மகாபாரதம்: தவறு செய்தது தெய்வமாக இருந்தாலும் தண்டனை நிச்சயம்
மனிதர்களாகிய நமக்கு ஏதேனும் துன்பம் நேரும் பொழுது நம் மனதிற்குள் வரக்கூடிய ஒரு முக்கியமான கேள்வி, "நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்? எதற்கு எனக்கு இவ்வளவு பெரிய வலியை வாழ்க்கை கொடுத்திருக்கிறது? என்று பல கேள்விகளுடன் நாம் அமர்ந்திருப்பதை காண முடியும்.
ஆனால் இறைவன் நாம் செய்யக்கூடிய மற்றும் சிந்திக்க கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் அவர் மிக கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். நாம் என்ன நன்மை தீமைகள் செய்கிறோமோ? அதற்கான தீர்ப்பை கொடுப்பதில் இறைவன் மிகப்பெரிய வல்லவனாக இருக்கிறான். அதாவது தவறு செய்தது தெய்வமாகவே இருந்தாலும் தண்டனை நிச்சயம்.
இதற்கு மகாபாரதத்தில் ஒரு மிகப்பெரிய சான்று ஒன்று இருக்கிறது. அதைப்பற்றி பார்ப்போம். மகாபாரதத்தில் குருசேத்திர போர் முடிந்துவிட்டது. அஸ்தினாபுரத்து அரசனாக தருமன் முடிச்சூட்டி கொண்டான். பாண்டவர்களுடைய வம்சத்தையே அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்த துரோணரின் மகன் அஸ்வத்தாமன் நிம்மதியற்ற ஒரு நிலையில் இருக்கிறான்.

அந்த நேரத்தில் அவன் மனதில் ஒரு மிகப்பெரிய சந்தேகம் அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அதாவது என் தந்தை சத்தியவான். செஞ்சோற்று கடன் தீர்ப்பதற்காகவே துரியோதனனுக்கு ஆதரவாக போர் புரிந்தார்.
ஆனால் அவரிடமே பாண்டவர்கள் நான் இறந்ததாக பொய் சொல்லி மிக அநியாயமாக அவரைக் கொன்று விட்டார்கள். என் தந்தை அப்படி என்ன தவறு செய்து விட்டார் என்று அவன் மனதிற்குள் ஏகப்பட்ட குழப்பங்களும் கேள்விகளும் ஓடிக் கொண்டிருந்தது. அப்படியாக, ஒரு நாள் கிருஷ்ண பகவானை அவன் சந்திக்கிறான். கிருஷ்ணனை பார்த்தவுடன் அவனுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று.
அதனால் கிருஷ்ண பகவானிடமே அவன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்கிறான். அதாவது கிருஷ்ணரை பார்த்து, என் தந்தை இறந்ததற்கு முக்கிய காரணம் நீதானே! அவர் என்ன தவறு செய்தார்? என்று அவனுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான். கிருஷ்ண பகவானும் சிரித்துக்கொண்டே, யார் பாவம் செய்திருந்தாலும் அவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறார்.
அதற்கு பெரும் கோபத்துடன் அஸ்வத்தாமன், அப்படி என்ன? என் தந்தை பாவம் செய்துவிட்டார்? என்று அஸ்வத்தாமன் கேட்கிறான். இந்த கேள்விக்கும் சிரித்துக் கொண்டே கிருஷ்ண பகவான் சொல்கிறார். உன் தந்தை எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தெரிந்தவர். ஆனால் மிகவும் ஏழ்மையில் இருந்தார்.
அவரை கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் குருவாக பீஷ்மர் நியமித்தார். அதன் பிறகு தான் அவருடைய வாழ்க்கையில் செல்வ வளம் சூழ்ந்தது. உன் தந்தையை ஏகலைவன் என்ற வேடுவர் இனத்தைச் சேர்ந்த சிறுவன் சந்திக்கின்றான். அவன் எனக்கும் வில்வத்தை கற்றுத் தாருங்கள் என்று உன் தந்தையிடம் முறையிடுகிறார்.

ஆனால் உன் தந்தையோ அரச குமாரர்களுக்கு தான் கற்றுக் கொடுப்பதால் ஏகலைவனுக்கு கற்றுத் தர துரோணர் மறுக்கிறார். ஆனால் ஏகலைவனோ உன் தந்தையைப் போல் மண்ணில் சிலை செய்து குருவாக வழிபட்டு வில்வித்தையை அவனாக கற்றுக் கொண்டான். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஏகலைவனின் வில்வித்தை திறமை அர்ஜுனனுக்கு தெரியவருகிறது. அவன் உன் தந்தையிடம் கோபம் அடைகிறான்.
ஆனால் ஏகலைவன் தானே வில்வத்தையை கற்றுக்கொண்ட செய்தியை உன் தந்தை அர்ஜுனிடம் தெரிவித்து இருக்க வேண்டும். அவர் என்ன செய்தார் தெரியுமா? வில்வத்தைக்கு மிகவும் தேவையான கட்டை விரலை குரு காணிக்கையாக ஏகலைவனிடம் உன் தந்தை கேட்டார். அவனும் மகிழ்ச்சியாக கொடுத்து குரு பக்திக்கு நீங்காத புகழை பெற்றார்.
அன்று உன் தந்தை அரண்மனையில் செய்கின்ற வேலை பறிபோகிவிடும் என்ற சுயநலத்தில் வேடனின் திறமையை தட்டிப் பறித்துக் கொண்டார். ஏகலைவனுக்கு அவன் உடைய திறமையால் பெருமை சேர்ந்தாலும் அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியானது.
இந்தப் பாவம் தான் போர்க்களத்தில் மகன் இறந்ததாக எண்ணி ஏற்பட்ட சோகத்தில் மரணம் அடைய வைத்தது. அதோடு, துரோணர் தியானத்தில் இருந்த போது, திரௌபதியின் சகோதரர் அநியாயமாக அவரை கொலை செய்தான். அந்த சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் தான் பாண்டவர்கள் தங்களின் வாரிசுகளை இழந்தனர் என்று கூறி முடித்தார் கிருஷ்ணன்.

பிறகு கிருஷ்ணர் சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ஒப்புக் கொண்டான் அஸ்வத்தாமன். ஆனால் அவன் அதோடு நிறுத்தவில்லை. கிருஷ்ணா "நீ நினைத்திருந்தால் இந்த யுத்தம் நடக்காமல் தடுத்து இருக்கலாமே" உன்னால் ஒரு வம்சமே அழிந்ததை வேடிக்கை பார்த்து இருக்கிறாய் என்று இன்னொரு கேள்வியை வைக்கிறார்.
அதற்கும் கிருஷ்ணர் பதில் அளிக்கிறார் ஒரு வம்சம் அழிவதற்கு காரணமாக இருந்ததால், என் வம்சம் அழிவதை பார்த்த பின்பு தான் எனக்கு மரணம் ஏற்படும் என்றும் அவர் பதில் சொல்கிறார். உண்மைதான் யாதவ வம்சம் அழிந்து, காடுகளில் தனிமையில் தியானத்தில் கிருஷ்ணர் அமர்ந்து இருந்தபோது மானிடர் ஒருவர் மான் என நினைத்து வேடன் எய்த அம்பால் கிருஷ்ண பகவானின் உயிர் பிரிந்தது.
ஆக இங்கு பூமியில் வாழக்கூடிய நாட்களில் தவறு செய்தது தெய்வமாகவே இருந்தாலும் அவர்கள் கட்டாயம் அதற்கான பலனை அனுபவித்து ஆக வேண்டும் என்பதை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்"
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |