பல அதிசயங்கள் கொண்ட சென்னிமலை முருகன் கோயில்
கலியுக வரதன் முருகன் அவனை நினைக்கவே கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்துவிடும்.அத்தனை அழகும்,உலக வாழ்க்கையை உணர்த்தும் முருகன் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறார்.உலகம் எங்கிலும் முருகனுக்கு பக்தர்களும் கோயில்களும் அதிகம்.
அப்படியாக முருகன் என்றால் நமக்கு அவரின் அழகு வேலும் மயிலும் அவரின் கந்த சஷ்டி கவசம் தான் நினைவிற்கு வரும்.ஆனால் நமக்கு கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய இடம் எது என்று பலருக்கும் தெரியாது.நாம் இப்பொழுது கந்த சஷ்டி கவசம் நிகழ்ந்த இடம் பற்றியும் அந்த இடங்களில் நடந்த பல அதிசிய சம்பவம் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது இந்த சிறப்பு பெற்ற தலம்.ஈரோடு மாவட்டத்தில் முக்கியமான சிறப்பு மிகுந்த கோயில்களில் இந்த சென்னிமலை முருகப்பெருமான் கோயில் ஒன்று.
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்தக் கோவில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. நாம் இப்பொழுது சென்னிமலை முருகப்பெருமானின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.
கோயிலின் வரலாறு
ஓரு முறை அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்று மிக பெரிய போட்டி நடந்தது.அந்த சண்டையில் மேரு மலை உடைந்து பல பகுதிகளாக பிரிந்து பல இடங்களில் சிதறி விழுந்தது.
அதில் மலையின் சிகரப்பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே இன்று சென்னிமலை முருகப்பெருமான் இருக்கும் இடம்.இந்த ஊருக்கு ‘சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி’ போன்ற பெயர்களும் உண்டு. இந்த மலையின் ஒரு பகுதியில் காராம் பசு ஒன்று, தினமும் பால் சொரிய விடுவதை, அந்த பசுவின் உரிமையாளர் பார்த்தார்.
அதை தொடர்ந்து அவர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த பொழுது அதிசயம் காத்து இருந்தது.தோண்டிய இடத்தில் பூரண முகப்பொலிவுடன் முருகப்பெருமானின் சிலை ஒன்று கிடைத்தது.எடுத்த அந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தின் இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடனும், முகம் அற்புத பொலிவுடனும் இருந்தது.
ஆனால், இடுப்புக்கு கீழ் பாதம் வரை சரியான வேலைப்பாடு இல்லாததால் இடுப்புக்கு கீழ் உள்ள பாகத்தை ஒரு சிறந்த சிற்பியைக் கொண்டு உளியால் சரி செய்தனர்.ஆனால் உளியால் முருகப்பெருமானை வேலை பாடுகள் தொடங்கிய பொழுது சிலையிலிருந்து ரத்தம் கொட்டியதாகவும், அதனால் அதே நிலையில் சென்னிமலையில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னிமலையில் வீற்றி இருக்கும் முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்கு பக்தர்களுக்கு நடு நிலையாக இருந்து ஆசி வழங்குகிறார்.மேலும்,நாம் அனைவரும் அறிந்தது முருகப்பெருமான் செவ்வாய் அம்சத்திற்கு உரியவர் என்று.
அதை தொடர்ந்து மூலவரைச் சுற்றி நவக்கிரகங்களின் மற்ற எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷ்டங்களில் அழகுற அமைந்து அருள்பாலிக்கிறார்கள்.இங்கு இன்னொரு சிறப்பு என்னெவன்றால் மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வழிபட்ட அனைத்து பலனும் கிடைக்கிறது.
சென்னிமலை முருகப்பெருமான் திருத்தலம் செவ்வாய் தோஷம் நீங்கும் முக்கியத்தலமாக இருக்கிறது.இங்கு சென்னிமலையில் மூலவருக்கு ஆறு கால பூஜை வேளையில் மட்டும் அபிஷேகம் நடக்கிறது.
இதர நேரங்களில் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சன்னிதி வேறு எங்கும் காண முடியாத அரியதாகும்.
இரண்டு மாட்டி வண்டி மலையேறி அதிசயம்
சென்னிமலை முருகன் கோயில் மலை மேல் அமைய பெற்று இருக்கிறது.அவ்வளவு உயரமான கோயிலில் தான் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இவ்வளவு உயரமான கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பல வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
அப்படியாக மலைப்பகுதியாக ரோடு வசதிகளுடன் பஸ்கள் செல்ல வசதி உள்ளது.மேலும் பக்தர்கள் அவர்களின் சொந்த வாகனங்களிலும் செல்கின்றனர்.அத்துடன் படியேறி முருகனை தரிசிக்கவும் சுமார் 1320 திருப்படிகள் உள்ளது.
இந்நிலையில் 1984 ஆம் ஆண்டு இரண்டு மாட்டு வண்டிகள் எந்த தடையும் இன்றி அந்த 1320 படி ஏறியது.இதை காண பல்வேரு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர்.இவ்வாறு மாடு மலையேறிய நிகழ்வை ஊர் மக்கள் முருகப்பெருமானின் திருவிளையாடல் என்றே கருதுகின்றனர்.
சஞ்சீவி மூலிகைகள்
சென்னிமலை பல மூலிகைகள் கொண்ட மரம்.அப்படியாக மிகவும் பிரபலமான சஞ்சீவி மூலிகைகள் சென்னிமலை உள்ளன.அதாவது சோழ அரசர் பல இடங்களுக்கு சென்று நோய் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சரியாகாத நோய் சென்னிமலை அடைந்து நோய் நீங்க பெற்றார் என்பதற்கு பரிகாரமாக மலைக்கோயில் அமைத்தார் என்பது வரலாறு.
சஷ்டி விரதம் மகிமைகள்
நாம் அனைவரின் கவசமாக இருக்கும் கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய இடம் சென்னிமலை என்பதால் பிரதமி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா ஆறாம் நாள் எண்ணற்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தங்களுடைய வழிபாட்டை செலுத்துகின்றனர்.
அதில் முக்கியமாக பல நாள் குழந்தைக்காக காத்து இருக்கும் தம்பதியினர் இங்கு வந்து சஷ்டி நாளில் வேண்டுதல் வைக்கின்றனர்.அதாவது சஷ்டியில் இருந்தால் அகப்பையில் கிடைக்கும் என்பார்கள்.ஆதலால் தம்பதிகள் பயபக்தியோடு முருகனை வேண்டிக்கொள்கின்றனர்.
பிறகு குழந்தை வரம் கிடைத்த பிறகு வளர்பிறை சஷ்டி திருநாளில் குழந்தையோடு வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.மேலும் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் நல்லபடியாக திருமணம் முடிந்து குழந்தை பாக்கியம் கிடைக்க பச்சரிசி மாவிடித்து நெய் தீபம் ஏற்றியும் சன்னதி முன் தாலி சரடு கட்டிக்கொண்டும் வேண்டுதல் வைக்கின்றனர்.
சிரசுப் பூ உத்தரவு கேட்டல்
முருகன் மக்களுக்கு தாயாக தந்தையாக அண்ணனாக இருந்து வழி நடத்துகிறார்.அப்படியாக மக்கள் விவசாயம்,திருமணம்,கிணறு வெட்டுதல்,புதிய வியாபாரம் தொடங்குதல் ஆகியவை குறித்து முடிவு செய்யும் பொழுது பல குழப்பம் ஏற்படும்.
அப்படியான மன குழப்பம் ஏற்படும் பொழுது மக்கள் இங்கு வந்து சிரசுப் பூ உத்தரவு கேட்டு நல்ல உத்தரவை கிடைத்த பின்பே அவர்கள் அதை தொடங்குகிறார்கள்.இந்த சிரசுப் பூ உத்தரவு நல்ல படியாக அமையாவிட்டால் அந்த செயலை அந்த நேரத்தில் செய்வதை நிறுத்திவிடுவார்கள்.
மேலும் வள்ளி தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி,சுந்திர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப்பெருங்கோயிலாக பக்தர்களுக்காக காட்சி தருவது சிறப்பு.
நேர்த்திக்கடன்
இங்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமணனுக்கு பால் தயிர் அபிஷேகம் செய்கின்றனர்.மேலும் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முருகருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது அந்த தயிர் புளிப்பது இல்லை.இதை தவிர பக்தர்கள் முருகருக்கு காவடி எடுத்தல் முடிகாணிக்கை முதலியன கொடுத்து தங்கள் நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.
இதனை தொடர்ந்து கிருத்திகை அன்று அன்னதானம் பால் குடம் எடுத்தல்,குழந்தைகளுக்கு முடியிறக்கி காது குத்துதல் போன்றவற்றையும் செய்கின்றனர்.
பின்னாக்கு சித்தர்
சென்னிமலை முருகன் கோவிலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படும் பின்னாக்கு சித்தர் என்பவருக்கு சன்னிதி உள்ளது. இந்த சித்தர், இங்குதான் சமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. இவர் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, தன் நாக்கை பின்னுக்கு மடித்து அருள்வாக்கு கூறிய காரணத்தால், இந்தப் பெயர் வந்ததாக சிலர் சொல்கின்றனர்.
அதுவே மருவி பலரும் இவரை ‘புண்ணாக்கு சித்தர்’ என்று அழைக்க வழி செய்து விட்டதாகவும் கூறுகின்றனர். இதே போல் சத்திய ஞானியை குருவாகக் கொண்ட சரவணமுனிவர் என்பவர், சிரகிரி வரலாற்றை எழுதினார். அப்போது அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இந்த முனிவரின் சமாதியும், மலையின் மேல் பகுதியில் இருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |