பர்வதமலை சிவன் கோவிலும் பௌர்ணமி மலையேற்றமும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் தென் மகாதேவ மங்கலம் என்ற கிராமத்தை ஒட்டி உள்ள பர்வதமலையில் சிவபெருமானுக்கு ஒரு கோவில் உள்ளது. இச் சிவபெருமானை மல்லிகார்ஜுனர் என்றும் அம்பாளை பிரமராம்பிகை என்றும் அழைக்கின்றனர்.
இந்த மலையை சித்தர் மலை என்று அழைப்பர். இங்குப் பல சித்தர்கள் நாய உருவத்தில் இருப்பதாகவும் பக்தர்கள் மலை மேல் ஏறும் போது பக்தர்களோடு துணைக்கு நாய் வடிவில் வருவதாகவும் நம்பிக்கை உள்ளது.
கோயிலின் சிறப்பு
பர்வதமலையிண் சிறப்பு, இங்கே உள்ள சிவலிங்கத்துக்கு பக்தர்களே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். மலையடிவாரத்தில் வீரபத்திர சாமிக்கு தனி கோவில் உண்டு. இங்கு பச்சையம்மனுக்கும் சப்த முனிகளுக்கும் தனி சன்னதிகள் உள்ளன. முருகன் ஒரு சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார்.
நவிர மலையும் நாக முதுவரும்
பர்வத மலையின் தமிழ்ப்பெயர் நவிர மலை. இம்மலையின் தொன்மையை சங்க இலக்கியத்தில், பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் வழியாக அறியலாம். சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு என்ற பிரிவு 10 நீண்ட பாடல்களைக் கொண்டது. அவற்றில் ஒன்று மலை படு கடாம்.
இந்நூல் நன்னன் என்னும் மன்னனைப் பற்றியது. இவன் வாழ்ந்த மலை நவிர மலை. நவிரம் என்றால் மூங்கில். மூங்கில் காடுகள் நிறைந்த மலை நன்னன் வாழ்ந்த நவிரமலை. மலைப மலைபடுகடாம் எனும் நீண்ட பாடலில் காரி உண்டிக்கடவுள் (கருப்பு நிறக் கடவுள் - கருப்பு விஷத்தை உண்ட கடவுள்) என்ற தொடர் சிவபெருமானைக் குறிப்பதாகக் கருதுவர்.
ஆனால் இது நாகர் (தென்னிந்தியர்) குலக் கடவுளான, குல முதுவரான (forefathers) குலமரபுச் சின்னமான (totem) நாகத்தைக் குறித்தது.
வரலாற்றுப் பின்னணி மல்லிகார்ஜுனர் கதை பர்வதமலை சிவன் கோவிலில் எழுந்தருளியிருப்பவரோடு முடிந்துவிடவில்லை. இங்கே உள்ள இறைவி பிரமராம்பிக்கை ஆந்திராவிலும் மல்லிகார்ஜுனரின் (மல்லன்னா) மனைவியாக விளங்குகிறாள்.
மல்லிகார்ஜுனர் என்ற பெயர் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளது. வடக்கே இருந்து வந்த விஜயநகர மன்னர்கள், சாதவாகனர், தெலுங்கு நாயக்கர் மன்னர்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களை ஆட்சி செய்த போது இங்கே இருந்த பழைய பௌத்த சமணர் கோயில்களை சிவன் மற்றும் பெருமாள் கோயில்களாகப் பெயர் மாற்றினர்.
இம்மாற்றம் மலைக் கோவில்களையும் விட்டு வைக்கவில்லை. மலை கோபைல்கள் பெயர் மாற்றம் பெற்றதை மணிகண்டன், மாதேஸ்வரன் கோயில் வரலாறுகள் உறுதி செய்கின்றன.
இக் கோயில் தொடக்கத்தில் மலைவாழ் மக்களின் கோயிலாக இருந்து பின்பு சமண பௌத்த மடங்கள் வந்ததும் மல்லிகார்ஜுனர் கோயிலாயிற்று. பௌத்த சமண சமயங்கள் செல்வாக்கு இழந்ததும் சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. மல்லிகார்ஜுனர் பிரமராம்பிகா இணை ஆந்திராவில் மிகவும் புகழ் பெற்ற தெய்வ இணை ஆகும்.
ஆந்திராவில் மல்லிகார்ஜுனா மல்லிகார்ஜுனருக்கு ஆந்திராவில் ஸ்ரீசைலம், குமரவல்லி போன்ற ஊர்களில் பெரிய கோவில்கள் உள்ளன.
குமரவல்லியில் இவர் மல்லண்ணா என்று நாட்டுப்புற தெய்வமாகவும் விளங்குகிறார்.. இதுவும் முதலில் மலைவாழ் மக்களின் கோவிலாக இருந்து பின்பு ஜைன புத்த துறவிகளின் காலத்தில் மல்லிகார்ஜுனா கோயிலாகி தற்போது மல்லண்ணா என்ற பெயரில் சிவன் கோவிலாக விளங்குகிறது.
மல்லண்ணா கோவில்
குமரவல்லியில் கோயில் கொண்டிருக்கும் மல்லண்ணாவுக்கு இரண்டு மனைவியர். இவரது பலிஜா நாயுடு இனத்தைச் சேர்ந்த மெதலம்மா, கொல்லவாரு என்ற யாதவர் வகுப்பினை சேர்ந்த கேத்தம்மா பற்றிய கதை 'ஒக்கு கதை' என்ற நாட்டுப்புறப் பாடல் வடிவத்தில் உள்ளது.
திரிபுராந்தகனும் நரசிம்மரும்
கரீம் நகரில் இருந்து ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் மல்லண்ணா கோவில் உள்ளது. இக்கோவிலில் 500 ஆண்டுகளுக்கு முன்பு செய்து வைக்கப்பட்ட களிமண் சாமி சிலை இன்றும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. மல்லன்னா மீசையை முறுக்கிய வடிவில் உட்கார்ந்து கோலத்தில் காணப்படுகின்றார்.
அவரது காலடியில் மூன்று அசுரர்கள் வதம் செய்யப்பட்டு கிடக்கின்றனர். இவர்களை திரிபுராசுரர் என்பர். திரிபுராந்தகன் எனப்படும் சிவபெருமான் திரிபுரம் எரித்த கதை தமிழகத்திலும் ஆந்திராவிலும் நாட்டுப்புற தெய்வக் கதைகளில் தவறாமல் இடம்பெறுவதன் காரணம் சிவனின் வலிமையை அதிகாரத்தை மக்கள் உணர்ந்து அஞ்சி வணங்க வேண்டும் என்பதற்காகும்.
பெருமாள் கோயிலாக சமண பௌத்த கோயில்களை மாற்றும்போது முதலில் அங்குக் கோயில் வாசலில் நரசிம்மரை வைப்பது வைணவ மரபு. இதுவும் ஹரியை வணங்காதவன் குரூர மரணம் அடைவான் என்ற அச்சுறுத்தல் எச்சரிக்கை ஆகும்.
மல்லண்ணா கோவிலில் வீரபத்திரசாமியும் உற்சவமூர்த்தியாக விளங்குகின்றார். கோவில் அருகே ஓர் எல்லம்மா கோவில் உண்டு. இங்கு வீரபத்திரனுக்கு குகைக் கோவில் உள்ளது. பர்வதமலையில் வீரபத்திரனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.
மல்லண்ணாவின் சொந்தக் கதை
மல்லண்ணா சைவ சமயத் தலைமை தெய்வமான சிவலிங்க வடிவில் வழிபடப்பட்டாலும் மல்லண்ணாவுக்கு பழைய நாட்டுப்புற கதை ஒன்று உண்டு. மல்லண்ணா திருமணம் செய்ய மேதலம்மாவைப் பெண் கேட்டபோது அவளது சகோதரர்கள் பண்டாரி (மஞ்சள்) கொண்டு வந்தால் மட்டுமே திருமணம் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.
இந்த மஞ்சளை அவர் தேடிச் செல்வதற்கு அவருக்கு வாகனம் ஏதுமில்லை. இதுவும் வெளிநாட்டில் இருப்பதாகவும் இங்கே இல்லை என்றும் தகவல்கள் உள்ளன. இவ்வேளையில் மல்லண்ணா எல்லம்மனைக் கண்டு வணங்கி உதவி கேட்கின்றார்.
எல்லம்மா ஆகாய வழியில் பறந்து செல்ல பறக்கும் குதிரை ஒன்றை அருள்கிறாள். குதிரையில் ஏறி ஆகாயம் மார்க்கமாக மக்கா சென்று அங்குள்ளவர்களோடு ஒரு முஸ்லிமாகப் பழகி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அங்கிருந்து மஞ்சள் எடுத்துக் கொண்டு பறந்து திரும்பி வருகின்றார் அப்போது ஹுசைனும் ஹசினும் அவரைத் தடுக்கின்றனர். ஆனாலும் அவர் தப்பித்து வந்து மஞ்சளை மேதலம்மாவின் அண்ணனின் கைகளில் கொடுத்துவிட்டு அவளைத் திருமணம் செய்வதாக ஐதீகம்.
பண்டாரி) மஞ்சள் வரலாறு
மேதலம்மா மல்லண்ணா திருமணக் கதையில் பல வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. இந்த கதை இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக தோன்றிய கதை. ஆந்திராவில் தோன்றிய கதை என்பதால் ஹைதராபாத்தில் நிஜாமுகளின் ஆட்சி நடந்த காலத்தில் இக்கதை தோன்றியிருக்கக்கூடும்.
மஞ்சள் ஓர் அரிய பொருளாக நம்பப்பட்டதும் அது நம் ஊரிலேயே கிடைக்காத அரும்பெரும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று முஸ்லீம் மக்களை நம்ப வைக்க இக்கதை உருவாக்கி இருக்கலாம். மேலும் முஸ்லிம் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது கிடையாது.
அவர்கள் மஞ்சள் பூசுவது ஹராம் பாவம் என்று பாவம் என்றே கருதுவர. இந்நிலையில் மக்காவிலிருந்து மஞ்சளைக் கொண்டு வந்தார் மல்லண்ணா என்று கதை கட்டுவது அவர்களோடு நட்புறவாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட கதை என அறியலாம்.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் என்ற ஊரில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகைக் கோவில் ஒன்றில் காணப்படும் சிவலிங்கம் மல்லிகார்ஜுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கும் தேவியின் பெயர் பிரமராம்பிகா தான்.
ஆனால் இங்கே உள்ள சிவலிங்கம், 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இது சக்தியின் கழுத்து விழுந்த இடம் என்பதால் 52 சக்தி பீடங்களில் 18 வது சக்தி பீடமாகவும் விளங்குகின்றது. ஸ்ரீசைலம் பாடல் பெற்ற ஸ்தலமாக உள்ளது.
இங்குத் தல புராணமாக சிவனின் அடிமுடி தேடிய கதை சொல்லப்படுகின்றது. இக்கதை அதுவரை பௌத்த மதத்தினரால் வணங்கப்பட்டு வந்த பிரமனை தெய்வத் தகுதி நீக்கம் செய்கிறது. பெருமாளை சிவனின் திருவடிகளை வணங்கிய நிலையில் உறவுத் தெய்வமாக மட்டும் ஏற்றுக் கொள்கிறது. முதன்மைத் தெய்வமாக அல்ல.
மல்லிகை வழிபட்ட தலம் என்பதால் மல்லிகார்ஜுனா என்ற பெயர் பெற்றதாக தெலுங்கில் கதைகள் உள்ளன. அர்ஜுனன் ஒரு அம்மாவாசையன்று இங்கு வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இங்கே கோயில் கொண்டுள்ள சிவபெருமானுக்கு மல்லிகார்ஜுனா என்ற பெயர் வந்ததாகவும் கதைகள் வழங்குகின்றன.
பௌர்ணமி அன்று பிரம்மராம்பிகா மல்லிகை ரூபத்தில் இருப்பாள் என்றும் அன்று மலை ஏறினால் தீராத கவலை எல்லாம் தீரும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகின்றது.
கரூர் மல்லாண்டார்
தமிழ்நாட்டில் கரூர் அருகே மல்லாண்டவர் கோவில் இருக்கின்றது. இவரை மல்லாண்டவர் என்றும் மல்லாண்டை என்றும் அழைக்கின்றனர். இக் கோவிலை மள்ளர் இனத்தவர் தங்களுடைய தேவேந்திரன் கோவில் எனக் கருதுகின்றனர்.
சமண பௌத்த சமயங்கள் வெளியேற்றப்பட்ட பிறகு மல்லிகார்ஜுனருக்கு இருந்த கோவில்கள் மல்லாண்டவர், மல்லண்ணா, மல்லேஸ்வரர் மல்லிகார்ஜுனர் என்ற பெயரில் ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் சிவன் கோவில்களாக மாறி உள்ளது.
யதா ராஜா ததா பிரஜா
ஆட்சியாளர்கள் பின்பற்றும் மதத்தையே மக்களும் பின்பற்ற விரும்புவது இயற்கை. இதைத் தான் யதா ராஜா ததா பிரஜா என்பர். எனவே விஜயநகரப் பேரரசு காலத்தில் பௌத்த சமண மல்லிகார்ஜுனர் கோவில்கள் சிவன் கோவில்களாக மாறின. பின்பு இஸ்லாமியர் ஆட்சி நடந்தபோது ஹைதராபாத்தில் மல்லண்ணா கதையில் மக்கா பயணமும் சேர்க்கப்பட்டது.
பலன்கள்
மலையில் உள்ள மல்லேச்வரர், மல்லிகார்ஜுனர் - பிரமராம்பிகா கோயிலுக்குச் சென்று அங்கே உள்ள தெய்வத்தை எந்தப் பெயரில் வணங்கினாலும் குடும்ப ஒற்றுமை தழைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணத் தடை விலகும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். பௌர்ணமி அன்று நடந்து பர்வத மலை மீது ஏறுவதால் மணக்க கவலை, மன அழுத்தம், சஞ்சலம் நீங்கும். மனதில் ஊக்கமும் உற்சாகமும் பிறகும்.
மலையும் பௌர்ணமி பூஜையும்
நிலவொளியும் மலையேற்றமும் பௌத்த துறவிகள் வழங்கிய ஆன்மிகப் பயிற்சி ஆகும். இதனால் உடலும் மனமும் காற்றுப் போல் லேசாக மாறும். சந்திர தியானத்தின் ஒரு பகுதி உடல் முழுவதையும் சந்திர ஒளியின் வளரும் குளிர்ச்சியில் மெல்ல நனையவிட்டு ஊற வைப்பதாகும். திருப்பதி (சந்திரன் ஸ்தலம்) , திருவண்ணாமலை, பழனி, வெள்ளியங்கிரி, சதுரகிரி என்று எந்த மலையாக இருந்தாலும் பௌர்ணமி அன்று மலையேறுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |