய்யும் ஆதித்ய ஹிருதய ஜெபம் உண்டு. சூரிய காயத்ரி ஜெபம் செய்யலாம்.
இவற்றைக் காட்டிலும் மிக எளிமசாயனது அதிகாலையில் எழுந்து கிழக்கு நோக்கிக் கதிரவனைப் பார்த்து நின்று கீழே வரும் போற்றிகளைச் சொல்வதாகும். அவ்வேளையில் கதிரவனின் இளம் கதிரொளி உங்கள் முகத்தில் பட்டுப் புத்துணர்ச்சி அளிக்கும். இத்துதியை இரண்டு முறை சொல்லவேண்டும்.
ஓம் அருணனே போற்றி
ஓம் ஆதித்யா போற்றி
ஓம் பாஸ்கரா போற்றி
ஓம் தினகரா போற்றி
ஓம் பிரபாகரா போற்றி 5
ஓம் ஆதிவாரமே போற்றி
ஓம் உஷா பிரியன் போற்றி
ஓம் பிரத்யூஷா நாயகன் போற்றி
ஓம் கதிரவா போற்றி
ஓம் வெளிச்சமே போற்றி 10
ஓம் கீழ்த் திசை நாயகா போற்றி
ஓம் கிருத்திகை நாயகா போற்றி
ஓம் நவக் கிரக நாயகா போற்றி
ஓம் செஞ்ஞாயிறு போற்றி
ஓம் சிம்மராசி அதிபதி போற்றி 15
ஓம் பரிதியே போற்றி
ஓம் இரவியே போற்றி
ஓம் கனலியே போற்றி
ஓம் ஒளியே போற்றி
ஓம் விடியலே போற்றி 20
ஓம்சூரிய நாராயணா போற்றி
ஓம் கோனார்க் தேவா போற்றி
ஓம் சோழர் மூலவா போற்றி
ஓம் தாமரை நாதா போற்றி
ஓம் சவுமார தேவா போற்றி 25
ஓம் பகலவா போற்றி
ஓம் அனலி போற்றி
ஓம் கனலி போற்றி
ஓம் ஆதவன் போற்றி
ஓம் ஆயிரம் கரத்தவன் போற்றி 30
ஓம் இருள் பகை வென்றவன்
ஓம் உதயசூரியன் போற்றி
ஓம் உச்சிக்கிழான் போற்றி
ஓம் எரிகதிர்ச்செல்வன் போற்றி
ஓம் எழு ஞாயிறு போற்றி 35
ஓம் ஏழு பரியான் போற்றி
ஓம் ஒற்றை ஆழியான் போற்றி
ஓம் கமல நேசன் போற்றி
ஓம் தின நாதன் போற்றி
ஓம் திவாகரன் போற்றி 40
ஓம் தினமணி போற்றி
ஓம் பகவன் போற்றி
ஓம் பத்ம நேசன் போற்றி
ஓம் பனிப்பகையோன் போற்றி
ஓம் பானு போற்றி 45
ஓம் உடுப்பகை போற்றி
ஓம் எல்லோன் போற்றி
ஓம் செங்கதிரோன் போற்றி
ஓம் கிரகபதி போற்றி
ஓம் வெயிலோன் போற்றி 50
ஓம் சுடரோன் போற்றி
ஓம் செம்பருதி போற்றி
ஓம் செய்யோன் போற்றி
ஓம் வெய்யோன் போற்றி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |