திருமண வரம் அருளும் வயலூர் முருகன்
திருச்சியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் வயலூர் முருகன் கோவில் உள்ளது. இவ்வூருக்குத் ஆதி வயலூர், குமார வயலூர், வன்னி வயலூர், அக்கினேஸ்வரம் என்று பல பெயர்கள் உண்டு.
இங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு பெயர் சுப்பிரமணியசுவாமி இவர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார். வன்னி மரம் இங்குத் தலவிருட்சம் ஆகும். தீர்த்தம் சக்தி தீர்த்தம் ஆகும். இங்குள்ள சிவன் கோயில் ஆதிநாதர் கோயில் எனப்படுகிறது. ஆனால் முருகன் கோயில் என்றே மக்கள் கொண்டாடுகின்றனர்.
முருகன் சந்நிதி
வயலூர் முருகனின் பின்னால் இருக்கும் மயில் வடக்கு நோக்கி நிற்பதால் இதனை தேவ மயில் என்று அழைக்கின்றனர். இத்திருத்தலத்தில் முருகன் தன் மனைவியரோடு சேர்ந்து சிவ பூஜை செய்வதாக ஐதீகம்.
ஆதிநாதர் ஆதிநாயகி
வயலூர் சிவனின் பெயர் ஆதிநாதர் அல்லது அக்கினேஸ்வரன் ஆகும் அம்மன் ஆதி நாயகி ஆவாள். இவள் இங்குத் தெற்குப் பார்த்து காட்சியளிக்கின்றாள். பொதுவாக அம்மன் வடக்கு வாய் செல்வியாக வடக்கு நோக்கி இருப்பதே மரபு.
சிவன் சந்நிதிக்கு பின்புறம் வள்ளி தெய்வானையோடு சுப்பிரமணியர் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இக்கோவில் சிவன் கோவிலாக இருந்தாலும் முருகனே என்று மக்கள் செல்வாக்கு பெற்ற தனிப் பெரும் கடவுளாக விளங்குகிறார். முருகன் பெயரால் இக்கோயில் அழைக்கப்படுகின்றது.
கதை 1
அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் இருக்கும் முருகனைத் தொடர்ந்து வழிபட்டு வந்தார். கம்பத்து இளையவராக வைத்து அருணகிரிநாதரை ஆட்கொண்ட முருகனின் அருளால் அவர் திருப்புகழ் பாடத் தொடங்கினார். முத்தைத்தரு பத்தி எனத் தொடங்கும் முதல் பாடலைப் பாடியதும் அவருக்கு நான் எழவில்லை. அவர் முருகனை அழுது மன்றாடிய போது வயலூருக்கு வா என்று ஓர் அசரீரி கேட்டது.
இவ்வாறு அவர் பேச இயலாதவராக இருந்த காலத்தில் இவ்வூர் கோவிலுக்கு வந்து தினமும் முருகனை வணங்கிச் செல்வார். ஒரு நாள் முருகப்பெருமான் அவரது நாவில் தன் வேலாயுதத்தால் ஓம் என்று எழுதினார். அவ்வாறு எழுதியதும் அருணகிரிநாதர் வாய் திறந்து பேசவும் செய்யுள் இயற்றவும் திறன் பெற்றார். பின்பு அவர் திருப்புகழின் எஞ்சிய 18 பாடல்களை பாடி முடித்தார்.
அருணகிரிநாதர் சந்நிதி
ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று முருகன் புறப்பாடாகி திருவீதி உலா வரும்போது உடன் அருணகிரிநாதரும் எழுந்தருள்வார். அவருக்கும் இக்கோயிலில் தனிச் சன்னதி உண்டு. திருமுருக கிருபானந்த வாரியாருக்கு இஷ்ட தெய்வம் வயலூர் முருகன் ஆவார்.
கதை இரண்டு
ஒருமுறை ஒரு சோழ மன்னன் காடாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். அப்போது இங்கு ஒரே ஒரு கரும்பு மட்டும் மூன்று கிளையாக வளர்ந்து இருந்ததைக் கண்டு வியந்தான். கரும்பைத் தின்னலாம் என்று ஒடித்த போது அக்கரும்பிலிருந்து சிவப்பு நீர் கசிந்தது.
உடனே அவ்விடத்தை அகழ்ந்து பார்த்தான். அங்கு ஓர் சிவலிங்கம் மண்ணுக்குள் புதைந்திருந்தது. அந்த சிவலிங்கத்தை எடுத்து அவன் கோவில்கட்டி ஆதிநாதர் என்ற பெயரில் வழிபட்டான் அம்பாளுக்கும் ஆதி நாயகி என்ற பெயரில் ஒரு சன்னதி அமைத்தான். வயல்கள் சுற்றிலும் இருப்பதால் இவ்வாறு வயலூர் என்று பெயர் பெற்றது.
விநாயகர்
வயலூர் முருகன் கோவிலில் முருகன் சந்நிதியும் சிவன் சந்நிதியும் ஒருங்கே காணப்பட அங்கு கணபதியும் பொய்யா கணபதி என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். இவர் பக்தர்கள் வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவரை பொய்யா கணபதி என்று அழைக்கின்றனர்.
திருச்சுறறுத் தெய்வங்கள் வயலூர் முருகன் கோவிலின் பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சகிதமாய் இன்னொரு முருகன் சன்னதியும் உள்ளது. மகாலட்சுமிக்கு தனி சன்னிதி உண்டு.திருச்சுற்றுத் தெய்வங்களில் நவகிரக சந்நிதி தனியாக உள்ளது.
சூரியன், சந்திரன் தன் மனைவியருடன் காட்சி தருகின்றனர். நவக்கிரகங்கள் சூரிய பகவானை நோக்கி வழிபட்ட நிலையில் காட்சி தருகின்றனர். இதுவும் இக்கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
திருக்கல்யாண விழாக்கள்
வயலூர் முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் காட்சியளிக்கின்றார். ஒவ்வொருவரையும் தனித்தனி நாளில் திருமணம் செய்து கொண்டார்.
திருக்கல்யாண திருநாட்கள் இக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. முருகன் தெய்வானை திருமணம் சூரசம்காரம் முடிந்து கந்த சஷ்டியின் போது முருகன் தெய்வானையைத் திருமணம் செய்து கொள்கின்றார்.
பங்குனி உத்திரக் கல்யாணம்
பழந்தமிழ் மரபுப் படி இந்திர விழா தொடங்கும் நாளான பங்குனி முயக்கம் நடைபெறும் பங்குனி உத்தரத் திருநாள் அன்று வள்ளியை முருகன் திருமணம் செய்கிறார். வள்ளி திருமண விழாவில் யானை வள்ளியை விரட்டுவதும் முருகன் வந்து அவளை காப்பாற்றுவதுமான காட்சிகள் நிகழ்த்தி காட்டப்படும்.
தைப்பூசத் திருநாள்
பழந்தமிழர் வேளாண்மரபில் தை மாத பௌர்ணமி தொடங்கி 5 மாதங்கள் வரையிலான பௌர்ணமிகள் தொடர்ந்து விழாக்கோலத்துடடன் காணப்படும் தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் ஆகிய ஐந்து நாட்களும் மக்கள் கொண்டாடி மகிழ்ந்த நாட்கள் ஆகும்.
பெருங்கோயில்கள் எழுப்பப்பட்ட பிறகு இக்கொண்டாட்டங்கள் கோயிலோடு கைகோர்த்துக் கொண்டன. தைப்பூசத் திருநாளில் முருகன் அருகில் உள்ள நான்கு கோவில்களின் சாமிகளோடு சேர்ந்து பஞ்ச நாதராக காட்சியளிப்பார்.
இடும்பன் கோவில்
பிற்காலத்தில் முருகன் கோவில்களில் இடும்பனுக்குத் தனி சந்நிதி வைப்பது மரபாயிற்று. முருகன் கோவிலுக்கு வெளியே கல்லால மரத்தடியின் கீழ் இடும்பன் கோவில் உள்ளது. இது கிராம தேவதை / நாட்டுப்புற தெய்வத்தின் கோவிலாக இருந்தாலும் இக்கோவிலுக்குள் வேல் தான் வழிபடுபொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேரடியான் கோயில்
இப்பகுதியில் நேரடியான் கோவிலும் உள்ளது. நேரடியான் கோவிலிலும் முருகனின் வேலாயுதமே வழிபடு பொருளாக சன்னதிக்குள் காட்சியளிக்கின்றது.
ஞானவரோதயர்
அருணகிரிநாதர் மட்டுமல்லாது ஞானவரோதயர் என்ற முருகனடியாரும் முருகன் மீது பக்தி நூல் இயற்றியுள்ளார். இவர் இக்கோவிலுக்கும் விராலிமலைக்கும் தல புராணம் இயற்றியுள்ளார். கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டத்தை இவரே இயற்றினார்.
நடராஜர் சந்நிதி
ஆதிநாதர் சிவாலயத்தில் திருச்சுற்றுத் தெய்வங்களில் நடராஜரையும் காணலாம். இவர் காலைத் தூக்கி ஆடிய கோலத்தில் காட்சி அளிக்காமல் குஞ்சிதபாதமாக இரண்டு கால்களையும் சேர்த்து நிறுத்தி நின்ற காலத்தில் காட்சி தருகின்றார். இதனால் சடாமுடி விரிந்த கிடக்காமல் முடிந்த கோலத்தில் உள்ளது.
இவரை சதுர தாண்டவ நடராசர் என்பர். நடனம் முன் ஆடுவதற்கு தயாராகி நிற்கும் கோலம் குஞ்சிதபாத கோலமாகும். சிவபெருமானுக்கு உரிய சிறப்பு நாளான மார்கழி திருவாதிரை திருநாளில் நடராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு.
தத்து திருப்புதல்
செட்டிநாட்டில் வாரிசு இல்லா தம்பதிகள் தங்கள் உறவினர் பிள்ளைகளைத் தங்களுக்கு வாரிசாகத் தத்து கொடுக்கும் பழக்கம் உள்ளது. இப்பழக்கம் இப்பகுதியில் உள்ள சௌமிய நாராயண பெருமாள் கோவில், குன்றக்குடி முருகன் கோவில், வயலூர் முருகன் கோவில் போன்ற கோவில்களிலும் காணப்படுகின்றது.
வயலூர் முருகன் கோவிலில் குழந்தையை முழுவதுமாக கடவுளுக்கு தத்து கொடுப்பது கிடையாது. பாலாரிஷ்டம், ஆயுள் தோஷம் அல்லது தாய் தந்தையருக்கு தோஷம், ஆயுள் கண்டம் இருக்கும் வரை மட்டுமே குறிப்பிட்ட கிரகதசா புத்திகள் முடியும் வரை சாமிக்குத் தத்து கொடுத்துவிட்டு அந்த காலகட்ட முடிந்ததும் தத்து திருப்புதல் என்ற பெயரில் பிள்ளையைத் திரும்ப பெற்றுக் கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள்
வயலூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். காவடி எடுத்தல் பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. குன்றக்குடி கோவிலில் செய்வதைப் போலவே இக்கோவிலிலும் ஆண்கள் அங்கப் பிரதட்சணம் செய்கின்றனர் பெண்கள் அடிப்பிரதட்சணமும் கும்பிடு தண்டமும் செய்கின்றனர்.
வழிபாட்டின் பலன்
முருகன் இரண்டு திருமணங்கள் செய்யும் திருத்தலம் என்பதால் திருமணத் தடை உள்ளவர்கள், தாமத திருமணம், மாங்கல்ய தோஷம், தார தோஷம் உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து திருமுருகனை வழிபட எல்லா தோஷமும் தீர்ந்துபோகும். வாழ்க்கையில் நல்ல இடத்தில் திருமணம் ஆகி போக பாக்கியமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
கருவுறுவதில் தாமதம், கரு கலைதல், கருப்பையில் நீர்க்கட்டி, மூளை வளர்ச்சி இல்லாத அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறத்தல், குழந்தை பிறந்து பிறந்து இறந்து போதல் போன்ற புத்திர தோஷப் பாதிப்புள்ள தம்பதியர் வயலூர் முருகன் கோவிலுக்கு வந்து தொடர்ந்து வழிபட்டு வர புத்திர தோஷம் நீங்கி நல்ல சத்புத்திரர்களைப் பெறுவது உறுதி. அவர்கள் தம் குழந்தையை இறைவனுக்கு நேர்ந்து கொண்டு தத்து கொடுத்து வாங்கி வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம்
வயலூர் வரலாறு
சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் என்பதை வலியுறுத்தும் வகையில் இங்கு 20-க்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் ஆதிநாதர் சன்னதியின் கருவறைச் சுவரில் காணப்படுகின்றன. வயலூர் கல்வெட்டுகளில் உறையூர் கூற்றத்து வயலூர் என்று அழைக்கப்படுகின்றது.
வயல் ஊரின் அருகில் உள்ள உறையூர் சங்ககால முதல் புகழ்பெற்ற ஊராகும் 'வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை' என்று குறுந்தொகை குறிப்பிடுகின்றது. உறந்தை அன்ன பொன்னுடை நன்நகர் என்று அகநானூறு புகழ்கின்றது.
பங்குனி முயக்கம்
தற்போது வள்ளி திருமணம் நடக்கும் நடைபெறும் பங்குனி உத்திரத் திருநாளில் முன்பு காவிரி ஆற்றங்கரையில் பங்குனி முயக்கம் என்னும் விழா நடைபெற்றது. அப்போது இளம் ஆண்களும் பெண்களும் பௌர்ணமி நிலவில் கூடிப் பாடி முயங்கி மகிழ்வர். அந்நாளில் வேலன் வெறியாட்டும் நடைபெறும். வேலன் என்பவன் முருகனின் சாமியாடி ஆவான்.
இவ்வாறு முருகன் வழிபாடு பழங்காலம் தொட்டு நடந்து வந்த இப்பகுதியில் பௌத்தர்கள் வரவிற்கு பிறகு உறையூர் உரகபுரம் என்ற பெயரில் புகழ்பெற்ற முக்கிய பௌத்த ஸ்தலமாக மாறியது. பல பௌத்த அறிஞர்கள் இங்குத் தங்கி இருந்து பல அரிய பௌத்த நூல்களை இயற்றினர். அக்காலகட்டத்தில் உறையூர் கூற்றம் என்ற இப்பகுதியில் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்றிருந்தது.
பௌத்தர் காலம்
பௌத்தம் இங்கிருந்து விடைபெற்றதும் அல்லது விரட்டப்பட்டதும் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் பௌத்த விகாரைகளை சிவன் கோவிலாக மாற்றி பல நிவந்தங்கள் அளித்தனர். பௌத்தர்கள் இந்திரனை இந்திர பானம் (கந்து) என்ற பெயரில் லிங்க ரூபத்தை வைத்து வழிபட்டனர்.
இதுவே பின்னர் பல ஊர்களில் சுயம்புலிங்கம் (மனிதர் யாரும் செய்யாமல் தானே கிடைத்த லிங்கம்) என்ற பெயர் பெற்றது.
சோழர் காலக் கல்வெட்டுகள்
சோழர் காலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் இக்கோவில் சிவாலயமாக மாறியது. ராஜகேசரி வர்மன், குலோத்துங்க சோழன், பரகேசரி வர்மன், ராஜேந்திர சோழன் ஆகியோர் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். இத்தகவல்கள் சிவன் கோயில் கருவறைச் சுவர் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
இங்கு எழுந்தருளியிருந்த சிவபெருமான் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் அருள வல்லவர் என்பதால் கல்வெட்டில் மறப்பிலி நாதர் என்று குறிப்பிடப்பட்டார். மேலும் அக்கினி தேவன் வழிபட்ட ஈஸ்வரன் என்பதால் இவருக்கு அக்கினேஸ்வரன் என்ற பெயரும் உண்டு. திருமகாதேவன் என்றும் திருக்கற்றளி பெருமான் என்றும் கல்வெட்டுகள் சிவனைக் குறிப்பிடுகின்றன.
அன்றும் இன்றும் முருகனே
பழைய பௌத்தர் கோவிலில் இருந்த இந்திர பானம் சிவலிங்கமாக அக்கினேஸ்வரராக புராணக் கதைகளின் வழியாக அறியப்பட்டாலும் ஆதிநாதர் என்ற பெயரை நிலைத்து விட்டது. பௌத்தம், சைவம் என்று சமயங்களின் செல்வாக்கு மாறினாலும் முருக வழிபாடு என்ற பழந்தமிழர் மரபு அழியவில்லை.
ஆதிநாதர் என்ற பெயரில் இன்று சிவாலயம் இருந்த போதிலும் தொன்றுதொட்டு முருகன் பெயரால் வயலூர், முருகனின் திருத்தலமாகவே இன்றும் விளங்குகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |