திருப்பதி பெருமாளின் அருளால் உங்கள் திருமணம் நடக்க.. இதோ ஒரு அற்புத வாய்ப்பு
திருப்பதியில் வீற்றிருக்கக்கூடிய பெருமாளுக்கு பக்தர்கள் உலகெங்கிலும் கோடிக்கணக்காக இருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய வீடுகளில் நடக்கக்கூடிய ஒவ்வொரு சுப நிகழ்ச்சிக்கும் பெருமாளின் ஆசீர்வாதம் கிடைப்பதற்கு திருப்பதி வந்து செல்வார்கள். அதிலும் குறிப்பாக திருமணம் முடிந்து கையோடு தம்பதியினர் பத்மாவதி தாயாரையும் வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்ய வந்து விடுவார்கள்.
அந்த வகையில் ஒரு சிலருக்கு தங்களுடைய திருமணத்தை திருப்பதி வெங்கடாசலபதி முன்னிலையில் நடத்த வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கும். ஆனால் அது எல்லோருக்கும் கை கொடுப்பதில்லை.
அப்படியாக திருப்பதி ஏழுமலையான் மற்றும் பத்மாவதி தாயாரின் ஆசிர்வாதத்தோடு உங்கள் வீட்டு திருமணம் நடைபெறுவதற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிதாக திருமணம் செய்யக்கூடிய தம்பதியினர் இறைவன் அருளோடு தர்மத்தோடும் அறத்தோடும் அவர்களின் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற ஒரு அற்புதமான நோக்கத்தில் "ஸ்ரீ வாரி ஆசீர்வாதம்" திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
திருமண பந்தம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒரு பந்தமாக நம்முடைய இந்து மத கலாச்சாரத்தில் பார்க்கப்படுகிறது. அப்படியாக ஒவ்வொரு தம்பதியினர் அவர்களுடைய திருமண வாழ்க்கையை மிகுந்த கனவுகளோடும் ஆசைகளோடும் தொடங்குகிறார்கள்.
இவ்வளவு சிறப்பு மிக்க திருமண நிகழ்வில் கலியுக பெருமாள் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் அருள் கிடைப்பது என்பது ஒரு மிகப்பெரிய பாக்கியமாக இருக்கும். அந்த வகையில் புதிதாக திருமணமாகும் தம்பதிகள் அவர்கள் பெருமாளின் நிலையான ஆசீர்வாதம் பெற்று வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதற்காக ஏழுமலையானுக்கு தங்களுடைய திருமண அழைப்பிதழ்களை அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அனுப்பக்கூடிய தம்பதிகளுக்கு டிடிடி நிர்வாகம் ஒரு தொகுப்பை இலவசமாக அனுப்பி வைக்கிறார்கள். அதில்

ஸ்ரீவாரி அட்சதை:
பெருமாளின் பாதத்தில் வைத்து பூஜையை செய்த புனிதமான மஞ்சள் கலந்த அரிசி (அட்சதை) மங்கல குங்குமம்: பத்மாவதி தாயாரின் பிரசாதம் வழங்கப்படுகிறது.
கங்கணம்:
தம்பதிகளை கண் திருஷ்டிகளில் இருந்து பாதுகாக்கவும் புனிதத்தை நிலைநாட்டும் விதமாகவும் மணமகனின் வலது கைகளிலும் மணமகளின் இடது கைகளிலும் கட்டுவதற்கு புனித கயிறு ஒன்று அனுப்பப்படுகிறது. திருமண செய்வதற்கான முதல் சடங்கு இந்த கங்கணம் அணிவதுதான்.
திருவுருவப் படம்:
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியும் தாயார் பத்மாவதியும் இணைந்து அருள் பாலிக்க கூடிய ஒரு அற்புதமான புகைப்படம்.
வேத ஆசீர்வாத மடல்:
தேவஸ்தான நிர்வாக அதிகாரி பெயரில் வழங்கப்படக்கூடிய அதிகாரப்பூர்வமானதம்பதிகளுக்கான ஆசீர்வாத கடிதம்.
கல்யாண சமஸ்கிருதி' புத்தகம்:
திருமணத்தை உணர்த்துகின்ற தத்துவம் சடங்குகளின் பொருள் மற்றும் குடும்ப வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்காக வழிகாட்டுதல்கள் அடங்கிய ஒரு புத்தகம்.
இவ்வாறு தங்களுக்கு திருமணம் என்று அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கக் கூடிய தம்பதியினர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்காக திருப்பதியில் இருக்கக்கூடிய டிடிடி நிர்வாகக் கட்டிடத்தில் இயங்கும் "சுத்த பிரதி பிரிவு" (Shuddha Prathi Division / Postal Section) ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் லட்சத்திற்கும் மேலான அழைப்பிதழ்கள் இங்கு வருகிறது.
அவை ஒவ்வொன்றையும் சரிபார்த்து பிரசாத தொகுப்புகளை தபால் வழியாக மன மக்களுக்கு எந்த ஒரு தாமதமும் இல்லாமல் அனுப்பி வைப்பதை இவர்கள் உறுதி செய்கிறார்கள்.

இவ்வாறு நீங்களும் திருப்பதி வெங்கடாசலபதியின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறையைப் பற்றி பார்ப்போம்.
1.திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயாரின் முழு ஆசிர்வாதத்தை நீங்கள் பெற விரும்பினால் உங்களுடைய திருமண அழைப்பிதழை தபால் வழியாக அனுப்ப வேண்டும். அதோடு முழு விவரங்களும் அதில் தெளிவாக குறிப்பிட வேண்டும். அதிலும் வீட்டு முகவரி மிகவும் சரியாக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
2. இவ்வாறு நீங்கள் தயார் செய்த பிறகு உங்களுடைய திருமண அழைப்பிதழை அனுப்ப வேண்டிய முகவரி :The Executive Officer, Tirumala Tirupati Devasthanams (TTD), Administrative Building, K.T. Road, Tirupati - 517501, Andhra Pradesh.
3. இதை விண்ணப்பிக்க ஏதெனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் டிடிடி-யின் 24 மணி நேரம் செயல்படக்கூடிய சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் தொலைபேசி எண்: 155257 அல்லது 1800 425 4141.
ஆக, இந்த அற்புதமான திட்டத்தை தம்பதியினர் பயன்படுத்திக் கொண்டு பெருமாளின் ஆசிர்வாதத்தோடு திருமண பந்தத்தில் இணைந்து பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |