இறப்பு என்றால் என்ன? இறந்தவர்கள் உயிருடன் திரும்ப வர முடியுமா?
இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு கடமை இருக்கிறது, அந்த கடமை முடியும் வரை அந்த உயிர் இந்த பூமியை விட்டு பிரிவதில்லை. மிகவும் சாதாரண விஷயமாக கூட இருக்கும். அதை அந்த ஜீவன் செய்யும் வரை அந்த உயிர் இந்த உலகத்தை விட்டு பிரிவதில்லை.
அப்படியாக, 40 வயது கொண்ட குடும்பத் தலைவர் இறந்து விடுகிறார். அவரது மனைவி ஒன்பது வயதான மகன் பெற்றோர் எல்லோரும் உடலின் அருகே அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கே குருவாக விளங்கக்கூடிய ஒருவர் அப்பொழுது வருகிறார்.
அவரை கண்டதும் அந்த குடும்பத்தினர் வலி தாங்காமல் மேலும் அழ தொடங்கி விடுகிறார்கள். குருவைப் பார்த்து இறந்தவரின் மனைவி சொல்கிறாள்.

குருவே இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்கதியாக விட்டு சென்று விட்டாரே! நான் என்ன செய்வேன்! அவர் உயிருடன் மீண்டும் வரவேண்டும் என்றால் அதற்காக நான் ஏதாவது செய்ய முடியுமா என்று அழுது புலம்புகிறாள்.
குருவும் அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் யாரும் அவர்களுடைய சோகத்தை விடுவதாக இல்லை. கடைசியில் அவர் கேட்கிறார்? ஒரு கோப்பை தண்ணீரை கொண்டு வாருங்கள் என்று. தண்ணீர் வந்தது, அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்து அமர்ந்து கொண்டார்.
பின்னர் இறந்தவர் உயிருடன் திரும்ப வர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தண்ணீரை அருந்தலாம். ஆனால் இறந்தவர் திரும்பி வருவார், அதற்கு பதிலாக நீரை அருந்தியவர் மரணமடைவார் என்று அவர் சொல்கிறார். சுற்றி இருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாரும் முன்வரவில்லை.
குரு இறந்தவரின் தந்தையை பார்த்து கேட்கிறார்? ஐயா நீங்கள் உங்கள் மகனுக்காக உயிரைக் கொடுக்க மாட்டீர்களா என்று? தந்தை சொல்கிறார் நான் இறந்துவிட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு? அவளுக்காக நான் வாழ வேண்டும் என்கிறார். பிறகு தாயை கேட்கிறார். அவளும் அடுத்த மாதம் என் மகளுக்கு பேறுகாலம் நான் இறந்துவிட்டால் அவளுக்கு யார் உதவுவது என்று முடித்து விடுகிறார்.

பிறகு மனைவி சொல்கிறாள் நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது அவனுக்காக நான் வாழ வேண்டும் என்கிறாள். குரு பிறகு பையனை பார்த்து கேட்கிறார்? குழந்தாய் உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாய் என்று? அவன் தாயை உடனே இழுத்து அனைத்து அணைத்துக் கொண்டான். பிறகு குருவைப் பார்த்து இறந்தவரின் மனைவி, உங்களுக்கு என்ன பைத்தியமா?
அவன் ஒரு குழந்தை இனிமேல்தான் அவன் வாழ்க்கையில் இருக்கிறது. அவனை போய் நீங்கள் இப்படி கேட்கலாமா? என்றாள். பிறகு குரு எல்லோரையும் பார்த்து உங்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு கடமை பொறுப்பு இருக்கிறது என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படியானால் இறந்த இவருக்கு இங்கு என்ன வேலை என்று ஆகிறது? எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் என்கிறார்.
பிறகு இறுதியாத்திரைக்கான ஏற்பாடுகளை கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். ஆக, ஒரு மனிதனின் உயிர் இருக்கும் வரை தான் அன்பு பாசம் எல்லாம். பிறகு மிஞ்சுவது அந்த நாட்களில் நினைவுகள் மட்டுமே. யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அவரவர்களுக்கு உரிய கடமை இந்த உலகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |