பிரச்சனைகள் தீர லலிதா சகஸ்ரநாமத்தை சொல்ல வேண்டிய முக்கியமான கோயில்
லலிதா சகஸ்ரநாமத்திற்குரிய அம்பிகை லலிதாம்பிகை ஆவாள். இவள் சாந்த சொரூபிணி, சௌந்தர நாயகி. இவள் ஸ்ரீ சக்கர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றாள், அபய வரத ஹஸ்த முத்திரையுடன் வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டு காட்சி தருகின்ற ஊர் . திருநீயச்சூர். இங்கு மேகநாதர் கோவிலில் இவள் தனி சந்நிதியில் எழுந்தருளி உள்ளாள்.
தேவாரத் திருத்தலம்
திருமீயச்சூர் பாடல் பெற்ற ஸ்தலமாகும். காவிரியின் தென்கரைத் தலங்களில் 56 ஆவது திருத்தலம். திருமீயச்சூர் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் மேகநாதன். வில்வம் இங்குத் தலவிருட்சமாக விளங்குகின்றது.
சூரிய பகவான் ஈஸ்வரனையும் அம்பாளையும் வணங்கி அருள் பெற்ற இடம் என்பதனால் இங்குள்ள தீர்த்தம் சூரிய புஷ்கரணி என்று அழைக்கப்படுகின்றது. விமானத்தின் அமைப்பு கஜபிருஷ்டம் ஆகும்.
திருமீயச்சூரில் இளங்கோயில் பழங்கோயில் என்று இரண்டு கோவில்கள் உண்டு. இவை இரண்டிற்கும் ராஜேந்திர சோழனும் செம்பியன் மாதேவியும் திருப்பணிகள் செய்ய நிவந்தம் அளித்துள்ளனர். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இத்திருத்தலம் 119 ஆவது திருத்தலமாகும்.
மஹா பெரியவர் தங்கிய தலம்
லலிதாம்பிகையை வணங்க இங்கு வந்த மகா பெரியவர் அவளது அருளிலும் அழகிலும் மயங்கி இங்கிருந்து செல்லவே மனமின்றி கூடுதல் காலம் தங்கி இருந்த சிறப்பைப் பெற்ற தலம்.
சாமியும் அம்மனும்
இக்கோவிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரம் பலி பீடம், நந்தி ஆகியவைகளைக் கடந்து உள்ளே சென்றால் மற்றொரு கோபுரம் காணப்படும். எதிரே உள்ள திருச்சுற்றில் விஸ்வநாதருக்கு என்று தனிச் சன்னதி உண்டு. கோயிலின் வலப்பக்கம் திரும்பினால் லலிதாம்பிகை தனி சன்னதி கொண்டிருப்பாள். இந்த இரண்டாவது கோபுரத்தையும் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மேகநாத சுவாமி என்ற முயற்சி நாதர் லிங்க ரூபத்தில்அருள் பாலிப்பார்.
திருச்சுற்றுத் தெய்வங்கள்
கருவறைக் கோஷ்டத்தில் நர்த்தன கணபதி,ஷேத்தர புராணேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரன், துர்க்கை ரிஷபாரூடர் ஆகியோர் காணப்படுகின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் பரிகார தேவதைகளாக விநாயகர் சன்னதிகள் உள்ளன.
வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் தனி சந்நிதி கொண்டுள்ளார். இவை தவிர சித்தி விநாயகரும் , மகாலட்சுமியும் திருச்சுற்றில் காணப்படுகின்றனர். சைவ சமயக் குரவர் நால்வரும் உள்ளனர்
லிங்கங்கள் எட்டு
திருமீயச்சூரில் எட்டு லிங்கங்கள் உண்டு. அவை இந்திரலிங்கம், அக்கினி லிங்கம், எமலிங்கம், அகத்திய லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம், பிரித்வி லிங்கம் ஆகியன.
சூரியனின் பாவ விமோசனம்
சூரியனின் தேரோட்டியான அருணன் மிகப்பெரிய சிவபக்தன். அவன் தினமும் சிவனுக்கும் பார்வதிக்கும் பூஜை செய்யாமல் சூரியனது தேரில் ஏறி அமர மாட்டான். அவ்வாறு அவன் தினமும் சிவ பூஜை செய்வதைக் கண்டு எரிச்சலுற்ற சூரிய பகவான் 'நீ செய்த பாவம்தானே ஊனமாகப் பிறந்திருக்கிறாய்.
இப்போது நீ சிவபூஜை செய்தால் மட்டும் உன் ஊனம் போய்விடுமா? உனக்கு புண்ணியம் சேர்ந்து விடுமா? என்று கோபமாகக் கேட்டான். இவனது கேலியான சொற்களைக் கேட்டு மனம் வருந்திய அருணன் இன்னும் கூடுதலாக சிவபூஜை செய்தான்.
சிவபெருமான் அருணனின் பால் இரக்கம் கொண்டு அவனை கேலி செய்த சூரியனைத் தண்டித்தார். அதனால் அவன் ஒளி இழந்து இருண்டு கறுத்துப் போனான். ஊனமுற்றவனைக் கேலி செய்த சூரியன் தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டினான். திருமீயச்சூரில் வந்து தங்கி ஏழு மாதம் தன்னை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.
சூரியன் திருமீயச்சூர் வந்து குளம் வெட்டி (சூரிய புஷ்கரிணி) தினமும் அதில் குளித்து சிவ பூஜை செய்து பாவ விமோசனம் பெற்றான். மீண்டும் தன் ஒளி பெற்று அருணனின் தேரில் பிரகாசத்துடன் வானில் வலம் வந்தான்
லலிதா ஸஹஸ்ரநாமம்
திருமீயச்சூரில் ஹயக்ரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசித்தார் என்பர். தேவியின் திருவாயில் இருந்து உதித்த வஸனி எப்பித்தும் வாக் தேவதைகள் தேவியைப் போற்றி துதித்து நாமங்கள் லலிதா சஹஸ்ரநாமம் என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர்.
இக் கோவிலுக்கு வந்து லலிதா சகஸ்ரநாமத்தைச் சொல்வதால் வாழ்வில் எல்லா நன்மைகளும் கிடைக்கும். லலிதா சகஸ்ரநாமத்தை கேட்ட அகத்தியர் தானும் அம்பாளின் மீது ஒரு ஸ்தோத்திரம் பாடவேண்டும் என்று விரும்பி ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையை இயற்றினார்.
இதன் மொழிநடை காலத்தால் மிக பிந்தியது. எனவே இதனை பிற்காலத்தவர் யாரோ எழுதி அகத்தியர் பெயரை சூட்டியிருக்கலாம். இதனையும் தினமும் படித்து வர எல்லா இன்னல்களும் சேர்ந்து நன்மைகள் நடைபெறும்.
லலிதாசனம்
லலிதாசனம் என்பது (royal posture) அரசர், அரசிகள் அமரும் முறை ஆகும். லலிதாம்பிகா உட்கார்ந்திருக்கும் முறை (pose) காரணமாகவே அவள் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் என்று சொல்கின்றனர். பௌத்தப் பெண் தெய்வங்களில் தாரா ( எண் 60), வசு தாரா (எண்கள் 63,64,65) போன்றோர் லலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் செப்புத் திருமேனிகள் நாகப்பட்டினத்தில் கிடைத்தன.
அவை நாகப்பட்டினத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பௌத்த கோயில்களில் லலிதாசனத்தில் அமர்ந்திருந்த தாரா சைவப் பேரெழுச்சிக்கு பின்பு லலிதாம்பிகா என்ற பெயரில் வணங்கப்படுகிறாள்.
மேகநாதன், முயற்சி நாதருக்குரிய கதைகள் வட மொழிப் புராணங்களில் இருந்து இங்குக் கொண்டு வரப்பட்டன. லலிதாசனத்தில் உள்ள தனிப் பெண் தெய்வம் கிடைப்பது மிக மிக அரிது. அவ்வாறு கிடைத்திருக்கும் அரிய தெய்வம் திருமீயச்சூரில் உள்ள லலிதாம்பிகை ஆவாள்.
குலசேகரப்பட்டணம் (முத்தாரம்மன்) புதுக்கோட்டை (7ஆம் நுற்றாண்டு குன்றாண்டார் குடவரைக் கோயில்) போன்ற ஊர்களில் ஜோடியாக லலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வங்கள் கிடைத்துள்ளன. திருமீயச்சூரில் அம்பாள் லலிதாசனத்தில் தனிச் சந்நிதி கொண்டுள்ளாள். இது வேறெங்கும் காணக் கிடைக்காத திருக்காட்சி ஆகும்.
சேத்திர புராணேஸ்வரர் திருமீயச்சூர் கோயிலின் கருவறை கோஷ்டத்தில் உள்ள ஷேத்திர புரானேஸ்வரர் சிற்பம் சிவம் பார்வதியின் கோபம் தணிவிக்கும் கோலத்தில் உள்ளது. இச் சேத்திர புராணேஸ்வரர் சிற்பத்திற்கு சுவையான ஒரு கதை சொல்லப்படுகிறது உண்டு.
சிவபெருமானும் பார்வதியும் தனித்திருந்த வேளையில் திருமீயச்சூரில் ஏழு மாதங்கள் சிவ பூஜை செய்தும் சாபம் நீங்காத சூரியன் அங்கே வந்தான். கரிய உருவில் ஒருவன் திடீரென வந்ததும் பார்வதி கோபமுற்று அவனை சபிக்க போனாள்.
அப்போது சிவபெருமான் நான் அவனுக்கு கொடுத்த சாபகாலம் ஏழு மாதம் முடிந்து விட்டது. அவன் சாபம் முடிந்தும் விமோசனம் கிடைக்கவில்லையே என்று என்னைத் தேடி வந்திருக்கின்றான். இவ்வேளையில் நீ அவன் மீது கோபம் கொண்டு அவனைச் சபிக்க போகிறாய.
வேண்டாம். சாந்தமாக இரு' என்று கெஞ்சலாகக் கூறினார். 'அவன் தன் மனக்குறையை என்னிடம் சொல்ல வந்திருக்கின்றான். நீ அவனை கோபித்து விரட்டாதே. சாந்தமாக இரு' என்று பார்வதியின் நாடியை தொட்டு கொஞ்சலாக கூறும் காட்சி சேர்த்தர புராணேஸ்வரர் என்ற பெயரில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
அம்பாளின் கோப தாபம்
ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பத்தில் அந்தரங்க வேளையில் அசடு போல் புகுந்த சூரியனால் அம்பாளுக்கு ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தைத் தெளிவாகக் காணலாம். சிவபெருமான் பார்வதியின் நாடி தொட்டு கெஞ்சுவதால் சிவன் பக்கம் உள்ள கண்ணில் தாபமும் அடுத்த பக்கம் உள்ள கண்ணில் கோபமும் தெரியும். அழகான சிற்பத்துக்கு காதலும் மோதலும் கலந்த அருமையான காரணம் சொல்லப்படுகிறது.
சூரியக் கதிர் வணக்கம்
தமிழ்நாட்டில் சிற்பக் கலைஞர்கள் சூரியனின் கதிரொளி விழுமிடங்களைச் சரியாகக் கணக்கிடத் தெரிந்தவர்கள். அதனால் கோயில்களில் உள்ள சிவலிங்கத்தின் மீது குறிப்பிட்ட நாட்களில் கதிரொளி விழும் வகையில் கருவறையையும் சிவலிங்கத்தையும் அமைத்தனர்.
இதற்கு சூரியனின் நமஸ்காரம் என்று பெயர் சூட்டினர். ஆனால் இக்காலத்தில் கன்னியாகுமரியில் கட்டிய காந்தி மண்டபத்தில் அவரது பிறந்தநாள் அன்று சூரிய ஒளி அவர் சிலையின் மீது விழுவது போல் கட்டப்பட்டுள்ளது. இது கட்டிடக் கலையின் சிறப்பை உணர்த்துகிறது.
சூரியன் காந்தியடிகளை நமஸ்காரம் செய்வதாகக் கருதக் கூடாது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21 ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை சூரியன் தன்னுடைய கதிர்களால் சிவலிங்கத்தைத் தொட்டுத் தழுவிச் செல்கிறது. இதனை சிவபெருமானால் பாவ விமோசனம் பெற்ற சூரிய பகவான் சிவலிங்கத்தைத் தன் ஒளி கரங்களால் ஆராதிக்கின்றார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
பரிகாரத்தலம்
ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் இங்கிருப்பதால் பிரிந்திருக்கும் கணவன் மனைவிமார் இத்தலத்திற்கு வந்து வணங்கி சென்றால் அவர்கள் மீண்டும் இணைந்து இன்பமாக வாழ்வது உறுதி. கால் இல்லாத அருணனின் மனக்குறையைக் தீர்த்து வைத்த இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் ஊனமுற்றோர் தங்களின் மனக்குறைகளை இறைவனிடம் முறையிட்டால் அவர்களின் மனக்குறை தீரும்.
கிரக தோஷங்களால் ஆயுள் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்க்காயுள் கிடைக்கும். இங்குப் பிரசாதமாக தாமரை இலையில் பிரண்டை சாதத்தை வைத்து தருவார்கள். இப் பிரசாதம் பல வகை நோயையும் தீர்க்க வல்லது.
தங்கக் கொலுசு
பொதுவாக தமிழ்நாட்டில் பெண்கள் இடுப்புக்குக் கீழே தங்க நகைகள் அணிவதில்லை. ஆந்திராவை சேர்ந்த நடிகையர் திலகம் சாவித்திரி தங்கத்தால் கொலுசு செய்து அணிந்ததால் செல்வத்தை இழந்து ஆரோக்கியத்தை இழந்து நோயிலும் பாயிலும் பல காலம் கிடந்து உருத் தெரியாமல் இறந்து போனார் என்பர்.
மனிதர்கள் தங்கத்தை இடுப்புக்கு கீழே அணிந்தால் அது மகாலட்சுமியை அவமதிப்பதாக ஐதீகம். இங்கு தெய்வத் திருமகள் லலிதாம்பிகைக்கு தங்கக் கொலுசு சாத்தி இருப்பது ஒரு விசேஷமாகும். ஒரு பக்தையின் கனவில் அம்பிகை தோன்றி 'எனக்கு தங்க கொலுசு சாத்துங்கள்' என்று கூறியதும் அந்தப் பக்தை கோயில் குருக்களிடம் வந்து தெரிவித்தாள்.
கோயில் ஆட்கள் தங்க கொலுசு மாட்டா அம்மன் சிற்பத்தில் ஏதேனும் வாய்ப்பு உண்டா என்று ஆராய்ந்தனர். ஒன்றும் வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. பல நாட்கள் பல ஆசாரிகள் சிற்ப சாத்திர வல்லுநர்கள் வந்து தேவியின் சிற்பத்தை ஆராய்ந்து பார்த்தார்கள்.
இவ்வாறு மிகவும் சிரமப்பட்டு ஆராய்ந்ததில் தேவியின் பாதங்களில் கொலுசு மாட்டுவதற்குரிய துவாரம் அடைப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துவாரம் தெரியாததால் இத்தனை ஆண்டுகளும் கொலுசு மாட்ட வில்லை. பின்பு அவ் அடைப்பை நீக்கிவிட்டு அதன் வழியாக கொலுசு கம்பியை உள்ளே விட்டு மாட்டினார்கள். இப்போது தேவி தங்க கொலுசுடன் காட்சியளிக்கின்றாள்.
நல்ல குமாரனைப் பெற
காசிப முனிவருக்கு கர்த்ரு, வினதா என்று இரண்டு மனைவிமார் உண்டு. இருவரும் சிவபெருமானை நோக்கி தமக்கு நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று நீண்ட காலம் வழிபட்டு வந்தனர். சிவபெருமான் ஒருநாள் அவர்களுக்குக் காட்சி அளித்து இருவர் கையிலும் ஆளுக்கு ஒரு முட்டையைக் கொடுத்தார். 'முட்டை தானாக உடையும் வரை நீங்கள் அதனை ஒன்றும் செய்யக்கூடாது. முட்டையிலிருந்து உங்களுக்கு நல்ல மகன் பிறப்பான்' என்று கூறினார்.
கருடன் பிறந்தான்
ஒரு வருட காலம் பூஜித்து வந்த கர்த்ரூவின் முட்டையிலிருந்து ஒரு பறவை வெளியே வந்தது. உடனே அவள் சிவபெருமானை நோக்கி வணங்கி 'ஐயனே எனக்குக் கொடுத்த அண்டத்தில் இருந்து பட்சி வந்திருக்கிறதே. மனிதன் வரவில்லையே' என்று அழுதபடி கேட்டாள்.
அதற்கு சிவபெருமான் 'இது சாதாரண பட்சி அல்ல. கருட பட்சி. கருடனே பெருமாளின் வாகனம் ஆவார். கருட தரிசனம் புண்ணிய பலன் தரும்' என்று கூறினார். அவளும் மகிழ்ச்சி அடைந்தாள்.
அருணன் பிறந்தான்
கத்ருவுக்குப் பறவைக் குழந்தை பிறந்ததை அறிந்த வினதா தன்னுடைய முட்டையில் என்ன இருக்கும் என்ற ஆர்வத்தின் காரணமாக அதை உடைத்து பார்த்தாள். அதற்குள் இருந்து பாதி வளர்ந்த ஒரு குழந்தை வெளியே வந்தது. குழந்தை இடுப்பு வரை தான் வளர்ந்திருந்தது. இடுப்புக்கு கீழே கால்கள் வளர்வதற்குள் அவள் முட்டையை உடைத்து விட்டாள்.
ஐயகோ இப்படி ஆகிவிட்டதே இன்னும் சற்று பொறுத்திருந்தால் கால்களும் வளர்ந்து இருக்குமே இப்படி செய்து விட்டேனே என்று அழுது சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான் ' 'அஞ்சாதே. இவனும் சத் புத்திரனாகத்தான் விளங்குவான். இவன் சூரிய பகவானின் தேரை ஓட்டும் தேரோட்டியாக வருவான்.
சூரிய உதயத்திற்கு முன்பே இவனுடைய அருணோதயம் நிகழும். உலகமே அருணனை வழங்கிய பின்பு தான் சூரியனை வணங்கும் இவனும் சத் புத்திரனே என்று கூறினார்' அவளும் தன் மகனை அன்புடன் வளர்த்து வந்தாள். இக்கதைகள் வடநாட்டில் ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட புராணக் கதைகள் ஆகும்.
மருத்துவ சேவை, ஆழ்நிலை தியானம், தற்காப்புக் கலை போன்றவை நடைபெற்ற பௌத்த மடாலயங்கள் சிவன் கோயிலாகிய போது ஒவ்வொரு சிவத்தலத்துக்கு ஒரு புதிய ஸ்தல புராணம் எழுதப்பட்டது. அதில் வட நாட்டுக் கதைகள் தமிழ்மயமாயின. அவலோக்திச்வரர் அகத்திய முனிவர் ஆனார்.
பிரமனும் இந்திரனும் சபிக்கப்பட்டவர் ஆயினர். சாமியின் பெயரும் கதையும் மாறினாலும் மக்களின் பழைய வழிபாட்டு நம்பிக்கைகள் அப்படியே தொடர்ந்தன. அதன்படியே திருமீயச்சூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கினால் நல்ல புதல்வரைப் பெறலாம். அவர்கள் உலகம் போற்றும் உத்தமராக விளங்குவது உறுதி.
பௌர்ணமி பூஜை
சிவபெருமானுக்கு அமாவாசையும் சக்திக்கு பௌர்ணமியும் பூஜைக்கு உகந்த நாட்களாகும். இங்கு லலிதாம்பிகைக்கு பௌர்ணமி பூஜை பிரசித்தம். லலிதாம்பிகைக்கு மாசி மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். அன்று அந்த அர்ச்சனையில் கலந்து கொள்பவர்கள் சகல நன்மைகளும் அடைவார்கள்.
அந்நாளை அம்பாளின் பிறந்த நாளாகக் கருதியும் வழிபடுகின்றனர். அன்று அகத்தியர் அழகிய தமிழில் அருளிய ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையைப் பலரும் பாராயணம் செய்து சொல்வதைக் கேட்கலாம். இதனை வீட்டிலும் பாராயணம் செய்து தினமும் சொல்லி வரலாம். இதனால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
பிரண்டை சாதம் -நோய் நிவாரணம்
திருமீயச்சூரில் கோயில் பௌத்த சமயம் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்த்தில் மருத்துவ சேவைக்கான திருத்தலமாக இருந்தது. கௌதம் புத்தருக்குத் திருமுழுக்குச் செய்தவன் இந்திரன் என்பதால் பௌத்தர்கள் அவனைத் தலைமைத் தெய்வமாகப் போற்றினர். இன்றைக்கு லிங்கம் எனப்படும் கந்து இந்திரனின் சின்னமாக இடம்பெற்றது. அவன் எலும்புக்கு உரியவன்.
அவனது ஆயுதம் எனப்பட்டது முதுகெலும்பு. அதன் உறுதி (வஜ்ரம் - வைரம்) காரணமாக வஜ்ராயதம் என்று அழைக்கப்பட்டது. எலும்புக்கு உறுதி தரும் பிரண்டை (வஜ்ரவல்லி) அவனுக்குரிய மூலிகை ஆகும். பிரண்டை சாதம் அன்று பெயக கோயில்களில் வழங்கப்பட்ட அன்னதானம் ஆகும் அதுவே இன்றைக்கும் இங்கே பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
பிறவி நோய் தீர அன்னதானம்
தாமரை இலைகளில் சங்கு புஷ்பத்தை வைத்து சதய நட்சத்திரத்தில் சிவபெருமானுக்குப் பூஜை செய்து வந்தால் பெண் வழியே, தாயின் வழியே வந்த ஜென்ம நோய்கள் விலகும். சங்கு புஷ்பம் (Clitoria / Clitero Ternatea) தாயின் கருவாயைக் குறிப்பதாகும்.
அதே தாமரை இலையில் அன்னம் படைத்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் அப்போது தன்னைப் பிடித்திருக்கும் பிறவி நோயிலிருந்து (genetic disease/ familial disease) விடுதலை கிடைக்கும்.
தீர்க்காயுள் பெற
சிவ பக்தர்கள் தன் குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம், தங்களுக்கு சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற ஆயுள் விருத்திக்கான பூஜைகளை யாகங்களைச் செய்கின்றனர்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |