அனைத்து வரம் அருளும் அரியமங்கலம் தையல்நாயகி
திருச்சியிலிருந்து தஞ்சை போகும் வழியில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அரியமங்கலம் என்ற ஊரில் தையல்நாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. தமிழகத்தில் பல தையல்நாயகிகள் உள்ளனர். புள்ளிருக்குவேளூர் என்ற ஊரில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அம்மனுக்கு பெயர் தையல்நாயகி ஆகும்.
இது தவிர பொய்யாதநல்லூரில் அக்காள் தையல்நாயகியும் அரியமங்கலத்தில் தங்கை தையல்நாயகியின் கோயில் கொண்டு உள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்பலக்காரனேந்தல் என்ற ஊரில் ஒரு தையல்நாயகி கோவில் உள்ளது.
தனித்தெய்வம் தையல்நாயகி
தையல்நாயகி என்பது சமயபுரம் மாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன் போல் தனிப்பெரும் பெண் தெய்வமாகும். இத்தெய்வம் எந்த ஆண் தெய்வத்துக்கும் மனைவி இல்லை. ஆனால் இந்த தையல்நாயகி கோவிலுக்கு அருகே ஒரு சிவன் கோவில் வைத்திச்வரன் கோயில் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது.
அம்மன் கோயில் அமைப்பு
அரியமங்கலத்தில் கிழக்கு நோக்கி அம்மனின் கருவறையும் அதற்கு எதிரே அர்த்தமண்டபம் மகா மண்டபம் போன்றவையும் உள்ளன. இடது புறம் விநாயகரும் வலது புறம் முருகனும் உள்ளனர். மகா மண்டபத்தில் தென்புறத்தில் துர்க்கைக்கு தனி சன்னதி உள்ளது. தையல் நாயகி அம்மன் கோவிலுக்கு வடபகுதியில் ஆஞ்சநேயருக்கு ஒரு சந்நிதியும் உள்ளது
அம்மனின் திருக்கோலம்
அரியமங்கலத்தில் கருவறையில் காட்சி தரும் தையல்நாயகி அம்மன் நான்கு கைகளுடன் தோன்றுகிறாள். இரண்டு கைகளில் தாமரை உள்ளது. பொதுவாக கஜலட்சுமி இரு மேற்கைகளில் தாமரையை பிடித்திருப்பாள். பௌத்த கோவில்களில் இரட்டை யானை அதிர்ஷ்டத்தின், செல்வத்தின் குறியீடாக இருந்ததால் இரட்டை யானைகளுடன் கூடிய திருமகள் செல்வத்தின் கடவுளாக வடிவமைக்கப்பட்டாள். தாமரை மலர் பௌத்த சமயத்தின் முக்கியச் சின்னம் ஆகும்.
திருமகளும் இரண்டு தாமரை மலர்களைக் கைகளில் கொண்டிருந்தாள். அத்தகைய .சுப திருக்கோலத்தில் தையல் நாயகி அம்மனும் அரியமங்கலத்தில் காட்சி அளிக்கின்றாள். அம்மனின் கீழ் இரண்டு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரையுடன் உள்ளன.
அபயம் என்பது பயப்படாதே என்று பக்தர்களுக்கு தைரியம் ஊட்டுகின்றது. வரதம் என்பது தன் பாதத்தை நாடி வந்த பக்தர்களுக்கு வேண்டுவன வேண்டும் அளவு அருள்கின்றது. அது வரம் தரும் கை.
வைத்தீச்வரன் கோயில்
அம்மன் கோயிலுக்கு அருகில் வைத்தீஸ்வரனுக்கு என்று ஒரு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது வைத்தீஸ்வரன் கோவிலிலும் மகா மண்டபம் நந்தி பலிபீடம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இக்கோயில் முழுக்க முழுக்க ஒரு சைவக் கோவில் ஆகும்.
இதன் வடகிழக்கு மூலையில் கால பைரவர் காட்சி தருகின்றார். தெற்கே சைவ குரவர்கள் நால்வரும் இடம்பெற்றுள்ளனர். தெற்கில் தட்சிணாமூர்த்தி காணப்படுகின்றார். வடக்கே சண்டிகேஸ்வரருக்கு தனிச் சன்னதி உள்ளது.
நாட்டுப்புறத் தெய்வங்கள்
அரியமங்கலம் தையல்நாயகி கோயிலில் நாகம்மா, கருப்பணசாமி போன்ற கிராமப்புறத் தெய்வங்களுக்கும் தனித்தனிவழிபாடுகள் நடைபெறுகின்றன.
நாகர் வழிபாடு
தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் நாகர் வழிபாட்டின் தொடர்ச்சியாக நாக பஞ்சமி அன்று நாகம்மைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ராகு, கேது பெயர்ச்சி நாட்களில் இங்கு சிறப்பு பூசைகளும் யாகங்களும் நடைபெறும்.
விழாக்கள்
தையல்நாயகி கோவில் இப்போது இருக்கும் இடத்தில் முன்பு பௌத்த கடவுளான தாராதேவி கோவில் இருந்திருக்கும் என்பதனை இங்கு நடக்கும் சித்ரா பௌர்ணமி விழா உறுதி செய்கின்றது. சித்ரா பௌர்ணமி விழா பௌத்தக் கடவுளான இந்திரனுக்குக் கொண்டாடப்படும் இந்திர விழாவாகும்.
சோழ நாட்டில் காவேரிக் கரையில் இந்திர விழா பங்குனி உத்திரம் முதல் கொண்டு சித்ரா பௌர்ணமி வரை கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகமும் மணிமேகலையும் எடுத்துரைக்கின்றன.
அரியமங்கலம் தையல்நாயகிக்கு சித்ரா பௌர்ணமி அன்று காவேரி நதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் தீர்த்தக் குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வருக்கின்றனர். அன்று அன்னைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தெய்வ பிரசாதமாக அன்னதான உணவை உண்கின்றனர்.
சிறப்பு வழிபாடுகள்
ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் தையல்நாயகிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்திரி ஒன்பது நாளும் பெண் தெய்வத்திற்குரிய நாட்கள் என்பதனால் அந்த ஒன்பது நாட்களிலும் தையல்நாயகி சிறப்பான அலங்காரத்துடன் காட்சி தருகின்றாள்.
கலச பூஜை
தனி பெண் தெய்வங்கள் இருக்கும் கோயில்களில் தாந்திரீக அடிப்படையில் கலச பூஜை 3,5,9 என்ற எண்ணிக்கைகளில் கலசம் வைத்து இன்றும் நடைபெறுகின்றது. அமாவாசை சிவனுக்குரிய நாளாகவும் பௌர்ணமி அம்பாளுக்குரிய நாளாகவும் கருதப்படுவதால் பௌர்ணமி நாட்களில் அம்மனுக்குக் கலச பூஜை நடைபெறுகின்றது. இக்கோயிலில் மூன்று கலசங்கள் வைத்து அதில் மஞ்சள் நீரை நிரப்பி சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். தாந்திரீக சமய நெறியில் கலச பூஜை என்பது பெண் தெய்வ வழிபாட்டுக்குரிய யோனி வழிபாடு ஆகும்.
நோய் தீர்க்கும் நேர்த்திக்கடன்
தையல்நாயகி கோவிலின் மகா மண்டபத்தில் உள்ள ஒரு இடத்தில் பக்தர்கள் தங்களுக்கு வரும் மறு, பரு, பால் பரு, தேமல் போன்ற தோல் நோய்கள் குணமாக உப்பும் மிளகும் காணிக்கையாக செலுத்துகின்றனர். உடம்பில் கட்டிகள் தோன்றினால் வெல்லக்கட்டி வாங்கி வந்து வைக்கின்றனர்.
வெல்லம் கரைந்து போவது போலத் தங்கள் உடம்பில் தோன்றிய கொழுப்பு கட்டிகளும் வேனல் கட்டிகளும் கரைந்து போகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இத்தகைய வழிபாடு மற்ற சில ஊர்த்தெய்வக் கோவில்களிலும் காணப்படுகின்றது. பிரதிஷ்டை செய்யப்பட்ட வைதிகக் கோயில்களில் காணப்படுவதில்லை. பௌத்தர்கள் தங்கள் மடாலயங்களில் மருத்துவ சேவை செய்து வந்தனர்.
இம்மடாலயங்கள் இருந்த இடங்களில் புதிய கோவில்கள் தோன்றிய போது மருத்துவம் சார்ந்த செயல்பாடுகளும் புதிய கோவில்களில் பிரார்த்தனைகளாக நேர்த்திக் கடன்களாக தொடர்கின்றன. நாகர் வழிபாடு குறிப்பாக பின்னிப் பிணைந்து இருக்கும் அரவங்களின் வழிபாடு குழந்தைப்பேறு வேண்டுவோருக்கு உரிய சிறப்பு வழிபாடாக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது.
அரச மரத்தை மற்றும் வேப்ப மரத்தைச் சுற்றி வரும் போதும் இலைகளின் நுனி பூமியை நோக்கி இருப்பதனால் பூமியின் ஆகர்ஷன சக்தி அதிகமாக இலைகளுக்குக் கிடைக்கின்றது. இதனால் வேப்பம் மர இலைகளும் இலைகளும் அதிக அளவில் பிராணவாயுவை வெளியேற்றுகின்றன. இப் பிராணவாயு மரங்களைச் சுற்றிவரும் பெண்களுக்கு அதிக அளவில் கிடைப்பதனால் அவர்களுக்குக் கரு உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
புற்று இருக்கும் இடங்களில் பெண்கள் அப்புற்றினைச் சுற்றி வரும் போது புற்றின் நுண் மணல் அவர்களின் பாதத்தில் முடிவுற்றிருக்கும் சகல நரம்புகளையும் அழுத்துவதால் உடல் முழுக்க நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுகின்றது. இதனால் கர்ப்பமண்டலமும் விரைவாக செயல்பட்டு கரு உற்பத்தியாகின்றது. அரச மரத்தின் கீழ் இருக்கும் பாம்புப் புற்றுகள் கறையானின் புற்றுக்குள் ஆகும். (கறையான் புற்று வைக்க கருநாகம் குடி புகுந்த கதையாக) நாகங்களுக்கு புற்று வைக்க தெரியாது.
கரையான் புற்றுகளில் நாகங்கள் குடியேறும். நாகப் புற்று இருக்கும் இடங்களில் புற்றுக்களைச் சுற்றி வலம் வருவது பெண்களுக்கு கரு உற்பத்தியாக உதவும். இந்த அறிவியல் அடிப்படையில் எங்கும் நாகர் வழிபாடு குழந்தை பேறு வழிபாடாக பல நூற்றாண்டுகளாக தொடர்கின்றது.
தையல்நாயகி அம்மன் கோயிலில் அரச மரத்தைச் சுற்றி வந்து பெண்கள் அம்மரத்தில் தொட்டிலை கட்டி விடுகின்றனர். இவ்வாறு 48 நாட்கள் ஒரு மண்டலம் அரச மரத்தை காலை வேளையில் சுற்ற வேண்டும். இவர்களுக்குக் குழந்தை பிறந்ததும் அம்மனுக்கு புதுச் சேலை வாங்கி சார்த்தி தொட்டிலைக் கழற்றி விடுகின்றனர்.
ராகு கால பூஜை வைத்திச்வரன் கோவிலில் உள்ள துர்க்கைக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. இதுவும் நாகர் வழிபாட்டுடன் இணைந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியின் போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
கதை ஒன்று.
தையல்நாயகி என்ற பெயரில் இரண்டு சகோதரிகள் இருந்தனர். இருவரும் தன் ஊரை விட்டு தெற்கு நோக்கிக் கிளம்பி வந்தபோது கரிசல் நிலத்தின் வழியாக நடந்து வந்தனர். அப்போது ஒரு தையல்நாயகி கரிசல் நிலத்திலேயே தங்கிவிட்டாள். இன்னொருத்தி புஞ்சை பூமிக்கு நடந்து வந்துவிட்டாள்.
அங்கு வந்து திரும்பி பார்த்தால் தன்னுடைய சகோதரி தன்னைத் தொடர்ந்து வரவில்லை என்று தெரிந்தது. 'ஏனக்கா அங்கேயே நின்று விட்டாய்?' என்று கேட்டாள். 'எனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது. நான் இங்கேயே கோவில் கொள்கிறேன்' என்று அக்கா சொல்லிவிட்டாள்.
எனவே கரிசல் நிலத்தின் தையல்நாயகி பொய்யாத நல்லூரில் தங்கிவிட்டாள். புஞ்சை நிலத்த்துக்கு வந்த தையல்நாயகி தற்போது வைத்தீஸ்வரன் கோவில் கட்டப்பட்டிருக்கும் அரியமங்கலத்தில் தங்கி விட்டாள்.
கதை இரண்டு
அரியமங்கலத்துத் தையல்நாயகி கோவிலுக்கு வந்த கபிஸ்தலம் பண்ணையார் தனக்கு 100 வேலி நிலமும் தையல்நாயகி கோவிலுக்கு 95 வேலி நிலமும் இருப்பதாக அறிந்து தேவியை விடத் தனக்கு கூடுதலாக நிலம் இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் தனது ஐந்து வேலி நிலத்தை கோவிலுக்கு எழுதி வைத்தார். இதனால் தையல்நாயகிக்கு 100 வேலி நிலமும் அவருக்கு 95 வேலி நிலமும் உடைமை ஆயிற்று.
பக்திப் பாடல்கள்
தையல்நாயகி கோவில் சைவ திருத்தலம் கிடையாது. தேவாரத் திருத்தலமும் கிடையாது. எனவே சைவ சமய குரவர்களோ வேறு சிவ பக்தர்களோ அம்மன் பக்தர்களோ அக்காலத்தில் தையல்நாயகியின் பெயரால் பக்தி இலக்கியம் எதுவும் இயற்றவில்லை.
19ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் தையல்நாயகி அம்மன் பேரில் பல நூல்களை இயற்றியும் பாடியும் வருகின்றனர். தையல்நாயகி அம்மன் பாடல், தையல் நாயகி பாமாலை, தையல் நாயகி பதிகம் என்று பல பக்தி நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |